adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மாமியார் மாறி விட்டார்…

மகாலட்சுமி, முதலியார்பேட்டை.

கேள்வி :

மாலைமலர் கட்டுரைகளின் தீவிர வாசகி நான் . என்னுடைய திருமணம் கடந்த ஜனவரி 2019 ல் நடைபெற்றது . எங்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தங்களின் திருவாய் மூலமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . திருமணம் செய்தவுடன் எல்லாம் மாறிவிட்டது . கொஞ்ச காலமாக மனது கஷ்டமாக இருக்கிறது . தனிமையில் இருந்தால் ஏதேதோ சிந்திக்கிறேன் . என் மாமனார்     , மாமியார் முன்போல இல்லை . மனிதர்கள் எப்படி மாறி இருக்கிறார்கள் என்று என்னுடைய தாய் மிகவும் வேதனைப் படுகிறார் . திருமணமாகும் முன்பே உங்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதி இருக்கிறேன் ஆனால் பதில் வரவில்லை . எனது எதிர்காலம் எப்படி இருக்கும் ? பதில் கூறுங்கள் ஐயா .


பதில் :

(கணவர் 26-9-1989 மாலை 5-45 புதுச்சேரி, மனைவி 23-8-1990 அதிகாலை 3-36 புதுச்சேரி)

உலகின் மிக மூத்த, தொன்மையான நமது இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேராக விளங்கும் பெண்களின் நிலை இங்கே திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரண்டு வகைப்படும். திருமணத்திற்குப் பிறகு ஏராளமான கனவுகளோடு புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண், தனது எதிர்பார்ப்புகள் அங்கே நிறைவேறாத நிலையில் எல்லாவகையிலும் ஏமாற்றம் அடைவது இயல்பான ஒன்றுதான்.

என்ன இருந்தாலும் அடுத்த வீட்டிற்குச் செல்லப் போகிறவள் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர்கள் ஒரு பெண்ணை மிகவும் செல்லமாக வளர்க்கிறோம். ஒருவகையில் திருமணம் என்பது ஒரு பெண்ணிற்கு பெற்றோர், சகோதர இழப்பு என்று கூடச் சொல்லலாம். மாறிவிட்ட சூழலில் திருமணத்திற்கு முன் மனதளவில் ஒரு பெண்ணை தயார்படுத்தும் குணம் பெற்றோரிடையே குறைந்து கொண்டே வருகிறது. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதை நிறுத்தி விட்ட இன்றைய சமூகத்தில் உடனடி திருமண முறிவிற்கு பெரும்பாலும் பெற்றோர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள்.

நான்கு மாதங்களில் உன்னுடைய திருமண வாழ்வில் நீ சலிப்படைந்ததன் காரணத்தை இரண்டே வரிகளில் என் மாமனார், மாமியார் முன்போல் இல்லை என்று கோடுகாட்டி இருக்கிறாய். இத்தனை தெளிவாக கடிதம் எழுதத் தெரிந்த நீ, முதலில் கணவனை விட, நீ கணவனுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய உன் மாமனார், மாமியாரைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு நீ யார் என்பதை தெளிவாக புரிய வைத்திருக்க வேண்டும்.

ஒற்றைக் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொண்டு, வயதான காலத்தில் அக்குழந்தையின் அனுசரணையும் ,ஆதரவும் கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த வயதான சமூகத்தில், சில நேரங்களில் மகனுக்குத் திருமணம் என்பது பெற்றவர்களுக்கு மரணத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. மாமியார், மாமனாரை தாய், தகப்பனைப் போல மதிக்கும் மருமகள் வந்துவிட்டால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. வந்த உடனேயே கிழவனையும், கிழவியையும் எப்போது வெளியே தள்ளலாம் அல்லது நாம் எப்போது பிய்த்துக் கொண்டு வெளியே போகலாம் என்று நினைப்பவள் வந்து விட்டால் மகனைப் பெற்றவர்களின் கதி அதோகதிதான்.

மகளின் வாழ்க்கை சிக்கலாகி என்னிடம் ஜோதிட ஆலோசனைக்கு வரும் ஏராளமான பெண்ணைப் பெற்றவர்களிடமும் தவறு இருக்கிறது மாப்பிள்ளை நல்லவர், ஆனால் சம்பந்திகள் அரக்கர்கள் என்பதாகத்தான் இன்றைக்கு பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலை இருக்கிறது. அதைவிட மேலாக திருமணத்திற்கு முன்பே, புகுந்த வீட்டுக்கு போனவுடன் எப்படி மருமகனை தனியாக வெளியில் கொண்டுவருவது என்று சொல்லிக் கொடுக்கும் தாய்களும் இருக்கிறார்கள். அதே தாய் தன் மருமகளும் அப்படி நினைத்தால் என்ன நடக்கும் என்பதை உணர்வதில்லை.

மாமனார், மாமியாரை அனுசரித்துப் போ. உனக்கும் ஒரு நாள் வயதாகும், நீயும் ஒருநாள் மாமியார் ஆவாய் என்பதை கவனத்தில் கொள். உன் கணவனைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, உன்னிடம் ஒப்படைத்தவர்களுக்கு நீ சில சேவைகளைச் செய்யலாம். தப்பில்லை.

மணமான புதிதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மாமியார், மாமனாருடன் சில சங்கடங்கள் வரத்தான் செய்யும். ஒரு அறிவாளியான பெண்ணால் எதையும் சமாளிக்க முடியும். முப்பது வருடம் இவனைப் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டேன், மனைவி என்ற பெயரில் வருபவள் முப்பது நாளில் என்னிடமிருந்து இவனைத் தூக்கிக் கொண்டு போய் விடுவாளோ என்ற எண்ணம் விரும்பியோ விரும்பாமலோ எல்லா மாமியார்களுக்கும் அடி மனதில் இருக்கத்தான் செய்யும்.

முதலில் நீங்களும் என் தாய், தந்தை போலத்தான். குடும்பத்தை பிரிக்கும் வேலைகளைச் செய்ய மாட்டேன் என்று உன் மாமனார், மாமியார் மனதில் ஆழமாக பதியும் நம்பிக்கை வரும் செயல்களைச் செய். அவர்களிடம் மனம் விட்டுப் பேசு. மாமியாரை அம்மா என்றழைத்து, அம்மாவை விட மேலாக நடத்தும் எத்தனையோ மருமகள்களை நான் அறிவேன். கணவனிடம் உனக்குப் பிரச்சினைகள் வரும்போது ஒரு நல்ல மாமியார்தான் உன் தாயை விட உனக்கு பக்கபலமாக இருப்பார் என்பதை மறந்து விடாதே.

மாமியாரும் ஒரு மனுஷிதான். அவரும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணிடம் நம்பிக்கையைப் பெற முடியாத சிறு பெண்ணா நீ? மாமியாரை மயக்கி வை. கணவனும் உன்னிடம் மயங்குவான். ஜாதகப்படி உன் வாழ்க்கையில் சிக்கல் வருவதற்கு காரணங்கள் எதுவுமில்லை. கணவனுடன் சந்தோஷ வாழ்க்கை வாழ்வாய். வாழ்த்துக்கள் அம்மா.

(07.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “மாமியார் மாறி விட்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *