adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
நவாம்சத்தில் கிரகச் சேர்க்கை-D-058

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஒன்பது கிரகங்களும் வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் என்பதை சென்ற வாரம் பார்த்த நிலையில், லக்னம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் என்பதைக் கொண்டு இப்போது தொடருவோம்.

லக்னம் என்பது ஒருவருடைய உடல், மனம், சிந்தனை, ஆயுள் போன்றவற்றைக் குறிப்பது என்பதால், லக்னம் வர்கோத்தம நிலை பெறுவது ஜோதிடத்தில் சிறப்பாகவே குறிப்பிடப்படுகிறது. ஒரு பொதுவான பலனாக லக்னம் வலுத்தவர், திடமான எண்ணங்களையும், மனதையும், நீண்ட ஆயுளையும் கொண்டவராக இருப்பார்.

லக்னம் எந்த நட்சத்திர முனையில் அமர்ந்திருக்கிறதோ, அந்த நட்சத்திர அதிபதி கிரகத்தின் குணங்களும், லக்னாதிபதியின் குணங்களும், ராசி மற்றும் சந்திரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி கிரகத்தின் குணங்களும் கலந்த கலவையாக ஒரு மனிதன் இருப்பான்.

ஒரு மனிதனின் முழுமையான குணத்தையும், செயல்பாடுகளையும் லக்னாதிபதி, லக்னம் அமர்ந்த நட்சத்திர அதிபதி, ராசிநாதன், சந்திரன் அமர்ந்த நட்சத்திரத்தின் அதிபதி ஆகிய கிரகங்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன. லக்னத்தில் அமரும் கிரகங்களில் சுபத்துவ, பாபத்துவ நிலைகளையும் இதில் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்து, லக்னமே ராசியாகி, அதாவது தனுசு லக்னம், தனுசு ராசியாகி லக்னத்தில் வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியோர் மட்டும் அமர்ந்திருக்கும் நிலையில், சந்திரன் மூல நட்சத்திரத்திலும் அமர்ந்து, உச்ச சனி தனது மூன்றாம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பின், அவர் இளம் வயதிலிருந்தே அதிகமான ஆன்மீக எண்ணங்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சம்பந்தப்பட்டவராக இருப்பார். இந்த பலன் நூறு சதவிகிதம் சரியாக இருக்கும். மாறாது.

இந்த அமைப்பில் லக்னம், குருவின் வீடாவதால், குருவின் முதல்நிலை காரகத்துவமான ஆன்மீகம், நல்ல நடத்தை, நற்குணம் ஆகியவை இங்கே லக்னம் சுபத்துவமானதால் முழுமையாகச் செயல்படும். ஜாதகரின் அதிக ஆன்மீக ஆர்வத்திற்கு சனியின் பார்வை துணையாக இருக்கும்.

இதேபோல ஒருவர் மிதுன லக்னத்தில் பிறந்து, லக்னத்திற்கு அதிகமான சுபத்துவம் இருக்கும்போது, அவர் சிறந்த அறிவாளியாக இருப்பார். ஜாதகருக்கு கணித ஈடுபாடும், நகைச்சுவை மற்றும் தெளிவாகப் பேசுவதும், தான் நினைப்பதை எழுத்தில் மூலமாகவோ, அல்லது வேறு வடிவங்களிலோ, தெளிவாக வெளிப்படுத்தும் திறனும் இருக்கும்.

இதே அமைப்பு சிம்மத்தில் ஏற்படும்போது, அதாவது சிம்மத்தில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்கள் மட்டும் அமரும்போது ஜாதகர் அதிகாரம் செய்வதற்காக மட்டுமே பிறந்த, நல்ல ஆளுமைத்திறன் உள்ள நிர்வாகியாக இருப்பார். தலைமை தாங்கும் தகுதி ஜாதகரிடம் இருக்கும். மிகப்பெரிய பொறுப்பும் அவருக்குக் கிடைக்கும்.

லக்னத்தில் அமரும் கிரகங்களின் சுப, பாபத்துவ அமைப்புகள், மற்றும் லக்னாதிபதியின் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுவைப் பொருத்தே ஒரு மனிதனின் வாழ்வு நிலை அமைகிறது. இதில் லக்னத்தின் வர்கோத்தம நிலையும் முக்கிய அமைப்பைப் பெறுகிறது.

லக்னத்தோடு ஒட்டுமொத்த பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு தொடர்பு கொள்ளும்போது அந்த மனிதன் வாழத் தகுதியற்றவனாக இருப்பான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதற்கு நேர்மாறாக லக்னம் அதிகபட்ச சுபத்துவ அமைப்பில் உள்ள போது, லக்னாதிபதியின் காரகத்துவங்களில் ஜாதகர் மிக உயர்நிலையில் இருப்பார்.

இதை இன்னும் சற்று நுணுக்கமாக பார்க்கப்போனால், தற்போதைய கோட்சார கிரக அமைப்பில் மிதுனத்தில் ராகு அமர்ந்து, சனியும் கேதுவும் தனுசில் உள்ள நிலையில், சனி மிதுனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 7-5-2019 முதல் செவ்வாய் மிதுனத்தில் அமர்கிறார். இது ஏறத்தாழ ஒன்றரை மாத காலத்திற்கு நீடிக்கும்..

மே ஏழாம் தேதி முதல் மிதுனத்தோடு நான்கு பாபக் கிரகங்களும் சம்பந்தப்படும் நிலை உண்டாகிறது. எதிரே சனியும் கேதுவும் இருப்பதால் தனுசும்தானே பாதிக்கப்படுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். ராகுவே அதிக பாபத்துவமுடைய நிழல் கிரகம் என்பதால் லக்னத்தில் ராகு இருப்பதே அதன் கடுமையான வலிமையிழப்பைக்  குறிக்கும். கேது இருப்பது அதிகபட்ச கெடுதல் அல்ல.

நான்கு பாபக்கிரகங்களும் மிதுனத்தின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடத்தும் இன்றைய கோட்சார நிலையில், மிதுனத்திற்கு குரு, சுக்கிர பார்வை, இருப்பு போன்ற தொடர்புகளும் இல்லை. மிதுனத்தின் அதிபதி புதனுக்கும், குருவின் பார்வை இன்னும் சில வாரங்களுக்கு இல்லை.

இதுபோன்ற ஒரு அமைப்பில் இன்னும் சில வாரங்களுக்கு மிதுன லக்னத்தில் பிறக்கும் குழந்தைகள் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் லக்னம் வர்கோத்தமம் பெற்றால் பாபத்துவத்தின் கடுமை குறையும்.

செவ்வாய் மிதுனத்திலிருந்து மாறும் வரை மிதுன லக்னத்தில் பிறக்கும் குழந்தைகள் உயர்நிலையை அடைவதற்கு தடை இருக்கும். இன்னும் ஒன்றரை மாத காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மிதுனம் ஜாதகத்தில் எந்த பாவகமாக அமைகிறதோ, அந்த பாவகம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

உதாரணமாக ஒரு குழந்தை இப்போது மீன லக்னத்தில் பிறக்குமாயின் குழந்தை பிறக்கும் நாளில் சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தையின் தாய்க்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை. இது போன்ற சூழலில் பாபக் கிரகங்களுக்கு நல்ல இடமாகச் சொல்லப்படும் ஆறாம் பாவகமாக, மிதுனம், தனுசு அமையும் நிலையில் பிறக்கும் குழந்தை பாதிக்கப்படாது.

நவாம்சத்தில் லக்னம் சுப வீடுகளில் அமையும்போது, அந்த நபருக்கு அதிக முயற்சி இன்றியே அனைத்தும் நடக்கும் ஒரு அதிர்ஷ்ட நிலை அமையும். நவாம்சத்தில் பாபரின் வீடுகளில் லக்னம் இடம் பெறும்போது அவர் அதிர்ஷ்டக் குறைவானவராகவும், முயற்சிகளுக்குப் பின் முன்னேறுபவராகவும் இருப்பார்.

இது தவிர்த்து நவாம்சத்தில் மறைவு ஸ்தானங்கள் இல்லை என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நவாம்ச லக்னத்திலிருந்து எண்ணி 6, 8, 12ல் கிரகங்கள் மறைகிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நவாம்சம் உள்ளிட்ட எந்த வர்க்கச் சக்கரங்களிலும் எண்ணிக்கை கிடையாது. சுப வர்க்கம், பாப வர்க்கம் மட்டுமே.

நவாம்சத்தில் கிரக சேர்க்கை இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி கருத்து வேற்றுமை இருக்கிறது. என்னைப் பொருத்தவரை பலவிதமான ஆய்வுகளுக்கு பின்னால் அம்சத்தில் சுபரோடு சேரும் கிரகம் நற்பலன்களைத் தருவதையும், பாபரோடு சேர்ந்து, பாபரின் வீடுகளில் இருக்கும் கிரகங்கள் வலிமையிழப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நவாம்சத்தில் குருவின் வீடுகளான தனுசு, மீனம், சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாம் ஆகிய நான்கு வீடுகளில் அமரும் கிரகங்கள் தனது தசையில் நற்பலன்களை அளிக்கவே செய்கின்றன. அதனையடுத்து ராசியில் தனித்த புதனாகி அல்லது பாபர்களுடன் சேராமல் சுபத்துவம் அடைந்திருக்கும் புதனின் நவாம்ச வீடுகள் நற்பலன் தரும்.

ராசியில் வளர்பிறை சந்திரனாகி அல்லது பௌர்ணமிக்கு அருகில் சந்திரன் உள்ள நிலையில், அம்சத்தில் கடகத்தில் இருக்கும் கிரகம் நற்பலன்களை தருகிறது. அமாவாசை இருளுக்கு அருகில் இருக்கும் சந்திரனின் அம்ச கடக வீட்டில் அமரும் கிரகம் நற்பலனைச் செய்வதில்லை. அதேபோல பாபரின் வீடுகளில் அமரும் கிரகங்களும், தனது தசையில் பெரிய நன்மைகளைத் தருவதில்லை.

நவாம்சத்தில் ஒரு கிரகத்தின் நிலை என்பது இன்னும் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

பரம்பொருளின் கருணையினால் பலதரப்பட்ட யோக, அவயோக ஜாதகங்களை பார்க்கும் நிலையில் இருக்கும் நான், கீழே ஐந்து வயதில் தந்தையை இழந்த ஒரு சிறுவனின் ஜாதகத்தை நவாம்சத்தில் கிரகச் சேர்க்கைக்கு உதாரணமாகக் கொடுத்திருக்கிறேன்

ராகு,      
    22-9-2006 காலை 8-30 மதுரை      சனி
   சுக்,
       ல/ குரு சூரி,புத, செவ், சந், கே

இந்த ஜாதகம் ஒரு உதாரணம் மட்டும்தான். இந்தச் சிறுவனின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகளைப் போலவே, நவாம்சத்தில் பாபர்களுடன் இணையும் கிரகங்கள் நற்பலனைத் தரும் வலிமையை இழப்பதை ஆய்வுப்பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன்.

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை கொண்ட சிறுவன், 22-9-2006 அன்று காலை எட்டு முப்பது மணிக்கு மதுரையில் பிறந்திருக்கிறான். 2011ஆம் ஆண்டு இவனது ஐந்து வயதில் இவனது தந்தை விபத்தில் மரணமடைந்தார்.

இந்தச் சிறுவனின் ஜாதகத்தில் 9-க்குடைய புதன் உச்சம் அடைந்திருக்கிறார். ஒன்பதாமிடத்திற்கு குரு பார்வையும் இருக்கிறது. மிக நுண்ணிய தருணங்களில் ஒரு ஜோதிடரின் கணிப்பைத் தடுமாற வைக்கும் ஜாதகங்களில் இதுவும் ஒன்று.

மேம்போக்காகப் பார்க்கும் பொழுது தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் அதிபதி புதன் உச்சம், ஒன்பதாம் பாவகத்திற்கு குருவின் பார்வை இருப்பது போலத் தோன்றி இவனது தந்தைக்கு கெடுதல்கள் எதுவும் இல்லை என்பது போன்ற அமைப்பு இருந்தாலும் சூரியன் மற்றும் புதனின் பாபத்துவம் மேற்சொன்ன தந்தை நிலையை முற்றிலும் பலவீனமாக்குகிறது.

இந்த ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதியாகிய புதன் உச்சம் என்றாலும் 12ல் மறைந்திருக்கிறார். மேலும் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு அடைந்திருப்பது போலத் தோன்றினாலும் சனி, ராகுவிற்கு நிகரான கடுமையான அமாவாசை சந்திரனின் இணைவில் பூரண பாபராக இருக்கும் செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். இங்கே  செவ்வாயின் சூட்சும வலு பலவீனமாகி விட்டது.

புதன் இங்கே செவ்வாயுடன் மிக நெருக்கமாக ஆறு டிகிரிக்குள் இணைந்திருக்கிறார். இது கடுமையான பாபத்துவ அமைப்பு. மேலும் சனியின் 5 டிகிரிக்குள் அடங்கிய துல்லிய மூன்றாம் பார்வையிலும் புதன் இருக்கிறார்.

தந்தையைக் குறிக்கும் பிதுர்காரகன் சூரியனும் இங்கே பனிரெண்டில் மறைந்து, பூரண அமாவாசை நிலையிலிருக்கும் பாபச்சந்திரன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து சனியின் பார்வையில் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இருள் கிரகங்களான ராகு-கேதுக்களின் பிடியில் இருக்கிறார்கள்.

பிதுர்க்காரகனாகிய சூரியனும், ஒன்பதாம் அதிபதி புதனும், பாபத்துவ செவ்வாய், சனியுடனும், இவர்களுக்குச் சற்றும் குறையாத அமாவாசை சந்திரனின் இணைவிலும், இருள்கிரகங்களான ராகு-கேதுவுடனும் இணைந்து, பனிரெண்டிலும் மறைந்து, ராசியில் அத்தனையும் பலவீனமான அமைப்பில், நவாம்சத்தில் சூரியன் சனியின் வீட்டில், சனியுடன் இணைந்திருக்கிறார். ஒன்பதாம் அதிபதி புதன் பூரண அமாவாசை சந்திரனின் கடக வீட்டில் அமர்ந்து ராகுவுடன் இணைந்திருக்கிறார்

நவாம்சத்தில் பாபரின் வீடுகளில், பாபரோடு சேர்ந்திருக்கும் கிரகங்கள் ராசி அமைப்பிலும் பலவீனமாக இருக்குமாயின், முற்றிலும் வலுவிழக்கும் என்பதற்கு உதாரண ஜாதகம் இது. இதைப்போலவே நூற்றுக்கணக்கான ஜாதக நிலைகளை, நவாம்சத்தில் கிரகச் சேர்க்கை உண்டு என்பதற்காக நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரு கிரகம் ராசியில் வலுவிழந்த நிலையில், அம்சத்திலும் பாபரின் சேர்க்கை, பாபரின் வீடுகளில் அமரும்போது, தனது ஆதிபத்தியம், காரகத்துவம் இரண்டையும் முழுவதுமாக இழக்கிறது என்பதற்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல உதாரணம்.

முழுமையான பாபத்துவம், முழுச் சுபத்துவத்தை ஒரு கிரகத்தின் ஒளி அளவுகளின் ஏற்ற இறக்கங்களோடு இந்தக் கட்டுரையை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால் சுபத்துவ - சூட்சும வலுக் கோட்பாட்டின் பரிமாணம் உங்களுக்குப் புரிய வரும்.

அடுத்த வெள்ளி சந்திப்போம்.

(10.05.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *