adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..?- D-025-Anaiththu Jodhita Vidhigalum Sariyanavaithana?
இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் தொழில் அமைப்புகளை பற்றிய மிகச் சுருக்கமான ஜோதிட விதிகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் சிலர் குழம்புகிறீர்கள் என்பது உங்களுடைய பின்னூட்ட கருத்துக்களில் இருந்து தெரிகிறது.
இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் மிகப்பெரிய சங்கடம் என்னவெனில், ஒரு கருத்தைப் படித்தவுடன் அதுபற்றிய சந்தேகங்களை உடனே எழுதியவரிடம் கேட்டு விட வேண்டும் என்று போனிலோ, சமூக வலைத்தளங்களிலோ உடனே கேள்விகள் கேட்பதுதான்.
சென்ற தலைமுறை எழுத்தர்களுக்கு இதுபோன்று நேர்ந்ததில்லை. அவர்களிடம் நாம் எதாவது கேட்க வேண்டுமெனில் ஒரு பதினைந்து பைசா தபால் கார்டோ, அல்லது இன்லேன்ட் லட்டரோ போட்டுவிட்டு, பதில் வருமா வராதா என்று நாள்தோறும் போஸ்ட்மேனை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். பதில் வராது.
ஆனால் செல்போனும், இணையமும் வந்தபிறகு, குறிப்பாக சமூக வலைத் தளங்களின் வருகைக்குப் பின் ஒவ்வொருவரும் எழுத்தாளர் ஆகி விட்டோம். மாலைமலரில் கட்டுரையைப் படித்தவுடன் உடனடியாக போன் செய்து விடுகிறோம் அல்லது சரியோ, தவறோ சமூக வலைத்தளங்களில் கேள்வி என்ற பெயரில் கருத்துக்கள் பதிந்து விடுகிறோம்.
என்னுடைய கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு முக்கியமாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்போது நான் எழுதிக் கொண்டிருப்பவை, ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அல்ல. புதிதாக ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருப்பவர்கள் இந்தக் கட்டுரைகளை புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். அல்லது புரிந்து கொள்ள முடியாது.
ஏற்கனவே எழுதப்பட்ட “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளும். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளும் ஜோதிடத்தில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓரளவிற்கு புரியும். அவர்களிலும் ஞானம் குறைவாக உள்ளவர்களுக்கு முழுமையாக புரிவதற்கு தடை இருக்கும். இதிலும் ஒரு விதிவிலக்காக அனுபவம் இல்லையென்றாலும் ஞானமுள்ளவர்களுக்கு உடனே புரியலாம். இது என் எழுத்தின் தவறல்ல. உங்களின் புரிந்து கொள்ளும் திறனின் தவறு.
எனது கட்டுரைகளும், காணொளிகளும் ஒரு ஜாதகத்தை எவ்வாறு புரிந்து கொண்டு பலன் சொல்வது என்று ஜோதிடர்களுக்காக எழுதப்படுபவை. ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அல்லது ஒரு சதவிகித ஞானத்துடன் தன்னுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு ஒத்துப் போகவில்லையே என்று ஆராய்பவர்களுக்கு அல்ல.
ஜோதிடத்தின் மிக உயர்நிலை புரிதலான சுபத்துவம் மற்றும் சூட்சுமவலு போன்றவைகள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. புரியவும் புரியாது. புரிய வருடங்கள் ஆகலாம். புரியாமலேயே போகலாம். திடீரென ஒரு மதியம் கேண்டீனில் நண்பருடன் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது ஞானக் கண் விழிக்கலாம். இவை உங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையைப் பொருத்தது.
ஆனால் ஏராளமான ஜோதிட ஆர்வலர்களுக்கு எனது சுருக்க விதிகள் மிகப் பெரிய ஜோதிட விழிப்புணர்வையும், நிஜமான ஜோதிடப் புரிதலையும் தந்திருப்பதினால்தான் இக் கட்டுரைகள் உலகம் முழுக்க இருக்கும் ஜோதிடத் தமிழர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்படுன்றன.
சமீபத்தில் யூ டியூபில் ஒருவர் மிக நீண்ட கேள்விகளையும், கருத்துக்களையும் பதிந்திருந்தார். அவரது கேள்வி எனது ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருந்தும், சனி வலுத்திருந்தும் நான் முதலாளியாக இருக்கிறேன். தொழில் பற்றிய உங்கள் விதிகள் தவறு. உங்கள் வெளிநாட்டு விதிகளின்படி எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் இணைந்திருப்பவர் உள்நாட்டிலேயே இருக்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் அது.
இது போன்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது. ஞானிகள் வலியுறுத்திச் சொல்லும் சுபத்துவம், பலவித ஆய்வுகளுக்குப் பிறகு நான் சொல்லும் சூட்சும வலு ஆகியவை இது போன்ற ஞானம் குறைவானவர்களுக்கு புரிய நாளாகலாம். புரியும் போது வெட்கம் வரும்.
அதேபோல முகநூலில் ஒருவர் எனக்கு கும்ப லக்னமாகி, உங்களுடைய வெளிநாட்டில் வாழ வைக்கும் விதிப்படி லக்னத்திலேயே எட்டு, பனிரெண்டுக்குரிய புதனும், சனியும் இணைந்திருந்தும் நீண்ட நாட்களாக வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை என்று சொல்லியிருந்தார்.
ஒருவர் வெளிநாட்டில் நிரந்தரமாக வசித்து குடியுரிமை பெறுவதற்கும், நீண்ட நாட்கள் வெளிநாட்டிலேயே தங்கி பணி புரிவதற்கும் பரதேச வாசத்திற்கு உரியது என்று ஜோதிடத்தில் சொல்லப்படும் எட்டு, பனிரெண்டாம் இடங்கள் சுபத்துவமாகி, இந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் சுபத்துவ, சூட்சும வலுவோடு தொடர்பு கொண்டு, வெளிநாட்டினைக் குறிக்கும் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிகளில் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தசா புக்திகள் நடக்கும்போது ஒருவர் நிரந்தரமாக வெளிநாட்டில் வசிப்பார், இது வெளிநாட்டில் ஏற்கெனவே நிரந்தரமாக இருக்கும் அனைவரின் ஜாதகங்களிலும் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும். மாறவே மாறாது.
மேற்கண்ட விதியினை அடுத்தடுத்த கட்டுரைகளில் உதாரண ஜாதகங்களுடன் விளக்குகிறேன். அதற்கு முன்பாக ஞானம் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த வெளிநாட்டில் வசிப்பவர்களின் ஜாதகங்களில் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். அசந்து போவீர்கள்.
சொல்லப்படும் விதியை நீங்கள் புரிந்து கொள்வதில்தான் தவறு இருக்கிறதே தவிர விதியில் இல்லவே இல்லை. முகநூலில் கமெண்ட் செய்திருப்பவர் கும்ப லக்னம் என்பது ஒரு ஸ்திர லக்னம், சரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் வெளிநாடு போவதற்கு இது ஒத்து வராது. வேறு சர நிலைகளும், தசா புக்திகளும் இந்த விதியை ஒட்டி இருக்குமாயின் தற்காலிகமாக அவர் சென்று வரலாம். யூ டுயூப்பில் கேட்டவருக்கும் இதே போன்ற தவறுகள் இருக்கலாம்.
நம்மில் அநேகருக்கு ஒரு விதியை புரிந்து கொள்வதில்தான் தடுமாற்றம் இருக்கும். உதாரணமாக ஒரு விதியில் சுபத்துவம், சூட்சுமவலு, சர ராசி, தசா புக்தி போன்றவைகளை வலியுறுத்துகிறேன். இதுபோன்ற மிக நுணுக்கமான விஷயங்களை ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாது.
அதேபோல இங்கே காலம் காலமாக ஜோதிடர்களால் சொல்லப்பட்டு வரும் பல விதிகள் அரைகுறையானவை. ஜோதிடம் மறைத்து வைக்கப்பட்டு ஒரு சாராருக்குள் சுற்றி வந்து சவலைப் பிள்ளையாக இருந்த காலத்தில் மட்டுமே அது பிறரை ஏமாற்றுவதற்கு பயன்பட்டுக் கொண்டிருந்தது.
 
ஆனால் புரிந்து கொள்ளும் அனைவருக்கும் ஜோதிடம் பொதுவானது என்ற சூழல் வந்து விட்ட இந்த நவீன யுகத்தில், புத்திசாலிகளான, பல்வேறு துறைகளில் இருக்கும் இளைஞர்களை ஜோதிடம் கவர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற கவைக்கு உதவாத விதிகளைச் சொல்லி ஏமாற்ற முடியாது.
இப்போது நான் குறை சொல்லும் இந்த விதிகளைப் படித்தே நானும் ஜோதிடன் ஆனேன். ஆனால் இந்த விதிகளை தெளிவாக உணர்ந்து, இவை முழுமையானவை இல்லை. இவை ஏமாற்றத்தைத் தருகின்றன, ஜோதிடம் ஒரு அனுமான சாஸ்திரம், மற்றும் பொய்யான சாஸ்திரம் என்று சொல்பவர் வாய்க்கு அவல் போடுகின்றன. என்பதை உணர்ந்திருப்பதால்தான், என்னுடைய நீண்ட கால ஆராய்ச்சியின் விளைவாக எனக்குத் தெரிந்த உண்மைகளின் மூலமாக முழுமையான விதிகளை உருவாக்கிச் சொல்கிறேன்.
இன்னும் சொல்லப் போனால், நமது ஜோதிட விளக்க நூல்களில் சொல்லப் பட்டிருக்கும் ஏகப்பட்ட பாடல்களும், விதிகளும் முன்னர் வாழ்ந்து மறைந்த தனி மனிதர்களின் ஜாதகத்தில் இருந்த கிரக நிலைகள்தான். அது எல்லோருக்கும் பொருந்தும் விதிகள் ஆகாது.
உதாரணமாக ஒரு பாடலில் பத்தில் சூரியன் இருந்தால் ஒருவன் தகப்பன் தொழிலைச் செய்வான். என்றும், இன்னொரு பாடலில் பத்தில் செவ்வாய் இருந்தால் அவன் மருத்துவன் ஆவான் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் மேற்கண்ட பாடல்களின்படி பத்தில் சூரியன் இருப்பவர் அனைவரும் தந்தை தொழிலைச் செய்வதில்லை. பத்தில் செவ்வாய் இருப்பவர்கள் அனைவரும் டாக்டர் ஆகி விடுவதில்லை.
“பாரப்பா.. பஞ்சமாதிபதி ஆறெட்டில் மறைந்தால் கூறப்பா, அவனுக்கு குழந்தை இல்லை” என்று ஆரம்பிக்கும் பழமையான பாடல்கள் அனைத்தும் முழுமையற்றவை. குழப்பமான விதிகளை கொண்டவை. ஐந்துக்குடையவன் ஆறு, எட்டில் மறைந்தாலும் குழந்தை இருப்பவருக்கு இந்த பாடலின் பதில் என்ன? நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு நிலைகள்தான் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
 
உண்மையில் இதுபோன்ற பாடல்கள் ஞானிகள் என்ற பெயரில் அன்றைக்கு இருந்த ஜோதிடர்கள் எழுதியவைதான். இவைகள் என்றோ ஒருநாள் வாழ்ந்து மறைந்த தனி மனிதர்களின் ஜாதகங்களில் இருந்த அமைப்புகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. இன்றைக்கு இதுபோன்ற ஜாதகங்களைத்தான் நாம் ஊடகங்களில் உதாரணமாக காட்டுகிறோம். அன்றைக்கு தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் அவர்கள் பனையோலைகளில் எழுதி வைத்தார்கள், அவ்வளவுதான்.
ஓலைச்சுவடியில் எழுதியதாலேயே இவைகளுக்கு புனிதச்சாயம் பூசி விடக் கூடாது. இது ஜோதிடத்தை வளர்க்காது. அனைத்துமே இங்கே ஆய்வுக்கு உட்பட்டதுதான்.
இது போன்ற ஆயிரம் விதிகளை ஒருவர் முழுக்க மனனம் செய்து கொண்டு, திரும்பத் திரும்ப படித்து, இவைகளை மனதில் தேக்கி, ஒரு ஜாதகத்தை காணும் போது அத்தனை விதிகளையும் மனதில் கொண்டு வந்து நிறுத்தி, இந்த ஜாதகத்திற்கு எந்த விதி பொருந்தும் என்பதை கருத்தில் கொண்டு பலன் சொல்ல வேண்டும் என்ற நிலையை மட்டுமே இந்த விதிகள் தருகின்றன.
நம்முடைய மூலநூல்களை தவிர்த்த பிற நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏராளமான ஜோதிட விதிகள் முழுமையற்ற ஜோதிடர்களால் உருவாக்கப்பட்டது. அவர்களுக்கே ஜோதிடம் பிடிபடாத நிலையில், தானும் ஒரு ஜோதிடர்தான், என்னுடைய பங்கும் இக்கலையில் இருக்கவேண்டும் என்கின்ற விதத்தில் சொல்லப்பட்டவை இவை.
ஞானிகளால் சொல்லப்பட்ட மூலநூல்கள் மட்டுமே ஜோதிடத்தில் மாறாத விதிகளை கொண்டவை. அவைகளிலும் ஏராளமான இடைச்செருகல்கள் இருக்கின்றன. இடையில் வந்துள்ள விளக்க நூல்களில் உள்ள இதுபோன்ற முழுமையற்ற விதிகளின் மூலம் ஒருவரால் நிச்சயமாக ஜோதிடத்தை பூரணமாக உணர முடியாது. இது போன்ற நூல்களால் உண்மையான ஜோதிடத்தை தெரிந்து கொள்ளவே முடியாது இதில் சித்தர்கள் எழுதியதாகச் சொல்லப்படும் பாடல் நூல்களையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.
 
ஒரு ஜோதிட விதி என்பது தெள்ளத் தெளிவாக தொண்ணூறு சதவிகித ஜாதகங்களில் பொருந்துவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது விதியாக இருக்க முடியும். மீதி பத்து சதவிகித ஜாதகங்களில் அந்த விதி பொருந்தவில்லை என்றாலும், நம்மையும் அறியாமல் மிக நுணுக்கமான சூழ்நிலைகளில், அந்த ஜாதகத்தின் உள்நிலையில் சூட்சும அமைப்பில், அதற்கான விளக்கம் இருக்கும். நமக்கு தெரியவில்லை. அவ்வளவுதான்.
இதுபோன்ற குழப்பமான விதிகளை நிராகரித்தே சுப, சூட்சும வலுக்களைக் கொண்டு, “ஒரு நிலைக்கு ஒன்றே ஒன்று” என முழுமையான விதிகளைத் தருகிறேன். இதனை நீங்கள் உணரவும், புரியவும் முடிந்தால் எந்த ஒரு ஜாதகத்தோடும் இது சரியாக இருக்கும்.
அடுத்த வெள்ளி தொடருவோம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

4 thoughts on “அனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..?- D-025-Anaiththu Jodhita Vidhigalum Sariyanavaithana?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *