adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 182 (10.04.18)

ஒரு சகோதரி, கோவை.

கேள்வி :

இவன் கல்யாணம் வீட்டில் பார்ப்பதா? அல்லது காதல் திருமணமா? ஒரு பெண்ணை விரும்புகிறான். இருவருக்கும் திருமணம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. பெண்ணின் நட்சத்திரம் சித்திரை 2-ம் பாதம், பையன் சித்திரை 3-ம் பாதம். ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா? காதல் கல்யாணம் நடந்தேறி விடுமா? இதனால் குடும்பத்தில் ஒரே சிக்கலாக உள்ளது? பெண் வீட்டார் ஜாதகம் கொடுக்கவில்லை. நட்சத்திரம் மட்டும் சொல்லி இருக்கிறார்கள்.

பதில் :

இருவர் மனம் விரும்பி செய்யும் காதல் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக நீங்கள் கேட்டிருக்கும் நட்சத்திர பொருத்தம் பார்க்கவே வேண்டாம். பத்துப்பொருத்தம் எனப்படும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து நடத்தப்படும் நிச்சயித்த திருமண தம்பதிகளே முழுக்க முழுக்க சேர்ந்து வாழ்ந்து விடுவதில்லையே?

எழுதி அனுப்பப்படும் ஜாதக கட்டங்களை மட்டும் வைத்து நான் பலன் சொல்வது இல்லை. ஒரு நல்ல ஜோதிடன் முதலில் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறதா? ஜாதகரின் வாழ்க்கையோடு அந்த ஜாதகம் ஒத்துப் போகிறதா? என்பதை உறுதி செய்து கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும். நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் பிறந்தநாள் விவரங்கள் இல்லை. எனவே உங்கள் கேள்விக்கு என்னால் முழுமையாக பதில் தர முடியவில்லை.

கே.எஸ்.நடனசபாபதி, திட்டக்குடி.

கேள்வி :

பெருமதிப்பிற்குரிய என் மானசீக குருநாதரின் பொற்பாதங்களில் வாசனை திரவியங்களைத் தெளித்து செந்தாமரை மலர்களை வைத்து வணங்குகிறேன். தங்களின் ராசிபலன்கள் எனக்கு மிகவும் சரியாக உள்ளது. தங்களிடம் நேரில் வந்து பலன் கேட்கும் நிலையில் நான் இல்லை. 70 வயதான  நான் இறைவனடி சேர்வது எப்போது என தாங்கள் கூறினால் நிச்சயமாக சரியாக இருக்கும். அருள் கூர்ந்து இந்த சீடனுக்கு பதில் தர வேண்டுகிறேன்.

பதில் :
ரா
12-9-1948 5.13 மாலை திட்டக்குடி சுக்
சூ, சனி
 சந் குரு செவ் கே பு

(கும்ப லக்னம், தனுசு ராசி. 3-ல் ராகு. 6-ல் சுக். 7-ல் சூரி, சனி. 8-ல் புத. 9-ல் செவ், கேது. 10-ல் குரு. 11-ல் சந். 12-9-1948, மாலை 5.13, திட்டக்குடி).

சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் உச்சபலத்தை அடைந்துள்ளதால் நீங்களே ஓரளவிற்கு ஜோதிட அறிவு உள்ளவராகத்தான் இருப்பீர்கள். மாலைமலரில் கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்த போது, ஒன்றிரண்டு வயதானவர்கள் இது போல மரணகாலத்தை கேட்டதற்கு பதில் கொடுக்கப் போய், அதன் பிறகு நான் எப்போது மரணம் அடைவேன். என்பது பற்றிய கேள்விகள் வந்து குவிந்து விட்டதால் மரணம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்த்து விட்டேன்.

லக்னத்திற்கு எட்டுக்குடையவன் உச்சம், ராசிக்கு எட்டாமிடத்தில் சுக்கிரன், லக்னத்திற்கு லக்னாதிபதி பார்வை என்ற சுபத்துவ அமைப்புகளோடு லக்ன ராஜனின் தசையும் நடப்பதால் தீர்க்காயுள் கொண்ட ஜாதக அமைப்பு உங்களுடையது. சூரியனை விட்டு 20 டிகிரி விலகி அஸ்தங்கம் அடையாமல், சுபத்துவ கேது சாரத்தில் அமர்ந்த லக்னாதிபதி தசை நடப்பதால் உங்களுக்கு குடும்பம், மனைவி, மகன்கள் மூலமாக சந்தோஷம் இருக்கும். இன்னும் பேரன்-பேத்திகளின் சுப நிகழ்வுகளை நீங்கள் பார்த்தாக வேண்டியிருக்கிறது. எனவே இறைவனடி சேர்வதற்கு அவசரப்பட வேண்டாம். அது இன்னும் சில வருடங்களுக்கு இல்லை.

இரா.மோகன்ராஜ், ஆற்காடு.

கேள்வி :

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நல்லவேலை கிடைத்தும் கோபத்தால் அதை இழந்து விட்டேன். மூன்று வருடங்களாகியும் இன்னும் திருப்தியான வேலை கிடைக்கவில்லை. தகுதிக்கும், மரியாதைக்கும் குறைவான இடத்தில் பணத்திற்காக வேலை பார்க்கிறேன். 21 வயது வரை எல்லாம் அதிர்ஷ்டமாகத்தான் இருந்தது. அதற்கு பிறகு வீட்டிலும் எனக்கும் எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை. நன்கு படித்து குறும்படங்களில் பணியாற்றி விருதுகள் வாங்கி இருக்கிறேன். சினிமாத்துறையில் முயற்சி செய்யலாமா? என் அண்ணனும் என்னைப் போலவே சிரமப்படுகிறான். அவன் நன்மைக்காக எனது திருமண வாழ்க்கையை தியாகம் செய்யப் போகிறேன். எனக்கு ஏற்படும் திருமணச் செலவை அவனுக்குச் செய்து அவனை நன்கு வாழ வைக்கப் போகிறேன். இது நடக்குமா? நல்ல பதில் சொல்லவும்.

பதில் :
கே செவ்
ல சனி 5-9-1994 6.35 மாலை சேலம்
சந் சூ
சுக் கு,ரா பு

(கும்ப லக்னம். சிம்ம ராசி. 1-ல் சனி. 3-ல் கேது. 5-ல் செவ். 7-ல் சூரி, சந். 8-ல் புத. 9-ல் சுக், குரு, ராகு. 5-9-1994, மாலை 6.35, சேலம்)

குறும்படத்தில் வேலை செய்து சினிமாவிற்குப் போக ஆசைப்படுவதால் வாழ்க்கையையும் சினிமாவாகத்தான் நினைக்கிறாய். அண்ணனுக்காக தியாகம் செய்வது எல்லாம் தமிழ் சினிமாவில் நடக்கும். நிஜத்தில் ஒத்து வராது. 23 வயதில் இப்படித்தான் நினைக்கத் தோன்றும். அண்ணனுக்கு திருமணமாகி அண்ணி என்ற ஒருத்தி வந்தவுடன் வாழ்க்கை சினிமா அல்ல என்று புரியும்.

ஜாதகப்படி 22 வயதிற்கு மேல் கும்பலக்னத்திற்கு வரக்கூடாத சந்திர தசை ஆரம்பித்திருக்கிறது. 30 வயதிற்கு மேல் செட்டில் ஆகக்கூடிய ஜாதகம் உன்னுடையது. 30 வயதுவரை எந்த தொழிலிலும் நிரந்தரமாக இல்லாமல் தேவை இல்லாத துறைகளில் நுழைந்து வாழ்க்கையை வீணடிப்பாய். 32 வயதிற்கு பிறகு வரும் செவ்வாய் தசை ஜீவனாதிபதி தசை என்பதால் அதற்கு மேல் உனக்கு நிரந்தர வேலையை அமைத்து தரும். 30 வயதிற்கு மேல் திருமணம் அமையும். அண்ணனுக்காக தியாகம் எல்லாம் செய்ய மாட்டாய்.

அதிர்ஷ்டம் வாழ்வில் எப்போது வரும்?

எஸ்.பாலமுருகன், ஆய்க்குடி.

கேள்வி :

தினமும் சந்திராஷ்டமம் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் வாழ்க்கை போகிறது. ஒரு வயதில் சொத்து, எட்டு வயதில் தந்தை, பதினான்கு வயதில் படிப்பு போய்விட்டது. பஸ் கிளீனராக இருந்தேன். ஆறு பஸ்சுக்கு ஆறு கிளீனர்கள் இருந்தும் என்னை மட்டும் நிர்வாகித்தினர் வேலை முடிந்து தினமும் ஆறு பஸ்சையும் கழுவிவிட்டு செல்லுமாறு சொன்னார்கள். மற்ற கிளீனர்கள் வீட்டிற்கு செல்லும்போது எனக்கு மட்டும் ஏன் வேலை? சம்பளம் மட்டும் அதேதானே என்று கேட்டதற்கு பதிலில்லை.

வேலையை விட்டு விட்டு கேரளாவில் மளிகைக் கடைக்கு சென்றேன். அங்கேயும் என் நேரம், காலம் விட்டு வைக்கவில்லை. மற்ற பணியாளர்களை இரவு 9.30 மணிக்கு அனுப்பி விடும் முதலாளி என்னை மட்டும் மறுநாள் வியாபாரத்திற்கு தயாராக சிந்தியிருக்கும் பொருட்களையும், மூட்டைகளையும் சரி செய்ய சொல்லி 11 மணிக்குத்தான் அனுப்புவார். இங்கும் மற்றவர்களுக்கு என்ன சம்பளமோ அதேதான் எனக்கும். இத்தனைக்கும் நான் நன்றாக வேலையும் செய்வேன். முதலாளிக்கும் எனக்கும் எந்த பகையும் கிடையாது.

சரி... நம் துரதிர்ஷ்டம்தான் இப்படி இருக்கிறது என்று வாழ்நாளில் லாட்டரி டிக்கெட்டையே வாங்காத நான், கோவை வரும்போது வாங்கித்தான் பார்ப்போமே என்று ஒன்று வாங்கினேன். வாங்கியதை பரிசு விழுந்ததா? இல்லையா என்று பார்ப்பதற்குள் அன்றைய முதலமைச்சர் லாட்டரி டிக்கெட்டையே தடை செய்து விட்டார். நான் அன்று கோவையில் வாங்காமல் இருந்திருந்தால் இன்றும் லாட்டரி வியாபாரம் நடந்து கொண்டுதான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

43 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. எல்லா கோவில்களிலும் பரிகாரம் செய்தாயிற்று. கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. எனது முடிவையாவது ஆண்டவன் நல்லபடியாக கொடுப்பானா? அல்லது அதுவும் இதுபோல துரதிர்ஷ்டமாகத்தான் இருக்குமா? வீட்டில் நானும் அம்மாவும் மட்டும்தான் இருக்கிறோம். அம்மாவிற்கு பின் நான் அனாதைதான். அதனால் எனது இறப்பு நோய்வாய்ப்பட்டா? அல்லது வாகன விபத்தாலா? என்று தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

பதில் :
கே  ல, சனி
சந் குரு 22-11-1974 9.30 இரவு நெல்லை
சூ,சு ரா பு  செவ்

(மிதுன லக்னம், கும்ப ராசி. 1-ல் சனி. 5-ல் புத, செவ். 6-ல் சூரி, சுக், ராகு. 9-ல் சந், குரு. 12-ல் கேது. 22-11-1974, இரவு 9.30, நெல்லை)

கடிதத்தில் நீங்கள் சொல்லும் சம்பவங்களும் உங்கள் ஜாதகமும் ஒத்து வரவில்லை. உங்கள் பிறந்த நேரமான இரவு 9.30 என்பது சரியானது அல்ல. இன்னும் 15 நிமிடங்கள் தள்ளி 9.45-க்கு மேல்தான் நீங்கள் பிறந்திருக்க முடியும். தந்துள்ள நேரப்படியும், அனுப்பியுள்ள ஜாதகப்படியும், உங்களுக்கு மிதுன லக்னம் வருகிறது. மிதுனத்தில் நீங்கள் பிறந்திருந்தால் எட்டு வயதில் உங்களுடைய தந்தையை இழக்கும் அமைப்பு இல்லை.

மிதுனம் என்றால் தந்தைக்குரிய ஒன்பதாமிடத்தில் குரு அமர்ந்து, ஒன்பதுக்குடையவனை குரு பார்த்து, பாக்கியாதிபதி லக்னத்தில் இருக்கும் நிலையில் உங்களுடைய தந்தை இன்னும் உயிருடன் இருக்க வேண்டும். பிறந்த நேரம் 9.45 க்கு மேல் என்றால் கடக லக்னமாகி, ஒன்பதுக்குடைய குரு எட்டில் மறைந்து, ஒன்பதாமிடத்தை சனி பார்த்து, தந்தைக்காரகன் சூரியன் ராகுவுடன் மிக நெருக்கமாக இணைந்ததால், உங்களுடைய எட்டு வயதில் ஆரம்பித்த குருதசையின் ஆரம்பத்தில் நீங்கள் தகப்பனை இழக்கும் அமைப்பு இருக்கிறது.

அதேபோல கடிதத்தில் நீங்கள் கூறி இருக்கும் துரதிர்ஷ்டமான விஷயங்கள் அனைத்தும் ஒருவருக்கு ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகளின் தசைகளில்தான் நடக்கும். அதன்படி உங்களுக்கு கடக லக்னமாகி எட்டு வயது முதல் நாற்பத்தி மூன்று வயது வரை கடந்த 35 ஆண்டு காலம் ஆறு, எட்டுக்குடைய குரு, சனி தசைகள் நடந்ததால் எவ்வித முன்னேற்றமும் இன்றி இருக்கிறீர்கள்.

கடக லக்னப்படி ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்து, சுக்கிரன் எட்டு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்ததால் தாரதோஷமும், ஐந்தாமிடத்தில் ராகு-கேதுக்கள் அமர்ந்து, ஐந்துக்குடையவன் அந்த வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து, குரு எட்டில் இருப்பதால் உண்டான புத்திர தோஷத்தால் 43 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைத்திலும் மேலாக லக்னாதிபதி சந்திரன் எட்டில் மறைந்திருக்கிறார். லக்ன நாயகன் வலுவிழந்தாலே வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் நடக்காது.

இத்தனை பலவீனங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் சந்திரனும், குருவும் வர்க்கோத்தம நிலையில் இருக்கிறார்கள். குடும்பாதிபதி சூரியனும், சுக்கிரனும் நவாம்சத்தில் ஆட்சியாக இருக்கிறார்கள். தற்போது ஆறு, எட்டு அதிபதிகளின் தசை முடிந்து புதனின் தசை ஆரம்பித்துள்ளது. திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை அடுத்த வருடம் ஆரம்பிக்கும் புதன் தசை, கேது புக்தியில், கேது சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் கண்டிப்பாக கிடைக்கும். ஒருமுறை ஸ்ரீகாளஹஸ்தி போய் வாருங்கள்.

ஜாதகப்படி நீங்கள் அனாதையாக இறக்க வாய்ப்பு இல்லை. மனிதனாக பிறந்தவர் எவரும் எப்போதும் துரதிர்தஷ்டசாலி இல்லை. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கும் ஜீவன் எதுவுமே இங்கே இல்லை. ஏதேனும் ஒரு நாளில் ஒருவருக்கு சந்தோஷம் என்பது கிடைத்தே தீர வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் என்றாகி விட்ட பிறகு இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கமாக வந்துதானே தீர வேண்டும்.

ஜோதிடம் என்பது நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொண்டு, மாற்ற முடிந்தவைகளை மாற்றிக் கொண்டு ஜெயிக்கும் வழியைப் பார்ப்பதுதான். முதலில் உங்களைப் பற்றி இப்படி தாழ்வாக நினைப்பதை நிறுத்துங்கள். கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக நீங்கள் பட்ட கஷ்டம் இனி இருக்காது. நடக்கும் தசாநாதன் புதன் ராஜயோகாதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் அடுத்த வருட இறுதியில் சுயபுக்தி முடிந்ததும் உங்களுடைய அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பிக்கும்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. என்ன... நீங்கள் கொஞ்சம் அதிகமாக அனுபவித்து விட்டீர்கள். அவ்வளவுதான். உங்களின் துரதிர்ஷ்டம் அடுத்த வருட தீபாவளியுடன் முடிகிறது. இப்போதே நீங்கள் நன்றாக இருக்க வேண்டிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். இனிமேல் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 182 (10.04.18)

  1. 30 வயது வாழ்ந்தாரும் இல்லை, 30 தாழ்ந்தாரும் இல்லை…மனித வாழ்க்கை நிரூபணம் ஆகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *