adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
my cart
ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham…
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
 
கைப்பேசி : +91 8870 99 8888
 
மனிதனின் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு பரம்பொருள் அருளிய மிகப் பெரிய கொடையான இந்த ஜோதிடக் கலை, எல்லையற்ற பிரபஞ்சத்தைப் போலவே ஒரு மகா அற்புதம்தான் என்பதை இக்கலையை ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள்.
 
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான இந்த மகா சமுத்திரத்தில் எல்லோரையும் போல எனக்கும் பருகக் கிடைத்தது சில துளிகள் மட்டும்தான். 
 
இத்தகைய சிற்றறிவை வைத்துத்தான் ஜோதிடம் என்பது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு மாபெரும் அறிவியல் என்பதையும், இது ஒருவகையான காலவியல் விஞ்ஞானம் என்பதையும் எனது முந்தைய நூல்களில் ஓரளவிற்கேனும் தெளிவாக்க முயற்சித்திருக்கிறேன். 
 
“ஜோதிடம் எனும் மகா அற்புதம்” எனும் இந்தப் புதிய நூல் (வாராவாரம் “மாலைமலர்” நாளிதழில் வெளிவந்த தொடர் கட்டுரைகள்) இக் கலை எப்படி ஒரு மாபெரும் விஞ்ஞான அஸ்திவாரத்தில் அமர்ந்திருக்கிறது என்பதை சிறிய அளவிலாவது  விளக்குவதாக இருக்கும். 
 
ஜோதிடக் கலையை சரியான கோணத்தில் விளக்கிச் சொல்வதற்கு, இதை முறையாகப் புரிந்து கொண்டவர்கள் இப்போது இல்லாமல் போய் விட்ட காரணத்தால், எளிய ஜனங்களுக்கு ஜோதிடம் ஒரு புதிராகவே போய் விட்டது. அல்லது பயமுறுத்திப் பணம் பறிக்கும் கலையாக இப்போது திசை மாறி விட்டது. 
 
ஜோதிடத்தை எல்லோருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தினால் இன்னும் மிகுதியான மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது உறுதியான ஒன்று. 
 
இதில் உள்ள பல சூட்சும விஷயங்களை, ஏன்? எதற்கு? எப்படி? என்று தெரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ள ஆர்வமும் இல்லாமல் அல்லது தெளிவாக சொல்வதற்கு யாரும் இல்லாத நிலையில்தான் இன்றைய ஜோதிடர்களும், இதன் ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஜோதிடத்தின் அத்தனை சூட்சும அமைப்புகளையும், விதிகளையும் பாமரனுக்கும் புரியும்படி விளக்கவே முடியாது. 
 
ஜோதிடம் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டது. பல நேரங்களில் இங்கே விதியை விட விதிவிலக்கே அதிகமாக கவனிக்கப்பட வேண்டும். இது போன்ற நிலைகளில் ஜோதிடத்தை புரிந்து கொள்பவரிடம்தான் குறை இருக்கிறதே தவிர இம்மியளவு குறை கூட இந்த மகா கலையில் இல்லை. 
 
ஜோதிடத்தையும், ஜோதிடரையும் விளக்குவதற்கு இங்கே ஏராளமான சம்பவங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. 
 
பதினெட்டாவது பிறந்த நாளன்று இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிட ஞானி அரசனிடம் சொல்ல, விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போனால்தானே மகன் இறப்பான் என்று அரண்மனைக்குள்ளேயே மகனை வைத்து அடைகாத்த நிலையில், மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித் தலை விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் ஜெயித்து வெறும் மிகிரர் “வராஹமிகிரர்” ஆனதும் இதே ஜோதிடத்தால்தான்.
 
அதே போன்ற ஒரு பதினெட்டாவது பிறந்த நாளில் தன் மகனும் இறந்து போவான் என்று வேறொரு நிலையில் இன்னொரு ஜோதிடர் கணிக்கிறார். ஆனால் இந்த அமைப்பிற்கு குருவின் பார்வை இருப்பதால் மகனின் மரணம் இருக்காது என்று உறுதி செய்து நிம்மதி அடைகிறார். ஆனால் கணிப்புத் தவறி மகன் பதினெட்டாவது பிறந்த நாளில் மரித்துப் போகிறான். 
 
அதிர்ந்து போன ஜோதிடர், இந்த அற்புதக் கலையே பொய் என்று மகனின் சிதையிலேயே அனைத்து ஓலைச் சுவடிகளையும் எரிக்கப் போகும் நிலையில் முக்காலமும் அறிந்த ஞானி நாரதர் வந்து தடுக்கிறார்.
 
“மகன் ஜாதகத்தில் குருபார்வை இருக்கிறது என்று கணித்தாயே, கிரகங்களுக்கும் மனிதர்களைப் போலவே விழிப்பது, காலைக்கடன் கழிப்பது, போஜனம், தாம்பூலம், தூக்கம் போன்ற நித்யகர்மாக்கள் சொல்லப்பட்டிருக்கிறதே அறிவாயா?” எனக் கேட்டு, மகன் ஜாதகத்தில் குருவின் பார்வை உள்ளது என்று நீ கணித்த போது குருவின் நித்யகர்மா என்ன என்பதை பார்த்தாயா? என்று கேட்கிறார்.
 
மீண்டும் கணித்துப் பார்க்கையில் குருவின் அப்போதைய நித்ய கர்மா தூங்குவது என வருகிறது. தூங்கும் குருவிற்கு ஏது பார்வை? தவறை உன்பேரில் வைத்துக் கொண்டு ஓலைச்சுவடிகளை ஏன் எரிக்கிறாய்? என்று நாரத மகரிஷி கேட்பதாக இன்னொரு கதை சொல்கிறது.
 
உண்மையில் குருடர்கள் யானையைப் பார்ப்பதுதான் ஜோதிடர்களும், ஜோதிட சாஸ்திரமும். 
 
யானையின் முன்னங்காலை மட்டும் தடவிப் பார்க்கும் ஜோதிடர், யானை தூண் போல இருக்கும் என்கிறார். துதிக்கையைப் பார்ப்பவர் உருளையைப் போன்றது யானை என்கிறார். கடைநிலையில் இருக்கும் ஜோதிடர், வாலின் நுனி முடியை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு, யானை சிறு குச்சியைப் போல இருக்கும் என்கிறார். உண்மையில் இந்த ஜோதிட யானையை முழுதாகப் பார்த்தவர்கள் எவருமில்லை.    
 
பலன் சொல்வதைத் தவிர்த்து விட்டால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியலைச் சார்ந்த ஒன்றுதான் என்பதை பகுத்தறிவாளர்கள் கூட ஒத்துக் கொள்கிறார்கள். 
 
தமிழகத்தின் மிகப்பெரிய பகுத்தறிவாளராக அறியப்பட்ட ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது, “ஜோதிடத்தில் எதிர்காலம் பற்றிய ஏதோ ஒன்று ஒளிந்து கிடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து பயமுறுத்தி, பரிகாரம் என்ற பெயரில் பணம் கறக்கும் கலையாக ஜோதிடம் மாறி விட்டதால்தான் என் போன்றவர்கள் இதனை எதிர்க்கிறோம். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் இக் கலையை ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்ட, நல்வழி காட்ட பயன்படுத்துவதை வரவேற்கவே செய்கிறேன்” என்று சொன்னார். 
 
ஜோதிடத்தில் கொடுக்கப்படும் கிரக நிலைகள் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்ட வானியல் உண்மைகள்தான். இன்னும் ஒருபடி மேலாக சொல்லப் போனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடம் கண்டுபிடித்த பஞ்சாங்கத்தின் மேல்தான் இன்றைய நவீன வானவியல் அமர்ந்திருக்கிறது. 
 
நாசா உள்ளிட்ட நவீன விஞ்ஞானிகள் இன்றைய கிரக நிலைகளை துல்லியமாக கணிக்க உதவியவை அன்றைக்கு நமது தெய்வாம்சம் பொருந்திய ஜோதிட ஞானிகள் வெறும் கண்ணால் பார்த்துச் சொன்ன அடிப்படை கிரக நிலைகள்தான். 
 
ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் கிரகங்கள் அனைத்தும்  நவீன விஞ்ஞானத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டவை. 
 
இன்றைய விஞ்ஞானம் கடந்த ஐநூறு  ஆண்டுகளாக செழித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் வானவியலின் அடிப்படையே ஜோதிட சாஸ்திரம்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்.
 
பெரும் விஞ்ஞானியான சர். ஐசக் நியூட்டனின் அறையில் ஜோதிடப் புத்தகங்கள் நிரம்பி இருப்பதைப் பார்த்த அவரது மாணவர் ஹாலி, “விஞ்ஞானியின் அறையில் ஜோதிடப் புத்தகங்களா?” என்று கேட்டதற்கு “ஜோதிடத்தைப் பற்றி நான் அறிந்திருப்பதால் அவற்றை வைத்திருக்கிறேன். அறியாததால் நீ கேட்கிறாய்” என்று பதில் சொன்னார். 
 
அரசின் ஆதரவினால் கிடைக்கும் முறையான ஆராய்ச்சியின் மூலம் அறிவியல் வளர்ந்து கொண்டே வரும் நிலையில், நவீன வானவியலின் ஆதார ஒன்றான ஜோதிடம் மட்டும் இன்றுவரை பெரிய ஆராய்ச்சிகளும், முன்னேற்றமும் இன்றி சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகிறது. 
 
நவீன வானியல் விஞ்ஞானத்திற்கு கொடுக்கப்படும் இதே முக்கியத்துவம் ஜோதிடத்திற்கும் கொடுக்கப்பட்டிருந்தால், இன்றைய விஞ்ஞானம் வேறுவகையில் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டு பிடித்திருக்குமோ என்னவோ?  
 
விஞ்ஞானிகள் இன்று வான சாஸ்திரத்தின் குறியீடுகளாக பயன்படுத்தும் அடிப்படை விஷயங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்தையும் கண்டுபிடித்தது அன்றைய ஜோதிடம்தானே தவிர நவீன விஞ்ஞானம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜோதிடம்தான் விஞ்ஞானமாக கருதப்பட்டு வந்தது. 
 
பூமியில் இருந்து வானத்தை பார்த்த மனிதன் தன்னைச் சுற்றியுள்ள வான்வெளியை பனிரெண்டு பங்குகளாக, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளாக பிரித்தது, சூரிய, சந்திர, பூமியின் இயக்கங்களை வைத்துத்தான். இந்த மூன்றும்தான் நம்மைச் சுற்றியுள்ள வானின் ஆதாரப் புள்ளிகள். பூமியில் இருந்து பார்ப்பதால் நமக்கு சூரியனும், சந்திரனும் ஒரு நிலையில் மையப் புள்ளிகள் ஆகின. 
 
ஜோதிடப்படி சந்திரனின் வழியாக, அதைக் கடந்துதான் வானம் பார்க்கப் படுகிறது. நம்மை மிக நெருங்கியிருக்கும் ஒரு ஆதாரப் புள்ளியான சந்திரன், பரந்த வானின் பின்புலத்தோடு பூமியைச் சுற்றி வரும்போது 12 அமாவாசைகளும், 12 பவுர்ணமிகளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக ஏற்படுவதை கணக்கில் கொண்டுதான் நம்முடைய பனிரெண்டு ராசிகள் உருவாகின. 
 
சந்திரனின் இருப்பை வைத்துத் தான் நட்சத்திரக் கூட்டங்களைக் கணிக்கிறோம் என்பதால், நிலவு பூமியைச் சுற்றி வரும் இருபத்தி ஏழரை நாட்கள் கொண்ட ஒரு முழுச் சுற்று 27 நட்சத்திர கூட்டங்களாகின.
ஜோதிடம் என்பது ஒளியைப் பற்றிச் சொல்வது என்பதை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். 
 
ஒளியைப் போலவே கவனிக்கக் கூடிய இன்னொன்று, ஈர்ப்பு விசை எனப்படும் மகத்தான ஆற்றல். சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்கள் அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன. சூரியனைப் போலவே கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. அதனால் நிலா போன்ற துணைக் கோள்கள் மூலக் கிரகங்களைச் சுற்றி வருகின்றன. 
 
கிரகங்களின் ஈர்ப்பு விசையாகட்டும், அவற்றின் ஒளியாகட்டும் அனைத்திற்கும் மூல காரணம் சூரியன்தான். சூரிய ஒளி, அதனை பிரதிபலிக்கும் சந்திர ஒளி, மற்ற கிரகங்களின் ஒளி மற்றும் இவை அனைத்திற்குமான ஈர்ப்பு விசைகளும் இணைந்தே பூமியில் உயிரினத்தை உருவாக்கி அவற்றின் வாழ்க்கை முறைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதுதான் ஜோதிடம். 
 
உயிர் உருவாவதற்கு சூரிய ஒளியும், அதனை வாங்கிப் பிரதிபலிக்கும் சந்திரக் கதிர்களும், குரு கிரகத்திடம் உள்ள மீத்தேன் ஒளியும் அவசியமானது. குருவிடம் அதிகமாக உள்ள மீத்தேனால்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றின என்பதை நவீன விஞ்ஞானம் இப்போது நிரூபித்திருக்கிறது. 
 
இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜோதிடம் சந்திரனை மாதா காரகன் என்றும், குருவை புத்திர காரகன் என்றும் வகைப்படுத்திச் சொன்னது. 
 
தற்போது நாம் பின்பற்றி வரும் பஞ்சாங்கங்களில் உள்ள ராகுகாலம், எமகண்டம் போன்றவைகள் ஒரு முழுமையான விஞ்ஞானம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 
 
பலவிதமான வானியல் உண்மைகளே இன்றைய ஜோதிட சாஸ்திரம் கூறுகின்ற அடிப்படை விதிகள் ஆயின. பூமியின் சுழற்சியாலும், சந்திரனின் சுழற்சியாலும் மனிதனின் மேல் அவ்வப்போது ஏற்படும் எதிர்மறை சக்திகளையே ஜோதிடம் விஷகாலம், ராகு காலம், எமகண்டம் என்று பெயரிட்டுச் சொன்னது. 
 
இந்திய ஜோதிடத்தின் இரண்டரை நாழிகை அளவுள்ள ஹோரை எனப்படும் ஒரு மணி நேரம் கொண்ட ஒரு கால அளவுதான் இங்கிருந்து ஏற்றுமதியாகி ஆங்கிலத்தில் ஹவர் என்று சொல்லப்பட்டு  நமக்கே திரும்பி வந்து இறக்குமதி ஆனது. 
 
எப்படிப் பார்த்தாலும் நவீன விஞ்ஞானத்தின் மூலத்தை தேடினால் அது ஆரம்பமானது பண்டைய ஜோதிடத்தில் இருந்துதான் என்பது தெரிய வரும். 
அடுத்தடுத்து வர இருக்கும் அத்தியாயங்களில் ஜோதிடத்தின் வேறு சில பரிமாணங்களைப் பார்க்கலாம்.
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

One thought on “ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham…

  1. Good Evening sir,

    Detail Astro explanation is amazing… more useful and basic people not know, this information.
    thanks,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha