adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 78 (15.3.2016)

எஸ். மகாலக்ஷ்மி செல்வம், குருசாமிபாளையம்.

கேள்வி :
பிளஸ் ஒன் படிக்கும் மூத்தமகளுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது ஆசை. இளையமகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு கலெக்டராக ஆசை. இருவரும் சிம்மராசி ஆனால் நட்சத்திரம் வேறு வேறு. நன்றாகவும் படிக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேற ஜாதகத்தில் வழி உள்ளதா?
பதில் :
மூத்தவளுக்கு விருச்சிக லக்னமாகி லக்னாதிபதி செவ்வாய் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று குருவுடன் இணைந்து சுபத்துவமாகி வர்க்கோத்தமுமாகி நவாம்சத்தில் குரு உச்சம், சூரியன் ஆட்சி என மருத்துவத்துக்குரிய மூன்று கிரகங்களும் வலுப்பெற்று பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்வதால் (18.03.2000 11.26 இரவு, ஈரோடு) சர்வநிச்சயமாக டாக்டராவார். பதினாறு வயதிற்குப் பிறகு நடக்கவிருக்கும் வலுப்பெற்ற தர்மகர்மாதிபதிகளான சூரிய, சந்திர தசைகளும் இதை உறுதி செய்கின்றன.
இளையமகளுக்கும் விருச்சிகலக்னமாகி ஆட்சிபெற்ற குருபகவான் பத்தாமிடமான சிம்மத்தை பார்த்து ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து நவாம்சத்தில் சூரியன், சந்திரன், குரு ஆட்சியாகி செவ்வாய் உச்சம் பெற்றதால் (09.06.2008 5.47 மாலை, ராசிபுரம்) உறுதியாக அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக பதவி வகிப்பார். எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி செலுத்துங்கள்.
ப. பரமசிவம், சேலம்.
கேள்வி :
மகளின் திருமணம் தாமதமாகி வருகிறது. ஜோதிடர்கள் சொல்லும் அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்துள்ளோம். அவருக்கு எப்பொழுது திருமணம்? இன்னும் பொறுத்துப் பார்க்கலாமா? குழம்பிய மனதுடன் இருக்கும் எனக்கு தெளிவாகப் பதில் சொல்லவும்.
சூரி,புத சுக் ராகு
ராசி
 குரு லக் சந்,சனி செவ்
பதில் :
(விருச்சிக லக்னம், துலாம் ராசி இரண்டில் குரு, ஆறில் சூரி, புத, சுக், ஏழில் ராகு, பனிரெண்டில் செவ், சனி 13.05.1984 7.18 இரவு, சேலம்)
ராசிக்கு ஏழில் ராகு அமர்ந்து ஏழுக்குடையவன் ஆறில் பலவீனமாகி ராசிக்கு ஏழாமிடத்தை சனி, செவ்வாய் பார்த்ததோடு பனிரெண்டில் சனி செவ்வாய் இணைப்பும் ஏற்பட்டதால் களத்திரதோஷம் ஏற்பட்ட ஜாதகம். சரியான பருவத்தில் ஏழரைச்சனியும் நடந்ததால் திருமணத்திற்கு தாமதம்.
ராகு சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் தற்பொழுது நடக்கும் குருதசை ராகுபுக்தியில் இந்த வருடத்திற்குள் நியாயமாக திருமணத்தைத் தர வேண்டும். ஆனால் தசாநாதன் குருவிற்கு சஷ்டாஷ்டகமாக ராகு இருப்பதால் அவரும் திருமணத்தை தர இயலாது.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் சனிதசை சுயபுக்தியில் சனி சுக்கிரனின் வீட்டில் சுக்கிர பார்வையில் இருப்பதால் 33 வயதில் திருமணத்தை நடத்தித் தருவார். அதற்கு முன்னதாக மகளின் ஜென்ம நட்சத்திரம் சுவாதிக்கு முதல்நாள் இரவு ஸ்ரீகாளகஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை சர்ப்பசாந்தி பூஜைக்குப் பதிலாக ருத்ராபிஷேக பூஜை செய்யவும்.
வி. சரண்யா தேவி, கோவை – 2.
கேள்வி :
ஜோதிடம் எனும் தேவரகசியம் மற்றும் ஜோதிட கேள்வி பதில் அனைத்தும் தவறாமல் படித்து வருகிறேன். இந்த பாக்கியத்தை வழங்கிய மாலைமலர் நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். திருமணமாகி ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவளது கல்வி, ஆயுள் ஸ்தானங்கள் எப்படி உள்ளது? எனக்கு ஆண்வாரிசு யோகம் உண்டா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?
பதில் :
மகளுக்கு கும்பலக்னமாகி லக்னாதிபதி சனிபகவான் எட்டில் சூட்சும வலுப்பெற்று அமர்ந்து கேந்திர கோணாதிபதிகள் புதனும் சுக்கிரனும் பத்தாமிடத்தில் இணைந்து ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியனும் வலுப்பெற்றதால் மகளுடைய கல்வி, வேலை போன்ற பாவங்கள் நல்ல வலுவாக உள்ளன. வருங்காலத்தில் மகள் நன்றாகப் படித்து மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பார். எட்டில் சனி உள்ளதால் ஆயுளும் தீர்க்கமாக உள்ளது.
உங்களுக்கு மிதுனலக்மாகி சுக்கிரன் வலுப் பெற்றதால் முதல் குழந்தை பெண்     குழந்தையானது. குழந்தையின் ஜாதகப்படி இளைய சகோதரஸ்தானமான மூன்றாம் பாவம் ஆண் ராசியாகி அதில் ஆண்கிரகமான குருபகவான் அமர்ந்து இன்னொரு ஆண் கிரகமான சூரியன் மூன்றாமிடத்தைப் பார்ப்பதால் இவளுக்கு பின் சகோதரமாக தம்பி ஒருவன் கண்டிப்பாக உண்டு. பரிகாரம் தேவை இல்லை.
ஒரு வாசகி, அம்பாசமுத்திரம்.
கேள்வி :
வாழ்க்கைப் பிச்சை கேட்கிறேன்.,, உங்கள் பதிலில்தான் என் வாழ்க்கையே அடங்கியுள்ளது. ஆறு வருடங்களாக நாங்கள் காதலிக்கிறோம். இங்குள்ள ஜோதிடர்கள் பொருத்தம் இல்லாததால் நாங்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். மீறிச் செய்தால் இருவரில் ஒருவர் மூன்று வருடத்தில் இறந்து போவோம் என்கிறார்கள்.. உங்கள் வாக்கை வேதவாக்காக மதிக்கும் என் அப்பாவின் அனுமதியோடு இதை அனுப்பியிருக்கிறேன், நாங்கள் திருமணம் செய்தால் யாராவது செத்துப் போவாமா? உங்களின் கணிப்பு என்ன?
பதில் :
கர்ப்பத்தில் இருக்கையில் உறுதி செய்தல், ஒரு வயதானவர் இறக்கும் முன் பேரன் பேத்தி கல்யாணத்தை பார்க்க நினைத்தல், காந்தர்வம் எனப்படும் காதல், முறைப்பையன் முறைப்பெண்ணை திருமணம் செய்தல் போன்ற நான்கு நிலைகளில் ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்று ஒரு மூத்தோர் வாக்கு இருக்கிறது.
உங்கள் விஷயத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றாலும் இருவருக்குமே கன்னி லக்னமானதால் தாராளமாகத் திருமணம் செய்யலாம். இருவருக்கும் ஒரே ராசியுமானதால் உங்களைப் பிரிக்க முடியாது. மற்றபடி திருமணம் செய்தால் மூன்று வருடத்தில் செத்துப் போவீர்கள் என்பதெல்லாம் ஜோதிடபலன் இல்லை. அது ஜோதிடர் பலன்.
ஜாதகப்படி இருவரும் குழந்தைச் செல்வம் உள்ளிட்ட சகல சம்பத்துடன் தீர்க்காயுள் வாழுவீர்கள். உங்கள் இருவருக்கும் தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் அமைப்பு வந்து விட்டதால் வருகின்ற ஆவணி மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.
ஆர். பன்னிர்செல்வம், ஆத்தூர்.
கேள்வி :
ஜோதிடத்தின் பிதாமகரே, வணக்கம். எனது இரு பெண் பிள்ளைகளின் ஜாதகத்தையும், எனது ஜாதகத்தையும் அனுப்பி இருக்கிறேன். பதினைந்து வருடங்களாக படாத கஷ்டப்பட்டு வருகிறேன். நிலையான தொழிலும் வருமானமும் இல்லை. எங்கும் எதிலும் ஏமாற்றம்தான். கொடுத்த பணமும் திரும்பி வரமால் தள்ளிக் கொண்டே போகிறது. சொத்தும் பாகப்பிரிவினை செய்ய முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்பொழுது நல்லகாலம் வரும்? எப்பொழுது விடிவுகாலம் கிடைக்கும்? நான் செய்ய வேண்டியது என்ன? தங்களின் தீவிர ரசிகனுக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் அய்யா.
பதில் :
உங்களுக்கு தனுசு லக்னம் மேஷராசியாகி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மூன்றாமிடத்தில் நீசச்சனியின் வீட்டில் அமர்ந்த கும்பராகு தசையால் மேலே நீங்கள் சொன்ன அத்தனை கஷ்டங்களும் நடந்தன. ராகுதசை நன்மைகளை செய்ய வேண்டுமென்றால் ராகுவிற்கு வீடு கொடுத்தவன் வலுப்பெற வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
உங்கள் ஜாதகத்தில் ராகுவிற்கு வீடு கொடுத்த சனி நீசம் பெற்று எட்டுக்குடைய சந்திரனுடன் இணைந்ததால் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போல பலன் தருவார் ராகு என்னும் விதிப்படி சனியின் கெடுபலன்களைச் செய்தார். அதே நேரத்தில் இந்த வருடத்தோடு ராகுதசை முடிந்து லக்னாதிபதியும் ராசியின் பாக்கியாதிபதியுமான குருவின் தசை ஆரம்பிக்க உள்ளதால் உங்களுடைய அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி இனிமேல் நிலையான தொழிலும் வருமானமும் ஏற்பட்டு கொடுத்த கடனும் திரும்பி வரும். குருதசை சுயபுக்தியில் அஷ்டமச்சனி முடிந்த பிறகு பாகப்பிரிவினை நடந்து உங்களுக்குரிய பங்கு நல்லவிதமாக கிடைக்கும்.
மூத்த மகளுக்கு துலாம்லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் பத்தில் அமர்ந்து ஒன்பதுக்குடையவன் ஆட்சியாகி பத்துக்குடையவன் பத்தாமிடத்தை பார்த்த யோகஜாதகம். அதேநேரத்தில் லக்னத்திற்கு பத்தாமிடத்தையும் ராசிக்கு பத்தாமிடத்தையும் வலுப்பெற்ற செவ்வாய் பார்த்து குருபகவானும் பத்தாமிடத்தைப் பார்ப்பதால் மருத்துவம், சிவில் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் பெயர் சொல்லும்படி வருவார்.
இளையவளுக்கு சிம்மலக்னம் கன்னிராசியாகி லக்னாதிபதி சூரியன் பத்தாமிடத்தில் திக்பலமும் நவாம்சத்தில் ஆட்சியுமாகி ஒன்பது பத்துக் குடையவர்கள் தத்தம் வீடுகளில் வலுப்பெற்று தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்த சிறந்த யோகஜாதகம் என்பதால் இவளும் நன்றாகப் படித்து அரசுத் துறையில் மேம்பட்ட நிலையில் இருப்பாள். மகள்கள் இருவரின் ஜாதகமும் யோகஜாதகமாக இருப்பதால் இவர்களை நன்றாகப் படிக்க வைத்து நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே நீங்களும் நன்றாக இருப்பீர்கள்.
என் தம்பிக்கு ஏன் இந்த நிலைமை?
பி. சரஸ்வதி, ஆத்தூர், சேலம்.
கேள்வி :
ஜோதிடத்தின் ஜோதிக்கு பணிவான வணக்கம். தம்பிக்கு 1998 ல் பதினெட்டு வயதில் காதல் திருமணம் நடந்தது. அடுத்தடுத்து இரண்டு ஆண் பிள்ளைகள். திருமண வாழ்வில் சிறுசிறு பிரச்னைகள் இருந்தாலும் குடும்பம் ஓரளவு சீராக சென்று கொண்டிருந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு தவறான உறவு ஏற்பட்டு 2012 ல் தம்பியை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அந்த நபருடன் சென்றுவிட்டது. எவ்வளவோ பேசிப்பார்த்தும் எழுதிக் கொடுத்து விட்டது. மிகுந்த தெய்வபக்தியுள்ள தம்பி மனஉளைச்சலில் தவிக்கிறான். இவனுக்கு ஏன் இந்த நிலைமை? இவனுக்கு மறுமணம் நடக்குமா? எப்பொழுது நடக்கும்? அவனுக்கு ஏற்ற தொழில் எது? தோஷம் ஏதாவது உள்ளதா? பரிகாரம் என்ன?
சுக் சூரி
ராசி  லக்,புத ராகு
செவ்,சனி குரு
 சந்
பதில் :
(கடகலக்னம், தனுசுராசி லக்னத்தில் புத ராகு, இரண்டில் செவ், சனி, குரு பதினொன்றில் சுக், பனிரெண்டில் சூரி, 28.06.1980 7.30 காலை, ஆத்தூர்)
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழுக்குடையவரும் ஏழாமிடமும் கெட்டு லக்னாதிபதியும் வலுவிழக்கும் நிலையில் பதினொன்றாம் வீடும் அதன் அதிபதியும் வலுத்தால் அவருக்கு இரண்டு திருமணம் என்பதையும் 33 ஆம் வயதில் மணவாழ்வில் பிரச்னைகள் ஏற்படும் என்பதையும் மாலைமலரில் எழுதியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசிக் கொண்டும்தான் இருக்கிறேன்.
மேற்கண்ட விதிக்கு உதாரணமாக உங்கள் தம்பி ஜாதகத்தில் ஏழுக்குடைய சனி அந்த பாவத்திற்கு எட்டில் மறைந்து செவ்வாயுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து பலவீனமாகி ராசிக்கு ஏழுக்குடைய புதனும், ராசிக்கு எட்டாமிடத்தில் ராகுவுடன் இணைந்து ஏழில் கேது அமர்ந்த நிலையில் லக்னத்திற்கும், ராசிக்கும் பதினொன்றுக்குடையவரான சுக்கிரன் ஆட்சி பெற்றதால் உங்கள் தம்பிக்கு 33 வயதில் முதல் மனைவி பிரிந்து விட்டார்.

வரும் ஜூன்மாதம் தம்பிக்கு ஆரம்பிக்க இருக்கும் சந்திரதசை சுக்கிரபுக்தியில் இன்னொரு திருமணம் நடந்து அந்த வாழ்க்கை சந்தோஷமாக நீடித்தும் இருக்கும். அவரது ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் வாழ்க்கையில் செட்டிலாவதற்கு இன்னும் மூன்று வருடமாவது ஆகும். சனி முடிந்த பிறகு நிரந்தரமான தொழில் அமைந்து வாழ்க்கையில் நிலை கொள்வார். பத்துக்குடைய செவ்வாய் நெருப்பு ராசியான சிம்மத்தில் இருப்பதால் நெருப்பு சம்மந்தப்பட்ட சமையல் போன்ற தொழில்களில் இருப்பார். பரிகாரம் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *