adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 105 (27.9.2016)

கே. கே. ராஜ்குமார்சென்னை - 40.

கேள்வி :

குருஜியின் கோடிக்கணக்கான வாசகர்களில்  நானும் ஒருவன். 39  வயதாகி கண்டக்டராகப்  பணிபுரியும்  எனது  மகனுக்கு  திருமணம்  தடைப்படுகிறது.  வேலையில்  இன்னும்  பர்மனன்ட்  ஆகவில்லை.  திருமணம்  எப்போது ?  எங்கள்  மனக்குறை  எப்போது  தீரும்?

பதில் :

மகனுக்கு துலாம்லக்னமாகி, ஏழுக்குடைய செவ்வாய் நீசம் பெற்றதும், புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தை சனி, செவ்வாய் பார்த்ததும் தார மற்றும் புத்திர தோஷ அமைப்புகள். சரியான திருமணப்பருவத்தில் கடந்த ஏழு வருடங்களாக ஏழரைச்சனி நடப்பதால் திருமணம் ஆகவில்லை. தற்போது சனிதசையில் ராகு புக்தி நடப்பதால் ஶ்ரீகாளகஸ்தியில் அவரது ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி சர்ப்பசாந்தி பூஜை செய்யுங்கள். இன்னொரு ஜென்ம நட்சத்திரமன்று கும்பகோணம் கஞ்சனூரில் வழிபடச் செய்யுங்கள். வரும் ஏப்ரலுக்கு மேல் மகனுக்கு திருமணம் நடக்கும்.

நா. காமாட்சி தேவிவேலூர்.

கேள்வி :

காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?  எனக்கு அரசுவேலை உண்டாகணவர் சொந்தத்தொழில் செய்வாராஎங்களின் குடும்பம்  எங்களது திருமணத்தை ஏற்று எப்போது ஒன்று சேரும்?

பதில்:

கணவருக்கு மிதுனலக்னமாகி ராகுதசை நடப்பதால் அடுத்த வருடம் ஜூலையில் ஆரம்பிக்கும் சுக்கிரபுக்தியில் முதல் குழந்தையாக பெண்குழந்தை பிறக்கும். இருவருக்குமே சுக்கிரன் யோகர் என்பதால் உங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். கணவருக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்க உள்ளதால் இன்னும் நான்கு வருடங்களுக்கு சொந்தத்தொழில் ஆரம்பிக்காமல் வேலைக்கு செல்வது நல்லது. முதல்குழந்தை பிறந்தபிறகு உங்களின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்வார்கள். பத்தாமிடத்தில் சூரியன் உள்ளதால் 2018-ல் உனக்கு அரசு வேலை கிடைக்கும்.

. நேருவெண்கரும்பூர்.

கேள்வி :

எனக்கு வயது 41. எனது ராசி விருச்சிகம்விசாக நட்சத்திரம் 4- ம் பாதம்நான் எந்த முயற்சி  எடுத்தாலும் தோல்வியிலேயே முடிகிறதுஎன்னசெய்வது என்று எனக்கு கவலையாக  உள்ளதுஎனது கவலைக்கு தீர்வு என்ன?

பதில் :

40 வயதுகளில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையான மன அழுத்தத்திலும் வேலை, தொழில் விவகாரங்களில் இன்னும் நிலை கொள்ளாமலும் இருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி மாலைமலரிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். ஜென்மச்சனி முடியும் 2017 நவம்பர்வரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் இருக்கும். அதன்பிறகு நாம்தான் கஷ்டப்பட்டோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு இப்போதிருக்கும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து நன்றாக இருப்பீர்கள். கவலை வேண்டாம். சனி தரும் அனைத்தையும் ஒரு அனுபவமாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பிற்பகுதி வாழ்க்கையில் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

மகன் மறுபடி பேசுவானா?

வி. ராமன்கடலூர்.

கேள்வி :

ஒரே மகனுக்கு எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மணமாகி நான்கு மாதங்கள்வரை என்னுடனும், எனது மனைவியுடனும் மகன் மருமகளுக்கு சுமுகமான உறவு இருந்தது. பிறகு எங்களுடைய மகன் எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டான். மருமகளும் வீட்டிற்கு ஒரே பெண். சம்பந்திகள் இருவரும் இப்போது எங்களுடன் பேசுவது இல்லை. கடந்த ஜூன்மாதம் என் மகன் சென்னையில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி தாய்-தந்தையராகிய எங்களை அழைக்காமல் கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அன்றுமுதல் எங்களுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டு தன்னிச்சையாக குடும்பம் நடத்துகிறார். வீட்டுக்கடன் வாங்கி பதிவு செய்துள்ள பிளாட்டிற்கான முழுத்தொகையையும் நாங்கள் கொடுப்பதாகச் சொல்லியும் எங்களிடம் மகனும் மருமகளும் பேசுவது இல்லை. இது கிரகக்கோளாறு என்று நினைக்கிறேன். மகனைப் பிரிந்ததில் இருந்து மன சஞ்சலத்தால் உடல்நலம் கெட்டு ராமனைப் பிரிந்த தசரதனைப்போல இருக்கிறேன்குருஜி அவர்கள் இதற்கான பரிகாரங்களையும், அறிவுரையையும் கூறி எங்களை ஒன்று சேர்க்கும் வழியினைச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

சமீபகாலங்களில் என்னிடம் வரும் அதிகமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஒரேகுழந்தை போதும் என்ற நிலை வந்து அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி போன்ற உறவுகளே மறைந்து கொண்டிருக்கும் காலம் இது. பெரியவர்களுக்கும் பொறுமை இல்லை. சிறியவர்களுக்கும் நிதானம் இல்லை.

ஒரு மகனை மட்டும் பெற்றுவிட்டு, 30 வயதுவரை இவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து விட்டேன். எங்கிருந்தோ வந்தவள் 30 நாட்களில் இவனைத் தூக்கிக் கொண்டு போய்விடுவாளோ என்று பெற்றவர்கள் நினைக்க, கல்யாணம்தான் பண்ணி நான்தான் வந்துவிட்டேனே, இனிமேல் கிழவனுக்கும், கிழவிக்கும் என்ன வேலை? ஓரமாய் போய் உட்கார வேண்டியதுதானே, என்று மருமகளும் நினைப்பதால் வருகின்ற வினை இது.

30 வயதுவரை வளர்த்த மகன் திருமணமாகி நான்கு மாதங்களில் பேசுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார் என்றால் இந்த நான்கு மாதங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்? மருமகள் தலையணை மந்திரம் போட்டுவிட்டாள் என்று இந்தக்கால இளைஞர்களை தவறாக எடை போடவேண்டாம்.

திருமணத்திற்கு முன்பே பெரியவர்களாகிய நீங்கள் பின்னர் நடக்க இருக்கும் சம்பவங்களில் தெளிவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பெற்றவர்கள் என்ன செய்கிறீர்கள். வரும் மருமகளிடம் இவன் முதலில் எனக்கு மகன். பிறகுதான் உனக்குக் கணவன் என்று காட்ட நினைக்கிறீர்கள். அதனால் வரும் விளைவுதான் இப்போது நீங்கள் எழுதியிருக்கும் கடிதம்.

அதிகப் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுவதை நிறுத்திவிட்ட ஒரு சமூகத்தில் தன் பிள்ளைக்கு மணமானவுடன், அவனை தனக்குச் சமமான ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாகவும், வந்த மருமகளை சமஉரிமையுள்ள உறுப்பினராகவும் நினைக்கும் குடும்பங்கள் இதுபோன்ற சிக்கல்களைச் சந்திக்காது.

மாறாக திருமணம் ஆனவனை இன்னும் சிறு பையனாகவே நினைத்து அதிகாரம் செய்து உனக்கு மனைவி வேண்டுமா? பெற்றோர் வேண்டுமா? என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை தாய்தந்தை உருவாக்கும்போது சிலமகன்கள் பெற்றோர் பாசத்தால் மனைவியை விட்டுக் கொடுத்து சிக்கல்கள் உண்டாகி நிம்மதியை இழக்கிறார்கள். சிலமகன்கள் பெற்றோரைத் தவிக்கவிட்டு மனைவி பக்கம் சாய்கிறார்கள்.

உண்மையில் நாட்டில் நடக்கும் நிறைய விவாகரத்து வழக்குகளுக்கு கணவன்-மனைவியை விட அவர்களின் பெற்றோர்களே காரணம்.

திருமணம் நடந்து நான்குமாதத்தில் மகன் நம்மிடையே பேசாததற்கு என்ன காரணம் என்று உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்து கொள்ளாமல் எங்களிடம் தகராறு ஏதுமில்லை. இது கிரகக்கோளாறு என்று நினைக்கிறேன் என ஜோதிடத்தின் மீது பழியைப் போடுகிறீர்கள். தாம்பத்யசுகம் என்ற தூண்டிலைக் காட்டி மகனை, மருமகள் மயக்கிவிட்டாள் என்று சொல்வீர்களேயானால் அதற்காகத்தானே அய்யா திருமணம் செய்து கொடுக்கிறோம். அது இல்லாமல் பேரன், பேத்திகளை எப்படிக் கொஞ்சுவீர்கள்?

எந்த ஒரு மனிதனும் சுயநலமில்லாத பாசத்திற்கும் அன்பிற்கும் கட்டுப்பட்டே தீருவான். ஆனால் இங்கே நீங்கள் கடனுக்கு வாங்கிய பிளாட்டிற்கு முழுப்பணம் தருவதாக சொல்லியும் மகன் பேசமாட்டேன் என்கிறான் என்று எழுதியதன் மூலம் பணம் என்ற பிஸ்கட்டைத் தூக்கிப் போட்டால் எடுத்துக் கொண்டு மகன் பின்னாடியே ஓடி வந்துவிடுவான் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் மகன் மானஸ்தன். உங்களுக்குப் பிறந்தவன் இல்லையா? “போய்யா.. வேலையைப் பார்த்துக் கொண்டு” என்று சொல்லிவிட்டான்.

சரி... ராமனைப் பிரிந்த தசரதனைப் போல இருக்கிறேன் என்கிறீர்களே? கடலூருக்கும் சென்னைக்கும் நடுவில் பாகிஸ்தானா இருக்கிறது? பாஸ்போர்ட் எடுத்துப் போவதற்கு? பஸ் ஏறினால் நான்கு மணிநேரத்தில் போய் விடலாம். கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிடாவிட்டால் என்ன? போய் நின்றால் உள்ளே வராதே என்று சொல்லி விடுவானா?

இந்தப் பிறவியே அவனுக்காகத்தான். வீடு, வாசல், சம்பாத்தியம், கொடுப்பதாகச் சொல்லும் பணம் எல்லாம் அவனுடையது. அவனுக்காகச் சம்பாதித்தது. அவனிடம் போய் என்ன ஈகோ பார்க்க வேண்டியிருக்கிறது? பெற்ற மகனிடம் ஈகோ பார்த்தால் உங்கள் பாசத்தில் ஓட்டை இருக்கிறது என்று அர்த்தம். அந்த ஓட்டை வழியாக உங்கள் சம்பந்தி உள்ளே நுழைந்து உங்களை வெளியே தள்ளி விட்டார்.

உங்கள் ஜாதகப்படி ஐந்துக்குடைய சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்து ராசிக்கு ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் மகனால் நிரந்தர மனவருத்தம் வருவதற்கு வாய்ப்பில்லை. மகனின் துலாம்ராசிக்கும் ஏழரைச்சனி முடியப் போவதால் பிரிவு இனிமேலும் நீடிக்காது.

உடனடியாக இருவரும் கிளம்பி சென்னைக்குப் போங்கள். எவ்வளவுதான் கோபமும் வருத்தமும் இருந்தாலும் நம் கலாசாரத்தில் நல்ல படிப்பைக் கொடுத்து வளர்க்கப்பட்ட மகன் வீட்டுக்கு நேரில் வந்த தாய் தகப்பனை வெளியே போ என்று சொல்ல மாட்டான். தாயின் மீது கோபம் என்றால் தந்தையின் பேச்சு அவனை மாற்றும். தந்தையினால் சிக்கல் என்றால் தாயின் முகமே அவனை நெகிழ வைத்துவிடும். எனவே இருவரும் போங்கள்.

இந்தப் பதிலை படிக்க நேர்ந்தால் உங்கள் மகனுக்கு ஒரு வார்த்தை...

அன்புள்ள இளைஞனே...

ஒவ்வொரு தகப்பனுக்கும் தன் மகனை மடியில் வைத்துக் கொஞ்சிய, தோளில் தூக்கிக் கொண்டு பெருமிதத்தோடு நடந்த அந்த நாட்களே வாழ்வின் வசந்த நாட்கள். எல்லாத் தந்தையும் ஏதாவது ஒரு நிலையில் அந்த நாளுக்கு திரும்பிப் போக மாட்டோமா என்றுதான் ஒருநாள் ஏங்குவான். கூடிய சீக்கிரம் உனக்கும் ஆண் குழந்தை பிறந்து, வாரிசு பிறந்து விட்டது என்ற கர்வத்தோடு நீ இந்த உலகைப் பார்க்கும் தினம் வர வாழ்த்துகிறேன்.

வயதாக வயதாக நாங்களும் குழந்தையாகிப் போய் விடுகிறோமடா...! மகன் எங்களுக்கு வேண்டும். எங்களுக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆதங்கத்தில் எங்களையும் அறியாமல் எதையாவது பேசி விடுகிறோம், செய்து விடுகிறோம்.

மணமான புதிதில் ஒரு ஆண்மகனின் கம்பீரமும், சாமர்த்தியமும் பெற்றோருக்கும் மனைவிக்கும் நடுவில் பேலன்ஸ் செய்வதில்தான் இருக்கிறது. எக்காரணம் கொண்டும் தன்னை நம்பி வந்தவளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. யாரால் இந்த உலகிற்கு வந்தோமோ அவர்களையும் விட்டுவிடக் கூடாது. இதுவே மணவாழ்வின் தத்துவம். கஷ்டமான காரியம்தான். ஆனால் சாதிக்கப் பிறந்தவன்தானே இளைஞன்...!

மகனே... அன்பை வெளிப்படுத்தத் தெரியாத தகப்பன் இங்கே இருக்கலாம். ஆனால் அன்பே இல்லாத தகப்பன் இல்லவே இல்லை. தன்னிடம் மகன் பேசவில்லை என்பதைவிட நேற்று வந்த சம்பந்தியிடம் மகன் நன்றாகப் பேசுகிறான், அவர் பேச்சைக் கேட்கிறான் என்கிற நினைப்பே பெற்றவனை உயிரோடு கொன்றுவிடும்.

சம்பந்தியின் பேச்சைக் கேள். வேண்டாம் என்று சொல்லவில்லை. அவரும் ஒரு தகப்பன்தான். தன் பெண் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆவலில் அவர் உன்னைத் தவறாக வழிநடத்த மாட்டார். ஆனால் பெற்றவனை விட்டுக் கொடுத்து விடாதே,, வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான சக்கரம். இங்கே எல்லாமே திரும்பிப் போக முடியாத ஒருவழிப் பாதைதான். இப்போது நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு நீயும் ஒருநாள் வருவாய் என்பதை மறந்து விடாதே.

உடனடியாக தாய் தந்தையைப் போய்ப் பார். வரமாட்டேன் என்று சொன்னாலும் உன் மனைவியை வற்புறுத்தி அழைத்துப் போ. ஒன்றுமே நடக்காதது போல உன் வீட்டில் இரண்டு நாட்கள் சகஜமாக இரு, போகப்போக எல்லாம் சரியாகி விடும். “கோழி மிதித்து குஞ்சு முடமாகாது” என்பது போன்ற முதுமொழியெல்லாம் நம் மண்ணிற்கு மட்டுமே உரித்தானவை என்பது உன் நினைவில் இருக்கட்டும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 105 (27.9.2016)

  1. சமூக&குடும்ப பிரச்னையும் தீர்வும் மிக நன்று குருஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *