adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 14 (25.11.14)

மணீஷ், கரட்டாங்காடு, ஈரோடு.

கேள்வி :
சந் சுக் சூ கே  பு சனி
 குரு ராசி  செவ்
 ல
ரா
சினிமாவில் நடக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறேன். வாய்ப்பு உள்ளதா? ஆம் எனில் எப்போது சாத்தியமாகும்?
பதில்:
சிம்ம லக்னத்தில் பிறந்து சுக்கிரதசையும் நடப்பதால் சினிமா ஆசை வருவது இயற்கைதான். ஆனால் சிம்ம லக்னத்தில் பிறந்த எல்லோரும் ரஜினிகாந்த் ஆகிவிட முடியாதே.
உங்களுக்கு சிம்ம லக்னம் மீன ராசியாகி ஏழில் குரு ஒன்பதில் சுக்கிரன் பத்தில் சூரியன், கேது. பதினொன்றில் புதன், சனி அமர்ந்த யோக ஜாதகம். சுக்கிர தசையும் நடக்கிறது. சினிமாவிற்குரிய சுக்கிரன் வலுவாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் நீசமாக இருக்கிறார். ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் நீசமானால் அந்த கிரகதசை நல்ல பலன்களைத் தராது.
மேலும் சினிமாவிற்கு முக்கிய கிரகமான ராகுவும் நீச செவ்வாயின் வீட்டில்தான் இருக்கிறார். அதேநேரத்தில் சுக்கிர தசைக்கு பிறகு வரும் லக்னாதிபதி தசை ,சூரியன் சுக்கிரனின் வீடான பத்தாம் வீட்டில் திக்பலமுடன் இருப்பதால் சினிமா தொடர்புகளை செய்யும். நடப்பு குருபுக்தியில் சிறுசிறு வேடங்களில் நடிக்க முடியும்.
இரண்டாவது திருமணம் செய்யலாமா ?
எஸ். கோடீஸ்வரி, சென்னை.
கேள்வி :
செவ் குரு  ல சந்
 ரா ராசி
சூ பு  கே
சனி சுக்
திருமணமாகி ஐந்து வருடமாகிவிட்டது. எனக்கும் என் கணவருக்கும் எந்த வகையிலும் ஒற்றுமை இல்லை. குழந்தையும் இல்லை. பிறக்குமா? இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? கணவரின் ஜாதகப்படி குறைகள் உள்ளதா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா?
பதில்:
இந்தக் கணவன் சரியில்லை என்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் பின்னால் வந்தவன் முதலாம் ஆளை நல்லவன் ஆக்கினால் என்ன செய்வாய் அம்மா? வாழ்க்கையே குற்றம் குறைகளைப் பொறுத்து விட்டுக் கொடுத்துப் போவதுதான். ஆனால் ஜாதகப்படி நீ பிடிவாதக்காரி என்பதால் நீ விட்டுக் கொடுக்க மாட்டாய்.
உனக்கு மிதுன லக்னம் மிதுன ராசியாகி லக்னாதிபதி புதன் சூரியனுடன் எட்டில் மறைந்து லக்னத்தையும் ராசியையும் ஏழில் இருக்கும் சுக்கிரனுடன் இணைந்த சனி பார்த்த ஜாதகம். கணவனைக் குறிக்கும் ஏழுக்குடைய குருபகவான் பனிரெண்டில் மறைவு. இரண்டாம் வீட்டிற்கு செவ்வாய் பார்வை.
இந்த ஜாதக அமைப்புப்படி எந்தக் கணவனிடமும் நீ குறை காண்பாய். புத்திரஸ்தானமான ஐந்தாம் வீட்டை ஆறுக்குடைய செவ்வாய் பார்த்து ஐந்திற்குடைய சுக்கிரன் சனியுடன் சேர்ந்து, புத்திரகாரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து அம்சத்தில் நீசம் என்பதால் உனக்கு தாமதமாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் எட்டில் மறைந்து ஜீவனாதிபதியும் பனிரெண்டில் மறைந்ததால் உனக்கு அரசு வேலைவாய்ப்பு இல்லை.
பெயர் வெளியிடவிரும்பாதவர், சேலம்.
கேள்வி :
சுக் ரா சூ,பு செவ்  ல
ராசி
குரு
சனி  கே சந்
லக்னத்திற்கு பனிரெண்டில் சூரியன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் ஆண்மைக்குறைவு என்று ஒரு ஜோதிட புத்தகத்தில் படித்தேன். அதேபோல எனக்கும் வந்துவிட்டது. களத்திரஸ்தானாதிபதி குரு எட்டில் மறைந்து நீசம் பெற்றதால் என்ன பலன்? லக்னாதிபதி பனிரெண்டில் மறைந்தால் தீமைதானே? எனக்கு திருமணம் நடக்குமா? ராகுதசை எவ்வாறு இருக்கும்? ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியுமா? உங்கள் பதிலை வைத்துத்தான் என் வாழ்க்கை உள்ளது.
பதில்:
அடப்பாவி மனுஷா. ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று வர்கோத்தமும் பெற்ற உங்களால் ஒன்பது கல்யாணம் செய்தாலும் சமாளிக்க முடியுமே!
புத்தகத்தில் வரும் பொதுப்பலனை படித்து விட்டு எனக்கும் அதுபோல வந்து விட்டது என்று சொல்கிறீர்களே. முதலில் இதுபோல நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுக்கு ஆண்மைக் குறைவும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
மிதுன லக்னம் கன்னி ராசியாகி ஆறில் சனி எட்டில் குரு, பத்தில் சுக்கிரன், பதினொன்றில் ராகு, பனிரெண்டில் சூரியன், செவ்வாய், புதன் என யோக வலுவுடன் அமைந்த ஜாதகம் உங்களுடையது.
எப்போதும் புதன் லக்னாதிபதியாகி பனிரெண்டாம் இடத்தில் இருந்தால் வலுவிழக்கமாட்டார். ஏனென்றால் மிதுன லக்னமாக இருந்தால் அவருடைய நண்பரான சுக்கிரன் வீட்டில் இருப்பார். கன்னி லக்னமாக இருந்தால் அவருடைய அதி நண்பரான சூரியனின் வீட்டில் இருப்பார். மேலும் பனிரெண்டாம் இடம் திக்பலத்திற்கு அருகில் உள்ள இடம் என்பதால் புதன் லக்னாதிபதியாகி பனிரெண்டில் மறைந்தால் வலுக்குறைவு இல்லை.
அடுத்து உபய லக்னங்களுக்கு பாதகாதிபதியான ஏழுக்கதிபதி வலுவிழப்பதும் ஒரு யோகம். அதன்படி உங்களுடைய குரு வலுவிழந்தது மிகச்சிறந்த வாழ்க்கையை உங்களுக்குத் தரும். சுக்கிரன் உச்சவர் கோத்தமம் பெற்று லக்ன கேந்திரத்தில் இருப்பது மாளவ்ய யோகம் என்பதால் திருமணத்திற்கு பிறகு மிகச்சிறப்பான வாழ்க்கை உங்களுக்கு அமையும். ராகு பதினொன்றாமிடமான மேஷத்தில் இருப்பதால் ராகுதசை நல்ல யோகம் செய்யும். ஜோதிடம் ராகு தசையில் கற்றுக் கொள்ள முடியும்.
கே. காமராஜ், திருச்சி - 8.
கேள்வி:
குரு செவ் கே
ராசி  சனி
சந்  சூ,பு சுக்
ரா  ல
 
மாலை மலரில் தங்களின் கேள்வி பதில் இருண்ட அறையில் ஏற்றிய தீப வெளிச்சம். 24 வயது வரை வேலை செய்து ஒரு காசு மிச்சமில்லை. கடன் வாங்கி தொழில் ஆரம்பித்து 16 வருடங்களாக இன்றுவரை வட்டி, கடன், நோய்த் தொல்லை என இதுவே வாழ்வாக உள்ளது. இந்தக் கடிதம் நீங்கள் படிக்கும் போது கடன் தொகை நாற்பது லட்சம். தொழில் முடங்கி விட்டது. திருமணம் ஆகவில்லை. இன்னும் கடன் அதிகமாகி விடுமோ என்று பயப்படுகிறேன். கடன், நோய் இல்லாத காலம் எது? பாதம் பணிகிறேன் பதில் சொல்லுங்கள்.
பதில்:
துலாம் லக்னம் மகர ராசியாகி ஏழில் குரு, எட்டில் செவ்வாய், கேது பத்தில் சனி, பதினொன்றில் சூரியன், புதன் சுக்கிரன்.
கடந்த பதினாறு வருடங்களாக நான் அடிக்கடி எழுதும் துலாம் லக்னத்திற்கு வரவே கூடாத குருதசை நடக்கிறது. குரு வக்கிரம் பெற்று, எட்டில் அமர்ந்த கேதுவின் சாரம் வாங்கி, சனியின் பார்வையையும் பெற்று வர்கோத்தமமாக ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்ததால் முழுக்க முழுக்க அவரது ஆறாம் பாவத்து விஷயங்களான கடன், நோய் எதிர்ப்புகளை மட்டுமே கொடுத்திருப்பார்.
சென்ற மாதத்துடன் உங்களை கொடுமைப்படுத்திய குருதசை முடிந்து விட்டது. தற்பொழுது உங்களின் ராஜயோகாதிபதியான சனிதசை ஆரம்பித்து விட்டது. இனிமேல் படிப்படியாக கடனை நிச்சயமாக அடைக்க முடியும். சனி பத்தாம் வீட்டில் அமர்ந்து ஜீவனாதிபதியின் பார்வையில் இருப்பதால் இந்த தசையில் முழுக்க சம்பாதித்து கடனை அடைத்து செட்டில் ஆவீர்கள். மேலும் மகரராசிக்கு கோட்சாரத்தில் மிகப்பெரிய நன்மைகளைத் தரக்கூடிய காலம் ஆரம்பித்துள்ளதால் இன்னும் மூன்று வருடத்தில் உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.
ராசிக்கு ஏழில் சனி, லக்னத்திற்கு இரண்டில் கேது, எட்டில் செவ்வாய், ஏழாமிடத்தில் ஆறுக்குடையவன் என்ற அமைப்பால் இதுவரை திருமணமும் ஆகவில்லை. முறையான பரிகாரங்களுக்கு பின் உடனடியாக திருமணம் நடக்கும். இனிமேல் யோக திசைகளே நடக்க உள்ளதால் வாழ்நாள் முழுக்க கடன் இல்லாமல் வாழ்வீர்கள்.
புரோமோஷன் கிடைக்குமா?
டாக்டர் ஜி. செல்வராஜ், உப்பிலிபாளையம்.
கேள்வி:
சந் குரு  செவ் சுக்,ரா
 சனி ராசி  ல சூ
 பு
 கே
 
உங்களது பதில்களை தவறாமல் படிப்பவன் நான். புரோமோஷன் கவுன்சிலிங் செல்லாமல் செய்த ஒரு சிறு தவறால் என்னுடைய பணியின் திசையே மாறி ஒவ்வொரு நாளும் மனம் நொந்து மிகவும் மன வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் அந்த போஸ்டிங் மாற வழி உள்ளதா? அல்லது இந்த நிலையே தொடருமா?
பதில்:
கடக லக்னம் மீன ராசியாகி லக்னத்தில் சூரியன், இரண்டில் புதன் எட்டில் சனி, ஒன்பதில் சந்திரன், பத்தில் குரு.
லக்னத்திற்கு பத்தில் குரு அமர்ந்து அவரே ராசிக்கு பத்தாமிடத்தையும் பார்த்து, ராசிக்கு பத்தில் உள்ள கேதுவை செவ்வாய் பார்த்து மருத்துவப் பணி அமைந்த ஜாதகம். கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச் சனியும் ராசிக்கு ஆறுக்குடைய சூரியனின் தசையும் நடந்ததால் தொழிலில் சரிவு, மன வேதனை.
தற்பொழுது அஷ்டமச்சனி முடிந்து லக்னாதிபதி சந்திரனின் தசை ஆரம்பித்து விட்டதால் நிச்சயம் நூறு சதவிகிதம் நினைத்த பணியை 2015 இறுதியில் அடைவீர்கள்.
மகன் கடைசிவரை காப்பாற்றுவானா?
கே. மாலதி, குரோம்பேட்டை.
கேள்வி:
செவ் குரு சூ,பு கே சுக் சனி
ராசி  சந்
 ல
ரா
எனது மூத்த மகனுக்கு மனைவி இறந்து எட்டு வருஷமாகிறது. சரி வர வேலை கிடைத்தாலும் ஒரு சம்பளம் வாங்கியதுடன் நின்று விடுகிறான். இவனால் குடும்பத்தில் மிகவும் பிரச்னை அவமானம், கெட்ட பெயர். இவனுக்கு மறுமணம் நடக்குமா? எதிர்காலம் எப்படி? என்னை வைத்து காப்பாற்றுவானா?
பதில்:
சிம்ம லக்னம் கடக ராசியாகி நான்கில் ராகு, எட்டில் குரு, செவ்வாய், பத்தில் சூரியன் புதன், பதினொன்றில் சுக்கிரன், சனி. சுக்கிர தசையில் புதன் புக்தி நடப்பு.
கடக ராசிக்கு இதுவரை வேலைவாய்ப்புக்களில் கெடுதல்களை செய்த அர்த்தாஷ்டமச்சனி நடந்ததாலும், ஜாதகப்படி சுக்கிர தசையில் ஆறுக்குடைய சனி புக்தி நடந்ததாலும் உங்கள் மகன் ஒரு வேலையிலும் கடந்த காலங்களில் நிலைக்கவில்லை என்பதோடு அவரால் அவமானம் அசிங்கம் உண்டானது.
தற்பொழுது லக்னாதிபதிக்கு நண்பரான புதன்புக்தி ஆரம்பித்து விட்டதால் இனிமேல் வேலையில் நிலைப்பார். புதன் குடும்பாதிபதி என்பதால் இதே புக்தியில் மறுமணம் நடக்கும்.

2018 முதல் பத்தில் திக்பலம் பெற்ற லக்னாதிபதி சூரியனின் தசை ஆரம்பிக்க இருப்பதால் அதன் பிறகு குறைகள் இல்லாமல் இவரது வாழ்க்கை நன்றாக இருக்கும். சந்திரன் ஆட்சியும், குரு பார்வையும் பெற்று நான்காமிடத்திற்கும் குரு பார்வை இருப்பதால் உங்கள் மேல் மாறாத பாசம் கொண்டிருப்பார். கடைசி வரை உங்களை காப்பாற்றவும் செய்வார்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 14 (25.11.14)

  1. டியர் சார்,
    தங்களது கேள்விபதில்கள் மூலம் ஒருவருக்கு எப்படி பலனளிப்பது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி

Leave a Reply to P.Ravichandran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *