adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
உயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..! C-049 – Vuyarvum Thalvum Tharum Raahu Thasai …
சென்ற அத்தியாயங்களில் ஒருவர் பொதுமேடைகளில் தோன்றுவது, சினிமாவில் ஜெயிப்பது, திடீரென பிரபலமாவது மற்றும் கீழ்நிலையில் இருந்து ‘மளமள’ வென உயர்நிலைக்குச் செல்வது ஆகியவை ராகு தசைக்குச் சொந்தம் என்று எழுதி இருந்தேன். ராகுவுடைய மிக முக்கியமான செயல்பாடாக நமது மூலநூல்களில் குறிப்பிடப்படும் மறைமுகமான வழிகளில் பணம் வருதல் மற்றும் முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தல் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். ராகுவின் மிக முக்கியமான செயல்பாடாக ஒருவர் மோசடியான வழிகளில் பணம் சம்பாதிப்பதை நமது கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன. எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணம் சம்பாதிக்க துணை செய்பவர் ராகு. ஒருவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அல்லது அதிகாரம், பதவி ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவதற்கு ராகு துணையிருப்பார். ராகு அபரிமிதமான சுபத்துவம் பெற்றிருக்கும் சில நிலைகளில் சட்டத்தின் பிடியில் இருந்தும், தண்டனையில் இருந்தும் ஜாதகர் தப்பித்து விடுவார். ஒருவரின் முந்தைய பிறவியின் பாவ, புண்ணியங்களை ராகு பிரதிபலிப்பார் என்பதால், போன பிறவியில் செய்த மிகப் பெரிய நற்கருமங்களின் மூலம் இந்த ஜென்மத்தில் சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க இருக்கும் ஒருவரின் ஜாதகத்தில் இது போன்ற  நல்ல அமைப்பில் ராகு இருப்பார். இந்த அமைப்பு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து அந்த வீட்டு அதிபதி வலுப் பெற்று இருப்பதாலோ அல்லது அந்த ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும் ஏதேனும் ஒருவகையில் ராகுவுடன் தொடர்பு கொள்வதாலோ இருக்கும். அதேநேரத்தில் சென்ற பிறவி கர்மாவின்படி தற்போது சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் அவர் இப் பிறவியில் செய்யும் தவறுகளுக்கு அடுத்த ஜென்மத்தில் பலன்களை அனுபவிப்பார் என்பதையும் நமது புனித நூல்கள் எடுத்துரைக்கின்றன. கலியுகத்தில் ராகு மட்டுமே ஒருவரை அளப்பரிய செல்வாக்கிற்கும், செல்வத்திற்கும் ஆளாக்குவார் என்பதால் இதுபோன்ற மறைமுகமான தனலாபம் என்பது ஒருவருக்கு ராகுவின் தசையில்தான் கிடைக்கும். தான் இருக்கும் வீட்டின் அதிபதி, மற்றும் தன்னோடு இணைந்திருக்கும் கிரகம், தன்னைப் பார்க்கும் கிரகம், தனக்கு நான்கு, பத்து போன்ற கேந்திரங்களில் இருக்கும் கிரகங்களின் பலன்களை ராகு எடுத்துச் செய்வார் என்பதால் ஒரு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களுடன் ராகு தொடர்பு கொள்ளும் போது ஒருவருக்கு ராகு தசையிலேயே உயர்வும், தாழ்வும் இருக்கும். மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளில் ராகு என்ன பலன்களைச் செய்வார் என்பதைக் கணிப்பதும் குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும். கீழே ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இது ஒரு உண்மை ஜாதகமல்ல. ராகுவைப் பற்றி விளக்குவது மட்டுமே என் நோக்கம் என்பதால் சில   விஷயங்களை எளிமையாக விளக்குவதற்காக உண்மை ஜாதகத்தை லேசாக மாற்றியிருக்கிறேன். இந்த ஜாதகத்தில் மேஷ லக்னமாகி, லக்னத்தில் ராகு அமர்ந்து, நான்கில் சந்திரனும், ஏழில் சூரியன், புதன், சுக்கிரன், கேதுவும், ஒன்பதில் குருவும், பத்தில் செவ்வாயும், பதினொன்றில் சனியும் அமர்ந்திருக்கின்றனர். இந்த ஜாதகத்தில் ஒரு முக்கிய அமைப்பாக சந்திரனைத் தவிர சூரியன், புதன், சுக்கிரன், குரு, செவ்வாய், சனி ஆகிய எல்லா கிரகங்களும் லக்னத்தையும் அங்கே இருக்கும் ராகுவையும் பார்க்கின்றன. நான் ஏற்கனவே பாபக் கிரகங்கள் லக்னாதிபதி ஆனாலும் உச்சவலு பெறுவது நன்மைகளைத் தராது என்று சொல்லியிருக்கிறேன். இங்கே லக்னாதிபதி செவ்வாய் உச்சமும், திக்பலமும் ஒரு சேர பெறுவது தவறு. இதனால் ஜாதகர் முரட்டுத்தனமும், முன்யோசனையில்லாதவராகவும் ஆணவமும், அதிகாரப் போக்கும் கொண்டவராகவும் இருப்பார். ஆனால் பலமான செவ்வாயை, வலுப் பெற்ற சந்திரன் பார்த்து சுபத்துவப் படுத்துகிறார். சந்திரனின் பார்வை மட்டும் இங்கே லக்னாதிபதி செவ்வாய்க்கு இல்லையெனில் இந்த ஜாதகம் யோக ஜாதகமாக  இருந்திராது. ஒரு சாதாரண நடுத்தர ஜாதகமாக இருக்கும். அதேபோல வலுப் பெற்ற குரு லக்னத்தைப் பார்ப்பதும் இங்கே யோகத்தை தரும்.. ஒரு ஜாதகத்தில் எத்தனை பெரிய யோக அமைப்புகள் இருந்தாலும், ராஜயோக அமைப்புள்ள தசைகள் நடந்தாலும், அந்த ஜாதகத்தின் தலைவனான லக்னாதிபதி வழி நடத்தும் தகுதியுடன் வலுவாக இருந்தால் மட்டுமே யோகம் வேலை செய்யும். லக்ன நாயகன் பலமுடன் இல்லாவிட்டால் யோகங்கள் பலன் தராது. மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆரம்பத்தில் புதன், கேது, சுக்கிரன் என அவ யோக தசைகள் நடந்ததால் கல்லூரிப் பருவம் வரை எளிமையான வாழ்க்கையே இருந்து வந்தது. இருபத்தியெட்டு வயதில் ஆரம்பித்த நீசபங்கம் பெற்ற யோகாதிபதி சூரியனின் தசை இவரின் வாழ்க்கையை மாற்றியமைத்து அன்றைய அரசியலில் உச்ச அதிகாரத்தில் இருந்த ஒருவரிடம் இவரை  அறிமுகப்படுத்தியது. லக்னத்திற்குப் பத்தில் பாப கிரகமான செவ்வாய் உச்சம், ராசிக்குப் பத்தில் ராகு என்ற அமைப்பாகி சூரியன் நீசம் என்பதோடு, ராஜ ராசியான சிம்மத்தை பாபத்துவம் பெற்ற சனி பார்த்ததால், இவரால் நேரிடையாக எம்பி, எம்எல்ஏ போன்ற பதவிகளில் அமர முடியவில்லை. ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் சூரியன் நீசபங்கம் அடைந்து, வலுப் பெற்ற குரு, செவ்வாயின் பார்வை சிம்மத்திற்கு இருந்ததால் மறைமுகமான அதிகாரம் இவருக்கு கிடைத்தது. சூரிய, சந்திர தசைகளில் ஆரம்பித்துக் கிடைத்த உச்சத் தலைமையின் நெருக்கத்தினால் செவ்வாய் தசையில் அனைத்து அதிகார அமைப்புகளும்  இவரிடம் கட்டுண்டு கிடந்தன இந்த தசையில் வெளிநாட்டுத் தொடர்புகளும், செவ்வாய்க்குரிய தொழிலும் அறிமுகமாகி அதிர்ஷ்டம் எட்டிப் பார்த்தது. ராகு தசை, குரு புக்தியில் கோடிகள் கொட்ட ஆரம்பித்தன.. திரும்பிய பக்கமெல்லாம் பண மழை கொட்ட ஆரம்பித்து பணத்தை என்ன செய்வது என்று சற்றுத் திணறித்தான் போனார். ஒருவருக்கு ராகு தசை நன்மைகளைச் செய்ய வேண்டும் எனில் ராகுவிற்கு வீடு கொடுத்தவர் வலிமை பெற வேண்டும் என்பது முக்கிய விதி. உதாரண ஜாதகத்தில் ராகு மேஷத்தில் அமர்ந்து, அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்றதால் ராகு நன்மைகளைச் செய்தே ஆக வேண்டும். மேலும் மேஷத்தில் இருக்கும் ராகு சுயமாக இயங்கும் அதிகாரம் கொண்டவர். அதேநேரத்தில் ராகு கலப்பற்ற நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டுமெனில் செவ்வாய், சனியின் சேர்க்கையையோ, பார்வையையோ பெறக்கூடாது என்பதும் ஒரு முக்கிய விதி. இங்கே ராகுவிற்கு வீடு கொடுத்த உச்ச செவ்வாயும் பாதகாதிபதியான மூலத்திரிகோண வலுப் பெற்ற சனியும் ராகுவைப் பார்க்கிறார்கள். அதேபோல ஒரு ஜாதகத்தில் சுபர்களாகிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவர்களின் சம்பந்தத்தை ராகு பெறும் நிலையில் அளப்பரிய நன்மைகளை ராகு செய்வார்.. இந்த ஜாதகத்தில் ராகுவை வலுப் பெற்ற குருவும், சுக்கிரனும் பார்க்கிறார்கள் என்பதோடு, இங்கே குரு பாக்யாதிபதி எனும் நிலை பெற்றதால், ராகு தசை, குரு புக்தி கோடிகளை மறைமுகமான வழியில் கமிஷன், காண்ட்ராக்ட் என்ற வழியிலும், கல்லும், மண்ணுமாகவும் கொட்டிக் குவித்தது. அதேநேரத்தில் இங்கே ஒன்பது கிரகங்களும் ராகுவுடன் பார்வை, கேந்திரம், இணைவு என்ற வகையில் சம்பந்தப்படுகின்றன. இந்த அமைப்பு நன்மைகளைத் தராது. உதாரண ஜாதகம் சுபர்களின் பார்வையைப் பெறும் ராகு நன்மைகளைச் செய்வார் எனும் போது பாபர்களின் பார்வை, இணைவு அவரை தீமைகளையும் செய்ய வைக்கும். குரு புக்தி முடிந்து சனியின் புக்தி ஆரம்பித்ததும் இவருக்கு சட்டச் சிக்கல்களும் எதிர்ப்புகளும் வர ஆரம்பித்தன. புதன் புக்தியில் உச்சத் தலைமையிடம் விரோதம் வந்தது. புதன் புக்தியிலேயே சிறைக்கும் சென்று வந்தார். ஒரு ஜாதகத்தில் ராகு நன்மை தரும் அமைப்பில் இருக்கும் போது, செவ்வாய் - சனி இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் அவர்களின் தொடர்பைப் பெறுவது நன்மைகளைத் தராது. ராகு என்பது சொந்த வீடு இல்லாத, சேரும் கிரகத்தின் இயல்பைப் பெறும் ஒரு இயற்கைப் பாப கிரகம் என்பதால் மற்ற முழுமையான பாப கிரகங்களான செவ்வாய், சனியின் தொடர்பை பார்வை அல்லது இணைவு என்ற அமைப்பில் பெறும் போது தனது தசையில் தீமைகளையும் செய்வார். ராகு சிறைக்கு அனுப்பினாலும் சுபர்களின் பார்வையினால் பெற்ற தனலாபத்தை ஒன்றும் செய்யவில்லை. இன்று இந்த ஜாதகர் லேசான சட்ட சிக்கல்கள் தொடர்ந்தாலும் மிகச் சிறந்த சொகுசு வாழ்க்கையினை வாழ்கிறார், இந்த உயரிய வாழ்க்கைக்கு மேஷ ராகுவும், சுபத்துவம் பெற்ற லக்னாதிபதியுமே காரணம். அடுத்து நடக்க இருக்கும் குருவின் தசையில் இவரும், இவரது வாரிசுகளும் ஒரு மேம்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். குரு தசையில், குரு புத்திர காரகன் என்பதால் தனது குழந்தைகள் மேன்மையுடன் இருப்பதை இவர் பார்த்து சந்தோஷப் படவும் முடியும். ஆக குரு தசையில் ஒரு செழிப்பான, நிம்மதியான, எவ்வித சட்ட சிக்கலும் இல்லாத, வெளிப்படையான சொகுசு வாழ்க்கைக்கு ராகு அஸ்திவாரம் போட்டதோடு கோடிகளையும் கொட்டிக் கொடுத்து விட்டார். ( பிப்  25 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *