adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகம் ஜெகத்தை ஆளும்.!…(A-022)

#adityaguruji

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

“மகம் ஜெகத்தை ஆளும்” என்பது ஒரு தமிழ் முதுமொழி. தற்போது தமிழ் ஜெகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசியும் மகத்தில் பிறந்தவர் என்பதாலேயே இந்த ஜோதிட மொழியின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.


மொத்தமுள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில், மகத்திற்கு மட்டும் இத்தனை சிறப்பான ஒரு அடைமொழியுடன் கூடிய பெருமைகள் ஏன்?...

ஜோதிடத்தில் இதுவரை யாருமே விளக்காத, ஒரு விஞ்ஞானப் பார்வையுடன் கூடிய, மகத்திற்கு மட்டுமே உள்ள மகத்துவத்தை, மகத்தின் சிறப்பில் உள்ள சூட்சுமத்தை இப்போது விளக்குகிறேன். தெரிந்து கொள்ளலாம் .வாருங்கள்.

ஜோதிடம் உணரப்பட்ட காலத்தில் வானில் ஒரு கட்டுக்கோப்புக்குள் அமைந்து நிலையான இயக்கங்களைக் கொண்ட கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் உள்ள மனிதனைக் கட்டுப்படுத்தி இயக்குவதை உணர்ந்த நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள், நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி கொண்ட இந்த வானத்தை பனிரெண்டு பிரிவுகளாக தலா 30 டிகிரி கொண்ட ராசியாக மேஷம் முதல் மீனம் என்று பெயரிட்டு பனிரெண்டு ராசிகளாக அமைத்தார்கள்.

நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் இந்த ராசி எனும் விண்வெளியில் பூமிக்குத் தங்கள் கதிராற்றல்களைச் செலுத்தும் நட்சத்திரக் கூட்டங்கள் 27 என்று அறியப்பட்டு, இவைகளின் தூரங்கள் மற்றும் கதிர்வீச்சு அளவுகளின் ஏற்ற இறக்கங்கள் நமது ரிஷிகளால் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, ராசிகளில் நட்சத்திரங்களின் பங்களிப்பு நமக்குப் போதிக்கப்பட்டது.

மேலே சொல்லப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அதன் நெருப்பு நிலம் காற்று நீர்த் தத்துவங்களுக்கேற்பவும் அவற்றின் இயக்கங்களுக்கேற்பவும் மூன்று பகுதியாக தலா நான்கு, நான்கு ராசிகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

மூன்று தொகுதிகளான இந்த பனிரெண்டு ராசிகளுக்குள் அடங்கிய இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாக வருவது அஸ்வினி நட்சத்திரமாகும். இரண்டாவது தொகுதியின் முதல் நட்சத்திரமாக வருவது இந்த பெருமை மிகு மகம் நட்சத்திரம். மூன்றாவது தொகுதியின் முதல் நட்சத்திரமாக வருவது மூல நட்சத்திரம்.

வானில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ஒரு சமமான முக்கோணத்தின், ஒவ்வொரு முனையிலும் அமர்ந்து நமக்கு ஒளி தந்து பிரகாசிக்கும் இந்த அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களே நம்மைச் சுற்றியுள்ள விண்வெளியின் எல்லா வகை கோணநிலைகளின் தொடக்கப் புள்ளிகள்.

இந்த மூன்று மேன்மைமிகு நட்சத்திரங்களிலும் மகத்திற்கு மட்டும் உள்ள சிறப்பு என்னவெனில், நான் மேலே சொன்ன ஒரு சிறப்பு முக்கோணத்தின் இரண்டாவது விளிம்பில் உள்ள, இந்த மகம் நட்சத்திரமானது தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நமது பூமி சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையில் ஒரு பகுதிச் சுற்றை முடித்துத் திரும்பும் வளைவில் இன்னொரு பகுதியின் முதல் நட்சத்திரமாக அமைந்திருக்கிறது.

இந்தச் சிறப்பு இதன் சகோதர நட்சத்திரங்களான அஸ்வினி மூலம் நட்சத்திரங்களுக்குக் கூடக் கிடையாது.

பூமியச் சுற்றி ஒரு போர்வை போல வியாபித்திருக்கும் வான் கோளப் பாதையின் ஆரம்ப முதல் புள்ளியாக அஸ்வினி நட்சத்திரம் இருந்தாலும், பூமி சூரியனைச் சுற்றி வரும் சூரியப்பாதையின் ஆரம்ப நட்சத்திரமாக மகம் இருப்பதால்தான் மகத்திற்கு இந்த மகா சிறப்பு உண்டாயிற்று.

மகம் எனும் சம்ஸ்கிருத வார்த்தைக்கே மகா அல்லது சிறப்பு என்றுதான் பொருள். மேலும் இந்த மகம் நட்சத்திரத்தின் ஜோதிட அடையாளக் குறியீடும் அரசர்கள் அமரும் சிம்மாசனம்தான்.

“மகம் ஜகத்தை ஆளும்” எனும் முதுமொழியின் சூட்சுமம் என்னவென்றால் சூரியனைப் போலவே, மகமும் விண்வெளியில் ஒரு நட்சத்திரம். நமது சூரிய மண்டலத்தின் தலைவன் மற்றும் அரசன் சூரியன் மட்டுமே. ஒருவர் அரசனாக வேண்டுமெனில் சூரியனின் தயவு மிகவும் அவசியம்.

அப்படிப்பட்ட சூரியனுக்கு நேரே, கதிரவனின் ஆளுகைக்கு உட்பட்ட சிம்மத்தின் பின்னே அமர்ந்து தலைமைப் பண்புகளைப் பிரதிபலித்து ஒளிரும் சூரியனைப் போன்ற இன்னொரு நட்சத்திரம் மகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகம் நட்சத்திரத்தின் ஒளியினையும் சூரியனின் ஒளியினையும் ஒரு சேர உள்வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும் வலுவான நிலையில் சந்திரன் இருக்கும் மாசிமாத பவுர்ணமியன்று பிறக்கும் ஒருவர், “மற்ற ராஜ கிரகங்களும் வலிமையாக இருக்கும் பட்சத்தில்” இந்தப் பூமியை ஆள்வார் என்பதை ஜோதிட ரீதியாக உணர்ந்து நம் ஞானிகள் அன்றே சொன்னார்கள்.

மாதம் ஒருமுறை மகம் நட்சத்திரம் வந்தாலும், மேலே நான் சொன்ன இரண்டு மாபெரும் நட்சத்திரங்களான சூரியனின் ஒளியையும், மகத்தின் ஒளியையும் கலந்து குறைவின்றிப் பெற்று சந்திரன் பூமிக்கு அளிக்கும் நாள் வருடத்தின் ஒரே நாளான மாசிப் பவுர்ணமியான மாசி மகம் மட்டும்தான்.

அதாவது வருடம் ஒருநாள் மட்டும் பூமி, சந்திரன், சூரியன், மகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் நிற்க, அன்று ஒருநாள் மட்டும் மகம், சூரியன் இரண்டின் ஒளியையும் பெற்று பூமிக்கு சந்திரன் வெளிச்சம் தருவார். அந்த நாள்தான் மாசிப் பவுர்ணமி.

இந்த மாசி மகம் அன்று “ஒளிப்பழுதின்றி” பவுர்ணமியில் பிறப்பவர் மட்டுமே அரசாளும் தகுதி படைத்தவர் என்று நமது ஞானிகள் ஜோதிட சாஸ்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட்டார்கள். அத்தகைய ஒருநாளில் பிறந்தவர்தான் இன்று தமிழகத்தை ஆளும் அரசியும்....!

சரி....

வருடம் ஒருமுறை வரும் மாசி மகத்தின் சிறப்புகளைத் தெரிந்து கொண்டாயிற்று. இந்தப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தின் சிறப்பு என்ன?

மகாமகம் என்று சொல்லப்பட்டு கும்பமேளாவாகக் கொண்டாடப்படுவதன் வானியல் சிறப்பு என்னவெனில் வருடம் ஒருமுறை வானில் மக நட்சத்திரம், சூரியன், பூமி, சந்திரன் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் அமையும் நிலையில் சூரியனை பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுற்றிவரும் கிரகங்களிலேயே அதிக ஒளி பொருந்தியவரான குருபகவான் இந்த வரிசையில் இணைந்து இவர்கள் ஐவரும் ஒரே நேர்கோட்டில் வரும் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் மாசிமகம் “மகாமகம்” என்று சிறப்புப் பெற்றது.

ஆன்மீகரீதியாக அஸ்வினி, மகம், மூலத்தின் சிறப்புக்களைப் பார்த்தால் மூல முதல் அம்மையப்பனான சர்வேஸ்வரனுக்கு திருத்தொண்டு புரிந்து அவனின் புகழ்பாடி தெய்வநிலை பெற்று, பக்திக்கும் பரம்பொருளின்பால் கொண்ட தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுக்கும் உதாரணமாக இன்று நமது சிவாலயங்களுக்குள் வரிசையாக வீற்றிருந்து நமக்கு அருள்பாலிக்கும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பிறந்த நட்சத்திரத்தில் பெரும்பாலானவை மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களாகவே இருக்கும்.

பொதுவாக இந்த அஸ்வினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அளப்பரிய தெய்வீக ஞான ஆற்றல் கொண்டவர்களாகவும் அபரிதமான ஆன்மீக உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஜோதிடத்தில் இந்த மூன்று நட்சத்திரங்களின் ஆதிக்கக் கிரகமாக ஒரு மனிதனுக்கு ஞானத்தைத் தந்து அவனைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் கேது இருக்கிறார்.

இந்து மதமே ஜோதிடத்தின் கட்டமைப்பில் எழுப்பப்பட்ட்துதான் என்பதால் ஒளிக் கிரகங்கள் ஒன்றுகூடும் இந்தப் புனிதநாளில் நதிக்கரையிலும், கடலிலும் புனிதநீராடுவது இந்தியாவில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது.

இன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன், ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணியான யுவான்சுவாங், தனது பயணக் குறிப்புகளில் வட, தென்னிந்தியாவில் சிறப்பாக இந்தக் கும்பமேளா கொண்டாடப் பெற்று, மக்கள் பெருந்திரளாக புனித நீராடுவதைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புனிதநாளில் புனித நீராடுவது, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது, முன்னோர்களின் நினைவாக எளியவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் போன்ற உதவிகளைச் செய்வது நமது பாவங்களை நீக்கி புண்ணியத்தைத் தரும் எனவும் மீண்டும் பிறவாத ஒரு நிலை ஏற்படும் என்றும் நமது உலகின் மேலான இந்துமதம் வலியுறுத்துகிறது.

மாசி மாதம் கும்ப மாதம் எனப்படுவதால் குடந்தை, குடமூக்கு என்று அழைக்கப்படும் தமிழகத்தின் மிகத்தொன்மையான நகரங்களுள் ஒன்றான கும்பகோணத்தின் நாதன், அருள்மிகு கும்பேசுவரனின் திருக்குளத்திலும் அதனுள் அடங்கியுள்ள தீர்த்தங்களிலும் நீராடுவது மிகப்பெரும் பாக்கியமாக போற்றப்படுகிறது.

ஆயினும் கூடிக்கொண்டே போகும் மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக எல்லோருக்கும் குடந்தையில் நீராடும் பேறு கிடைப்பதில்லை என்பதால் இந்த மகாமகத் திருநாளில் பனிரெண்டு ராசிக்காரர்களும், அவற்றுள் அடங்கியுள்ள இருபத்தியேழு நட்சத்திரக்காரர்களும் எவ்வித முறைகளைக் கையாண்டால் கும்பகோணத்தில் குளித்ததற்கு நிகரான புண்ணியம் கிடைக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தனித்தனியாகக் கணித்துச் சொல்லியிருக்கிறேன்.

அதனைப் பின்பற்றி பரம்பொருளின் அருளை அனைவரும் பெற்று இன்புறுவோமாக....!

இந்த வருடம் மாசிமகத்தன்று பிறக்கும் ஒரு குழந்தை உலகை ஆளுமா?

மாசிமகம் அன்று பிறக்கும் குழந்தை உலகத்தை ஆளும் என்பது ஜோதிடவிதி.

அதுவும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகம் நட்சத்திரம் அன்று குருவின் பார்வையைப் பெறும் சூரியனைக் கொண்ட ஜாதகத்தோடு, இந்த ஆண்டில் பிறக்கும் ஒரு குழந்தை இந்தியாவையோ, தமிழகத்தையோ உலகத்தையோ ஆளுமா என்ற எதிர்பார்ப்பு உண்டாவது இயற்கைதான்.

எந்த ஒரு ராஜயோகமும் குறையின்றி அமைய வேண்டும் என்பதை நான் அடிக்கடி எழுதிவருகிறேன். அப்படிச் சிறிதும் பழுதின்றி அமையும் ஜாதகத்தைக் கொண்டவர்களே ராஜயோகம் எனப்படும் அரசாளும் தகுதி படைத்தவர்கள். இதை ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய “உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா?” தொடர் கட்டுரைகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த மகாமகம் வழக்கம் போலவே ஆன்மீக ரீதியில் சிறப்புடையதுதான் என்றாலும் ஜோதிட ரீதியில் மற்ற மகாமகங்களை விட ஒரு மாற்றுக் குறைந்ததுதான்.

யோகம் எனப்படும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு இணைவு அல்லது சேர்க்கை என்ற அர்த்தத்தின்படி ஒளிக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் இந்த மாசி மகத்தன்று இருள் கிரகங்களான ராகு,கேதுக்களும் இம்முறை இவர்களுடன் இணைகின்றன. இது ஜோதிடரீதியாக ஒரு குறையாக, யோகத்தில் விழும் கரும்புள்ளியாக இருக்கும்.

அரசக் கிரகங்களான சூரியனையும், சந்திரனையும் சனி, செவ்வாய் பார்ப்பது யோகபங்கம் என்பதன்படி தற்போதைய மகாமகத் தினமன்று சூரியனை செவ்வாய் தன் நான்காம் பார்வையால் பார்ப்பதும், சந்திரனை சனி தனது பத்தாம் பார்வையால் பார்ப்பதும் யோகபங்கம் என்பதால் இந்த மகாமகத் தினத்தன்று பிறக்கும் குழந்தை உலகை ஆளும் வாய்ப்பு இல்லை.

ஒரு அரசனோ, அரசியோ அல்லது ஒரு சக்கரவர்த்தியோ உருவாகக் கூடிய மாசி மக அமைப்பு ஜோதிடரீதியாக உருவாக இன்னும் நீண்ட ஆண்டுகள் பிடிக்கும்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *