ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
எம். திவ்யா, காங்கேயம்.
கேள்வி.
ஜோதிடம் கற்று வருகிறேன். அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் ஆனால் ஜோதிடத்தில் மிகச் சிறந்த முறையில் பெரிய அளவில் கற்றுக்கொண்டு தொழில் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்தில் நான் சிறந்த ஜோதிடராக வாய்ப்பு எப்படி உள்ளது? அரசு வேலை கிடைக்குமா? எந்த மாதிரியான வேலை கிடைக்கும்? என்னுடைய முதல் குழந்தை ஆறு மாத கர்ப்பத்திலேயே தவறிவிட்டது. எனக்கு ஐந்தாம் அதிபதி நீச்சம் என்பதால்தான் இப்படி நடந்ததா? தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா.
பதில்.
(விருச்சிக லக்னம். தனுசுராசி, 1ல் புத, 2ல் சூரி,சந், 3ல் சுக்,செவ்,குரு, 4ல் கேது, 5ல் சனி, 10ல் ராகு, 30-12-1997 அதிகாலை 4.48 காங்கேயம்)
நிரந்தரமான அரசு வேலை கிடைப்பதற்கு சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் சுபத்துவமாக ஒளித்தன்மையோடு இருக்க வேண்டும். உன்னுடைய ஜாதக அமைப்பில் சந்திர தசை நடந்து கொண்டிருந்தாலும், அப்போதுதான் அமாவாசையில் இருந்து விலகிய இருள் நிலைமையில் இருக்கிறார், சனியின் 5 டிகிரி பார்வைக்குள் சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள். ஆகவே நேரிடையான அரசு வேலை கிடைப்பதற்கு தடை இருக்கிறது. அதற்குப் பதிலாக ராசிக்கு இரண்டில் குரு நீச்சபங்கமாக உள்ளதால் ஆசிரியப் பணி அல்லது வங்கித்துறைக்கு முயற்சி செய்யவும்.
லக்னத்தில் புதன் பலமாக இருப்பதால் உனக்கு ஜோதிடத்தில் மிகப்பெரிய ஆர்வமும் திறமையும் கண்டிப்பாக வரும். ஜோதிடத்தில் மிகவும் நல்ல அமைப்பில் பிரகாசிக்க முடியும். லக்னத்திற்கு இரண்டு, பத்தாமிடங்களோடு குரு தொடர்பு கொள்வதும் ஜோதிடத்தில் உயர்நிலைக்கு நீ செல்ல முடியும் என்பதை காட்டுகிறது.
ஐந்தாம் அதிபதி குரு நீச்சமாக இருந்தாலும்கூட, செவ்வாயுடன் இணைந்து நீச்சபங்க அமைப்பிலும், பரிவர்த்தனை நிலையிலும் இருக்கிறார். ஆயினும் நடக்கும் தசா, புக்தி நிலைகள் சரியில்லை என்பதால் முதல் குழந்தை கையில் கிடைக்காமல் போய்விட்டது. வரும் சனி புக்தியில் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு. கவலைப்பட வேண்டாம். நன்றாக இருப்பாய் அம்மா.
திருமதி. பிரியா எழில், லண்டன்.
கேள்வி.
குருஜி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களைப் பின்தொடர்பவர்களில் நானும் ஒருத்தி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் ஜாதகத்தை நீங்கள் தெளிவுபடுத்திய காணொளியை சிறிது காலத்திற்கு முன்பு பார்த்தேன். அவரது ஜாதகத்தை போலவே எனது கணவருக்கும் மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் அஸ்தங்கம். குருவும், சனியும் 6 8-ஆக உள்ளனர். குரு எட்டில் நீச்சமாக இருக்கிறார். எனது கணவருக்கு இப்போது நடக்கும் குரு தசையிலோ அல்லது அடுத்து வரும் சனி திசையிலோ ஆயுளுக்கு பங்கம் ஏதாவது உள்ளதா? எனது பெண் குழந்தைகளுக்கு இப்போதுதான் 10 மற்றும் 5 வயது. அவர்களுக்கு தந்தையின் அரவணைப்பு இல்லாமல் போய்விடுமா? தயவுசெய்து எனது கலக்கத்தை தீர்த்து வையுங்கள்.
பதில்.
(மிதுன லக்னம். ரிஷப ராசி. 1ல் சனி, கேது, 5ல் சூரி, புத, 7ல் சுக், ராகு, 11-ல் செவ், 12ல் சந், 11-11-1973, 8-55 இரவு யாழ்ப்பாணம்.)
அம்மா.. ஒருவருடைய ஜாதகத்தை போன்ற அதே நிலைகளைக் கொண்ட இன்னொருவர் எப்போதும் பிறப்பதில்லை என்பது ஜோதிட விதி. மறைந்த முதல்வர் அவர்களும் உன்னுடைய கணவரும் மிதுன லக்னம் என்றாலும்கூட உன் கணவர் ஜாதகத்தில் ஆயுளைக் குறிக்கக்கூடிய எட்டாமிடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். நீச்ச குரு என்றாலும் குரு, குருதான். அவர் இருக்கும் மற்றும் பார்க்கும் வீடு சுபத்துவம் பெறும். முன்னாள் முதல்வருக்கு எட்டாம் வீட்டை பாபியான சனி பார்வையிட்டார்.
எட்டாம் பாவகமே ஒருவர் எத்தனை காலம் இந்த பூமியில் வாழ்வார் என்பதை குறிக்கிறது. நீ குறிப்பிட்ட மறைந்த முதல்வர் அவர்களுடைய ஆயுள் ஸ்தானத்தை பாவியான சனி பார்த்ததால், அவருக்கு குரு தசை, சனி புக்தியில் ஆயுள் பங்கம் ஏற்பட்டது. அது போன்ற நிலை உன்னுடைய கணவருக்கு இல்லவே இல்லை. பொதுவாகவே சஷ்டாஷ்டக தசை, புக்தியில் கெடுபலன்கள் நடக்கும் என்றாலும் எத்தகைய கெடுபலன்கள் நடக்கும் என்பதை நாம் அந்த கிரகங்கள் இருக்கும் பாவகங்களின் வழியாகத்தான் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.
உன்னுடைய கணவருக்கு எட்டில் குரு அமர்ந்திருப்பது அவர் தீர்க்காயுள் என்று சொல்லப்படக்கூடிய எண்பது வயதை தாண்டுவார் என்பதை உறுதியாக காட்டுகிறது. அதோடு என்னுடைய சுபத்துவ- பாபத்துவ- சூட்சுமவலு கோட்பாட்டின் அடிப்படையில் எட்டாம் அதிபதியும், ஆயுள் காரகனுமாகிய சனி லக்னத்தில் கேதுவுடன் இணைந்து சூட்சுமவலு பெற்று இயற்கை சுபரான சுக்கிரனின் 2 டிகிரி பார்வைக்குள்ளும் மிக வலுவாக இருக்கிறார். ஆகவே உன்னுடைய கணவர் வயது முதிர்ந்து, மிகப்பெரிய ஆயுளுடன் வாழ்வார் என்பது உறுதி. கவலை வேண்டாம்.
லக்னத்தை சுக்கிரன் பார்த்து, ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடத்தில் குரு தனித்து அமர்ந்து, ஆயுள்காரகன் சனி சுபத்துவ, சூட்சுமவலுவுடன் இருப்பதால் உன்னுடைய கணவர் நீண்ட நெடுங்காலம் வாழ்வார். தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.
தீபன், மதுரை.
கேள்வி.
என் ஜாதகம் தவறான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி உள்ளது என்று உணருகிறேன். என் உண்மையான ராசி, லக்னம் என்ன, என்ன தசா புக்தி தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும். குடிகார தகப்பனுக்கு பிறந்து தற்போது வரை அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தகப்பனார் இறந்து மூன்று வருடமாகிறது. கஷ்டங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எம்.இ முடித்து சொந்த தொழில் செய்கிறேன். சொல்லிக்கொள்ளும்படி உயர்வு ஒன்றுமில்லை. வயதுக்கு மீறிய கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றேன். திருமணம் முடிந்தால்தான் யோகம் என்று பல ஜோதிடர்கள் சொன்னதால் அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணம் குறித்து பயம் மேலோங்கி உள்ளது. நான் சொந்தத் தொழில் செய்யலாமா அல்லது அரசாங்க வேலை யோகம் உண்டா? என்ன செய்து பிழைக்கலாம்? உண்மையில் திருமணத்தால் யோகம் வருமா அல்லது சோகம்தானா? வாழ்வில் யோகம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அனுபவித்தது இல்லை. கடனை அடைத்து சந்தோஷமே அறியாத தாயை நன்றாக கவனித்துக் கொள்வேனா? என் வாழ்வு எவ்வாறு அமையும் என்பதை குருஜி அவர்கள் தெளிவுபடுத்த பணிகிறேன்.
பதில்.
(மிதுன லக்னம், விருச்சிக ராசி. 4ல் சுக், 5ல் சூரி, புத, குரு, செவ், 6ல் சந், ராகு, 8ல் சனி, 12ல் கேது. 17-10-1993, இரவு 10-10, மதுரை)
ஓடுகிற பாம்பை மிதிக்கக் கூடிய 28 வயதில் ஒரு வாலிபன் இப்படிப்பட்ட கடிதம் எழுதலாமா? வாழ்க்கை என்பதே சவால்களும், போராட்டங்களும் நிறைந்ததுதான். உண்மையைச் சொல்லப் போனால் சோகங்கள் இல்லை எனில் சுகங்கள் இல்லை. சோகம் என்னவென்று தெரிந்தால் தான் நீ சுகத்தை பற்றிய உணர்வை தெரிந்து கொள்ள முடியும்.
நீ நினைத்ததைப் போலவே உன்னுடைய ஜாதகம் தவறான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்டிருக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தில் உனக்கு துலாம் ராசி என்று இருப்பது தவறு. துல்லியமான சரியான திருக்கணித பஞ்சாங்கத்தின்படி உனக்கு விருச்சிக ராசி அதாவது விசாகம் நான்காம் பாதத்தில் நீ பிறந்திருக்கிறாய். விருச்சிக ராசி என்பதால் கடந்த ஒரு ஏழு, எட்டு வருடங்களில் மிகக் கடுமையான துன்பத்தை அனுபவித்து விட்டாய் என்பது உண்மைதான். ஆயினும் இறந்துபோன தந்தையின் பெயரில் இனியும் பழியை சுமத்தி கொண்டிருக்கத் தேவையில்லை. உன்னுடைய உழைப்பு உன்னுடைய தாய்க்கும் உனக்கும் இனிமேல் உயர்வைத் தரும். கவலைப்படாதே.
திருமணம் பருவத்தில் இருக்கும் இளையவர்களுக்கு அது பற்றிய பயம் ஏற்படுவது இயற்கைதான். அதிலும் விருச்சிக ராசியை சேர்ந்த நீ கடந்த கால கஷ்டங்களை நினைத்து திருமணத்தால் மேலும் துன்பங்கள் வந்து விடுமோ என்று கவலைப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் ஒரு பொறுப்புள்ள இளைஞனுக்கு திருமணத்திற்கு பிறகு திருப்பங்கள் வந்தே தீரும்.
சுக்கிரன் நான்காமிடத்தில் நீச்சம் அடைந்தாலும், திக்பலம் பெற்று பரிவர்த்தனையுமாகி இருக்கின்ற நல்ல ஜாதகம் உன்னுடையது. தற்போது உனக்கு லக்னாதிபதியான புதன் தசையும் நடந்து கொண்டிருப்பதால் உன்னால் ஒரு பெண்ணை நன்றாக வைத்துக் கொள்ள முடியும். ஒரு பெண் வந்த பிறகு வந்த பிறகு உன்னுடைய 33-வது வயதில் இருந்து திருப்பமும் வரும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி ஒன்றும் பெரிய அளவில் சோதனைகள் வந்து விடப் போவதில்லை. இருக்கின்ற சோதனைகளும் படிப்படியாக தீர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆகவே நீயும் வாழ்க்கையில் ஒரு முன்னேறிய மனிதனாக இருந்து பிழைத்துக் கொள்வாய். இன்னும் மூன்று வருடங்களுக்கு சொந்தத் தொழில் ஒன்றும் பெரிய அளவிற்கு இருக்காது. சில காலம் கஷ்டப்படு. பரவாயில்லை. 40 வயதிற்குப் பிறகுதான் ஒரு மனிதன் கஷ்டப்படாமல் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அந்த அமைப்பு உனக்கு இருக்கிறது. வாழ்வின் பிற்பகுதியில் யோகத்தை அனுபவிக்கும் ஜாதகம் உன்னுடையது. 33 வயதிற்கு பிறகு கடன்கள் இல்லாத வாழ்க்கை அமையும். கவலைப்படாதே. நன்றாக இருப்பாய்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
மாலை மலர் நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008
இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com