adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எண்களில் உள்ளதா ஜோதிடம்.? – (E-009)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8286 99 8888

ஜோதிடம் எண்களுக்குள் இல்லை, அது கிரகங்கள் மற்றும் பாவகங்களின் சுபத்துவ, பாபத்துவ தன்மையில் இருக்கிறது என்று சமீபத்தில் சொல்லியிருந்தேன்.  அதாவது கேந்திர, கோணங்கள் எனப்படும் 1, 4, 7, 10 மற்றும் 5, 9 ஆகிய எண்களில் குறிப்பிடப்படும் ஒரு ஜாதகத்தின் நல்லவர்கள், மற்றும் 6, 8, 12 என்று குறிப்பிடப்படும் அதே ஜாதகத்தின் கெட்டவர்களின் பேரில் மனதைச் செலுத்தாமல், அதற்கும் ஒருபடி மேலே சென்று அந்தக் கிரகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாவகங்களின் சுபத்துவ, பாபத்துவ தன்மையினை கணிக்கும் போது மட்டுமே ஒருவரின் உண்மையான பலனை அறிய முடியும் என்ற கருத்தில் இதை நான் குறிப்பிட்டிருந்தேன்.  


நான் சொல்லியிருந்த மேற்கண்ட கருத்து அனைவருக்கும் “அப்படியே போய்ச் சேர வேண்டும்” என்பது அவசியமில்லை என்பதை தற்போது உணர்கிறேன்.

சமீபத்தில் ஒருவர், வேத ஜோதிடத்தில் எண்கள் இல்லை என்றால் காரகோ பாவ நாஸ்தியை ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  

காரகோ பாவ நாஸ்தி என்பது, ஒரு கிரகம் தன்னுடைய காரக வீட்டில் இருப்பதால் ஏற்படுகின்ற ஒருவித கெடு நிலை. அதன்படி மாதாகாரகனாகிய சந்திரன் நான்காம் இடத்தில் இருந்தால் தாய் நலம் பாதிக்கப்படும் எனவும், பிதுர்க் காரகனாகிய சூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பின் தந்தையின் நிலை பாதிக்கப்படும் என்பதும் வேத ஜோதிட விதி. அனைத்து கிரகங்களின் உயிர்க் காரகத்துவத்துக்கு ஏற்ப இதனை பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.  

எந்த ஒரு நிலையிலும் பாரம்பரிய ஜோதிடத்தில் அடிப்படை விதிகள் மிகவும் மேலானவை. மிக மிகத் துல்லியமானவை. அவைகளை மறுத்துரைக்க இங்கே யாருக்கும் தகுதி இல்லை.  

காலத்திற்கேற்ப இங்கே சில விதிகள் புதிதாக உருவாகலாம். ஆனால் மூலம் என்று சொல்லக் கூடிய சில அடிப்படை விஷயங்கள் மாற்றியமைக்கப்பட முடியாதவை. அதாவது காலம், தேசம், ஸ்ருதி, யுக்தி, வர்த்தமானம் எனப்படும் நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் சில புதிய விதிகளை உணர முடியுமே தவிர, 12 ராசிகளோடு புதிதாக பதிமூன்றாவதாக ஒன்றை நீங்கள் உருவாக்க முடியாது. அதேபோல  கிரகங்கள் ஒன்பதுதான், பத்தாவது என்பது நேற்றும் இல்லை, இனியும் இல்லை.

அதேநேரத்தில் ஒரு விதியின் முக்கியத்துவம் கருதி ஒன்றை உயர்த்தி இன்னொன்றை தாழ்த்தி நான் சொல்லும் ஒரு கருத்தினை நீங்கள் புரிந்து கொள்வதற்கும், ஓரளவிலான அடிப்படை ஜோதிட ஞானம் உங்களுக்கு இருந்தே தீர வேண்டும்.  

பாரம்பரிய ஜோதிடத்தின் அனைத்து விதிகளையும், சில அமைப்பு நிலைகளையும், மிக மிக முக்கியமாக கேந்திர, கோண, துர், உபசெய, ஆபோக்லிம, பணபர ஸ்தானங்கள் போன்ற எண்கள் விதியையும், ஒரு கிரகம் ஒன்றில் இருந்தால் இது, இரண்டில் இருந்தால் இப்படி என்பது போன்ற பொதுவிதிகளையும்  நீங்கள் நன்கு கற்றுணர்ந்த பிறகுதான், மேற்கண்ட நிலைகளின் மீது மிக உயரிய நிலையில் அமர்ந்திருக்கும் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு தன்மையை அறிந்து கொள்ள முடியும்.  

ஜோதிடம் எண்களில் இல்லை என்று நான் சொல்வதனால் கேந்திர, கோணங்கள் மற்றும் 1 முதல் 12 பாவகங்கள் இல்லையென்று ஆகிவிடாது. அவற்றையும் மீறி இன்னொன்று இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவதுதான் அது.  

எண்களையும் தாண்டி, சுபத்துவம்-பாபத்துவம்-சூட்சும வலு அமைப்புகளை புரிந்து கொள்ளும் போது மட்டும் தான் நம்மால் மிகத் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளமுடியும் என்பதே உண்மை. இதற்காகத்தான் வேத ஜோதிடத்தின் சகல விதிகளையும் பயன்படுத்தி அதாவது கேந்திரம், கோணம், மறைவிடம், பகை, நீச்சம், அஸ்தமனம், கிரகணம் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் மிகச் சரியாக கணித்து விட்டு பலன் அறிய வரும் போது மட்டும் லக்னத்தை மறந்து விடுங்கள் என்று சொல்லுகிறேன்.

லக்னத்தை நீங்கள் மறந்து விடும் பொழுது அங்கே எண்கள் மறைந்து விடும். அதாவது லக்னம் என்ற ஒன்று இருப்பதால் மட்டுமே அங்கே கேந்திர, கோண, மறைவிடங்கள் இருக்கின்றன. லக்னம் இல்லையேல் இவையில்லை. லக்னமே ஒரு ஜாதகத்தின் ஆரம்பப்புள்ளி என்பதால் அதிலிருந்து எண்ணும் போதுதான் 4, 7, 10, 6, 8, 12 போன்ற பாவகங்கள் அமைகின்றன.

லக்னத்தை நீங்கள் மறந்து விடும் போது உங்களுக்கு சம்பந்தப்பட்ட பாவக, கிரகங்களின்  சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு அமைப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தோன்றும். அதனை முதன்மையாக வைத்து பலனை உறுதி செய்து கொண்ட பிறகு, நீங்கள் பாரம்பரிய ஜோதிடம் சொல்லும் கேந்திர, கோண அமைப்புகளுக்கு வந்து இரண்டையும் இணைத்து பலன் அறியும் போது மட்டுமே மிகத் துல்லியமான பலன்களை ஒரு ஜாதகத்தில் அறிய முடியும்.  

கீழே ஒரு உதாரண ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன்.

பிறந்ததிலிருந்தே செல்வச் செழிப்புடன் இருக்கும் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் இவர். சமீபத்தில் மிகவும் உயரிய செல்வந்தக் குடும்பத்தில் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.  “பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்”  என்று ஆங்கிலத்தில் சொல்லும்படியான ஒரு மிகப்பெரிய பணக்கார வாழ்க்கை இவருடையது.  பிறந்ததிலிருந்தே கஷ்டம் என்றால் என்னவென்று அறியாதவர் இவர்.

ஆனால் இவருடைய ஜாதகத்தை பாரம்பரிய ஜோதிடத்தின் விதிகளின்படி மேம்போக்காகப் பார்க்கும் பொழுது, முக்கிய சுப கிரகமான குரு பனிரெண்டில் மறைந்து மற்றும் கணவனை குறிக்கக்கூடிய சுக்கிரன் நீச்சமாக அமைந்து, லக்னாதிபதி செவ்வாய் 12ல் மறைந்திருக்கிறார் என்றுதான் தோன்றும். திருமண விஷயத்தில் ஜோதிடர்கள் தவறான பலன் சொன்ன ஜாதகம் இது.

பாரம்பரிய ஜோதிட விதிகளின்படி மட்டும் இந்த பெண்ணின் ஜாதகத்தை நாம் கணிப்போமேயானால் இவரது ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் பன்னிரண்டில் மறைந்திருப்பது மிகவும் மோசமான பலனை தரக்கூடிய ஒன்று. அதனை அடுத்து விருச்சிக லக்னத்தின் யோகாதிபதியான 2, 5 க்குடைய குருவும் பன்னிரண்டில் லக்னாதிபதியுடன் மறைந்திருப்பதும் கடுமையான ஒரு நிலை.  

அதேபோல களத்திரகாரகன் மற்றும் தாராளமாக செலவு செய்யத் தூண்டும் கிரகமும், செல்வச் செழிப்பிற்கு காரணமான இன்னொரு சுப  கிரகமுமான சுக்கிரன் 11ல் நீச்சமாக இருப்பது பெரிய பலவீனம். 6, 8, 12ஆம் இடங்கள் மிகவும் கெடுபலன்களை தரக் கூடியவை என்று உணர்ந்திருக்கும் நமக்கு இங்கே பன்னிரண்டாம் இடத்தில் பிதுர் காரகனாகிய சூரியன் மற்றும் புதன், குரு, செவ்வாய் ஆகிய நால்வரும் மறைந்திருப்பது மிகப்பெரிய மோசமான ஒரு நிலை என்பதாகத் தோன்றும்.  

அதிலும் ஒரு ஜோதிடர் இதனை சரியான பீடை ஜாதகம் என்று சொல்லிவிட்டார்.  

பாரம்பரிய ஜோதிட விதிகளை மேம்போக்காக உணர்ந்து கொண்டு, எண்களின் அடிப்படையில் மட்டுமே ஜோதிடத்தை புரிந்து கொண்டவர்களுக்கு நான் சொன்ன மேற்கண்ட பலன் மட்டுமே கண்ணுக்குத் தோன்றும்.  

ஆனால் என்னுடைய சுபத்துவம், பாபத்துவம் மற்றும் சூட்சுமவலு அமைப்பின்படி இங்கே பாபக் கிரகமான லக்னாதிபதி செவ்வாய் 12ல் மறைந்திருப்பது சூட்சும வலு என்பதோடு, அதே செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் குருவோடு இணைந்திருப்பது மிகப்பெரிய சுபத்துவம். அதைவிட மேலாக நான் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லும் சந்திர அதியோகம் எனப்படும் மிக உயர்நிலை யோகம் இந்தப் பெண்ணிற்கு அமைந்திருக்கிறது.  

அதாவது பௌர்ணமிக்கு இரண்டு தினங்கள் மிச்சம் இருக்கின்ற நிலையில் கிட்டத்தட்ட பூரணத்தை நெருங்கும் சந்திரனுக்கு ஏழில் சுக்கிரன், எட்டில் குரு, புதன் அமர்ந்து இவர்கள் மூவரும் சந்திரனில் சுப ஒளியால் மிக அதிகமாக சுபத்துவத்தப்படுத்தப்பட்ட மிகப்பெரிய யோக ஜாதகம் இவருடையது.  

மிக முக்கியமாக பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் இவருக்கு விருச்சிக லக்னத்திற்கு வரக்கூடாத என்று நான் சொல்லும் புதன் தசையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.  

பாரம்பரிய ஜோதிட விதிகளின் படி துர்ஸ்தானம் என்று சொல்லப்படக் கூடிய பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும், எட்டுக்குடைய புதன் நல்ல பலன்களைத் தரமாட்டார். அதன்படி இவருக்கு இந்த தசையில் நல்லவைகள் நடக்க கூடாது.  

ஆனால் அதிர்ஷ்டத்தின் உச்சியில் இருக்கும் இவருக்கு புதன் தசை சிறப்பான பலன்களைத் தந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் புதன் சுக்கிரனின் வீட்டில் சுபத்துவமாகி, பரிவர்த்தனையும் பெற்று குருவுடன் இணைந்து மிகப்பெரிய சந்திர அதியோக அமைப்பில் இருப்பதால்தான்.  

தனகாரகன் எனப்படும் குரு கெட்டாலே ஒருவர் பணக்காரராக முடியாது.  ஆனால் பணக்காரர்களிலும் மிக உயரிய நிலையில் இருக்கும் இந்தப் பெண்ணிற்கு, பணத்தைக் கொடுக்கும் குரு பனிரெண்டில் மறைந்து, நீச்சனின் வீட்டில் அமர்ந்து, பாபரான செவ்வாயுடன் இணைந்து, சனியின் பார்வையும் பெற்று, சூரியனுடன் 6 டிகிரிக்குள் இணைந்து அஸ்தமனமும் அடைந்துள்ளார்.

இங்கே குருவின் அனைத்து பலவீனங்களையும் தூக்கி நிறுத்துவது சந்திர அதியோகம் என்கின்ற பௌர்ணமிக்கு அருகில் ஒளி உச்ச நிலையில் உள்ள சந்திரனுக்கு எட்டாமிடத்தில் குரு இருக்கும் நிலைதான். அதைப்போலவே சந்திரனுக்கு நேர் எதிரே ஏழில் இருக்கும் சுக்கிரனையும் இங்கே நீச்சன் என்று கணிக்கக் கூடாது. சுக்கிரன் இங்கே உச்சத்தை விட மேலான அமைப்பில் இருப்பதால்தான் மாளிகை வீடு, உலகின் அனைத்து வித சொகுசு கார்கள் போன்ற அமைப்பை இந்த ஜாதகிக்கு கொடுத்திருக்கிறார்.   

மிக முக்கியமான நிலைகளில் எண்களையும், பாரம்பரிய ஜோதிடம் சொல்லும் பகை, நீச்சம், அஸ்தமனம் போன்ற நிலைகளையும் மறந்து விட்டு, நான் சொல்லுகின்ற சுபத்துவ, சூட்சுமவலு விதிகளை இறுதியாக பொருத்திப் பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு ஜாதகத்தின்  உண்மையான பலன்கள் தெரியும். அதுவே சுபத்துவ-சூட்சும வலு தத்துவத்தின் சிறப்பு.  

அடுத்த வெள்ளி பார்க்கலாம்

மாலைமலரில் 16.10.2020 இன்று வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.