adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
எதிர்காலத்தில் சந்நியாசி ஆவேனா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


மீனாட்சி, கோயம்புத்தூர்.

கேள்வி:

வாழ்க்கையில் எந்த வழியும் திறக்கப்படாமல், தற்கொலை செய்து கொள்வதற்கும் துணிவில்லாமல் துன்பங்களிலேயே உழன்று கொண்டிருக்கும் ஒரு அபலைப் பெண் எழுதுகிறேன். மனதில் இருக்கும் துன்பங்களை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இப்போது எனை ஆளும் ஈசனிடம் பகிர்வதாக நினைத்து உங்களிடம் சொல்கிறேன்.

பத்து வயதிலிருந்தே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு, பக்தி, பூஜை, அபிஷேகம், விரதம் என வித்தியாசமாக இருந்தவள் நான். தாய் தந்தை என் மேல் பாசமாக இல்லை. பள்ளியில் கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம், பேச்சுப்போட்டி என அனைத்திலும் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். எங்கேயாவது போய்த் தொலை என்று அடிக்கடி தாயும் தந்தையும் திட்டிக் கொண்டிருந்த சமயம் 18 வயதில் ஆறுதல் சொன்ன ஒரு தூரத்து உறவு பையனுடன் காதல் ஏற்பட்டு அவனையே மணம் செய்து கொண்டேன். ஆனால் மூன்று வருடத்தில் பிரிவு ஏற்பட்டு, தனித்து வாழ்ந்த நிலையில் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஜோதிடரிடம் காட்டியபோது எனக்கு கடுமையான காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பதால் தாலி கட்டிக் கொள்ளாமல் மோதிரம் மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜோதிடர் சொன்னதால் அப்படியே செய்து வாழ்ந்து கொண்டிருந்தோம்.

திடீரென ஒருநாள் என் கணவரின் முன்னாள் மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்து விட்டாள் என்ற தகவல் கிடைத்தது. அந்த பெண்ணின் சகோதரர்களுக்கு திருமணமானவுடன் அவளின் கதி அதோகதியாகி இருக்கிறது. அவளிடம் பேசினால் “கோ” வென்று கதறுகிறாள். யோசித்தேன். அது ஒரு கிராமத்துப் பெண். வெளியுலகம் தெரியாது. ஆதரிப்பார் யாருமில்லை. எனவே என் கணவரிடம் நடந்தது நடந்துவிட்டது, அவளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள், உங்களை விட்டால் அவளுக்கு இப்போது வேறு கதி இல்லை என்று மன்றாடி, அவளது குழந்தையைக் காட்டி அவரை ஒத்துக்கொள்ள வைத்து விட்டு லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்துவிட்டேன்.

ஊரிலுள்ள என் குடும்பத்தினர் நாங்கள் ஒன்றாக குடும்பம் நடத்துகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் இது தெரியாது. என் கணவர் அடிக்கடி வந்து என்னை வந்து பார்த்து கண்ணீர் வடிக்கிறார். இப்போதும் அவர் கொடுக்கும் உதவித் தொகையை வாங்காமல், சொந்த காலில் நிற்க முயற்சி செய்கிறேன். டைலரிங், பியூட்டிசியன் என நிறைய கைத்தொழில்கள் கற்று இருக்கிறேன். ஆனால் எதையும் தொழிலாக செய்ய முடியவில்லை. தற்போது ஹெர்பல் சீயக்காய், குளியல் பொடி செய்து விற்று வருகிறேன். சொந்த தொழில் செய்வதில் ஆர்வம் அதிகமாக உள்ளது. ஊரிலுள்ள அனைவரும் என்னை ஏமாளிப் பெண் என்று திட்டுகிறார்கள்.

தற்போது சதாசர்வகாலமும் ஈசனின் நினைவிலேயே நான் இருப்பது ஏன்? எதிர்காலத்தில் சன்னியாசியாக விடுவேனா? ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா? அது ஆணா பெண்ணா? எல்லோரும் இருந்தும் யாருமற்ற அனாதையாக வாழ்ந்து வருகிறேன். என் வாழ்க்கை சீராக ஏதேனும் பரிகாரங்கள் உள்ளதா? காலம் முழுவதும் தனிமையிலேயேதான் இருப்பேனா? எப்போது இறந்து போவேன்? தயவு செய்து மறைக்காமல் கூறுங்கள். சனி தசை, சுக்கிர புக்தியில் ஈசனடி சேர்வேனோ?

பதில்:

(மேஷ லக்னம், மகர ராசி, 1ல் சுக், ராகு, 7ல் கேது, 8ல் சனி, 9ல் செவ், 10ல் சந், 11-ல் புத, குரு, 12-ல் சூரி, 4-4-1986 காலை 8-3 கோவை)

ஜோதிடத்தில் தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்றையும் குறிக்கும் இரண்டாம் இடம் பலவீனமானால் அவருக்கு குடும்பமும், தனமும் அமையாது என்பது மிக முக்கிய விதி. அதே போல வாழ்க்கைத் துணையை குறிக்கும் சுக்கிரனும் வலுவிழக்க கூடாது. உன்னுடைய ஜாதகப்படி சுக்கிரனே இரண்டாம் வீட்டிற்கும் அதிபதியாகி, ராகுவுடன் ஒரே டிகிரியில் இணைந்து கிரகணம் ஆகியிருக்கிறார். கூடுதலாக நவாம்சத்தில் செவ்வாய், ராகு, தேய்பிறைச் சந்திரனுடன் இணைந்து பாபத்துவ நிலையிலும் இருக்கிறார்.அதேபோல இரண்டாம் வீட்டை எட்டில் இருக்கும் சனி பார்க்கிறார். இரண்டாம் வீடு, அதிபதி, காரகன் ஆகியவை கெட்டிருக்கிறது. இதுபோன்ற அமைப்புள்ளவர்களுக்கு முறையான திருமண வாழ்க்கை அமைவது இல்லை.இது போன்ற ஜாதக அமைப்புள்ளவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று பேசிப்பேசியே உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்வீர்கள்.

லக்னத்திற்கு எட்டில் சனி, ஏழில் ராகு கேதுக்கள், ராசிக்கு ஏழாம் இடத்திற்கு செவ்வாய் பார்வை என கடுமையான களத்திர தோஷம் அமைந்த ஜாதகம் உன்னுடையது. கூடுதலாக ஐந்தாம் அதிபதி 12ல் மறைவு, ஐந்தாம் இடத்திற்கு சனி பார்வை என புத்திர தோஷமும் இருக்கிறது. ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் தசை நடப்பதாலும், சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்த சனி, மூன்றாம் பார்வையாக ராசியை பார்ப்பதாலும் உனக்கு அதீதமான ஆன்மிக ஈடுபாடு இருக்கும். இது கடைசி வரை நீடிக்கும்.

எட்டில் சனி இருப்பதால் உனக்கு ஆயுள் பலம் அதிகம். ஆகவே இந்த 34 வயதில் ஆயுளைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. ஜாதகப்படி குருவே அதிகமான வலுவாக இருக்கின்ற கிரகம் என்பதால், தற்போது நீ செய்துவரும் மூலிகை பொருட்கள் தொழிலையே இன்னும் கொஞ்ச நாள் செய்ய வேண்டியிருக்கும்.

தற்போது குரு தசையில் நடைபெறும் புதன் புக்தியும், உன் மகர ராசிக்கு நடக்கும் ஜென்ம சனியும் 2022 வரை உனக்கு நன்மைகளைத் தராது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதையே தொடர்ந்து செய். உன்னுடைய வாழ்க்கையில் உறவு, நட்பு, வாழ்க்கைத்துணை, உலகம் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் காலகட்டம், ஜென்மச்சனி என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது எந்த முக்கிய முடிவும் எடுக்காதே. நதி போகும் போக்கில் படகைப் போகவிடு. 2022 ல் குரு தசை, சுக்கிர புக்தியில் இருந்து உன்னுடைய வாழ்க்கை நல்லபடியாக மாறும். அதுவரை பொறுமையாக இரு. இன்னொரு திருமணம் என்பது உன் வாழ்க்கையில் இல்லை. அதே நேரத்தில் உன்னுடைய கணவருடன் இணைந்து வாழ முடியும்.

உன்னுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தி சென்று இரவு தங்கி, மறுநாள் அதிகாலை காளத்திநாதனுக்கும்,  தாயாருக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு வா. இன்னொரு ஜென்ம நட்சத்திரம் அன்று கும்பகோணம் அருகில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபடு. வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும். தற்போதிருக்கும் பிரச்சினைகளிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

அடுத்து நடக்க இருக்கும் சனி தசையில், சனி சொந்த நட்சத்திரத்தில் வர்கோத்தம நிலையில் இருப்பதால், இப்போதைய நிலையை விட அதிகமான ஆன்மீக ஈடுபாடு வரும். இனிமேல் கோவில், குளம் என்றுதான் திரிவாய். ஆன்மீகத்தில் மட்டுமே அமைதி காணும் ஜாதகம் உன்னுடையது. ஜென்மச் சனி நடப்பதால் எந்தவித ஆறுதலும், உறவும் இப்போது உனக்கு கை கொடுக்காது. குழந்தையைத் தத்து எடுப்பதும் இப்போது சரியாக வராது. பொறுமையாக இரு. சந்நியாசி ஆகவும் முடியாது. 2022க்குப் பிறகு நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள் அம்மா.

 (17.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.