adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 275 (11.02.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எஸ். சுகன்யா, பட்டுக்கோட்டை.

கேள்வி:

நீங்கள் கூறுவது போல் பெரும்பான்மையான ஜோதிடர்கள் ஒரு படிக்காத மனநல மருத்துவர்களாகத்தான் இருக்கின்றனர். மாலைமலர் பதில்களால் என்னாலும் ஓரளவிற்கு ஜோதிடத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. என் தங்கைக்கு திருமணமாகி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் இப்போது அனைவரும் என்னை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். சில நேரங்களில் மன உளைச்சல் அடைந்து விடுகிறேன். மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனையும் செய்து விட்டேன். அனைத்து முடிவுகளும் நன்றாக உள்ளது. நானும் கணவரும் மருந்துகள் எடுத்துக் கொண்டு வருகிறோம். வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு வந்து விட்டார். எங்களுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? கணவர் மறுபடியும் வெளிநாடு செல்லலாமா அல்லது இந்தியாவிலேயே பணிபுரியலாமா?


பதில்:

(ஆண் 27-4-1983 மதியம் 1-50 தஞ்சை, பெண் 13-5-1988 மாலை 4-29 பட்டுக்கோட்டை)

கணவருக்கு ஐந்தாம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல் மறைந்து, ஐந்தில் ராகு கேது அமர்ந்து, ஐந்தாம் இடத்தை உச்ச சனி பார்த்த புத்திர தோஷ ஜாதகம். உனக்கும் அதே போன்ற அமைப்பில் ஐந்தாமிடத்தில் செவ்வாய், ராகு இணைந்து, சனியின் பார்வை புத்திர பாவகத்திற்கு இருக்கிறது. இருவரின் ஜாதகத்திலும் குரு ஓரளவிற்கு வலிமை பெற்று, ராசிக்கு ஐந்தாமிடம் பலவீனமாக இல்லாததால் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு கையில் குழந்தை இருக்கும். கவலைப்பட வேண்டாம். கணவரின் ஜாதகப்படி எட்டாம் அதிபதி சுபராகி, எட்டாம் வீட்டைப் பார்த்து, பன்னிரண்டாம் அதிபதி பவுர்ணமி சந்திரனாக இருப்பதால் நீண்ட நாட்கள் வெளிநாட்டில்தான் வேலை செய்வார். குழந்தை பாக்கியத்திற்காகவே வெளிநாட்டு வேலை தடை பட்டது. குழந்தை உருவான பின் கணவர் கண்டிப்பாக வெளிநாடு செல்வார். வாழ்த்துக்கள்.

நடராஜன், பெரம்பூர்.

கேள்வி:

இதுவரை பல கடிதங்கள் எழுதி உள்ளேன். இன்றுவரை மாலைமலரில் பதில் வரவில்லை. இருப்பினும் விக்கிரமாதித்தன் போல தொடர்கிறேன். புது வருடமாவது எனது கோரிக்கைக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். எனது பெண் பிறந்த தேதி 22- 9- 1992 புரட்டாசி 5ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, விடியற்காலை மூன்று மணிக்கு ஜனனம். புனர்பூசம் 4ஆம் பாதம், கடக ராசி, சிம்ம லக்னம். எனது பெண்ணிற்கு படிப்பிற்கேற்ற நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? திருமணம் சொந்தத்திலா அசலா?

பதில்:

நீங்கள் சொல்லும் புரட்டாசி ஐந்தாம் தேதி விடியற்காலை 3 மணிக்கு கடக லக்னம் கடக ராசி வருகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜோதிடர் எழுதி இருந்தால் கூட கடக லக்கனம்தான் வந்திருக்க வேண்டும். ஆகவே உங்களுடைய பெண்ணின் ஜாதகத்தில் தவறு இருக்கிறது. அவர் எத்தனை மணிக்கு சரியாக பிறந்தார் என்பதை மறுபடியும் துல்லியமாக குறிப்பிட்டு, ஜாதகத்தை நகலெடுத்து அனுப்பிவையுங்கள். பதில் தருகிறேன்.

பிரகாஷ் பாண்டி, பெரியகுளம்.

கேள்வி:

தாங்கள் பொதுவாக எனது விருச்சிக ராசிக்கு எழுதும் பலன்கள் அப்படியே எனக்கு பொருந்துகிறது. கடந்த ஐந்து வருடங்களாக என் வாழ்வில் சோதனைகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்து வந்துள்ளேன். தகுந்த வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ற வேலை மற்றும் ஊதியம் கிடைக்காமை, வேலையில் நிரந்தரமின்மை, திருமணத்தடை, அனைத்து முயற்சிகளிலும் தோல்வி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளேன். உள்ளூர் ஜோதிடரிடம் எனது ஜாதகத்தைக் காட்டியதில் தற்போது புதன் தசை நடப்பதாகவும், அடுத்து கேது தசை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தற்போதைய புதன் தசையில் எனக்கு எந்த நன்மையும் நடைபெறவில்லை. எதிர்வரும் கேதுதசை எனக்கு நன்மை தருமா? மிகவும் மனக் கலக்கமாக உள்ளது. கேது தசையில் தகுதிக்கேற்ற வேலை மற்றும் அரசு உத்தியோகம் அமையுமா? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? திருமணம் எப்போது நடைபெறும்? மனைவி பற்றி அறிய விரும்புகிறேன்.

பதில்:

(துலாம் லக்னம், விருச்சிக ராசி, 2ல் சந், 3ல் ராகு, 4ல் சனி, 9ல் செவ், கேது, 11-ல் சூரி, புத, குரு, 12ல் சுக், 3-9-1992 காலை 9-45 பெரியகுளம்)

விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரும் இரண்டு ஜென்மங்களுக்கு உரிய வேதனைகளை அனுபவித்து விட்டீர்கள் என்று தொலைக்காட்சிகளிலும், மாலைமலரிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனி விடிந்துவிட்டது.

உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சுக்கிரன் நீச்சம் என்றாலும், அவர் அம்சத்தில் உச்சமாகி ராசியில் பன்னிரண்டில் இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு. எனவே வாழ்வின் பிற்பகுதியில் நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது. ராசிக்கு பத்தில் சூரியன் அமர்ந்து குரு, புதனுடன் இணைந்து சுபத்துவமாகி, அம்சத்திலும் வலுவான ஒரு நல்ல நிலைமையில் இருப்பதால் உங்களுக்கு முப்பது வயதில் அரசு வேலை கிடைக்கும். அதுவரை ஏதேனும் ஒரு தனியார் வேலைக்கு செல்லுங்கள்.

சொந்த தொழில் இப்போது வேண்டாம். லக்னாதிபதி வலுவிழந்து இருப்பதால் உங்களை எதுவும் செய்ய தூண்டி விடுவதற்கு ஒரு ஆள் வேண்டும். கடுமையான மனக்குழப்பத்தில் அவ்வப்போது விழுந்து விடுவீர்கள். இனிமேல் உங்கள் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். கேது தசை உங்களுக்கு 9-ஆம் இடத்தில் இருப்பதால் நல்லதுதான் செய்யும். சுக்கிரன் நீச்சமாகி, ராசிக்கு இரண்டில் ராகு, ராசிக்கு எட்டில் செவ்வாய் கேது போன்ற அமைப்புகள் இருப்பதால் தாமத திருமணம்தான் நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம் முதல் முயற்சிகள் அனைத்தும் பலிக்க ஆரம்பிக்கும். என்றும் முயற்சிகளை கைவிடாதீர்கள். வாழ்த்துக்கள்.

(11.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.