adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
செய்வினையால் பாதிக்கப்பட்டேன்…!

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை.

கேள்வி:

குருஜிக்கு வணக்கம். 2020 ஜனவரி 7 அன்று 60 வயதாகும் வரை எனக்கு நிரந்தர வேலையோ, பொருளாதார வசதியோ அமையவில்லையே ஏன்? பூர்வீக சொத்தும் கிடைக்காமல், பிறந்த குடும்பமும் பிரிந்த சூழலில் இனி எதிர்காலம் எப்படி இருக்கும்? எனது முன்னேற்றம் செய்வினை பாதிப்புகளால் தடைபட்டதாக உணருகிறேன். பித்ரு தோஷ பரிகாரங்கள் எதுவும் இதுவரை செய்ததில்லை. ஆனால் தீவிர கடவுள் வழிபாடு உண்டு. 40 வயதில்தான் திருமணம் ஆனது. 44 வது வயதில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆண் வாரிசும் கிடையாது. இனி செய்ய வேண்டியது என்ன? யோக பலன்கள் எதுவும் கிடைக்க வாய்ப்புண்டா?


பதில்:

பத்திரிக்கைகளில் துணுக்குகள் எழுதும் அந்தணப்பேட்டை அண்ணா அன்பழகன் தானே நீங்கள்? நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

தசா,புக்தி அமைப்புகளே ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன என்பதை அடிக்கடி எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஜாதகம் யோகமாக இருந்தாலும், அந்த மனிதனுக்கு நன்மைகளைத் தரக்கூடிய கிரகங்களின் தசைகள் வரும்பொழுதே ஒருவன் யோகசாலி எனப்படும் அதிர்ஷ்டம் உள்ளவனாக ஆகிறான்.

உங்கள் ஜாதகப்படி கும்ப லக்னமாகி, கும்பத்திற்கு யோகம் செய்யும் சனி, புதன், சுக்கிர தசைகள் பருவத்தில் வந்திருந்தால் ஓரளவிற்கேனும் நல்ல வசதியாக இருந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு பத்து வயது முதல், சூரிய, சந்திர, செவ்வாய் என அவயோக தசைகளும், அதன் பிறகு கும்பத்திற்கு ஆகாத எதிரியான சந்திரனோடு இணைந்த ராகுதசை 51 வயது வரையும், தற்பொழுது இன்னொரு அவயோகியான அஸ்தமனமான குருவின் தசையும் நடந்து கொண்டிருக்கிறது. 67 வயதிற்குப் பிறகுதான் உங்களது லக்னாதிபதியின் தசையும், அதன் பிறகு யோகாதிபதியான புதன் தசையும் வருகிறது. பருவத்தில் யோக தசைகள் வராமல் அதிர்ஷ்டத்தை இழந்த ஜாதகம் உங்களுடையது.

அனைத்தும் இங்கே நமது பூர்வஜென்ம கர்மாவின் அடிப்படையில்தான் நடக்கிறது என்பதுதான் ஜோதிடம். ஆகவே நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்ற அளவில்தான் நம்முடைய மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் தாமதமாக திருமணம் நடக்கும் என்பது ஜோதிட உண்மை. அதன்படி உங்களுக்கு சுக்கிரன், ராகு- கேதுக்களுடன் இணைந்து, ஏழாமிடமும் நிழல் கிரகங்களால் பாதிக்கப்பட்டதால் தாமத திருமணம் நடந்தது. அதேபோல லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய், ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி அமர்ந்து, புத்திர ஸ்தானாதிபதியும் செவ்வாய், சனியால் பாதிக்கப்பட்டு, புத்திரகாரகன் அஸ்தமனம் ஆனதால் உங்களுக்கு ஆண் வாரிசு இல்லை.

செய்வினையால் பாதிக்கப்பட்டதாக எழுதி இருக்கிறீர்கள் முன்பே ஒரு கேள்விக்கு செய்வினையும் இல்லை, செய்யாத வினையும் இல்லை, எல்லாம் முன்னர் நாம் செய்த வினைதான் என்று எழுதி இருக்கிறேன்.

ஜோதிடமே பூர்வ ஜென்மத்தில், அதாவது சென்ற பிறவியில் நாம் செய்த செயல்களைப் பற்றி கூறுவதுதான். செய்வினை என்று கூறப்படும் ஒன்றின் மூலம் எங்கோ ஒருவர் இருந்து கொண்டு இன்னொருவரை இயக்க முடியுமானால், அதாவது ஒரு செயலின் மூலமாக இன்னொருவரின் வாழ்க்கையை பாதிக்க முடியுமானால் இந்த உலகில் எவருமே தன்னுடைய சொந்த உழைப்பால் அல்லது சொந்த முயற்சியால் முன்னேறத் தேவையில்லையே? எல்லோருக்கும் எல்லோரும் செய்வினை வைத்து விடலாமே?

நடப்பவை அனைத்தும் முன்பே நிச்சயிக்கப்பட்டவையே என்று ஜோதிடம் சொல்கிறது. அதாவது ஒரு மனிதன் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பாதையில்தான் செல்கிறான் என்பதுதான் ஜோதிடம். எப்படி கிரகங்கள் அனைத்தும், பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒழுங்கான, நிச்சயமான சுழற்சிக்கு உட்பட்டு இயங்குகிறதோ, அதைப்போலவே மனிதனின் வாழ்க்கையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு விதத்தில்தான் அமைகிறது என்பதுதான் ஜோதிடத்தின் உட்கருத்து. ஆயினும் இங்கே எந்த நிலையிலும் மனித முயற்சி வலியுறுத்தப்படுகிறது.

மனம் பலவீனமானவர்கள் அல்லது வாழ்க்கையில் முழுவதுமாக தோற்றுப்போய் “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் இருப்பவர்கள் மட்டுமே செய்வினை என்ற இல்லாத ஒன்றிற்கு மயங்குகிறார்கள். மனிதனின் மனம் மகுடிக்கு கட்டுண்ட நாகம் போல் இயங்குவது. எது ஒன்றை நீங்கள் தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறீர்களோ அதை உங்கள் மனம் ஏற்றுக் கொண்டு அதன்படி அது செயல்பட ஆரம்பிக்கிறது.

எனக்கு எவரோ ஒருவர் செய்வினை வைத்து விட்டார் என்று லேசாக நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே மனம் அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதன் வழியே செல்ல ஆரம்பித்து விடும். செய்வினை மூலமாக ஒருவர் இன்னொருவரை கட்டுப்படுத்த முடிந்து விட்டால் இங்கே எல்லோரும் பணக்கார்கள்தான், எல்லோரும் முதல்வர், பிரதமர்கள்தான்.

செய்வினை என்பது  உண்மை என்றால், உலகில் செயல்கள் எதுவுமே தேவை இல்லையே? உங்களுக்கு நான் செய்வினை வைத்து உங்களை கட்டுப்படுத்த வேண்டியதுதான், எனக்கு நீங்கள் செய்வினை வைத்து என்னை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். மனிதன் வாழ்வதே இங்கே அர்த்தமற்றதாகி விடும். இனிமேலாவது செய்வினை பற்றிய எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன வழி என்பதை யோசியுங்கள்.

அதேநேரத்தில் ஜோதிடம் என்பது விதிகளுக்கு உட்பட்டது. அனைத்தும் இங்கே ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டு நடப்பதைப்போல ஜோதிடத்திலும் சில ஒழுங்கான விதிகள் இருக்கின்றன. அதன்படி 2-9-11ம் அதிபதிகள் எவர் ஒருவருக்கு வலுத்த நிலையில் இருக்கிறார்களோ, அவர்களே பொருளாதார அமைப்பில் மிகவும் நல்ல நிலையில் இருக்க முடியும். உங்கள் ஜாதகப்படி 2-11-க்குடைய குரு, சனி-செவ்வாயுடன் இணைந்து அஸ்தமனமான நிலையில், ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் ராகு-கேதுவுடன் இணைந்திருப்பதால் உங்களுக்கு நிறைவான பொருளாதாரம் அமைய வாய்ப்பில்லை.

பூர்வீகத்தை குறிக்கும் சிம்மத்தில், ராகுவும் ஆறுக்குடையவனும் இணைந்து அமர்ந்து, அதன் அதிபதியான சூரியன், செவ்வாய்-சனியுடன் இணைந்ததால் பூர்வீக சொத்தும் உங்களுக்கு கிடைக்காது. ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவம் அடைகிறதோ அதன் அமைப்பில் தொழில் அமையும் என்பதன்படி, குறைந்தபட்சம் புதன் உங்களுடைய ஜாதகத்தில் குருவுடன் இணைந்து, குருவின் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களுக்கு எழுத்து, ஜோதிடம் ஆகியவற்றின் மேல் ஆர்வம் பிறந்து, அதன் மூலமாக சிறிது ஜீவனம் கிடைத்திருக்கும்.

கும்ப லக்னத்திற்கு எப்பொழுதுமே சூரிய, சந்திர புக்திகள் நல்ல பலன்களைத் தராது என்பதால், அடுத்து வர இருக்கும் குரு தசை, செவ்வாய் புக்தி முதல் உங்களுக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டு, உங்களுடைய இறுதிக்காலம் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கும். அடுத்து வரும் சனிதசை முதல் கவலைகள் குறையும். அந்திம காலத்தில் ஓரளவிற்கு நிம்மதியாக இருக்க கூடிய ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.

(11.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.