adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
குழந்தைக்கு கெடுதல் நடக்குமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சி.புவனா, மயிலாடுதுறை.

கேள்வி.

குருஜி அய்யாவிற்கு வணக்கம். எனது ஐந்து வயது மகளின் ஜாதகத்தில் உள்ள சில அமைப்புகள் கவலையை ஏற்படுத்துகின்றன. ஒன்பதாமிடத்தில் அமர்ந்த சூரியனுக்கு காரகோ பாவ நாஸ்தி அமைப்பு இருப்பதால் இவனது தந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? புதனும், சுக்கிரனும் அஸ்தமனமாகி உள்ளது என்ன விளைவை ஏற்படுத்தும்? மேஷ லக்னத்திற்கு வரக்கூடாது என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் புதன் தசை 17 வருடங்களுக்கு குழந்தைக்கு நடக்க இருக்கிறது. இந்த புதன் தசை குழந்தைக்கு நோய்த் தொல்லைகளைக் கொடுக்குமோ என்று தூக்கமின்றித் தவிக்கிறேன். திரும்பத் திரும்ப ஜாதகத்தைப் பார்த்தால் எனக்கு எதுவும் புரியவில்லை. கவலையும், பயமும்தான் அதிகமாகிறது. ஒரு தாயின் மன கஷ்டத்தையும் பயத்தையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பி என் குழந்தையின் ஜாதகத்தை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்.

(மேஷ லக்னம், மீன ராசி, 1ல் கேது, 3ல் குரு, 6ல் செவ், 7ல் சனி, ராகு, 9ல் சூரி, புத, சுக், 12ல் சந், 7-1- 2014 மதியம் 1-55 மயிலாடுதுறை)

அரைகுறை வைத்தியரும், ஜோதிடரும் என்றுமே ஆபத்தானவர்கள். மாலைமலரில் ஜோதிட விளக்கங்களை எளிமையாக புரியும்படி எழுத ஆரம்பித்து விட்டதால் படிக்கும் அனைவருமே கிட்டத்தட்ட ஜோதிடர் ஆகிவிட்டீர்கள். ஒரு ஜோதிடர் எவ்வாறு ஜாதகத்தை கணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. பதில்களை விளக்கமாக எழுதப் போய், ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும் இதைப் படிக்க ஆரம்பித்து, ஜோதிடர் அல்லாதவர்களும் ஓரளவு கற்றுக்கொண்டு எனக்கு இந்த சந்தேகம் அந்த சந்தேகம் என்று ஏராளமான கடிதங்கள் அனுப்புகிறீர்கள்.

எந்த ஒரு ஜாதகத்திலும் முதலில் லக்னம், லக்னாதிபதி கவனிக்கப்பட வேண்டும். உன் குழந்தையின் ஜாதகத்தில் மேலோட்டமாக சனியின் பார்வையால் லக்னம் வலுவிழந்தது போலத் தெரிந்தாலும், லக்னத்தில் கேதுதான் இருக்கிறார். ராகு இல்லை. அடுத்து பாபக்  கிரகங்கள் லக்னாதிபதியாக வந்தால் ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவது நன்மையைத் தரும் என்பதன்படி செவ்வாய் ஆறில் மறைந்து இருந்தாலும், வளர்பிறை சந்திரன் பார்வையில் இருப்பதும், தனது எட்டாம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதும் வெகு சிறப்பு ஆகவே இங்கே லக்னமும் லக்னாதிபதியும் வலிமையாகத்தான் இருக்கிறார்கள்.

மேஷ லக்னத்திற்கு குருவின் பார்வையில் இருக்கும் அனைத்துக் கிரகங்களும் நன்மைகளை மட்டுமே செய்யும். அதன்படி மகளின் ஜாதகத்தில் சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 5 கிரகங்கள் குருவின் பார்வையில் இருப்பது மிக நல்லது. அடுத்தடுத்து குருவின் பார்வையில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்க இருப்பதும் உன் மகள் யோகக்காரி என்பதைக் காட்டுகிறது.

மேஷ லக்னத்திற்கு புதன் 6-க்குடையவர் என்றாலும், இங்கே குருவின் பார்வையில் அவர் பரிவர்த்தனையாகி, மூன்றில் அமரும் நிலை பெறுவதால், ஆறாமிடத்தின் தீய பலன்களை அவரது தசையில் செய்யமாட்டார். பஞ்சபூத கிரகங்களில் புதனுக்கு மட்டும் அஸ்தங்க தோஷம் இல்லை. எந்த நிலையிலும் புதனது அஸ்தங்க தோஷம் பார்க்கப்படவும் தேவையில்லை.

அதேபோல இங்கே புதனும், சுக்கிரனும் வர்கோத்தமம் ஆகியிருப்பது ஒரு நல்ல நிலை. சுக்கிரன் அஸ்தங்கம் பெற்று தனது ஒளியை சூரியனிடம் இழந்தாலும், குருவின் பார்வையாலும், வர்க்கோத்தமம் அடைந்தாலும் இழந்த ஒளியை திரும்ப பெறுகிறார். எனவே இங்கே சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை.

சூரியன் 9ல் இருப்பதால் காரகோ பாவ நாஸ்தி ஏற்படுமா என்று கேட்கிறாய். காரகோ பாவ நாஸ்தி அமைப்பு முழுமையாக செயல்படுவதற்கு அந்தக் கிரகம் தனித்து இருக்க வேண்டும். ஒன்பதில் சூரியன் தனித்திருந்தால் காரகோ பாவ நாஸ்தி அமைப்பு கண்டிப்பாக உண்டு. எந்த ஒரு செயலும் அந்தக் கிரகத்தின் தசையில்தான் நடக்கும் என்பதன்படி இங்கே உனது குழந்தையின் வயதான காலத்தில் சூரியதசை வர இருப்பதால் குறைகள் இல்லை. மேலும் சூரியனுக்கு குரு பார்வை இருப்பதாலும் தந்தைக்கு குறைகள் இல்லை.

நடப்பு தசானாதன் புதன் யோகாதிபதி சூரியனின் சாரம் வாங்கி, பரிவர்த்தனை நிலையில் மூன்றாமிடத்தை மட்டுமே தொடர்பு கொண்டு, குருவின் பார்வை பெறுவதால் புதன்தசை உனது குழந்தைக்கு நோய் எதையும் தராது. அதே நேரத்தில் தனது காரகத்துவமான மிகச் சிறந்த கல்வி அறிவைத் தரும். எதிர்காலத்தில் குழந்தைக்கு அடுத்தடுத்து குருவின் பார்வையைப் பெறும் தசைகள் மட்டுமே நடக்க இருப்பதால், குழந்தை சிறந்த வாழ்க்கை வாழ்வாள். வாழ்த்துக்கள்.

(30.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

2 thoughts on “குழந்தைக்கு கெடுதல் நடக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *