adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
நவாம்சம் என்பது என்ன? -D-056

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

Warm Greetings to Guruji.

Your initiative and efforts to make vague and abstract concepts of Astrology much simpler by bringing a new dimension to it in the name of "Subathuvam and Sutchuma valu" (though they were deciphered by our Great Astrologers centuries ago in an inexplicit manner) is great. No doubt, it is a laudable effort you have undertaken, which rightly brings you many laurals from all corners and everyone agrees that, you deserve them.

Now, I have a query with respect to this video. Sir, I am sure that, no one can possibly have a second opinion about the knowledge of Dr. B.V. Raman and his contribution to Astrological science. We all know that, he has lived all his life serving the Astrological society and in his many articles and books (for eg. How to judge a horoscope), he has discussed in detail, the aspects of various planets in Navamsa for interpretation, justification and prediction.

To the followers of Dr. B.V. Raman, your statement that, "planets do not have aspects in Navamsa chart" comes as a huge shock. If this be true, most of his interpretations and predictions would become invalid and would go haywire. Your statement is contrary to and counters Dr. B.V. Raman's statements upfront.

Sir, do you not think that, your statement of "No aspects for planets in Navamsa", need to be backed by a very strong and a time-tested evidence/proof?. Kindly note that, this query is only for fact finding and not for any criticism. Your reply would help serve the readers and the followers of Dr. B.V. Raman to understand the actual picture about all these. I know that, this query has become too long, but the point is simple.

Awaiting your reply, Warm regards,.

Dr. K.B. Nagashanmugam, from Damascus, Syria

மதிப்பிற்குரிய திரு. டாக்டர். நாகஷண்முகம்,

ஆங்கில அறிவு பெரிதாக இல்லாத எளிய ஜோதிடனாகிய நான், "நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை இல்லை எனும் எனது எழுத்துக்கள் மற்றும் வீடியோக்கள் டாக்டர் பி. வி. ராமன் அவர்களின் அனைத்துக் கணிப்புகளையும், கருத்துக்களையும் பொய்யாக்கும்" என்பதாக உங்களின் இந்தக் கமெண்டைப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆங்கிலம் தெரியாத காரணத்தினால், நான் டாக்டர். பி. வி. ராமன் அவர்களின் நூல்களைப் படித்ததில்லை. நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது என்று சொல்பவர்கள் ஜோதிடத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். அப்படி பார்வை இருக்கிறது என்று திரு. டாக்டர் பி. வி. ராமன் எழுதியிருந்தால் அது நிச்சயம் தவறு.

உண்மையில் ராசிச்சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம். நவாம்சம் என்பது அதனுடைய நிழல்தான். ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப, அசுப வர்க்கங்களைக் கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்லப்பட்டது. அதில் கிரகங்களுக்கு பார்வை இல்லை. மறைவு ஸ்தானங்களும் இல்லை.ஆனால் சேர்க்கை வர்க்கோத்தமம் போன்றவைகள் உண்டு.

ராசிச் சக்கரம் எனும் உண்மை நிலையில் மட்டுமே கிரகங்களுக்குப் பார்வை உண்டு. நவாம்சம் என்பது ராசிச் சக்கரத்தை ஒன்பதின் மடங்கில் பிரித்து எந்தக் கிரகம் எங்கே, எந்த துல்லிய நிலையில் சுபத்துவ, பாபத்துவ அமைப்பில் இருக்கிறது என்று பார்க்க மட்டுமே.

நவாம்சத்திலும் பார்வை இருக்கிறது என்பதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து திரேக்காணம், சஷ்டியாம்சம், தசாம்சம், ஷோடசாம்சத்திலும் பார்வை உண்டு என்று போய்க் கொண்டே இருப்போமா? நிஜத்திற்கு இருக்கும் பார்வை நிழலுக்கும் உண்டு என்பது அறிவீனம். கொஞ்சம் ஆழமாக யோசித்தால் உண்மை புரியும்.

எனது கருத்துக்கு ஆதாரம் கேட்டிருக்கிறீர்கள். ஜோதிடத்திற்கு ஜோதிடமே ஆதாரம் திரு. நாகஷண்முகம். விரைவில் இதுபற்றியும் விளக்கமாக எழுதுகிறேன்.

ஜோதிடம் மட்டுமே என்றும் நிலையானது. நான் உட்பட எந்த ஒரு ஜோதிடரும் நிரந்தரமானவர்கள் இல்லை. எனது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்பொழுது எது உண்மை என வேத ஜோதிடத்தில் ஆர்வமுள்ள மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள்.

உண்மை ஜோதிடம் கை வர வாழ்த்துகிறேன் டாக்டர்....

அன்புடன்,ஆதித்ய குருஜி.

மேலே உள்ளது சிரியா தலைநகர், டமாஸ்கஸில் இருந்து திரு. டாக்டர் நாகசண்முகம் என்பவரால் சில வாரங்களுக்கு முன் சமூக வலைத்தளமான யூ டியூப்பில்  எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எனது பதில் ஆகும்.

நவாம்சத்தின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி ஜோதிடர்களிடையே பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ராசியில் கிரகங்களுக்கு உள்ள பார்வை, நவாம்சத்திலும் உள்ளதா? நவாம்சக் கட்டத்தில் உச்சம், நீசம், எனும் ஸ்தான பலம், ஆறு, எட்டு போன்ற மறைவு ஸ்தானங்கள் உள்ளதா? நவாம்ச லக்னம் என்பது என்ன என்பதில் கருத்துபேதங்கள், குழப்பங்கள் உள்ளன.

நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்கள் என்பது கிரகங்கள் வான்வெளியில் இருக்கும் துல்லிய நிலையை கணிப்பதற்காக சொல்லப்பட்டவை. பூமியைச் சுற்றி 360 டிகிரி அளவில் வியாபித்திருக்கும் இந்த பரந்த வான்வெளியில் ஒரு ராசி என்பது முப்பது டிகிரியை தன்னகத்தே கொண்ட ஒரு பகுதியாகும். இந்த முப்பது டிகிரிக்குள்ளும் கிரகங்கள் எங்கே, எந்த இடத்தில், எந்த நிலையில் இருக்கின்றன என்பதை மிகச் சரியாகக் கணக்கிட ஞானிகள் வர்க்கச் சக்கரங்களை பகுத்தறிந்தார்கள்.

30 டிகிரி கொண்ட ஒரு ராசி வீட்டினை, மேம்பட்ட கணித முறைப்படி நீங்கள் 300 பங்காகக் கூடப் பிரிக்க முடியும். அவ்வாறு பிரித்துக் கொண்டே உள்ளே செல்லும்போது இந்த பரந்த வான்வெளியில், ஜாதகர் பிறக்கும்போது ஒரு கிரகம் எந்த இடத்தில், என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.

ஒரு ராசியை தலா 15 டிகிரி அளவாகக் கொண்டு, இரண்டு சமமான பங்குகளாக்கி ஒரு கிரகத்தின் நிலை அறிவது ஹோரா சக்கரம் எனப்பட்டது. தலா பத்து டிகிரி அளவாக மூன்று பகுதிகளாகப் பிரித்து கிரகநிலை அறிவது திரேக்காணம் எனப்பட்டது. 7 பங்கு சம அளவாக பிரிப்பது சப்தாம்சம் எனவும், 10 பங்காக பிரித்து பலன் அறிவது தசாம்சம் எனவும் சொல்லப்பட்டது.

ஒரு ராசியை இவ்வாறு பிரிப்பது வர்க்கச் சக்கரங்கள் எனப்பட்டன. அனைத்து வர்க்கச் சக்கரங்களிலும் ராசியை ஒன்பது பங்காகப் பிரிக்கும் நவாம்சம் மட்டும் முதன்மையாக கருதப்படுவதற்கு காரணம், ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை நடத்தும் கிரகங்கள், அதற்கு அடிப்படை மூல காரணமான எந்த நட்சத்திரத்தின், எந்தப் பகுதியில் இருந்து ஒளியைப் பெறுகிறது என்பதை நவாம்சத்தில் சுலபமாக அறிய முடியும் என்பதே ஆகும்.

அனைத்து வர்க்க சக்கரங்களையும் விட ராசிக்கு அருகில் பதியப்படும் வர்க்கச் சக்கரமாக நவாம்சம் மட்டுமே உள்ளதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

சம்ஸ்க்ருதத்தில் நவம் எனப்படும், எண் ஒன்பது என்பது கணிதத்திலும், வேதஜோதிடத்திலும் மிக மிக முக்கியமான ஒரு எண்ணாகும். ஒன்பதுடன், ஒன்பதைச் சேர்க்க அது ஒன்பதாகவே இருக்கும் என்பது ஒன்பதாம் எண்ணிற்கு மட்டுமே உள்ள சிறப்பு. மற்ற எந்த எண்ணிற்கும் இந்தச் சிறப்பு இல்லை. இதனை “ஒன்றுடன் ஒன்றை இணைக்க அந்த மூல ஒன்றாகவே அது இருக்கிறது” என்று கூடச் சொல்லலாம்.

மூலத்தினை முற்றிலும் மாற்றாமல், வேறு ஒரு வடிவமாக்கி அப்படியே தரும் ஒரு எண்ணாக ஒன்பது இருப்பதால்தான், இந்த ஒன்பதுக்குள் ஏகப்பட்ட மர்மங்கள், ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்பதன் அடிப்படையில் எண்களில் ஒன்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

நவாம்சத்தின் முக்கியத்துவம் என்னவென்று பார்க்கப்போனால், ராசிக்கட்டம் என்பது ஒன்பது கிரகங்களும் அமர்ந்திருக்கும் 27 நட்சத்திரங்களின் தலா 4 பாதங்கள் உள்ளிட்ட மொத்தம் 108 பாதங்களை அளவாக கொண்டது. அதாவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குள் அடங்கி இருக்கும் பாதங்களை மொத்தமாக கணக்கிட்டால் அவை 108 ஆக வரும்.

ஒரு நட்சத்திரத்தை நான்கு பிரிவுகளாக்கி, அவற்றைப் பாதங்கள் என்று சொல்லி ஒரு நட்சத்திரத்தின் அளவையும், இருப்பையும் சற்றுச் சுருக்கி இன்னும் துல்லியமாக்கப் பட்டதே இந்த பாதங்கள் என்பவை.

இந்த 108 பாதங்கள் எனப்படும் ஒரு விண்மீனின் சுருக்கப்பட்ட பகுதிகள், நவாம்ச சக்கரத்தில், மேஷத்தின் ஆரம்ப முனையில் அஸ்வினியின் முதல் பாதமாக ஆரம்பித்து, இரண்டாவது பாதம் ரிஷபத்திலும், மூன்றாவது மிதுனம், நான்காவது கடகத்தில் முடிந்து, அடுத்த பரணி நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்மத்தில் நீட்டித்து, ஒன்பது சுற்றுக்களாக வளையங்கள் போன்று ஒன்பது முறை சுற்றி, இறுதி நட்சத்திரமான ரேவதியின் கடைசிப் பாதம் நிறைவு வீடான மீனத்தின் இறுதிப் பகுதியில் முடியும்.

நவாம்ச சக்கரத்தில் ஒன்பது முறை சுற்றி வரும் ஒன்பது முழுச் சுற்றுகள் கொண்ட 108 பாதங்களில், ஒரு கிரகம் எந்த நிலையில், எங்கே அமர்ந்திருக்கிறது என்பதை வைத்தே அந்த ஜாதகருக்கு நன்மை, தீமைகள் நடக்கின்றன. நவாம்சத்தை வைத்து ஒரு கிரகம் எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது என்பதை துல்லியமாக சொல்லலாம். அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு நன்மையை தருமா, தீமையைச் செய்யுமா என்பதை வைத்து பலனையும் சொல்லி விட முடியும் என்பதே நவாம்சத்தின் சிறப்பு. இதற்காக மட்டும்தான் ராசியின் அருகில் நவாம்சமும் குறிக்கப்படுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஜோதிட மேதையான வைத்தியநாத தீட்சிதர் அவர்கள் தனது “ஜாதக பாரிஜாதம்” நூலில் சொன்ன புஷ்கர நவாம்சம் என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இதனைத் தவிர்த்து நவாம்சத்தில் வேறு முக்கிய சிறப்புக்கள் கிடையாது.

வர்க்கச் சக்கரங்கள் என்பதே ஒரு கிரகத்தின் சுப, அசுப நிலைகளை கணக்கிடுவதற்காக மட்டும் சொல்லப்பட்டவைதான். ராசியில் ஏற்படும் பார்வை போன்ற நிலை வர்க்கச் சக்கரங்களிலும் நீடிக்கும் என்பது பொருத்தமற்றது.

ராசிக் கட்டம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம். கிரகங்களின் பார்வை, இருப்பு, உச்சம், நீசம், மறைவு ஸ்தானங்கள் அனைத்தையும் ராசியில் உள்ள லக்னப்படியே கணக்கிட வேண்டும். .அதேபோல நவாம்சத்திலும் லக்னத்தைக் கணக்கிட்டு, நவாம்ச லக்கினத்தில் இருந்து ஆறில் அந்தக் கிரகம் மறைந்திருக்கிறது என்று சொல்வதும் தவறு.

நவாம்சத்தில் மறைவு ஸ்தானங்கள் இல்லை. ஒரு கிரகத்தின் பார்வை என்பதையும் ராசிக்கட்டத்தில் மட்டுமே கொள்ள வேண்டும். ராசிக்கட்டத்திலும் கிரக பார்வைகளுக்கு சில நிலைகள் இருக்கின்றன.

ஒருமுறை ஒரு ஜோதிடர் 6, 8, 12ல் மறைந்த கிரகங்களுக்கு பார்வை கிடையாது என்று எழுதியிருந்தார். நான் அவரிடம் ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் இருந்த கிரகங்களின் கோட்சார நிலை. லக்னம் என்பது குழந்தை பிறக்கும் போது கிழக்கு அடிவானில் எந்த ராசி உதயமாகிறதோ அதை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

லக்னத்தை வைத்துத்தான் ஜாதகத்தில் கிரகங்களின் மறைவு ஸ்தானங்களைச் சொல்கிறோம். நிஜ வானில் ஆதிபத்தியங்கள் எனப்படும் ஸ்தானங்கள் இல்லை. லக்னம் என்பது உருவான பிறகே, கேந்திர, கோணங்கள், மறைவு ஸ்தானங்கள் வருகின்றன. அதற்கு முன் அங்கே கிரகங்களின் நிஜ நிலைகள் மட்டும்தான்.

இன்றைய கோட்சார நிலையில் குரு விருச்சிகத்தில் இருக்கிறார். அவர் மீனம், ரிஷபம், கடகம் ஆகிய மூன்று ராசிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது மாறவே மாறாத நிரந்தரமான ஒரு ஜோதிட உண்மை. எந்த ஒரு நிலையிலும் இன்று விருச்சிகத்தில் இருக்கும் குரு வானத்தில் மீனம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகளை பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி இருக்கும்போது இன்று மேஷ, மிதுன, தனுசு லக்னத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஜாதகத்தில் அவர் 6, 8, 12ல் மறைவதால் கண்களை மூடிக் கொள்வாரா என்று கேட்டேன். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

தன்னைப் பற்றிய மிகை மதிப்பீடு கொண்ட ஜோதிடர்களாலும், அல்லது தனக்கு முன் இருந்தவர்கள் சொன்னதை ஆராயாமல் ஏற்றுக் கொண்டு, இதுபோன்ற அர்த்தமும், ஆழமுமற்ற விளக்கங்களை சொல்பவர்களாலும்தான் ஜோதிடம் மதிப்பிழந்து போகிறது.

நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது என்பதும் இது போன்ற ஒரு வகைதான். நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது எனக் கொண்டால் மற்ற வர்க்கச் சக்கரங்கள் அனைத்திலும் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் ராசியில் கடகத்தில் இருக்கும் குரு, விருச்சிக, மகர, மீனத்தைப் பார்க்கிறார் என்றால், அம்சத்தில் அவர் மகரத்தில் இருக்கும்போது ரிஷப, கடக, கன்னியைப் பார்க்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியே திரேக்காணம், தசாம்சம், சதுர்த்தாம்சம் போன்ற அத்தனை வர்க்கச் சக்கரங்களிலும் குருவின் பார்வையைக் கணக்கிட்டு ஒட்டு மொத்தமாக குரு 12 ராசிகளையும் பார்க்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

படிப்பதற்கு இது எத்தனை அபத்தமாக இருக்கிறதோ, அது போன்றதுதான் நவாம்சத்தில் ஒரு கிரகத்திற்குப் பார்வை இருக்கிறது என்பதும்.

சரி... நவாம்சத்தில் எது முக்கியம்?

அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

(26.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

4 thoughts on “நவாம்சம் என்பது என்ன? -D-056

 1. பெருமதிப்பிற்குரிய ஜோதிட பேரொளி.. எனது மானசீக குரு… அவர்களுக்கு.வணக்கம்…

  நவாம்சம் குறித்து தங்களின் விளக்கம்… அற்புதம்… அருமை…
  நவாம்சம் குறித்து பலரின் தவறான புரிதலை தவிடு பொடியாக்கி விட்டீர்கள் ஐயா…

  தாங்கள் ஜோதிடப்பேரொளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஐயா…

  அருமை…அருமை…
  நன்றி ஐயா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *