adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அமாவாசையில் பிறந்தால் தோஷமா?

சந்திரா, கோவை.


கேள்வி:

இந்த ஜாதகன் அமாவாசையில் பிறந்திருப்பதால் தோஷம் எதுவும் உள்ளதா? இவன் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ஐந்து கிரகங்கள் உள்ளன. இதனால் ஏதாவது தீமையா? இங்குள்ள ஜோதிடர்கள் திருமணத்திற்கு முன் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கோவிலில் வைத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றனர். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எப்போது திருமணம் செய்யலாம்?


பதில்:

(கடக லக்னம், கும்பராசி, 4ல் குரு, 5ல் ராகு, 8ல் சூரி, புத, செவ், சனி, சந், 9ல் சுக், 11-ல் கேது, 11-3-1994 மாலை 4-26, திண்டுக்கல்)


இதுபோன்ற குழப்பங்களுக்குத்தான் ஜோதிடத்தை ஒளியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று என்னுடைய சுபத்துவ, சூட்சும வலுக் கோட்பாட்டில் சொல்லி வருகிறேன். அமாவாசை என்பது பூமியில் வாழும் உயிர்களுக்கு ஒளி இல்லாத ஒரு நிலை. கிரகங்களின் சுப ஒளி நிலையைப் புரிந்து கொள்வதற்காகதான் ஜோதிடத்தில் ஷட்பலம் என்ற அமைப்பு சொல்லப்பட்டது. அதில் ஒன்றான கால பலம் என்பது இப்போது நீங்கள் கேட்கும் அமாவாசையில் சந்திரன் ஒளி இழப்பது சம்பந்தப்பட்டது.


சந்திரன் மனதிற்கு காரணமானவன் என்பதால் அமாவாசையன்று இரவில் பிறப்பவர்களுக்கு, வேறுவகைகளில் சந்திரன் ஒளி பெறாவிடில் தைரியம் குறைந்திருக்கும், தாழ்வு மனப்பான்மை இருக்கும், மனக்கட்டுப்பாடு இராது என்று சொல்லப்பட்டது. இந்த நிலைக்காகத்தான் அமாவாசையன்று குழந்தைகள் பிறப்பதை பெரியவர்களும், பெற்றோர்களும் விரும்புவதில்லை.


ஜோதிடத்தில் ஒவ்வொரு விதிக்கும் ஆயிரம் விதிவிலக்குகள் இருக்கின்றன. நான் சொல்லும் சூட்சும வலுக் கோட்பாட்டின்படி, ஜோதிடத்தை ஒளியாக புரிந்து கொள்ளும் பொழுது, உங்களால் ஒரு ஜாதகத்திற்கு என்ன நடக்கும், அவரது ஜாதகம் யோகமானதா அல்லது அவயோகமானதா என்பதை மிகத் துல்லியமாக சொல்ல முடியும்.


அனுப்பியிருக்கும் ஜாதகத்தை மேம்போக்காக பார்க்கையில், லக்னத்திற்கு எட்டில் சூரியன், புதன், சந்திரன், செவ்வாய், சனி என ஐந்து கிரகங்கள் ஒன்று கூடி மறைந்திருக்கின்றன. சுபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டின்படி நீங்கள் மறைவு ஸ்தானங்களை விட சம்பந்தப்பட்ட கிரகங்கள் சுபத்துவமோ, சூட்சுமவலுவோ அடைந்திருக்கிறதா என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். மறைவு ஸ்தானங்கள் இரண்டாம் பட்சம்தான்.


மேற்கண்ட அமைப்பில் சந்திரன் பூரண அமாவாசையை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவரே லக்னாதிபதியாகவும் இருப்பதால் அவரது வலு இங்கே மிகத் துல்லியமாக கணிக்கப்பட வேண்டும். அடுத்து பொருள் தரும் தனாதிபதியான சூரியன் மேலோட்டமாக தனக்கு மிகவும் ஆகாத சனியுடன் இணைந்திருப்பதைப் போலத் தோன்றினாலும் இருவருக்குமிடையில் 17 டிகிரி வித்தியாசம் இருக்கிறது. எனவே தனாதிபதி சூரியன் முழுக்க இருள் அடைந்து விடவில்லை.


அடுத்து ஜீவனாதிபதி செவ்வாய் தேய்பிறைச் சந்திரனுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்து ஓரளவு சுபத்துவமாகி இருக்கிறார். ஆனால் சனியுடன் 2 டிகிரிக்குள் இணைந்து முழுக்க பாபத்துவம் பெற்றிருக்கிறார். புத்திசாலித்தனத்தை தரும் புதன் இவர்கள் அனைவருடனும் மிக நெருங்காமல் தனது சுயத்தன்மையை வெளிக்காட்டக் கூடிய அளவில் எல்லோரிடமிருந்தும் விலகியே இருக்கிறார். குறிப்பாக அவருக்கு ஆகவே ஆகாத சந்திரனிடமிருந்து 17 டிகிரி தூரத்தில் உள்ளார்.


அனைத்தையும் விட மேலாக துலாத்தில், ஏறக்குறைய நடுப்பகுதி 20 டிகிரியில் இருக்கும் குருவின் பூரண பார்வை லக்னாதிபதி சந்திரனுக்கு மூன்று டிகிரி இடைவெளியில் அமைகிறது. எனவே இந்த இடத்தில் சந்திரனுக்கு அமாவாசை யோகம் என்பது இல்லை.
எப்போது சந்திரன் ஒளிக் கிரகங்களான குரு, சுக்ர பார்வை அல்லது இணைவில் இருக்கிறாரோ அப்போது அங்கே அவருக்கு சுபத்துவம் உண்டாகி, தன் இழந்த ஒளியை வேறுவகையில் திரும்பப் பெற்று தன்னுடைய முழு பலத்தையும் அடைவார் என்பதால் குரு, சுக்கிர தொடர்பில் இருக்கும் சந்திரனுக்கு அமாவாசை தோஷம் கிடையாது. அதுவும் இந்த ஜாதகத்தில் சந்திரன் 17 டிகிரியிலும், குரு 20 டிகிரியிலும் இருந்து குருவின் பார்வை முழுமையாக சந்திரனுக்கு உள்ளதும், இருள் சனி 16 டிகிரி சந்திரனை விட்டு விலகி இருப்பதும் மிகச்சிறந்த அமைப்பு. எனவே இந்த ஜாதகத்திற்கு அமாவாசை தோஷம் இல்லை


எந்த ஒரு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் தனித்து வலிமையாக இருக்கிறார்களோ அது யோகமான ஜாதகமாக இருக்கும். இங்கே குருவும், சுக்கிரனும் நான்கு, ஒன்பதாம் இடங்களில் அமர்ந்து, இருவரும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். இது இருவரும் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.


கடக லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் சனி தசை தற்போது இவருக்கு நடந்து கொண்டிருக்கிறது. 8, 12ஆம் இடங்கள் சுபத்துவம் பெற்று இருப்பதால் இந்த ஜாதகர் தூர இடங்களில் பிழைப்பார். வாழ்நாள் முழுக்க தூர இடங்களில் இருக்கும் ஜாதகம் இவருடையது. திருமணத்திற்கு பிறகு இவரது வாழ்க்கை பிறந்த இடத்தில் இருக்காது.


இவரது 27 வயதில் 2021 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும். கோவிலில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது போன்ற விதிகள் எல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. இவைகள் எல்லாம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக ஜோதிடர்கள் சொல்வதுதான். அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். பரிகாரம் எதுவும் தேவையில்லை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *