ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஆர். நாகராசன், குனியமுத்தூர்.
கேள்வி.
சிறுவயதில் இருந்தே கடவுள் மறுப்புக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடவுள், ஜோதிடம் போன்றவைகளில் நம்பிக்கையின்றி இருந்தேன். சமீபகாலமாக மாலைமலரில் வரும் தங்களின் ராசிபலன்கள் தொண்ணூறு சதவீதம் எனக்குப் பொருந்துவது ஜோதிடத்தின் மீது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதிலேயே என் தந்தை மூன்று சகோதரிகளின் எதிர்காலத்தை என்னிடம் ஒப்படைத்து விட்டு இறந்து விட்டார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் முடிந்தவரை நான் செய்தேன். திருமணத்திற்குப் பிறகு எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காமலும், மாமியார் மருமகள் பிரச்சினையை தீர்க்க முடியாமலும், குடிப் பழக்கத்திற்கு ஆளாகி, தாய், தங்கையரால் ஏமாற்றப்பட்டு, மனைவியிடமும் எவ்வித புரிதலும் இல்லாமல் வாழ்ந்ததில் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. குழந்தைகளுக்காக கடந்த 3 வருடங்களுக்கு முன் எந்தவிதமான மருந்தும் இன்றி சுயகட்டுப்பாட்டுடன் மதுவில் இருந்து வெளியே வந்து விட்டேன். தற்சமயம் ஊரில் முதலாளி என்ற கவுரவம் மட்டுமே இருக்கிறது. டீ குடிக்க காசு இல்லாத நிலையில் நான் இருக்கிறேன். ஆனால் என்னிடத்தில் நிறைய பணம் இருப்பதாக எல்லோரும் கருதுவதால் கேட்கும் இடத்தில் உதவியும் கிடைப்பதில்லை. தற்கொலை எண்ணம் தலைவிரித்தாடுகிறது. ஊரில் உள்ள எல்லோருக்கும் பிரச்சினையிலிருந்து வெளியே வர ஆலோசனை கூறும் நான் அந்தத் தவறைச் செய்தால் என் வாரிசுகள் அதைத் தொடர்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் தவிர்த்து வருகிறேன். எனது எதிர்காலம் எப்படி உள்ளது? பைபாஸ் சர்ஜரி செய்துள்ள நான் இன்னும் ஐந்து வருடமாவது உயிரோடு இருந்து என் வாரிசுகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவேனா?
பதில்.
(கடக லக்னம், தனுசு ராசி, 1ல் குரு, 4ல் செவ், கேது, 6-ல் சந், 7ல் சூரி, 8ல் புத, சுக், 9ல் சனி, 10ல் ராகு, 6-2-1967 மாலை 4- 50 கோவை)
லக்னத்தில் குரு உச்சமாகி, லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று, சதுர் கேந்திர யோகம் என சிறப்பாகச் சொல்லப்படும், சரராசி லக்னமாகி, 1, 4, 7, 10 என நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் அமர்ந்த யோக ஜாதகம் உங்களுடையது. அதே நேரத்தில் கடந்த 18 வருடங்களாக பாபத்துவம் பெற்ற, மேஷராகுவின் தசை நடந்த காரணத்தினால் எவ்வித நன்மைகளையும் நீங்கள் பெற முடியவில்லை. துன்பம் தரும் ராகு தசை, கடைசி மூன்று வருடங்கள் மேன்மை தரும் என்று சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் கட்டுரைகளில் நான் சொல்லியுள்ளபடி கடந்த மூன்று வருடங்களாக குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறீர்கள்.
அடுத்து லக்னத்தில் அமர்ந்து பரிவர்த்தனையும் பெற்றுள்ள குருவின் தசை நடக்க இருப்பதால் வாழ்வின் பிற்பகுதியில் மிகுந்த யோகம் பெறுவீர்கள். பாக்கியாதிபதி குருவின் தசையில் காசு இருக்கும் முதலாளி என்ற நிலையை நீங்கள் அடைய முடியும். சூரியனும், குருவும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதால் அமையும் சிவராஜ யோகம் எனப்படும் தலைமை தாங்க வைக்கும் அமைப்பு உங்களுக்கு குரு தசையில் கை கொடுக்கும்.
வரும் தை மாதம் முதல் தெரிந்த தொழில் ஒன்றை தொடங்குங்கள். தெரியாத புதிய தொழிலை செய்ய வேண்டாம். அந்தத் தொழில் மூலம் மூன்று வருடங்களில் நல்ல நிலைக்கு வருவீர்கள். ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடத்தில் இரண்டு சுப கிரகங்கள் அமர்ந்து, எட்டாம் அதிபதியை உச்ச குரு பார்ப்பதாலும், லக்ன நாதன் பரிவர்த்தனை அமைப்பில் லக்னத்தில் அமர்வதாலும், லக்னத்தில் சுப கிரகம் உள்ளதாலும் 80 வயது தாண்டி நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
ஞானப்பிரகாசம், குமரி.
கேள்வி.
எனக்கு தற்சமயம் என்ன தசை நடக்கிறது? மாரக தசை எப்போது வரும்?
பதில் .
மீன லக்னம், மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு கடந்த ஒரு ஆண்டு காலமாக சுக்கிர தசை நடந்து வருகிறது. அஷ்டமாதிபதி சுக்கிரனின் இந்த தசையே உங்களுக்கு இறுதி மாரக தசை. ஆனால் மரணம் வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கின்றன. ஆகவே உங்களுக்குரிய கடமைகளை நீங்கள் செய்ய முடியும். அந்திம காலம் உங்களுக்கு நிம்மதியாகவே இருக்கும். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.
லதா அசோக்குமார். சென்னை.
கேள்வி.
என் கணவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள் மற்றும் ஒரு அண்ணன். என் மாமியார் அவர் பெயரில் இருந்த இரண்டு வீடுகளை இரண்டு மகன்களுக்கும் உயில் எழுதி வைத்திருந்தார். ஆனால் அவர் இறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் சகோதரர்களுக்கு தெரியாமல் சகோதரிகள் தன் தாயாரிடம் வேறு ஒரு உயில் எழுதி பதிவு செய்துள்ளனர். அதன்படி என் கணவருக்கு வரவேண்டிய வீடு மொத்தமும் சகோதரிகள் பெயரிலும், மற்ற ஒரு வீட்டை சகோதரர்கள் சரியாக பிரித்துக் கொள்ளுமாறும் எழுதி வாங்கி விட்டனர். மாமியார் மறைவுக்குப் பிறகுதான் இது எங்களுக்குத் தெரிய வந்தது. கடந்த 20 வருடங்களாக வழக்கு நடந்து, பிறகு சகோதரிகள் கேட்டபடியே வீட்டைக் கொடுத்து விடுவதாக சமரசமாகி, தற்போது வரும் 2019 ஜூன் 30-ஆம் தேதி சகோதரிகளிடம் வீட்டை ஒப்படைத்து விட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்று முடிவாகி இருக்கிறது. எங்களுக்கு கிடைத்திருக்கும் வேறு வீட்டை விற்று, சரி பாதியாக பங்கிட்டுக் கொள்வதாக கணவரின் சகோதரரும், நாங்களும் முடிவெடுத்திருக்கிறோம். ஆனால் இன்றுவரை எங்கள் பாகம் எங்களிடம் வந்து சேரவில்லை. எனக்கும் என் தாய் வீட்டின் வழியே எந்த உதவியும் இல்லை. எங்களது வீடு நல்ல விலைக்கு விற்பனையாகி அதில் எங்கள் பங்கு முழுமையாக கிடைக்குமா? அந்தப் பணத்தில் சொந்த வீடு அமைத்து குடியேற நினைக்கும் எங்கள் ஆசை நிறைவேறுமா?
பதில்.
(சிம்ம லக்னம், மிதுன ராசி, 1ல் குரு, 2ல் சூரி, புத, 4ல் சனி, ராகு, 7ல் செவ், 10ல் கேது, 11 ல் சந், 12ல் சுக், 28-9-1956 அதிகாலை 3-15 சென்னை)
நான்காம் பாவகம் பாபக் கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், தாய் சம்பந்தப்பட்ட எதுவும் நிலைக்காது என்பது விதி. அதன்படி கணவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் சனி, ராகு அமர்ந்து பாபத்துவம் ஆகியிருப்பதாலும், வீட்டைக் குறிக்கும் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் அமர்ந்து அவனது தசை ஆகஸ்டு மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாலும் இருக்கும் வீடு விரையமாகி விட்டது. அதேநேரத்தில் நான்காம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் தாயாரின் வீடு ஏதோ ஒன்று கிடைத்திருக்கிறது.
சிம்ம லக்னத்திற்கு சுக்கிரன் யோகங்களை தரமாட்டார். அதே நேரத்தில் சுக்கிரன் 12ம் இடத்தில் இருப்பதால் கெடுதல்களும் நடந்துவிடாது. இன்றைய நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்கு சுக்கிர மகாதசை ஆரம்பித்திருப்பதால் இத்தனை வருடங்களாக குடியிருந்த வீட்டை நீங்கள் காலி செய்தே ஆக வேண்டும். அதே நேரத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு நீங்கள் நல்ல வீட்டில் குடியிருப்பதற்கு தடை இருக்கிறது. சொந்த வீடு அமைவது கடினம்.
அடுத்த வருடம் கணவரின் மிதுன ராசிக்கு அஷ்டமச் சனி ஆரம்பிக்க இருப்பதால், வீடு விற்பதிலும், விற்ற பணத்தைப் பெறுவதும் மிகவும் கவனமாக இருக்கவும். குறிப்பாக உங்களுக்கான பாகத்தை விற்பதில் முதலில் அட்வான்ஸ் தருகிறேன். பிறகு ஆறு மாதம் கழித்து வீட்டை முடித்துக் கொள்கிறேன் என்பது போன்ற ஒப்பந்தத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முழுவதுமாக ஒரே பேமென்ட் ஆக தருபவரிடம் வீட்டை முடியுங்கள். வீட்டை விற்பதில் கண்டிப்பாக உங்களுக்கு சிக்கல்கள் இருக்கும். மிகுந்த கவனம் தேவை.
புதிய வீடு வாங்குவதிலும், வீட்டை விற்ற பணத்தை செலவு செய்வதிலும், நடக்கப் போகும் அஷ்டமச் சனியும் சுக்கிர தசை, சுய புக்தியும் குழப்பங்களைத் தரும் என்பதால் பண விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம். கூடப் பிறந்தவரையும் கூட. 2022 முதல் கணவரின் அனைத்து நிலைமைகளும் சீரடையும். வாழ்த்துக்கள்.
(23.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.