adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மற்றவர்களைப் போல எப்போது மாறுவேன்?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஒரு வாசகர், திருநெல்வேலி.

கேள்வி

நான்கு வருடங்களாக தங்களுடைய மாலைமலர் கட்டுரைகளையும், கேள்வி பதில்களையும், வீடியோக்களையும் தவறாமல் பார்க்கிறேன். ஓரளவு ஜோதிட விதி மற்றும் விதிவிலக்குகளை புரிய முடிகிறது. என்னுடைய குணத்தையும் என் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் பார்க்கும்போது, என்னுடைய லக்னம் மாறுவதாக தோன்றுகிறது. எனது பிறந்தநேரம் தவறு என்று நினைக்கிறேன். பெற்றோருக்கும் என் பிறந்த நேரம் சரியாக நினைவில்லை என்று சொல்கின்றனர். நீங்கள்தான் என் லக்னத்தை உறுதி செய்ய வேண்டும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை எளிதில் மறக்க முடியாது. தீ எரிவது போல வாழ்ந்தேன். சனி மற்றும் புதனுக்குரிய தனிப்பட்ட குணத்தைப்” பெற்றிருக்கிறேன். இந்தக் குணம் என்னை விட்டுச் செல்லுமா? ஐடி இன்ஜினியரிங் படித்து ஆறு வருடம் முடிந்தும் இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லை. படிப்பிற்கு சம்பந்தமில்லாத மிகவும் குறைந்த சம்பள வேலை மட்டுமே கிடைக்கிறது. வாங்கும் சம்பளம் வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே போதவில்லை. 2017ல் வேலைக்காக துபாய் சென்று ஏஜென்டால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்து இந்தியா திரும்பினேன். மீண்டும் வெளிநாடு செல்ல முடியுமா? எப்போது மற்றவர்களைப் போல சாதாரணமாக மாறுவேன்? திருமணம் மற்றும் சந்ததிகள் உண்டா? ஓரளவு ஜோதிட அறிவு இருந்தும் என்னால் என் ஜாதகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குருஜி அவர்கள்தான் எனக்கு பதில் தரவேண்டும்.

பதில்.

(விருச்சிக லக்னம், கும்ப ராசி, 2ல் ராகு, 3-ல் சனி, 4ல் சந், 8ல் சூரி, கேது, 9ல் புத, குரு, செவ், 10ல் சுக், 2-7-1991 மாலை சுமார் 5 மணி, நெல்லை)

கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் வாழ்க்கைச் சம்பவங்களின்படி நீங்கள் தனுசு லக்னத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. மாலை ஐந்து முப்பது மணிக்கு முன்பாக விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னம் மற்றும் லக்னாதிபதி செவ்வாய் அலிக் கிரகங்களான சனி மற்றும் புதனின் ஆதிக்கத்தில் இருப்பதால் நீங்கள் ஆணுக்கு ஆணை விரும்பும் ஒரே பால் விருப்பமுள்ளவராக, ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவராக இருப்பீர்கள்.

மாலை சுமார் 5 மணி 20 நிமிடத்திற்கு நீங்கள் பிறந்திருந்தால், லக்னம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருக்க, லக்னாதிபதி செவ்வாயும் புதனின் இன்னொரு நட்சத்திரமான ஆயில்யத்தில் அமர்ந்து, இன்னொரு அலிக்கிரகமான சனியின் பார்வையைப் பெற்றிருப்பார். ஆகவே நீங்கள் விருச்சிக லக்னம் என்பதே சரியாக இருக்கும்.

அதேநேரத்தில் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் வலுத்திருப்பதால், நீங்கள் ஒரு பூரண ஆண்மகனாகவும் இருப்பீர்கள். உங்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் முடியும். உங்கள் விருப்பம் மட்டும் இயற்கைக்கு மாறாக இருக்கும். அவ்வளவுதான். ஒரு ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி மீது அலிக் கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் பொழுது இது போன்ற நிலை ஜோதிடப்படி உருவாகிறது.

ஜாதகப்படி லக்னாதிபதி செவ்வாய் நீசமாகி, பாபத்துவம் பெற்றிருக்கும் அலிக் கிரகங்களான சனி, புதன் பார்வை, சேர்க்கையில் இருப்பதாலும், தற்போது சனி தசையில் புதன் புக்தி நடப்பதாலும் இதுபோன்ற எண்ணங்களால் தூண்டப்படுகிறீர்கள் மற்றும் அவை சம்பந்தமான நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறீர்கள். ஜாதக அமைப்பு வித்தியாசமாக இருப்பதாலும், அடுத்தடுத்து 24 வயது முதல் 60 வயதுவரை அலி கிரகங்களின் தசையே தொடர்ந்து நடக்க இருப்பதாலும், பெண் சுகம் கிடைக்க வைக்கும் கிரகமான சுக்கிரன், ராசிக்கு ஏழில், தேய்பிறைச் சந்திரனின் பார்வையில், பகை வீட்டில் அமர்ந்து, அம்சத்தில் பாபத்துவ சனியுடன் இணைந்ததாலும் நீங்கள் தொடர்ந்து ஓரினச் சேர்க்கையில் விருப்பம் உள்ளவராகவே இருப்பீர்கள்.

அதே நேரத்தில் உங்களது முப்பதாவது வயதில் சனி தசை, சுக்கிர புக்தியில் உங்களுக்கு திருமணம் நடக்கும். ஐந்துக்குடையவன் உச்சமாகி ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. லக்னாதிபதி வலுவிழந்து பின்னர் வலுப்பெறுவதால் 40 வயதிற்கு மேல் அனைத்திலும் நன்றாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. தற்போது உடனே நல்லது நடக்கும் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. உங்களுடைய எண்ணங்கள் மாறி சாதாரண மனிதராக நீங்கள் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதே நேரத்தில் உங்களுடைய இந்த மாறுபட்ட விருப்பம் வெளியே தெரிவதற்கும் வாய்ப்பில்லை. மீண்டும் வெளிநாடு செல்ல முடியும். லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். அவற்றை ஏற்கனவே மாலைமலரில் சொல்லியிருக்கிறேன். வாழ்த்துக்கள்.

(09.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *