adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஒளி இழந்த லக்னம்.-D-053

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சென்ற வாரம் தரப்பட்ட 57 வயதாகியும் இதுவரை திருமண வாய்ப்பை பெறாத ஒருவரின் ஜாதக விளக்கத்தினை இப்போது பார்க்கலாம்.

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் ஐந்தாமிடத்தில் நீசமாகி இருக்கிறார். ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த தூண் என்று சொல்லப்படும், ஐந்திற்குடைய செவ்வாய் உச்ச நிலையில் இருந்தாலும் சனி, இராகு-கேதுக்களுடன் இணைந்து, பாபரான புதனுடனும் சேர்ந்து முழுமையான பாபத்துவம் பெற்றிருக்கிறார்.

இன்னொரு முக்கிய கிரகமான ஒன்பதுக்குடைய குரு, எட்டில் மறைந்து ராசி சந்தி என்று சொல்லப்படும், அடுத்த ராசியில் நுழைந்து ஒரு டிகிரி கூட முழுமை அடையாத அமைப்பில் இருக்கிறார். ஒரு ஜாதகத்தின் தூண்கள் என்று சொல்லப்படக்கூடிய 1, 5, 9 ஆகிய மூவரும் இங்கே முழுக்க பலவீனமான நிலையில் இருக்கிறார்கள்.

பாவகாதிபதிகள் வலிமையிழந்த நிலையில், லக்னம் எனும் முதல் பாவகம் முழுமையாக செவ்வாய், சனி, ராகு-கேதுக்களின் ஆக்கிரமிப்பில் இருக்க, ஐந்தாம் பாவகம் தேய்பிறைச் சந்திரனின் பிடியில் இருக்கிறது. ஒன்பதாம் பாவகத்தை பாபத்துவ சனி தனது மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார். ஒரு ஜாதகத்தின் உயிர் அமைப்புகளான மூன்று பாவகங்களும் இங்கே எவ்வித சுப தொடர்புகளும் இன்றி வலிமை இழந்து இருக்கின்றன.

அடுத்து எதையும் நல்லவிதமாக அனுபவிக்க தரும் லக்னாதிபதி, இவரது ஜாதகத்தில் தேய்பிறைச் சந்திரனாகி நீச நிலையில் இருக்கிறார். நீச கிரகத்திற்கு வீடு கொடுத்தவர் ஆட்சி, உச்சம் அடைந்தால் நீசன் பங்கத்தை அடைவார் எனும் விதிப்படி இங்கே சந்திரனுக்கு நீசபங்கம் இருக்கிறது. ஆயினும் ஒரு முறையான நீசபங்கம் என்பது பலவிதமான அமைப்புகளிலும் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தை அடைவதற்கென சுமார் 10 அல்லது 12 விதிகள் இருக்கின்றன. இதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ள “நீசபங்க ராஜயோகம்-சில உண்மைகள்” எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அதன்படி ஒரு கிரகம் 4 அல்லது 5 க்கும் மேற்பட்ட விதிகளில் பொருந்தி நீசபங்கம் அடைவதே, அந்தக் கிரகத்தை முறையான வகையில் வலுப்படுத்தும்.

ஒரு நீசக் கிரகம், சந்திர கேந்திரத்தில் இருந்தால் மட்டும் போதாது. நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி, உச்சம் பெற்று, நீசன் வர்கோத்தமம் ஆகி, நீசன் பரிவர்த்தனை பெற்று, நீசனுடன் ஒரு உச்ச கிரகம் இணைந்து, நீசனே வக்ரமாகி, நீசனை இன்னொரு நீசன் பார்த்து, நீசனை சுபகிரகம் பார்த்து அல்லது இணைந்து என ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் ஒரு கிரகம் நீசபங்கம் அடையும்போது மட்டுமே அது  ஓரளவிற்கு வலிமை பெறும் தகுதியைப் பெறுகிறது.

இதில் உச்சனுடன் இணையும்போது அல்லது முழு ஒளி பொருந்திய கிரகத்தின் தொடர்பை பெறும்போது அது ராஜ யோகம் செய்யும் தகுதியை அடைகிறது. அப்போது அந்தக் கோள் நீசபங்க ராஜ யோகத்தை தரும்.

உதாரண ஜாதகத்தில் சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் என்ற அமைப்பில் இருப்பதால் சந்திரனுக்கு நீசபங்கம் இருக்கிறது. ஆயினும் நீசபங்கம் அளித்த செவ்வாய், சனி, புதன், ராகு-கேதுக்களின் தொடர்பினால் தனது ஒளியை இழந்து முழுமையான பாபத்துவ அமைப்பில் இருப்பதால் இது முழுமையான நீசபங்கம் அல்ல.

இந்த நீசபங்கம் ஜாதகர் உயிர் வாழ்வதற்குத் தேவையான அமைப்பை மட்டுமே தருகிறதே தவிர, ஜாதகர் பூமியில் நன்மைகளையோ, நல்லவிதமான பாக்கியங்களையோ அனுபவிப்பதற்கான தகுதியை அல்ல. லக்னாதிபதி வெறும் நீசபங்கம் பெற்று இருப்பதன் மூலம் ஜாதகர் உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான்.

அடுத்து நான் அடிக்கடி சொல்லும் அவயோக தசா புக்தி வளையத்தினுள் ஜாதகர் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது கடக லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் சனி, புதன், சுக்கிரன் ஆகிய தசைகள் ஜாதகருக்கு 50 வயதுவரை அடுத்தடுத்து நடந்திருக்கின்றன.

தசா புக்தி அமைப்புகளே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் காரணிகளாக அமைகின்றன. ஜாதகம் வலுவற்றதாக இருப்பினும், ஓரளவிற்கு நல்ல தசா புக்தி அமைப்பைக் கொண்டவர் வாழ்க்கையில் தேவையானது கிடைத்து, குறைந்தபட்சம் ஒரு நடுத்தரமான வாழ்க்கை அமைப்பினை கொண்டவராக இருப்பார்.

ஜாதகமும் வலுவாக அமைந்து, யோகர்கள் எனப்படும் 1, 5, 9 ஆம் அதிபதிகளின் தசா, புக்தி நடந்து கொண்டிருப்பவர் அதிர்ஷ்டத்தின் உச்சியில் இருப்பார். இப்போது நாம் காணும் ஜாதகத்தைப் போல வலுவற்றதாக அதாவது லக்னம், லக்னாதிபதி வலுவிழந்து, 5 9-க்குடையவர்களும் பலவீனமான அமைப்பைக் கொண்ட நிலையில், அவயோக தசைகள் நடக்கப் பெற்றவர் வாழ்வில் எதுவும் கிடைக்காமல் இருப்பார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஜோதிடத்தில் குரு, சுக்கிர அணி என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்படும் லக்னங்களில், குரு அணியினருக்கு, சுக்கிரனின் நண்பர்களின் தசா புக்திகள் நன்மைகளைத் தருவதில்லை. சுக்கிர அணியினருக்கு குரு அணி நண்பர்களின் தசா புக்திகள் சாதகமற்ற பலன்களைத் தரும்.

இதனைக் கீழ்க்கண்டவாறு தெளிவாகப் பிரித்தும் சொல்லலாம். அதாவது மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு, வாழ்வின் ஆரம்பம் முதல் சனி, புதன், சுக்கிரன் ஆகிய தசைகள் தொடர்ச்சியாக வருமாயின், அவர் ஒரு சாதாரண வாழ்க்கை மட்டுமே வாழ முடியும்.

அதேபோல ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு, சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய நான்கு கிரகங்களின் தசைகள் தொடர்ச்சியாக வருமாயின் அவருக்கு நடுத்தரமான வாழ்க்கை அமையும்.

இந்த விதியின் விலக்காக, மேற்சொன்ன அவயோக கிரகங்கள் எனப்படும் எதிர் அணிக் கிரகங்கள் ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில், நட்பு வலுவோடு இருக்கும் நிலையில் மட்டும் யோகங்களைச் செய்வார்கள். அதிலும் குறிப்பாக மூன்று, பதினொன்றாமிடங்களில் இருக்கையில் அவயோக கிரகங்களால் நன்மைகள் இருக்கும்.

இந்த மூன்று பதினொன்றாமிடங்களின் சூட்சுமம் என்னவெனில், ஒரு லக்னத்தின் 3, 11-ஆம் இடங்களுக்குள் அமையும் நட்சத்திரங்கள், அந்த லக்னத்தின் யோக நட்சத்திரங்களாக இருக்கும்.

உதாரண ஜாதகருக்கு 50 வயதிற்கு மேல் குடும்பாதிபதி சூரியனின் தசை நடந்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய ஆரம்பிக்கும் காலகட்டம் 50 வயதில் தொடங்குகிறது. ஆகவே 50 வயதிற்கு மேல் ஒரு கிரகம் குடும்பத்தை அமைத்து தராது.

இன்னுமொரு நிலையாக ராகு-கேதுக்களின் நட்சத்திரத்தில் ஒரு கிரகம் அமரும்போது, நட்சத்திர நாதனான சர்ப்பக் கிரகங்கள் ஒளி பொருந்திய நிலையில், நல்ல அமைப்பில் இருக்கும்போது மட்டுமே அதன் சாரத்தில் அமர்ந்த கிரகம் நன்மையைத் தரும்.

ஒரு கிரகம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த இரண்டு கோள்களும் சுபத்துவமோ, சூட்சும வலுவோடோ இருக்கும் போதும், ராகுவிற்கு நன்மை தரும் வீடுகளாகச் சொல்லப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் போன்ற இடங்களில் ராகுவும், கேதுவிற்கு நன்மை தரும் இடங்களான கும்பம், விருச்சிகம், கன்னி போன்ற வீடுகளில், சுபர்களின் தொடர்பில் கேதுவும் இருக்கும்போது மட்டுமே சாரம் பெற்ற கிரகம் நன்மைகளைச் செய்யும்.

இதனை விரிவாக “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் ராகுவின் சூட்சுமங்கள் என்ற தலைப்பில் சொல்லிவிட்டதால் இங்கே தனியாக விளக்கத் தேவையில்லை.

உதாரண ஜாதகத்தில் 50 வயதிற்கு மேல் வந்த சூரிய தசை ஜாதகருக்கு ஓரளவிற்கு தனது காரகத்துவ, ஆதிபத்தியங்களை செய்யக் கூடியதுதான் என்றாலும், அங்கே அவரும் பாபத்துவ ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து, எட்டில் மறைந்த காரணத்தினால் அவராலும் சுபத்துவம் பெற்றிருந்தாலும் குடும்பம் எனும் அமைப்பை தர இயலாது போயிற்று.

ஜாதகருக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் லக்னாதிபதி சந்திரனின் தசை முழுக்க முழுக்க பாபத்துவம் மட்டுமே பெற்றுள்ள எட்டுக்குடைய சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 66 வயதுவரை ஜாதகருக்கு வாழ்வின் எவ்வித முக்கிய சுகங்களும் கிடைக்காமல் போய்விடும் அமைப்பு இது.

அடுத்து இன்னொரு நிலையாக, இயற்கைச் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் சேர்க்கை மற்றும் நேரெதிர் ஏழாம் பார்வையைப் பற்றி முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். நம்முடைய மூல நூல்களில் கூட சொல்லப்படாத ஒரு விஷயம் இது.

என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட ஜோதிட ஆய்வில் ஜாதகத்தில் குரு, சுக்கிரன் இணைந்தவர்களுக்கு இணையும் தூரம், இணைவு நடக்கும் பாவகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் லக்னத்தைப் பொறுத்து, தாம்பத்திய சுகம் அல்லது புத்திர சுகம் இரண்டும் முழுமையாகவோ அல்லது நிறைவாகவோ கிடைப்பதில்லை.

இதனை சுருக்கமாக குரு, சுக்கிரன் இருவரும் தங்களுக்குள் ஜென்ம விரோதிகளாக உருவகப்படுத்தப்பட்டு இருப்பதால், இவர்கள் இருவரும் இணையும் நிலையில், குரு தரும் புத்திர சுகத்தை, சுக்கிரன் தர விடமாட்டார், சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகத்தை குரு பெற விட மாட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

அந்த நிலையும் இவரின் ஜாதகத்தில் இருக்கிறது. இங்கே எட்டாம் பாவகத்தில் களத்திர, புத்திர காரகர்களான குரு, சுக்கிரன் இருவரும் இணைந்தும், மறைந்தும் இருக்கிறார்கள்.

ஆக ஆதிபத்தியம். காரகம் இரண்டும் வலுவிழந்திருக்கும் நிலையில், வேத ஜோதிடம் குறிப்பிடும் அனைத்து நிலைமைகளும் முழுமையாக இந்த ஜாதகருக்கு பொருந்தி வருவதால் இவருக்கு இதுவரை வாழ்வின் முக்கிய சம்பவமான திருமணம் என்பதும் அதன் தொடர்ச்சியான வாழ்க்கையின் முக்கிய நோக்கமான புத்திர பாக்கியம் என்பதும் கிடைக்கவில்லை. ஒரு நிலைக்கு மேல் இவருக்கு அதில் ஆர்வமும் இல்லை.

அனைத்தும் ஒளி இழந்து, வலிமை இழந்து போனால், ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையின் சுவாரசியங்கள் கிடைக்காது, அவர் ஒரு நடைபிணம் போன்று ஜடமாக, வாழ்வின் அர்த்தம் புரியாதவராக இருப்பார் என்பதற்கான உதாரண ஜாதகம் இது.

அதேநிலையில் இங்கு காட்டப்படும் அனைத்தும் தலைகீழாக, ஒளி பொருந்திய நிலையில், சுபத்துவமாக இருக்கும் நிலையில், அதாவது லக்னாதிபதி ஒளி பொருந்திய நிலையிலும், ஐந்து ஒன்பதாம் பாவகாதிபதிகள் சுபத்துவ, சூட்சும வலுவோடும், மேற்கண்ட பாவகங்கள் சுப அமைப்பிலும் இருக்கும் ஒருவருக்கு முயற்சிகள் எதுவும் இன்றியே வாழ்க்கைக்கு தேவையானது அனைத்தும் தானாகவே நடக்கும். இதையே நம்முடைய வேதஜோதிடம் பூர்வ புண்ணியம் என்று அழைக்கிறது.

மனிதர்களின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களும், பிறக்கும்போதே ஒரு மனிதன் உயர்நிலையில் பிறப்பதும், தாழ்நிலையில் இருப்பதும், ஜனிக்கும் அந்த வினாடியில் அமையும் கிரகங்களின் ஒளி அமைப்பைப் பொறுத்தும், சுபத்துவம் மற்றும்  சூட்சும வலுவைப் பொறுத்துமே அமைகின்றன என்பதற்கு நல்ல உதாரண ஜாதகம் இது.

அடுத்த வாரம், இதேபோன்ற ஆனால் வேறுவகையான அமைப்பினாலும், எண்ணங்களாலும் வாழ்வின் முக்கிய பாக்கியங்கள் எதுவும் கிடைக்காத இன்னொரு ஜாதகத்தைப் பற்றி பார்க்கலாம்.

அடுத்த வெள்ளி சந்திப்போம்.

(05.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *