adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பாபக் கர்த்தாரி யோகம் என்பது என்ன?-D-051

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஜோதிடத்தில் என்றென்றும் சந்தேகங்களுக்கு குறைவில்லை. ஒரு விதியோ, ஒரு யோகமோ அல்லது தோஷமோ சொல்லப்பட்டிருந்தால், அது ஏன் சொல்லப்பட்டது, அதனுடைய விளைவு என்ன, இந்த விதி அல்லது தோஷத்திற்கு மாற்று இருக்குமா, விதிவிலக்குகள் உண்டா என்பதை யாரும் இங்கே ஆராய்வதே இல்லை.

ஜோதிடம் என்பது ஏராளமான சமன்பாடுகளை உள்ளடக்கிய அபாரமான ஒரு கலை என்பதை அடிக்கடி எழுதுகிறேன். ஆனால் பெரும்பாலானோர் இதை நான்கே நான்கு விதிகளுக்குள் அடங்கி விட்ட ஒரு சாதாரண ஒன்றாம் வகுப்பு கணக்காகத்தான் நினைக்கிறீர்கள்.

ஒரு யோகம் சொல்லப்பட்டால், அதன் உட்கருத்து என்னவாக இருக்கும் என்பதை யாரும் யோசிப்பதே இல்லை.. ஜோதிடத்தை யோசித்துப் புரிந்து கொண்டவர் இங்கே நூற்றில் ஒருவர்தான். மற்றவர்களெல்லாம் சொல்வதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள்தான்.

நமக்கு முன்னால் இருந்த ஒருவர் தவறான ஒன்றைச் சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை அப்படியே பின்பற்றக் கூடியவர்களாகத்தான் இங்கே பெரும்பாலானவர்கள் இருக்கிறீர்களே தவிர, எந்த ஒரு விதியாக  இருந்தாலும் அதை ஆராய்ந்து, பின்னர் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஆயிரத்தில் ஒருவருக்கு கூட இல்லை.

இரு தினங்களுக்கு முன்பு மாலைமலரில் வெளிவந்த கேள்வி-பதில் பகுதியில் “என் மகள் ஒழுக்கமானவள்தானா” என்ற தலைப்பில் அளித்த பதிலுக்கும் இதே போன்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கின்றன.

சனி நீசம் அடைவது நல்லது என்றுதானே உங்களுடைய “பாபக்கிரக சூட்சும வலுத் தியரி”யில் சொல்லியிருக்கிறீர்கள் அப்படி இருக்கும்போது அந்தப் பெண்ணுக்கு சனி நீசமாகத்தானே இருக்கிறார், பின் எப்படி நீங்களே பலனை மாற்றிச் சொல்கிறீர்கள் என்றும் ஏராளமான பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள் அனைவருமே ஜோதிடத்தில் இன்னும் வெகுதூரம் போக வேண்டியிருக்கும். முதலில் அந்தப் பெண்ணுக்கு சனி தசை நடக்கவில்லை. சுக்கிர தசைதான் நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் தரும் பலனைப் பற்றித்தான் அங்கே விளக்கப்பட்டிருக்கிறதே, தவிர சனிக்கு கிடைத்த சுபத்துவத்தைப் பற்றி அல்ல. நான் சுக்கிரனின் கோணத்தில் பதில் சொன்னால் நீங்கள் சனியின் கோணத்தில் யோசிக்கிறீர்கள். எங்கே எந்த விதியைப் பொருத்துவது என்பதை அறிவதற்கும் நீடித்த அனுபவம் வேண்டும்.

சுக்கிர தசை நடப்பதால்தான் இது போன்ற மாறுபாடான பலன்கள் அந்தப் பெண்ணிற்கு நடக்கிறதே தவிர, சனி தசை நடந்தால் இது போன்ற அனுபவங்கள் அந்தப் பெண்ணிற்கு இருக்கப் போவதில்லை. ஏனென்றால் சனி சுபத்துவ, சூட்சும வலுவோடு அங்கே இருக்கிறார். ஆனால் சுக்கிரன் பாபத்துவம் அடைந்து விட்டார் இல்லையா? 

ஒரு கிரகத்தின் சுபத்துவ, சூட்சும வலு, பாபத்துவ அமைப்புகள் அனைத்தும் அக் கிரகத்தின் தசா, புக்திகளில் மட்டும்தான் பலன் தருமே தவிர வேறு எந்த நிலையிலும் அல்ல. இதைப் புரிந்து கொண்டால்தான் ஜோதிடம்.. இல்லையென்றால் அது ஜோதி இல்லாத வெறும் இருள் இடம்.

முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

“அடுத்த வாரம் பிறக்கப் போகும் அரசன்” கட்டுரையில் காட்டிய ஜாதகத்தில்  லக்னாதிபதி சந்திரன் பாதக ஸ்தானத்தில் இருக்கிறார். லக்னாதிபதிக்கு இருபுறமும் செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் அமர்ந்து பாபக்கர்த்தாரி யோகம் அமைந்திருக்கிறது என்று ஜோதிடர் ஒருவர் சந்தேகம் கேட்டிருக்கிறார்.

பாதகாதிபதி என்பதை ஜாதகர் பயப்படுகிறாரோ இல்லையோ ஜோதிடர்கள்தான் அதிகமாக பயப்படுகிறீர்கள். கடக லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சமாகாமல், லக்னாதிபதி சந்திரன் வேறு எங்கே போய் அய்யா வலுப் பெறுவார்?

உதாரணமாக காட்டிய கடக லக்னம், ரிஷப ராசி எனும் ஜாதக அமைப்பில் பிறந்து நம் கண் முன் வாழ்ந்து மறைந்த கலைஞர் அவர்களுக்கும் பதினொன்றாம் இடமான பாதக ஸ்தானத்தில்தானே சந்திரன் இருந்தார்? அவர் 95 வயதுவரை வாழவில்லையா? கலைஞரை அவருடைய பாதகாதிபதி என்ன செய்தார்?

எந்த ஒரு கிரகத்தின் பலனும் அதன் தசையில்தான் நடக்க வேண்டும் என்பது விதி. பாதகாதிபதி சுக்கிரனின் தசை கலைஞருக்கு அந்திம காலத்தில் வந்தது. ஆகவே அவர் சுக்கிரதசையில் இயற்கை எய்தினார். உதாரண எதிர்கால அரசனின் ஜாதகத்தில் பாதகாதிபதி சுக்கிர தசை வாழ்நாளில் வரவே வராது எனும் போது இங்கே பாதகாதிபதி என்னும் கிரகத்திற்கு வேலையே இல்லையே? தவிர பாதக ஸ்தானத்தில் லக்னாதிபதியைக் கொண்ட கலைஞரும் அரசனாகத்தானே இருந்தார்?

ஜோதிடத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில்தான் பலன் இருக்கிறதே தவிர, ஜோதிடம் என்றும் நிலையாகத்தான் இருக்கிறது நாம்தான் அதை அணுகும் முறையில் தவறுகிறோம். ஜோதிடம் என்பது யானை, ஜோதிடர்கள் குருடர்கள் என்று நான் சொல்வது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். பாதகாதிபதி விஷயமும் அப்படித்தான்.

அடுத்து லக்னாதிபதி சந்திரன் பாபக் கர்த்தாரி யோகத்தில், இருபுறமும் செவ்வாய், ராகு அமைந்த நிலையில் இருக்கிறார் என்பதும் அதே ஜோதிடருக்குள்ள  சந்தேகம்.

நான் அடிக்கடி சொல்வது போல விதியை விட விதிவிலக்குகளை வைத்து ஒரு ஜாதகத்தை உணரும்போதுதான் உங்களுக்கு உண்மையான பலன்கள் தெரிய வரும்.

பாபக் கர்த்தாரி யோகம் சொல்லப்பட்டதன் சூட்சுமம் என்னவெனில், இருள் கிரகங்கள் ஒரு கிரகத்திற்கோ, அல்லது ஒரு பாவகத்திற்கோ முன்பின்னாக இருக்கும்போது அந்த வீடு அல்லது அந்தக் கிரகம் ஒளியிழந்து போகிறது எனும் அடிப்படையில், அந்தக் கிரகமோ, அந்த பாவகமோ ஜாதகருக்கு செயல்படாது என்று செல்லப்பட்டது.

தனக்கு முன்பின் இரண்டு இருள் கிரகங்களைக் கொண்ட அந்த வீடு அல்லது கிரகம் வேறுவகையில் ஒளித்தன்மை பெறும்போது பாபக் கர்த்தாரி யோகம் அல்லது தோஷம் நீங்கும். இங்கே லக்னாதிபதிக்கு இருபுறமும் செவ்வாய், ராகு அமர்ந்து நெருக்குதல் அளித்தாலும் முழு ஒளித்திறன் பெற்ற குரு, அவரைப் பார்த்து ஒளிப் படுத்துவதால் இங்கே பாபக் கர்த்தாரி தோஷம் நீங்குகிறது.

அனுபவம் ஏற ஏறத்தான் ஒரு வீடு, அந்த வீட்டின் அதிபதி எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்த விதி எதற்குப் பொருந்தும் என்பது தெரிய வரும். அதுவரை இது போன்ற குழப்பமான களத்திர தோஷம், பாதகாதிபதி, பாபக் கர்த்தாரி யோகம் போன்றவற்றை போட்டுக் குழப்பி எதிர்மறையான பலன்களைத்தான் யோசித்துக்  கொண்டிருப்பீர்கள்.

பிரபஞ்சத்தில் எல்லாவிதமான அமைப்புகளுக்கும் இரு நிலை உண்டு என்பதன்படி அனைத்து கிரகங்கள் மற்றும் அனைத்து பாவகங்களுக்கும் நன்மை, தீமை என இருவேறு முரண்பட்ட நிலைகள் இருக்கின்றன. எந்த ஒரு கிரகமும் முழுக்க நன்மையை மட்டும் செய்து விடுவதில்லை, அதேபோல தீமையை மட்டும் செய்து விடுவதில்லை. ஒரு பாவகமும் அப்படித்தான். நன்மை தீமை இரண்டும் கலந்ததுதான் செய்யும்.

உங்களுடைய பிறவி கர்மாவிற்கு ஏற்றபடி இந்த நன்மை, தீமைகள் அமைகின்றன. பனிரெண்டு பாவகங்களின் செயல்பாடுகள் எனப்படும் ஆதிபத்தியங்கள் நல்ல செயல்பாடுகள் ஆறு, கெட்டவை ஆறு எனத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு மனிதனின் வாழ்க்கையை 12 விதமாக பிரிக்கும் ராசி வீடுகள் அனைத்துள்ளும் நல்ல ஆதிபத்தியங்கள் ஆறு, கெட்டவை ஆறு என்ற நிலை உள்ளது.

ஒரு வீடு முழுக்க முழுக்க சுபக் கிரகங்களின் பார்வை, இருப்பு போன்றவற்றை பெறும்போது, தொடர்பினைத் தரும் சுபக் கிரகம் தன்னுடைய ஒளியில் முழுமையாக இருக்கும் பொழுது, அந்த வீட்டின் ஆறுவிதமான நல்ல விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும். அந்த வீட்டினை முழுமை பெற்ற பாபக் கிரகம் தன்னுடைய பாபத்துவ ஒளியுடன் தொடர்பு கொள்ளும்போது, அந்த பாவகத்தின் தேவையற்ற விஷயங்களான கெட்ட ஆதிபத்தியங்கள் நடைபெறும்.

உதாரணமாக லக்னத்தை சுபக் கிரகங்கள் தொடர்பு கொண்டு, அதிகமான சுபத் தன்மையோடு இருக்கும்போது நீங்கள் உற்சாகமானவராக, எதையும் சாதிக்க துடிப்பவராக, பிறந்தது முதல் ஆரோக்கியமான உடல்நிலையும், மன நிலையும் கொண்டவராக, அதிகமான முயற்சி இன்றியே உங்களுடைய செயல்கள் அனைத்தும் நிறைவேறும் தன்மை கொண்டவராக இருப்பீர்கள்.

தொடர்பு கொள்ளும் சுபக் கிரகத்தின் ஒளி அளவிற்கேற்ப இப்போது நான் சொன்ன பலன்கள் கூடுதல் குறைவாக இருக்கும். உதாரணமாக லக்னத்தை இருள் கிரகங்களுடன் சேராத குரு, மூலத்திரிகோணம், ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்து பார்க்கும் பொழுது முழு சுபத்துவத்தையும், இருள் கிரகங்களுடன் சேர்ந்து பங்கப்பட்டு பார்க்கும்போது ஓரளவு சுபத்துவத்தையும் தருவார்.

இங்கே குருவின் சுபத்தன்மைக்கேற்ப வாழ்க்கைத்தரமும், உடல், மனநிலைகளும் இருக்கும். இதுபோன்றே மற்ற சுப கிரகங்களான, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதனின் ஒளி அளவையும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மிக முக்கிய கருத்தாக லக்னத்தோடு பாபக் கிரகங்கள் தொடர்பு கொண்டாலும், அவை சுபர்களின் பார்வை, இணைவு  மூலம் சுபத்துவப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்த பாபர்களும், சுபர்களாகி நன்மைகளை மட்டுமே தருவார்களே தவிர தீமைகளைத் தர மாட்டார்கள். முழுமையான சுபர்களின் தொடர்புகளை பெற்றிருக்கும் சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் தீமைகளைச் செய்வதில்லை.

உயர்நிலையில் பிறந்த அல்லது உயர்நிலைக்கு வளர்ந்த ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் நன்மைகளைச் செய்கின்ற அமைப்பு இப்படித்தான் ஏற்படுகிறது.

இது போன்றவர்களின் ஜாதகத்தில் பாபக் கிரகங்கள் என்று நாம் பயப்படும் சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் முழுமையான வலிமை பெற்ற குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரனின் தொடர்புகளைப் பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பாபக் கிரகங்கள் தங்களுடைய கெட்ட ஆதிபத்திய, காரகத்துவங்களை முற்றிலுமாக தரும் சக்தியை இழந்து, முழுமையான சுபராக மாறி ஜாதகருக்கு நன்மைகளைத் தருவார்கள். இதுவே சிருஷ்டியின் ரகசியம்.

அடுத்து உதாரண ஜாதகத்தில் சிம்மமும், சூரியனும் சுபத்துவமாக இல்லையே, சூரியன் எட்டில் மறைந்திருக்கிறாரே இவர் எவ்வாறு அரசனாவார் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி வளர்பிறைச் சந்திரனாகி, ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து, தனது வீடான சிம்மத்தைப் பார்ப்பதும், சிம்மத்திற்கு அசுப தொடர்புகள் இல்லாததும், சூரியன் குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து, அம்சத்தில் சுக்கிரனுடன் இணைந்திருப்பதுமே ஒரு அரசனுக்கு போதுமான அமைப்புகள்.

எல்லா நிலைகளிலும் ஒரு விதி நூறு சதவிகிதம் அப்படியே பொருந்திப் போக முடியாது. போகவும் செய்யாது. ஜோதிடம் என்பது பலவிதமான நுணுக்க சமன்பாடுகளை பொருத்திப் பார்த்து இறுதியில் உண்மை நிலைக்கு அருகில் வருவதுதான்.

மீதி விளக்கங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “பாபக் கர்த்தாரி யோகம் என்பது என்ன?-D-051

  1. ஜோதிடப் பேரொளி…ஐயா…எனது மானசீக குரு அவர்களுக்கு வணக்கம்… அற்புதம்… அருமை…எழுதுவதற்கு எனக்கு வேறு வார்த்தைகளே.. வரவில்லை…எப்படி ஐயா இப்படி?…ஜோதிடத்திலே கரைந்து கலந்து விட்டீர்கள்… தங்களது கட்டுரைகளை வாசித்து… கருத்துக்களை உள்வாங்கி…நாங்கள் அனைவரும் பாக்கியம் செய்துள்ளோம்… ஐயா… மிக்க நன்றி…மிக்க நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *