adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 228 (12.03.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கே. கணேசன், புதுச்சேரி.

கேள்வி.

என் மனக் குழப்பத்திற்கு தாங்கள்தான் தீர்வாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமண நாள் முதல் மனைவி வீட்டாரின் ஈகோவால் பல துன்பங்களை அடைந்து விட்டேன். எனது பயந்த சுபாவத்தால் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்து ஒதுங்கிச் சென்றாலும் அவர்களின் தடித்த வார்த்தைகளால் பிரச்சினையாகி விடுகிறது. தற்போது கடுமையான கடன் பிரச்சினையும் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக கடன் மற்றும் மனைவியால் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்த வருடம் பிறந்தது முதல் தவறான முடிவு எடுக்கத் தூண்டும் எண்ணங்கள் அதிகமாக தோன்றுகிறது. இரவு முழுதும்  தூக்கமின்றி  அவதிப்படுகிறேன். மனைவி வீட்டார் என்னை உதாசீனம் செய்து வருவது நிற்குமா? கடன் பிரச்சினை தீருமா?

பதில்.

(மீன லக்னம், மகர ராசி, 4ல் சுக், ராகு, 5ல் சூரி, 6ல் புத, 7ல் சனி, 8ல் செவ், 10ல் கேது, 11ல் சந், 5-8-1982 இரவு 10-15 நெல்லை)

மீன லக்னத்திற்கு சுக்கிரன் சம்பந்தப்பட்ட தசா,புக்திகள் அனைத்தும் வயதிற்கேற்ற வகையில் கெடுதல்களைச் செய்யும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த சுக்கிர புக்தி முதலே உங்களுக்கு பிரச்சனைகளும் வந்துவிட்டன.. லக்னாதிபதி எட்டில் மறைந்து பாபத்துவம் பெற்று, லக்னத்தை சனி பார்த்து, ராசியை செவ்வாய் பார்த்த ஜாதகம் உங்களுடையது. இது போன்ற அமைப்பில் வாழ்க்கையில் நடக்கும் சோதனைகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

அஷ்டமாதிபதியின் தொடர்பு, இணைவைப் பெற்ற ராகு, லக்னம் லக்னாதிபதியை தொடர்பு கொண்டால் ஒருவருக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகமாகி அந்த முயற்சியிலும் ஈடுபடுவார். உங்களுக்கு ராகு எட்டுக்குடைய சுக்கிரனுடன் நெருக்கமாக இணைந்து, எட்டில் இருக்கும் லக்னாதிபதியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். தற்போது உங்களுக்கு ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. ஜாதகப்படி உங்கள் பிரச்சனைகள் தீர்வதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் ஆகும். ஆனால் சரியாகும்.

நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நம்மையும் தாண்டி, நம்மைச் சுற்றியுள்ள சிலரைப்  பாதிக்கும். மனைவியின் பெயரில் இருக்கும் கோபத்தால் குழந்தைகளை தகப்பன் இல்லாத அனாதைகளாக்கி விடாதீர்கள். உங்களுக்குப் பிறந்ததை தவிர அவர்கள் வேறு என்ன பாவம் செய்தார்கள்? ஒரு மனிதன் தான் பெற்ற குழந்தைகளுக்காக எதையும் தாங்கிக் கொள்ளலாம். எந்த ஒரு காரியத்தையும் செய்யலாம்.

கடனுக்காகவும், மனைவியின் தொந்தரவுக்காகவும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றால் உலகத்தில் ஒரு ஆண் கூட உயிருடன் இருக்க முடியாது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு நாளில் இந்த இரண்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்தான். எட்டுக்குடையவனுடன் இணைந்த ராகுவின் புக்தி நடப்பதால் உடனடியாக ஸ்ரீகாளஹஸ்தி சென்று வாருங்கள். மனம் தெளிவடையும். நம்பிக்கை பிறக்கும். முக்கியமாக வாழ்க்கையைப் பற்றிய தைரியம் வரும்.

16 வியாழக்கிழமைகள், 16 லட்டு தொடர்ந்து அருகில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னதியில் தானம் செய்யுங்கள். கடன் பிரச்சினை குறையும். 2020 ஜூன் மாதத்திற்கு பிறகு அனைத்து பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்து வாழ்க்கை நிம்மதியாக செல்லும். அதுவரை பொறுத்திருங்கள். எந்த நினைப்பு வந்தாலும் முதலில் குழந்தைகளின் முகத்தை எண்ணிப் பாருங்கள். துயரங்கள் தீர்ந்து விடும். வாழ்த்துக்கள்.

எஸ். கீதா, நாமக்கல்.                              

கேள்வி.

மகளுக்கு முப்பது வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மிகவும் கவலையாக உள்ளது. சில ஜோதிடர்கள் அவளுக்கு திருமண வாழ்க்கை இல்லை என்று சொல்கிறார்களே, அது உண்மையா? திருமணம் நடக்குமா?

பதில்.

(துலாம் லக்னம், தனுசு ராசி, 3ல் சூரி, சந், சுக், சனி, 4ல் புத, 5ல் ராகு, 6ல் செவ், 8ல் குரு, 11ல் கேது, 7-1-89 அதிகாலை இரண்டு 2-20 கண்ணூர்)

மகளின் ஜாதகப்படி 5-க்குடைய சனி அஸ்தமனமாகி, புத்திரகாரகன் குரு எட்டில் மறைந்து, ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்த புத்திரதோஷ ஜாதகம். இது போன்ற ஜாதகங்களுக்கு 30 வயது முடிந்த பிறகுதான் திருமணம் நடைபெறும். சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் மகளுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். அடுத்த வருடம் தை மாதத்திற்குப் பிறகு மகளுக்கு திருமணம் உண்டு. அதுவரை பொறுத்திருங்கள். வாழ்த்துக்கள்.

சு. கார்த்திகேயன்,

கேள்வி.

எம்எஸ்சி, பி.எட், எம்.பில் படித்திருக்கிறேன். தற்காலிக ஆசிரியராக குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லை. எல்லா அரசுத் தேர்வுகள் எழுதியும் சொற்ப மதிப்பெண்களில் பெயில் ஆகி விடுகிறது. அரசு வேலை கிடைக்குமா? பத்தில் சூரியன் சனி சேர்க்கை இருப்பதால் அரசு வேலை கிடைக்காது என்று ஒரு ஜோதிடர் சொல்கிறார். முக்கியமாக எனக்கும் என் தந்தைக்கும் ஒத்து வரவில்லை. எப்போதும் தகராறு வருகிறது. நான் பணிந்துதான் செல்கிறேன். என் அப்பாவும் ஒரு ஜோதிடர்தான். அப்பாவும் உனக்கு அரசு வேலை கிடைக்காது, என்னை விட்டால் உனக்கு வேறு வழி இல்லை, என் அடிமையாகவே இரு என்று மனம் நோக பேசுகிறார். அரசு வேலை கிடைக்குமா? காலம் பூராவும் அப்பாவைச் சார்ந்தேதான் இருக்க வேண்டுமா? கூலி வேலைக்கு செல்லலாமா? ஓரிரு வாரங்களில் பதிலுக்காக உங்களையே நினைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பதில்.

செய்யும் செயலில் நேர்த்தியும், ஒழுங்கும், முழுமையும் இருப்பவனுக்கு கடவுளும் தேவையில்லை, ஜோதிடமும் தேவையில்லை.

மூன்று பெரிய பட்டப்படிப்பு படித்து வாத்தியாராக இருக்கிறீர்கள். ஆனால் கடிதத்தில் எந்த ஊரிலிருந்து எழுதுகிறீர்கள் என்று இல்லை. பிறந்த நேரம் இல்லை. பிறந்த இடம் இல்லை. வெறும் இரண்டு ஜாதக கட்டங்களை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு என் தலையெழுத்தைச்  சொல் என்று சொல்கிறீர்கள். எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை தானாகவே நன்றாக அமையும். வெற்றியும் கிடைக்கும். என்றைக்கும் அடுத்தவரைச் சார்ந்து வாழத் தேவை இருக்காது.

மு. தங்கராசு, தான்தோன்றி மலை.

கேள்வி.

ஜோதிட பிரம்மாவிற்கு பணிவான வணக்கம். பல லட்சங்கள் கடன் உள்ளது. கடனால், வேதனைகளும் அவமானங்களும் ஏற்படுகிறது. மன நிம்மதி இல்லாததால் உடல் நலக் குறைவும் வந்து விட்டது. கடன் எப்போது தீரும்? எனக்கு ராசிப்படி பலன்கள் நடக்குமா அல்லது லக்னப்படிதான் நடக்குமா? சூரிய தசையில் கடன்கள் தீருமா? சூரியனுக்கான பரிகாரங்களை செய்யலாமா?

பதில்.

(ரிஷப லக்னம், மீன ராசி, 1ல் குரு, 3ல் சனி, 4ல் சூரி, 5ல் புத, சுக், செவ், 6ல் ராகு, 11ல் சந், 12ல் கேது, 10-9-1976 இரவு 10-48 கரூர்)

ரிஷப லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் ஐந்தாமிடத்தில் நீசமாகி, செவ்வாயுடன் ஒரே டிகிரியில் இணைந்து, சனியின் பார்வையைப் பெற்றிருந்தாலும், உச்ச புதனின் சேர்க்கையாலும், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின்  பார்வையாலும் வலிமையான நீசபங்க அமைப்பில் இருக்கிறார்.. அவர் லக்னாதிபதியாக இருந்தாலும் கடன், நோய், எதிரியைக் கொடுக்கும் ஆறாமிடத்தின் அதிபதியாகவும் இருப்பதால் சுக்கிர தசையின் பிற்பகுதியில் வலிமை பெற்ற ஆறாம் அதிபதி என்ற முறையில் அதிகமான கடன்களை கொடுத்திருப்பார்.

லக்னாதிபதி நீசபங்கமாக இருப்பதால், லக்னப்படிதான் உங்களுக்கு பலன்கள் நடைபெறும். லக்ன நாயகன் நீசம் பெற்று பின்னர் வலிமை அடைந்தால் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏறத்தாழ 43 வயதிற்குப் பிறகுதான் நிம்மதி கிடைக்கும் என்பதை அடிக்கடி எழுதுகிறேன். அந்த அமைப்பின்படி, லக்னாதிபதி நீசமாகி பின் நீசபங்கமான ஜாதகத்தைக் கொண்ட உங்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் நிம்மதியான வாழ்க்கை இருக்கும்.

நடப்பு தசாநாதன் சூரியனும் ஆறாம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் இருப்பதால் சூரிய தசையில் கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்து வரும் தசாநாதன் சந்திரன் பதினொன்றாம் இடத்தில் சுபத்துவமாக இருப்பதாலும், 2- 5-க்குடைய புதனின் சாரத்தில் உள்ளதாலும் சந்திரதசை முதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும்.

கடன்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். லக்னாதிபதி நீசபங்க அமைப்பில் இருப்பதாலும், லக்னத்தில் சுப கிரகம் திக்பலமாக இருப்பதாலும், எதையும் உங்களால் சமாளிக்க முடியும். சந்திர தசையில் கடன்கள் இருக்காது. சூரியனுக்கான பரிகாரங்களை செய்யக் கூடாது. சுக்கிரனுக்குத்தான் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 228 (12.03.19)

  1. ஐயா துலா லக்கினம், கும்பராசி காரர்களுக்கு 2,7 இற்குறிய செவ்வாய் 6 இல் மறைவது நல்லமா கூடாதா? குழப்பமாக உள்ளது.

  2. Sir ,
    Happy to speak with you
    Date – 09-07-1987
    Time – 12.35 pm
    Sir business palama and marriage epo nadakuim . life epo settle aga mutiyum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *