adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகளுக்கு ஆயுள் குறைவா?-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ரா. ஜெயஸ்ரீ, மதுரை.

கேள்வி.

துவண்டு விழும் போதெல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுப்பது தங்களின் வார்த்தைகள்தான். ஒவ்வொருமுறை கேள்வி எழும்போதும் தங்களின் ஏதோ ஒரு வீடியோவில், கட்டுரையில் எனக்கான பதில் ஒளிந்து கொண்டிருக்கும். இன்னும் விடை தெரியாமல் நான் காத்துக் கொண்டிருப்பது என் மகளுக்கான கேள்வியில்தான். பலமுறை கடிதம் அனுப்பியும் நீங்கள் நிராகரிக்கும் ஒவ்வொரு முறையும் மகள் ஜாதகத்தில் உள்ள குறையை எண்ணித்தான் தவிர்க்கிறீர்களோ என அச்சம் கொள்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் பல ஜோதிடர்களிடம் என்னை அழைத்துச் சென்றாலும் அவர்களின் பதிலை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் நம்பும் ஒரே ஒருவரான உங்களது பதிலில் மட்டுமே என் நிம்மதி இருக்கிறது. மூன்று வயது மகளின் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் புதன், ராகு இணைவு இரண்டு டிகிரிக்குள் இருப்பதால் மகளுக்கு ஆயுள்பங்கம் வந்துவிடுமோ என மனம் பதைபதைக்கிறது. எட்டாமிடம் ஒழுக்கக்குறைவு, மாங்கல்யதோஷம், கல்வித்தடை, விபத்து, தற்கொலை என பல விஷயங்களைத் தரும் என்பதால் பயம் ஏற்படுகிறது. மூன்று வயதுக் குழந்தைக்கு இவ்வளவு தூரம் யோசிக்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். திருமணத்தில் பல இன்னல்களை சந்தித்த நான் என் மகள் மண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். புதனுடன் இணைந்த ராகு எந்தவிதமான பாதிப்பைத் தரும்? என் கணவரிடம் மகள் வெகுவாக ஒட்டுவதில்லை. அதற்கு சூரியன் ராகு இணைவுதான் காரணமா? ஏழாமிடத்தை விட பதினோறாமிடம் வலுவாக இருப்பது போல தோன்றுகிறது. இது இருதார அமைப்பா? பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த நாட்டில் என் மகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க வேண்டுமே என ஒவ்வொரு நொடியும் வேண்டிக் கொண்டிருக்கிறேன். அவள் சிரிக்கும் ஒவ்வொரு பொழுதும் இந்தச் சிரிப்பு அவளுக்கு நிலைக்க வேண்டுமே என்று கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் ஒரு தாயின் பயம் உங்களுக்கு நிச்சயம் புரியும். கடவுளைக் கண்ணால் கண்டிருந்தால் கதறியிருப்பேன். அந்த இடத்தில் தங்களை வைத்து மனதில் உள்ள அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன். உங்கள் பேத்தியின் ஜாதகம் என்று நினைத்து தவிர்க்காமல் பதில் கூறுங்கள் ஐயா.

பதில்.

(கும்ப லக்னம், கடக ராசி, 6ல் சந், 7ல் சுக், செவ், குரு, 8ல் சூரி, புத, ராகு, 10ல் சனி, 6-10-2015 மாலை 4-30 மதுரை)

ஜோதிடம் என்பது மிகப் பெரிய கடல். பிரபஞ்சமும் ஜோதிடமும் ஒன்றுதான். ஒரு துல்லியமான பலனை கணிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியை தேடுவது போன்றதுதான். அனுபவமும், ஞானமும் இருக்கும்போது மட்டுமே ஒருவருக்கு பலன்கள் கூடி வரும். கிராமப்புறங்களில் அரைகுறை வைத்தியன் ஆபத்தானவன் என்பார்கள். அதைவிட உன்னைப்போல அரைகுறையாக ஜோதிடம் தெரிந்து வைத்துக் கொள்பவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.

மூன்று வயதுப் பெண்ணிற்கு திருமணம் எப்படி நடக்கும், இரண்டு திருமண அமைப்பு இருக்குமோ என்று கவலைப்படுகிறாய் உண்மையைச் சொல்லப் போனால், இன்னும் 20 ஆண்டு காலத்திற்கு பிறகு திருமணம் என்ற அமைப்பே இருக்குமா என்ற சந்தேகமே இருக்கிறது. தற்போது நடக்கும் திருமணங்களில் முப்பது சதவீதத்திற்கு மேல் விவாகரத்தில்தான் முடிகிறது. நம் அனைவருக்குமே ஒரு விவாகரத்தான தம்பதிகளைத் தெரியும். முப்பது ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து இப்படி அதிகமாகும் என்று யாராவது சொன்னால் நம்பியிருப்போமா?

ஒரு புதிய வடிவாக இப்போது நம்முடைய நகரங்களில் ஒரு புது கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்து பார்ப்போம். பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வோம். இல்லையென்றால் பிரிந்து விடுவோம் என்ற ஒரு புதிய உறவு நிலை தூர இடங்களில் இருந்து வந்து நகரங்களில் வேலை செய்யும் இளையவர்களிடம் பரவி வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் இரண்டு வருடமாக கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பொருத்தம் பார்க்க வருகிறார்கள்.

உலகமே ஒரு கிராமமாக சுருங்கி, பணம் மட்டுமே பிரதானம், பணத்திற்கு முன்னால் உயரிய கலாச்சாரம் முக்கியமில்லை என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமூகத்தில் இது போன்றவைகள்  தவிர்க்க முடியாதவை. ஆகவே ஒரு மூன்று வயது குழந்தைக்கு ஒரு வாழ்க்கையா, இரண்டு வாழ்க்கையா என்பது பற்றி இப்போதே கவலைப்படாதே. உன் மகளின் திருமண வயதின் போது கல்யாணம் என்பதே கேலிக்கூத்தாக இருக்கலாம்.

மிக முக்கியமான விஷயத்திற்கு வருவோம். மகளின் ஜாதகத்தில் ஆயுளைக் குறிக்கும் எட்டாம் பாவகம் பாதிக்கப்பட்டிருப்பதாக குழம்பிப் போயிருக்கிறாய். குழந்தையின் ஜாதகத்தில் எட்டாம் அதிபதி புதன் உச்சமாகி, பின் வக்ரம் பெற்று ராகுவுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து கிரகணமடைந்திருக்கிறார். அதே நேரத்தில் அஷ்டமாதிபதியை வலுவிழக்கச் செய்த ராகுவின் தசை அவளுக்கு 80 வயதிற்கு மேல்தான் வரும். உன்னுடைய கணிப்பின்படி ராகு கெடுதல்களைச் செய்ய வேண்டும் என்றாலும் அது குழந்தையின் 80 வயதிற்கு பிறகுதான் நடக்கும்.

அஷ்டவர்க்க பரல்களில் லக்னமும், எட்டாமிடமும் 28 பரல்கள் வாங்கி இருப்பது ஆயுளுக்குச் சிறப்பு. அதைவிட மேலாக ஷட்பலத்தில் ஆயுள் ஸ்தானாதிபதியான புதன் எட்டு ரூபா பலம் வாங்கி நல்ல நிலையில் இருக்கிறார். ஆயுள்காரகனும்,  லக்னாதிபதியுமான சனி ஷட்பலத்தில் முதல் நிலையில் இருக்கிறார். எனவே மகளுக்கு அற்பாயுள் தோஷம் இல்லை. லக்னாதிபதி கேந்திர பலம் பெற்று, லக்னத்தை இரண்டு சுபர்கள் பார்க்கும் நிலையில் ஒருவருக்கு அற்பாயுள் அமைப்பு கிடையாது.

கடிதத்தில் நீ கேட்டிருக்கும் பாதகாதிபதி சுக்கிர தசையில் ஏதேனும் கெடுதல்கள் நடக்குமா என்று பார்த்தால், சுக்கிரனுக்கு எட்டாமிடத்தில் 7, 8-க்குடைய சூரிய, புதனின் பார்வையைப் பெற்ற கேதுவின் புக்தியில் உன் மகளுக்கு சில பிரச்சனைகள் இருக்கலாம். அப்போது உன் மகளின் வயது 57 ஆக இருக்கும் அதைப் பற்றி இப்போதே ஆராய்வது தேவையற்றது.

ஒரு ஜோதிடர் எதிர்காலத்தைப் பற்றி நாற்பது மாதங்களுக்கு மேல் ஆராயக் கூடாது, அது அவருக்கு தெரிய அனுமதிக்கப் படாது என்ற ஒரு விதி ஜோதிடத்தில் இருக்கிறது. இந்த நாற்பது மாதம் என்பது ஒரு தசையின் நீண்ட புக்தி காலமான சுக்கிர தசையில், சுய புக்தி காலமாகும். அதாவது ஒரு ஜோதிடர் தன்னிடம் வரும் ஜாதகத்தின் பலனை ஒரு புக்தியைத் தாண்டி சொல்ல முடியாது என்பதே இதன் உட்கருத்து.

மூன்று வயது மகளுக்கு தற்போது தேவைப்படும் கல்வியைப் பற்றி மட்டுமே யோசி. அனைத்தும் பரம்பொருளின் கையில் மட்டுமே இருக்கிறது. எதிர்காலம் சர்வ நிச்சயமானது. அதை மனிதராய்ப் பிறந்த யாராலும் மாற்ற இயலாது. நீ பயப்படும் அளவிற்கு மகளின் ஜாதகத்தில் எதுவுமில்லை. வாழ்த்துக்கள். மகளே.

One thought on “மகளுக்கு ஆயுள் குறைவா?-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *