ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஒரு மகள், பட்டுக்கோட்டை.
கேள்வி.
தந்தைக்கு வணக்கம். இந்தக் கடிதத்தை கண்ணீருடன்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். கஜா புயலால் எங்களது 20 ஏக்கர் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்து விட்டது. 2 ஆயிரம் மரங்களை இழந்து வாழ்வாதாரம் இழந்து விட்டோம். 20 வருடம் பின்னோக்கி சென்று விட்டோம். இந்தப் புயல் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் பாதித்து விட்டது. நான், கணவர், மகள் ஜாதகப்படி எதனால் எங்களுக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது? கணவர் அரசியலில் மாவட்ட அளவில் தலைவராக இருக்கிறார். வரும் தேர்தலில் மாவட்ட அளவில் நின்றால் ஜெயிக்க முடியுமா? மூன்றுமுறை நின்று தோல்வி அடைந்திருக்கிறார். அவரது ஆசை எந்த வயதில் நிறைவேறும்? அல்லது அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு விவசாயி ஆக மட்டும் இருக்கலாமா? என் மகளுக்கு ஒரு வயதில் காலில் சிறு மச்சம் போல வெண்புள்ளி வந்தது. அப்போதே ட்ரீட்மெண்ட் எடுத்தும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் வெள்ளைப் புள்ளிகள் இருக்கிறது. இது வெண்குஷ்டம் இல்லை, உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த நோய் இருந்திருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். பார்க்க அசிங்கமாக தெரியுமே தவிர இது நோய் இல்லை என்றும் சொல்கிறார். ஆனாலும் குடும்பம் முழுவதும் மனவேதனையுடன் இருக்கிறோம். பார்க்காத வைத்தியம் இல்லை. மகள் கஷ்டப்பட்டதுதான் மிச்சம். ஏழு வயதில் இருந்து தைராய்டு மாத்திரை சாப்பிடுகிறாள். கிட்டப்பார்வை வேறு. மகளுக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்? வெண் புள்ளி மறையுமா? இது எனது மகளின் கல்யாண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா? மகளின் 12 வயதில் இந்த கேள்வி உங்களுக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு தாயாக இருந்து உங்கள் பதிவுகளை எல்லாம் பார்த்த பின்னர் என் மகள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பயமாக இருக்கிறது. இப்போதுள்ள செல்வம், புகழ் எல்லாம் என் மகளுக்கு நிலைத்து நிற்குமா? தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்.
பதில்.
(கணவர் 8-10-1973, காலை 11 மணி, பட்டுக்கோட்டை. மனைவி 9-9-1977, காலை 8-10 பட்டுக்கோட்டை, மகள் 10-4-2007, மதியம் 2-58 தஞ்சாவூர்)
மகளே... உயரிய இந்தியக் கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் எப்படி இருப்பாள் என்பதற்கு ஒரு உன்னத ஆதாரமாக நீ பக்கம் பக்கமாக கண்ணீர் வடித்து எழுதியிருந்த கடிதம் அமைந்திருந்தது. அத்தனை பக்கங்களிலும் கணவர் மற்றும் குழந்தையின் பிரச்சினைகளை மட்டுமே கேட்டிருந்த நீ, உன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையே? இந்தியத் திருநாட்டின் முதுகெலும்பு விவசாயி என்றால், இந்தியக் குடும்பங்களின் முதுகெலும்பு உன்னைப் போன்ற கணவர், குழந்தைகளின் நலன் மட்டும் வேண்டி, தன் நலத்தை விரும்பாத குடும்பத்தலைவிகள் மட்டும்தான்.
மகளே... ஓரளவு ஜோதிடம் அறிந்திருக்கிறாய். குடும்பத் தலைவனுக்கு அல்லது குழந்தைகளுக்கு கடுமையான காலம் நடக்கும் போது, குடும்பத்தில் மிகப் பெரிய துன்பம் வரும் என்பது ஒரு ஜோதிட விதி. உன் கணவருக்கு தனுசு லக்னமாகி கஜா புயல் அடித்த போது சனி தசையில், சுக்கிர புக்தி நடந்து கொண்டிருந்தது. தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் கொடிய பாவி என்பதால் சுக்கிரன் புக்தி எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் துன்பம் தரும் நிகழ்வுகள் இருக்கும். கணவரின் ஜாதகத்தில் சுக்கிரன் 12-ம் இடத்தில் அமர்ந்து, தன்னுடைய ஆறாம் வீட்டையே பார்ப்பதால் சுக்கிரபுக்தி நடை பெறும் போது வயதுக்கேற்ற வகையில் பெரிய துன்பங்கள் இருக்கும்.
உன்னுடைய குழந்தைக்கும் பூராட நட்சத்திரமாகி, தற்போது கடுமையான ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு சனி நடந்து கொண்டிருக்கும்போது குடும்ப தலைவருக்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய கஷ்டங்கள் இருக்கும். கஜா புயல் ஆரம்பித்தபோது உன் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அருகில் சனி இருந்தார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு குழந்தையின் அமைப்புப்படி நீயும் கணவரும் மன அழுத்தத்துடன் இருக்க வேண்டும் என்பதால் கஜா புயலில் எல்லாவற்றையும் இழந்து விட்டர்கள். புயலால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்ப ஜாதகங்களிலும் இது போன்ற அமைப்பு கண்டிப்பாக இருக்கும். உன்னுடைய ஜாதகப்படியும் தற்போது சுபத்துவ அமைப்புகள் இல்லாத கேது தசையில் ராகு புக்தி நடைபெறுவதும், உன்னுடைய வாழ்வாதாரம் அழிந்ததற்கான ஒட்டுமொத்த காரணம்.
ஒரு இருபது வருடம் பின்னோக்கி சென்று விட்டோம் என்று எழுதியிருந்தாய். கவலைப்படாதே.. அந்த அளவிற்கு மோசமான நிலைக்கு நீ போய் விட மாட்டாய். கணவருடைய ஜாதகப்படி தற்போது நடக்கும் சுக்கிரபுக்தி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது அதன்பிறகு நல்லவை நடக்க ஆரம்பிக்கும். இரண்டு வருடங்களில் நிலைமை நல்லபடியாக மாறும். 20 வருடம் நீ பின்னோக்கி போவதற்கான அவசியம் கண்டிப்பாக இருக்காது.
சூரியன் பத்தாமிடத்தில் திக்பலமாக, குரு பார்வையுடன் இருப்பதால் உன்னுடைய கணவர் அரசியலை விட மாட்டார். நடைபெறும் சனி தசை கணவருக்கு சாதகமான பலனைத் தராது என்பதால் அரசியலில் அதிகாரம் செய்யும் நேரடியான பதவிக்கு அவருக்கு தடை இருக்கிறது. கட்சிப் பதவியில் அவர் நிலைத்திருப்பார். யார் சொன்னாலும் அவர் அரசியலிலிருந்து விலக மாட்டார். தற்போது வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிற்க வேண்டாம். சரியாக வராது. பண இழப்புகள் இருக்கும். ஆனால் உன் கணவர் இதைக் கேட்க மாட்டார். அவருக்கு சில நெருக்கடிகள் இருக்கும்.
மகளின் ஜாதகப்படி, லக்னாதிபதி எட்டில் மறைந்து, தோலுக்கும் நரம்புகளுக்கும் காரணமான புதன் நீசமாகி, லக்னாதிபதியுடன் இணைந்த நிலையில், ஆறுக்குடைய சனி ஆறாமிடத்தை தொடர்பு கொள்வதால், நீ குறிப்பிடும் வெண்புள்ளி நோய் இருக்கிறது. அதேநேரத்தில் மகளது ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், சனி ஆகிய நால்வரையும் வலுத்த குரு பார்ப்பது சிறப்பான ஒன்று.
லக்னத்தோடு பாபத்துவம் பெற்ற ராகு-கேதுக்கள் தொடர்பு கொள்ளும் நிலையிலும் ஒருவருக்கு தோல்நோய் இருக்கும். அந்த அமைப்பும் மகளுக்கு இருக்கிறது. ஜாதகப்படி ஏழரைச்சனி முடிந்த பிறகு 16 வயது முதல் இந்த வெண்புள்ளிகளுக்கு தீர்வு உண்டு. லக்னாதிபதி சூரியன், நீச புதன், நோய் ஸ்தானாதிபதி சனி மூவரையும் குரு வலுப்பெற்று பார்ப்பதால் நிச்சயம் நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த நோயால் அவளது திருமணத்திற்கு பாதிப்புகள் இருக்காது. சந்திர தசையின் பிற்பகுதியிலிருந்து நோய் குறைய ஆரம்பிக்கும். வெண்புள்ளிகளை பற்றி கவலைப்பட வேண்டாம்.
ஏழாம் அதிபதி பாபராகி 12ல் மறைந்து, குருவின் பார்வையில் இருப்பதால் அவளது திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. சிம்ம லக்னத்தில் பிறந்த அவளுக்கு 64 வயது வரை யோக தசைகள் நடப்பதால், எதிர்காலத்தில் மிகவும் நன்றாகவே இருப்பாள். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு உன் வாழ்க்கை சீரடையும். நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.