ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஆர். கிருத்திகா, அவிநாசி.
கேள்வி.
மத்திய அரசுப் பணியில் உள்ள எனக்கு எனது துறையில் மேல் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதா? இரண்டு வருடங்களுக்கு முன்னால் நிச்சயதார்த்தம் நடந்து, நின்று போனதால் மிகுந்த மனவருத்தத்தில் உழன்று கொண்டிருக்கிறேன். திருமணம் எப்பொழுது நடைபெறும்? கணவர் அமைவது உறவிலா, அந்நியத்திலா? படித்து வேலைக்குச் செல்லும் வரன் அமையுமா? திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்குமா? எனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கும், நம்பிக்கை துரோகங்களுக்கும் பதிலாக நான் நன்றாக வாழ்ந்து காட்டும் அமைப்பு உள்ளதா?
பதில்.
(ரிஷப லக்னம், தனுசு ராசி. 1ல் சூரி, புத, சுக், குரு. 2ல் செவ், 4ல் கேது, 8ல் சந், சனி 10ல் ராகு, 23-5-1989 காலை 7-5 அவிநாசி)
ரிஷப லக்னமாகி, எனது சுபத்துவ சூட்சுமவலு தியரிப்படி, அரசுப்பணிக்கான சூரியன் லக்னத்தில் புதன், ஆட்சி பெற்ற சுக்கிரன், திக்பல குரு ஆகிய மூன்று சுபர்களோடு இணைந்து மிகுந்த சுபத்துவமாகி இருப்பதால் சூரிய தசையில் மத்திய அரசு வேலை கிடைத்து அரசு பணியில் இருக்கிறாய். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து உனக்கு பதவி உயர்வுகள் உண்டு. ஒய்வு பெறும்போது மிக மேலான நிலையில் இருப்பாய்.
நல்ல யோக ஜாதகம் உன்னுடையது என்பதால், நல்லவேளையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிச்சயார்த்தம் நின்று விட்டது. அந்தத் திருமணம் நடந்திருந்தால் மூல நட்சத்திரத்தில் பிறந்து கடுமையான ஜென்மச்சனி அமைப்பில இருக்கும் நீ வாழ்க்கையை தொலைத்திருப்பாய். தற்போது இருக்கும் மன உளைச்சலை விட மிக அதிகமான வேதனைகளை நின்றுபோன திருமணம் உனக்கு தந்திருக்கும். லக்னாதிபதி சுபதத்துவமாகி ஜாதகம் யோகமாக இருப்பதால். நல்லவேளையாக அந்த திருமணம் நடக்கவில்லை.
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், எட்டில் சனி என்றாகி, ராசிக்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து, செவ்வாயும், சனியும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டிருக்கும் உன்னுடைய ஜாதக அமைப்புப்படி, 30 வயதிற்கு மேல்தான் உனக்கு திருமணம் ஆக வேண்டும்.
அப்போது நடக்கும் திருமணம்தான் உனக்கு நிலைத்திருக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உனக்கு திருமணம் நடைபெற வாய்ப்பில்லை. அதுவரை பொறுமையாக இரு. அடுத்த வருடம் ஏப்ரலுக்கு பிறகு நடைபெற இருக்கும் சந்திரதசை, செவ்வாய் புக்தியில் உனக்கு திருமணம் நடைபெறும். மாப்பிள்ளை அந்நியர்தான். நன்கு படித்து நல்ல வேலை செய்பவராக இருப்பார். திருமணத்திற்கு பிறகு மிகவும் நன்றாக இருப்பாய். பொறுத்தார் பூமி ஆள்வார். நல்ல வாழ்க்கை உனக்கு அமையும். கவலைப்படாதே.
ஏ. செய்யது சுல்தான் பீவி, மதுரை.
கேள்வி.
குருஜி அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த சலவாத்தும் சலாமும் உரித்தாகுக. திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தும் இதுநாள் வரை கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இனிமேலாவது வாழ்வில் வசந்தம் வீசுமா? பிறப்பு ஜாதகத்தில் யோகங்கள் நன்றாக இருக்கிறதா? அரசு வேலை கிடைக்குமா அல்லது கணவரோடு சேர்ந்து டூவீலர் மெக்கானிக் தொழிலை மேனேஜ்மென்ட் செய்யலாமா? வளர்த்த கடா மார்பில் குத்தியது போல எதிரே போட்டி இருக்கிறது. இதில் வெற்றி காண்பேனா?
பதில்.
(மகர லக்னம், துலாம் ராசி. 4ல் புத, சுக், 5ல் சூரி, ராகு, 10ல் சந், செவ், சனி, 11ல் கேது, 12ல் குரு, 15-5-1984 அதிகாலை 12-30 மதுரை)
வலிமையான குரு, நான்காமிடத்தில் இருக்கும் புதன், சுக்கிரனைப் பார்த்து, அந்த புதனும் சுக்கிரனும் பாபக்கிரகங்களான செவ்வாய், சனி மற்றும் சந்திரனைப் பார்த்த யோக ஜாதகம் உங்களுடையது. புதன் அதிக வலுப் பெற்றதால் மிக உயர் படிப்புகளைப் படித்தி இருக்கிறீர்கள். அரசு வேலை கிடைப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தடை இருக்கிறது. அதுவரை பத்தாமிடத்தில் செவ்வாய், சனி சுபதத்துவமாக இணைந்திருப்பதால் டூவீலர் தொழிலையே நிர்வாகம் செய்யலாம்.
அடுத்தடுத்து வர இருக்கும் கேது, சுக்கிர தசைகள் யோகம் செய்யும் என்பதால் எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது. ஆறாமிடம் சுபமாக இருப்பதால் போட்டிகளை ஜெயிக்க முடியும். எதிர்ப்புகள் என்பது தற்காலிகமானதுதான். 2021ல் ஆரம்பிக்கும் புதன் தசை, செவ்வாய் புக்தி முதல் வாழ்க்கையில் நிம்மதி கிடைத்து சீரான எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள்.
புவனேஸ்வரி, சிதம்பரம்.
கேள்வி.
ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கிறேன். குரு தசை நடைபெறுகிறது. ரிஷபத்திற்கு குரு தசை நல்ல பலன்களை செய்யாது என்று சொல்லி இருக்கிறீர்கள். எனக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கணவருக்கு வேலை வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையவில்லை. அவர் வெளிநாடு செல்வதற்கு வேலை தேடுகிறார். எதுவும் அமையவில்லை. இரண்டு குழந்தைகள் இருப்பதால் என்னாலும் வேலைக்கு போக முடியவில்லை. வீட்டில் இருக்கும் சூழ்நிலை எனக்கு பயத்தையும் மனக்கஷ்டத்தை அதிகமாக்குகிறது. கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? எனது குரு சுபத்துவமாக இருக்கிறாரா அல்லது பாபத்துவமாக இருக்கிறாரா? இந்தக் குரு தசையில் என்னுடைய எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
பதில்.
(கணவன் 14-6 1983, பகல் 1-50 நெய்வேலி, மனைவி 10-9-1991 இரவு 10-42 சிதம்பரம்)
ஜோதிடத்தில் ஒரு விதிக்கு ஏராளமான விதிவிலக்குகள் இருக்கின்றன. ரிஷப லக்னத்தில் பிறந்து குரு தசை நடக்கும் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் ஆவார்கள் என்று சொல்லவே முடியாது. சுபத்துவ அமைப்பில் உள்ள ஒரு கிரகம் தனது சுப காரகத்துவங்க்களை மட்டுதான் கொடுக்குமே தவிர கஷ்டங்களை தராது.
எட்டாம் அதிபதி சுபராகி 8- 12ஆம் இடங்களோடு தொடர்பு கொள்வாராயின் ஒருவர் வெளிநாட்டில் வாழ வேண்டும், நீடித்து இருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி உன்னுடைய ஜாதகத்தில் ரிஷப லக்னமாகி 8க்குடைய குரு, நான்கில் அதி நட்புடன் அமர்ந்து 8-12-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும், 12-ஆம் இடத்தை அதன் அதிபதி செவ்வாய் வளர்பிறை சந்திரனுடன் இணைந்து பார்ப்பதாலும், நடக்கும் எட்டுக்குடைய குரு தசையில் நீ வெளிநாட்டில் சென்று வசிக்கும் அமைப்பு இருக்கிறது.
குருதசை ரிஷப லக்னத்திற்கு அவயோகம் செய்யும் என்பது உண்மைதான். ஒருவகையில் பார்த்தால் வெளிநாடு செல்வது என்பதும் அவயோகம் தான். இங்கே இருந்தால் நினைத்தவுடன் தாய் தகப்பன் உடன் பிறந்தவர்கள் போன்றவர்களை பார்க்க முடியும். வெளிநாட்டில் இருந்தால் அம்மா அப்பாவை நினைத்தவுடன் பார்க்க முடியாது. எப்போதும் தனிமையான ஒரு உணர்வு இருந்து கொண்டிருக்கும்.
அட்டமாதிபதி தசையில் இதுபோன்ற தனிமை உணர்வும், கலக்கமும் சூழ்நிலையின் காரணமாக இருக்கும் என்பது ஜோதிட விதி. உன்னுடைய குரு புதனுடைய வீட்டில் அமர்ந்த கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் வரும் கேது புக்தியில் நீயும் கணவருடன் வெளிநாடு செல்லும்படி இருக்கும்.
கணவரின் ஜாதகப்படி கன்னி லக்னமாகி எட்டுக்குடைய செவ்வாயும். 12-க்குடைய சூரியனும், சுக்கிரனின் வீட்டில் இணைந்து, அம்சத்தில் செவ்வாய் அதிநட்பு வீட்டில் அமர்ந்து, ராசியில் குருவின் பார்வையில் சுபத்துவமாக சூரியன் செவ்வாய் இருவரும் இருப்பதால் கணவருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கும் அமைப்பு இருக்கிறது.
தற்போது கணவருக்கு வெளிநாட்டை குறிக்கும் நீர் ராசியான கடகத்தில் அமர்ந்த சுக்கிர தசை நடப்பதால், வரும் மே மாதம் ஆரம்பிக்க இருக்கும் செவ்வாய் புக்தியில் வெளிநாட்டு முயற்சிகள் பலிக்கும். சுக்கிரனை அடுத்து வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் என அனைத்து தசைகளும் 8- 12ஆம் இடங்களை தொடர்புபடுத்தி குருவின் பார்வையில் இருப்பதால், நீயும், கணவரும் நீண்ட நாட்கள் வெளிநாட்டில் நன்றாக இருப்பீர்கள். குரு தசை உனக்கு பெற்றோர்களைப் பிரிந்து கணவருடன் சந்தோஷமாக இருக்க கூடிய வெளிநாட்டு அமைப்பினை கொடுக்கும். வேறு தீமைகளைச் செய்யாது. வாழ்த்துக்கள்.