adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (11.02.19 முதல் 17.02.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்: 

வார ஆரம்ப நாளில் மேஷநாதன் செவ்வாய் சந்திரனுடன் இணைந்து ஆட்சி நிலையில் இருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு நற்பலன்கள் அதிகம் உண்டு. கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகள் இருக்காது. உங்களைப்  பிடிக்காதவர்கள் அடங்கி இருப்பார்கள். உங்களின் சிந்தனை, செயல்திறன் மேலோங்கிய நிலையில் இருக்கும். சிலருக்கு அம்மாவால் செலவுகள் உண்டு. மனம் உற்சாகமாக இருக்கும்.  அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்லபெயர் கிடைக்கும்.

உங்களில் சிலர் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னிய மத நண்பர் கை கொடுப்பார். வீட்டில்  கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பெண்கள் உதவுவார்கள். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்:

எட்டில் இருக்கும் சனியுடன் ராசிநாதன் சுக்கிரனும் இணைந்திருப்பதால் இந்த வாரம் நிதானமான வாரம்தான். எதையும் நல்லபடியாக முடிப்பதற்கு கடும் முயற்சி தேவைப்படும். உங்களில் சிலருக்கு வேலைக்காரர்களால் விரையங்கள், பணஇழப்புகள் இருக்கும். கொடுக்கல், வாங்கல்களிலும், வெளிஇடங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவதிலும் கவனம் தேவை. வேலைக்காரர்கள் திருடுவார்கள். அதிகாரம் செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

இளைஞர்களின் வேலையில் மாற்றம் ஏற்படும் காலம் இது. எதிலும் கவனமாக இருங்கள். அவசரப்பட வேண்டாம். தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிரிந்திருந்த கணவன் மனைவியர் சேருவார்கள். வழக்குரைஞர்கள் சிலர் தங்களின் தனிச்சிறப்பான வாதத்தால் கவனிக்கப் பெறுவார்கள். நீண்டநாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது நடக்கும்.

மிதுனம்:

மிதுனத்திற்கு தீய பலன்கள் எதுவும் நடக்காத வாரம் இது. உங்களில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம், வேலை போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் இருக்கும். இளைய பருவத்திருக்கு திருமண விஷயங்கள் கூடி வரும். கணவன் மனைவி உறவு ஒத்துழைப்புடன் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இது நல்ல வாரம்.

வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வர இருக்கும் ராகு-கேதுப்பெயர்ச்சியில் இருந்து உங்களுடைய ஜீவன அமைப்புகள் நன்கு முன்னேற்றம் அடைந்து பொருளாதார லாபத்தை தரும் என்பது உறுதி. பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் வாரம்தான். தொழில் நன்றாக நடந்தாலும் பண வரவை தடுக்கப்படும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

கடகம்:

கடகத்திற்கு இப்போது தொட்டது துலங்கும் நேரம் என்பதால் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை இப்போது செய்யலாம். அதனால் லாபங்கள் இருக்கும். இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாக முடிவுக்கு வரும். வராது என்று கை விட்ட பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கிடைக்கும்.

வாரம் முழுவதும் ஆறாமிடத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதால், சிலருக்கு பெண்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் வரும். இளம் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.

சிம்மம்:

சிம்மத்திற்கு பிரச்சினைகள் தீரும் வாரம் இது. வாரஇறுதியில் ராசிநாதன் சூரியன் ஏழாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போவதால் எதிரிகளை ஜெயிப்பீர்கள். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்து சிம்மத்தினரின் வாழ்க்கையிலும் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும். நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். வேலை, வியாபாரம் போன்றவற்றில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்டநாள் வராத வாடகை, குத்தகை பணம் வசூலாகும்.

அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் எதிர்ப்புகள் அகலும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள். தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களின் முயற்சிகள் அனைத்தும் இந்த வாரம் வெற்றி பெறும். வார இறுதியில் சூரியன் ஆறாமிடத்திற்கு மாறுவதும், ராசிநாதன் புதனுடன் இணைவதும் நல்ல அமைப்புகள் என்பதால் அதிர்ஷ்டம் இப்போது கை கொடுக்கும். குறிப்பாக வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் குறை நீங்கப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் போன்றவைகளில் நல்லபலன்களும் பணவரவும் இருக்கும். விவசாயிகளுக்கு இது நன்மை தரும்

அனைத்திலும் சாதகமான மாற்றங்கள் இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். புதிய முயற்சிகள் கை கொடுக்கும். யாருடனும் சண்டை செய்யாதீர்கள். தொழில் செய்பவர்களுக்கு தடங்கல்களும் முட்டுக்கட்டைகளும் விலகும். 10-ம் தேதி இரவு 7.37 முதல் 13-ம் தேதி அதிகாலை 4.19 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.

துலாம்:

துலாமுக்கு பிரச்னைகள் அனைத்தும் சுமுகமாக தீரும் வாரம் இது. சுக்கிரன், சனி இணைந்திருப்பதால் உங்களில் சிலர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். தொல்லைகள் இல்லாத வாரம் இது. நட்புக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எதையும் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அவர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் சிலருக்கு அம்மாவே ஆதரவாக இருக்க மாட்டார்.

இந்த வாரம் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். உங்களில் சிலருக்கு இருந்து வந்த மன உளைச்சல்கள் நீங்கும். 16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி அதிகாலை 4.19 முதல் 15-ம் தேதி காலை 9.32 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

விருச்சிகம்:

விருச்சிகத்தினருக்கு நிம்மதியை தரும் சம்பவங்கள் இந்த வாரம் இருக்கும். தைரியம் பிறக்கும் வாரம் இது. சனி சுக்ர சேர்க்கையால் இனிமேல் பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும் உங்களில் சிலருக்கு இந்த வாரம் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. தந்தைவழி உறவினர்களால் சிறு பிரச்சினைகள் வரும். கவனமாக இருங்கள்.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பேசக் கூடிய மற்றும் சொல்லித்தரக் கூடிய தொழில்களில் மார்க்கட்டிங், ஆசிரியர் பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும். 15-ம் தேதி காலை 9.32 முதல் 17-ம் தேதி காலை 11.23 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின்னாளில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். 

தனுசு:

தனுசுக்கு இந்த வாரம் எதிலும் தடைகளாக இருக்கும். உங்களில் இரும்பை கையில் வைத்துக் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள், ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. ராசியில்  சனி, சுக்கிரன் இருவரும் இருப்பதால் சிலர் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதத்தைக் காட்டுவீர்கள். விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்கலாம் என்பதை இந்த வாரம் புரிந்து கொள்வீர்கள்.

ஜென்மச் சனி நடப்பதால் இளைஞர்கள் பாதிப்புகளில் இருக்கிறீர்கள். வேலை, தொழில் விஷயங்களில் இளைஞர்களுக்கு எதிர்மறை அனுபவங்கள் நடக்கின்றன. சனிக்கான பரிகாரமாக சனிக்கிழமை இரவு சிறிது எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்து, மறுநாள் சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு விருப்பமான உணவு அளியுங்கள். இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மகரம்:

ராசிநாதன் வலுப்பெற்றால் கெடுதல்கள் நடக்காது என்ற விதிப்படி இந்தவாரம் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. குருபகவான் தயவால் எதையும் சமாளிக்கும் திறனும், தைரியமும் பெறுவீர்கள். சனியின் தாக்கத்தை சுலபமாக சமாளிப்பீர்கள். இருந்தாலும் இளைஞர்கள் புதிதாக எந்த தொழில் முயற்சிகளும் ஆரம்பிக்க கூடாது. இப்போது எந்த நிலை இருக்கிறதோ அது நீடிக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும். பாகப்பிரிவினை போன்றவைகள் இப்போது வேண்டாம். சொத்துப் பிரச்னைகளைத் தள்ளி வைப்பது நல்லது.

சிலருக்கு வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். செவ்வாய் சுபமாக இருப்பதால் சகோதரர்களுக்கு நன்மை தரும் விஷயங்களும்,  இழுபட்டுக் கொண்டிருந்த தங்கையின் திருமண விஷயம் உறுதியாவதும் உண்டு. சகோதரிகளுக்கு சிலர் உதவி செய்வீர்கள். என்னதான் செய்தாலும் அண்ணன் ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவதையும் கேட்பீர்கள். மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கும்பம்:

கும்ப ராசிக்கு இது வருமான வாரமாக இருக்கும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். பிறந்த ஜாதகத்தின்படி புதன் தசை, புதன் புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். நிலையான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நிரந்தர வருமானம் வரும். உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தவர்கள் மனம் மாறி உங்களுக்கு சாதகமாக திரும்புவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் தடையின்றி நடக்கும். தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட பலனாக பணி புரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ,  ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் குறைந்து பிரச்னை இல்லாத நிலைமை ஏற்படும். சிலர் வெளிநாடு செல்வதற்கு இப்பொழுது வாய்ப்புக்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெங்களூர், மும்பை, டில்லி என்று அலைந்து திரிவீர்கள்.

மீனம்:

முடிக்க முடியாமல் இருந்த விஷயங்களை மீனத்தினர் முடித்துக் காட்டும் வாரம் இது. எதிலும் சாதிப்பீர்கள். சிலருக்கு மகன் மகள்களால் இருந்து வந்த சங்கடங்கள் விலகி அவர்களால் இனி சந்தோஷம் இருக்கும். சகோதர ஸ்தானம் வலுவாக இருப்பதால் இளைய பருவத்தினருக்கு அண்ணன், அக்காக்கள் மூலமாக நன்மைகளும், உதவிகளும் உண்டு. வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், தூரப் பயணங்களும் இருக்கும். போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் சாதகமான திருப்பங்களை காண்பார்கள்.

சுக்கிரன் பத்தாமிடத்தில் இருப்பதால் பெண்களால் செலவுகள் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் பொருள் வாங்கி கொடுப்பீர்கள். அம்மாவின் வழியில் வீண் செலவுகள் வரும். இளையவருக்கு திருமணம் கை கூடி வரும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் இருக்கும். தனியார்துறை ஊழியருக்கும்,  கலைஞர்களுக்கும் சிக்கல்கள் எதுவும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *