ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஜோதிடத்தில் மாரகாதிபதி, பாதகாதிபதி என்ற இரு அமைப்புகள் இருக்கின்றன. மாரகம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் என்று பொருள் கொள்ளலாம். பாதகம் என்பதன் அர்த்தம் எல்லோரும் அறிந்ததுதான்.
கொலை, கொள்ளை, போன்றவைகளை பஞ்ச மாபாதகங்கள் என்ற வரிசையில் வைப்பதிலிருந்தே பாதகம் என்பது எதிர்பாராத, மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கும் ஒரு தீங்கான செயல் என்பதை அறிய முடியும்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில், மரணத்தையோ அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தையோ தருபவர்கள் மாரகாதிபதிகள் என்றும், மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுபவர் பாதகாதிபதி என்றும் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார்கள்.
பனிரெண்டு ராசி வீடுகளும் ஜோதிடத்தில் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று வெவ்வேறு தன்மை கொண்ட வீடுகளாக வகைப்படுத்திக் காட்டப்படுகின்றன. இதில் சர லக்னங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களுக்கும் இரண்டு மற்றும் ஏழாம் பாவகங்களுக்கு அதிபதிகளாக வரும் கிரகங்கள் மாரகாதிபதிகளாவார்கள்.
ஸ்திர லக்னங்கள் எனப்படும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு லக்னங்களுக்கும் மூன்று மற்றும் எட்டாம் வீடுகளின் அதிபதிகள் மாரகாதிபதிகளாகவும், மீதமுள்ள உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு. மீனம் ஆகிய நான்கிற்கும் ஏழு மற்றும் பதினொன்றாம் வீடுகளின் அதிபதிகளும் மாரகாதிபதிகளாக வருவார்கள்.
பாதகாதிபதி எனப்படுவது சற்று வேறுபட்டது. மாரக வீடுகளைப் போல் ஒரு ஜாதகத்தில் பாதகவீடு இரண்டு எண்ணிக்கைகளைக் கொண்டதல்ல. பாதகாதிபதி என்பவர் ஒருவர் மட்டும்தான். அவர் செய்யப் போகும் ஒரு செயல் அந்த ஜாதகருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியான ஒன்று என்பதால் பாதகம் என்பது தனித்துவமாகி பாதகாதிபதி என்பவர் தனித்த ஒருவர் மட்டுமேயாகிறார்.
மேலே சொன்ன மூன்று வெவ்வேறு இயக்கங்களைக் கொண்ட சர, ஸ்திர, உபய வீடுகளில், சர லக்னங்களுக்கு பதினொன்றாம் வீடும், ஸ்திரத்திற்கு ஒன்பதும், உபயத்திற்கு ஏழாமிடமும் பாதகஸ்தானமாகி, இந்த வீடுகளின் அதிபதிகள் மிகப் பெரிய ஒரு தீங்கினைச் செய்யும் பாதகாதிபதியாக வருகிறார்கள்.
அதேநேரத்தில் ஒரு மனிதனின் ஆயுளையும், அவனது மரணம் எப்படி நிகழும் என்பதையும் ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாம் பாவகம் குறிப்பிடுகிறது. ஆயுளைக் குறிப்பது எட்டாமிடம் என்றாலும் உயிர் வாழ்வது என்பது லக்னம் லக்னாதிபதி சம்பந்தப்பட்டது என்பதால், ஒரு மனிதனை உயிர் வாழும் நிலையை லக்னம், லக்னாதிபதி, எட்டாமிடம், எட்டின் அதிபதி மற்றும் ஆயுள் காரகனாகிய சனியின் நிலைகொண்டு அறிந்து கொள்ள முடியும்.
ஒருவரின் மரணம் என்பது பாதகாதிபதி, மாரகாதிபதி, அஷ்டமாதிபதி ஆகிய மூவரின் தசா, புக்திகளிலோ அல்லது இவர்கள் மூவரோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா, புக்திகளிலோ நடக்கும். சில நிலைகளில், தன்னைத் தொடர்பு கொண்ட கிரகங்களின் பலனை ராகு, கேதுக்கள் எடுத்துச் செய்வார்கள் என்ற விதிப்படி ராகு-கேதுக்களின் தசா, புக்திகளில் மரணம் நடக்கும்.
ஜோதிடத்தில் அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்காயுள் என மூன்று விதமான உயிர் வாழும் நிலைகள் சொல்லப்படுகின்றன. இதில் அற்பாயுள் எனப்படுவது ஒருவர் முப்பது வயதுகளில் இறப்பதையும், மத்திம ஆயுள் என்பது நடுத்தரமான அறுபதுகளில் இறப்பதையும், தீர்க்காயுள் என்பது எண்பது வயதிற்கு மேல் உயிர் வாழ்வதையும் குறிக்கிறது.
ஒருவரின் வாழ்வுநிலை ஆண்டுகள் எவ்விதம் இருக்கும் என்பதை லக்னத்தையும், எட்டாம் வீட்டையும், இதன் அதிபதிகளையும் கொண்டு, மேலே சொல்லப்பட்ட மாரக, பாதக, அஷ்டமாதிபதிகளின் தசா, புக்திகள் அல்லது இவர்கள் சம்பந்தப்பட்ட தசா, புக்திகள் எப்போது வருகிறது என்பதையும் கணித்து உறுதிபடச் சொல்ல முடியும்.
லக்னம், லக்னாதிபதி, எட்டு, எட்டாமிட அதிபதி ஆகியோர் சுபத்துவமாகி, பாபக் கிரகங்களின் தொடர்பில்லாமல் இருக்கும் நிலைகளில், ஆயுள் காரகன் சனியின் சுப, சூட்சும வலுக்களைப் பொருத்து ஒருவரின் அற்ப, மத்திம, தீர்க்க ஆயுள் அமையும்.
முக்கிய ஒரு நிலையாக மாரகாதிபதி, பாதகாதிபதி என்றவுடன் மரணத்தையும், மிகப் பெரிய பாதகத்தையும் மட்டுமே செய்வார்கள் என்று கருதக்கூடாது. இங்கே பெரும்பாலானவர்களுக்கு பாதகாதிபதி பற்றிய தெளிவின்மை இருக்கிறது. குறிப்பாக பாதகாதிபதி என்பவர் தீங்கினை மட்டுமே செய்வார் என்ற கருத்தையே அதிகமானோர் கொண்டுள்ளனர்.
ஒரு கிரகம் தனக்குரிய கடமையை தனது தசா, புக்திகளில் ஜாதகரின் வயதுக்கேற்ற வகையில் செய்யும் என்பதே உண்மை. உதாரணமாக மேஷ லக்னக்காரர்களுக்கு இரண்டு மற்றும் ஏழாமிடத்திற்கு அதிபதியான சுக்கிரன், மாரகாதிபதி என்றாலும் அவரே ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி, குடும்பத்தை அமைத்துக் கொடுப்பவர் என்பதால் சுக்கிரன்தான் அவருக்கு இளம் வயதில் திருமணத்தையும் செய்து வைக்க கடமை கடமைப்பட்டவர். திருமண வயதில் இரண்டு ஏழுக்குரிய கிரகம் திருமணத்தை நடத்தி வைத்தே தீரும்.
அதேநேரத்தில் மாரக, பாதகாதிபதிகள் மாரக மற்றும் பாதகத்தன்மையை அதிகம் கொண்டிருந்தால், அதாவது மரணத்தைச் செய்யக்கூடிய இவர்கள், அதிகமான சுபத்தன்மையோடு இருந்தால் அந்த மனிதரின் ஆயுள் முடியும் காலம் வரும்போது இவர்களது தசா,புக்திகளில் நிச்சயம் மாரகத்தைச் செய்வார்கள். அதாவது நல்லதையும், கெட்டதையும் அந்த மனிதனின் பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப அந்தந்த வயதுகளில் ஒரே கிரகமே நடத்தும்.
சிலநேரங்களில் ஒரே கிரகமே மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதியாகவும் வருவதுண்டு. இதுபோன்ற நிலையில் அந்தக் கிரகம் அதிகமான சுபத்துவம் பெற்றிருந்தால், அந்தக் கிரகமே மிகப்பெரிய நன்மைகளையும் செய்து முடிவில் மாரக, பாதகங்களையும் செய்யும்.
உதாரணத்திற்கு மிதுன லக்னத்திற்கு ஏழாமதிபதியான குரு, பாதகாதிபதியாகவும் மாரகாதிபதியாகவும் அமைவார். இங்கே ஒரு கூடுதல் நிலையாக ஒரு சுப கிரகம் கேந்திரத்திற்கு அதிபதியாகக் கூடது என்பதன்படி குரு கேந்திராதிபத்திய தோஷம் பெற்று ஆதிபத்திய நன்மைகளையும் செய்ய மாட்டார்.
இதுபோன்ற சூழலில் குரு பாபியர் தொடர்பு பெறாமல், அதிக சுபத்துவம் மட்டும் அடைந்திருக்கும் நிலையில் தன்னுடைய மாரகம், பாதகம், கேந்திராதிபத்திய தோஷம் ஆகிய மூன்று விஷயங்களையும் அவரது தசையில் ஒருங்கே செய்வார்.
இதனை சுலபமாக விளக்க நம் அனைவருக்கும் தெரிந்த, சமீபத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டோமேயானால், அவருக்கு மிதுன லக்னமாகி, பாதக, மாரக, கேந்திராதிபத்திய தோஷ நிலைகளைப் பெற்ற குரு, ஏழாமிடத்தில், உச்சத்தை அடுத்த மூலத் திரிகோண வலுவுடன் பூரண சுபத்துவம் பெற்றிருந்தார்.
இங்கே குருவுக்கு வக்ரம், கிரகணம், அஸ்தமனம் போன்ற எவ்வித குறை நிலையும் இல்லை. அதேபோல செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எவ்வித பாபர்களின் தொடர்புகளும் அவரது ஜாதகத்தில் குருவுக்கு இல்லை.
இப்படிப்பட்ட பரிபூரண ஒளித்திறனுடன் கூடிய குருவின் தொடர்பை அவரது லக்னமும், ராசியும் பெற்றதால்தான் அவர் கோடியில் ஒருவராகி, தமிழக முதல்வர் எனும் உயர்நிலையை அடைந்தார். அதிலும் குருவின் தசை ஆரம்பித்ததும் அவர் அடைந்த வெற்றிகள் அவரது எதிரிகளின் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தன. அகில உலகமும் ஜெயலிதாவின் வெற்றிகளை பிரமிப்புடன் பார்த்தது.
ஆனால் வெற்றிகளைக் கொடுத்த அதே குருதான், தமிழக முதல்வராக அவர் இருந்த நிலையிலேயே, அவரது ராசிநாதனான சூரியன் கோட்சார அமைப்பில் கிரகண அமைப்பில் இருந்த ஒரு இருபது நாட்கள், அவருக்கு சிறைவாசம் என்ற பாதகத்தையும் செய்தார்.
மிகப்பெரிய அந்தஸ்துள்ள ஒரு மாநில முதல்வர், தனது பதவியில் இருக்கும் போதே சிறை செல்வது என்பது அவருக்கு எப்படிப்பட்ட மன உளைச்சலைக் கொடுத்திருக்கும் என்பதிலிருந்தே இது எப்பேர்பட்ட பாதகம் என்பது புரிய வரும். அதிலும் இது போன்ற உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் உயிரை விட மானத்தையே பெரிதாக நினைப்பார்கள்.
ஜெயலலிதா சிறை சென்ற அன்று அவர் இருந்த மனநிலையில் நீங்கள் இருந்து அவரது உணர்வுககளை உங்களால் உணர முடிந்தால் கிரகங்களின் விளையாட்டுக்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். முதலில் பாதகாதிபதியாக செயல்பட்டு சிறைவாசம் எனும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும் தீங்கான செயலை செய்து முடித்த இதே குருதான், அடுத்து சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியையும் கொடுத்து, பின் தனது இன்னொரு நிலையான மாரகாதிபதியாக செயல்பட்டு, அஷ்டமாதிபதி புக்தியில் அவருக்கு நோயால் மரணத்தையும் கொடுத்தார்.
ஏற்கவே ஆதிபத்திய ரீதியில் இதே குரு கேந்திராதிபதியாக செயல்பட்டு அவருக்கு குடும்பம், என்ற ஒரு அமைப்பைக் கொடுக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. குருவின் இந்த அமைப்பால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயா வெற்றி பெற்றால், உடனே மருத்துவமனையில் இருப்பார், 2017ல் ஜெயலலிதா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று நான் கூறியிருந்தேன்.
இதனைக் கணிக்க பெரிதும் உதவியது அவரது ஜாதகத்தில் மாரக, அஷ்டமாதிபதிகளான குருவும், சனியும் தங்களுக்குள் ஆறுக்கு எட்டாக இருக்கும் சஷ்டாஷ்டக நிலையில் இருந்ததும், சனி தனது வீடான எட்டாமிடத்தை, தானே பார்த்துக் கெடுத்து அவருக்கு அற்பாயுள் அமைப்பை உண்டாக்கியதும்தான்.
தீர்க்காயுளைத் தர வேண்டிய ஆயுள்காரகனான சனி, ஜெயலலிதாவின் ஜாதகத்தில் எவ்வித சூட்சும வலுவினையும் பெற்றிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் இங்கே அடைந்த ஒரே சுபத்துவம் பவுர்ணமிச் சந்திரனின் வீட்டில் இருக்கிறார் என்பதுதான். ஆனால் அது மட்டும் எண்பது வயதினைத் தாண்டும் தீர்க்காயுள் எனும் அமைப்பிற்குப் போதாது.
மேலும் சனி எட்டில் இருப்பதுதான் ஆயுள் பலம் என்று சொல்லப்படுகிறதே தவிர, எட்டாமிடத்தை பார்ப்பதால் இல்லை. எந்த ஒரு நிலையிலும் சனியின் பார்வை பார்க்கப்படும் வீடுகளுக்கு கெடுதலைத்தான் தரும். சனி சுபத்துவ மற்றும் சூட்சும வலுப் பெற்றிருந்தால் மட்டுமே சனியின் பார்வை ஓரளவு நன்மைகளைத் தரும்.
அப்படி இல்லாத நிலையில் தன் வீட்டைத் தானே சனி பார்த்தாலும் அந்த வீடு வலுவிழக்கத்தான் செய்யும். இதற்காகத்தான் லக்னாதிபதியாகவே சனி இருப்பினும், அவர் சுப, சூட்சும வலுவின்றி இருந்தால் லக்னத்தைப் பார்க்கவோ, லக்னத்தில் இருக்கவோ கூடாது என்று சொல்கிறேன்.
ஜெயலலிதாவின் ஜாதகத்தில் சனி இரண்டில், அவரது விரோதியான சந்திரனின் வீட்டில் பகைநிலை பெற்று பாபத்துவமாக அமர்ந்து, தனது எட்டாம் வீட்டை தானே பார்த்தது மிகவும் தெளிவான ஒரு அற்பாயுள் அமைப்பு. சனிக்கு இங்கே குருவின் பார்வையோ அல்லது வேறு விதங்களில் சுபத்துவ, சூட்சுமவலுவோ கிடைத்திருந்தால் ஜெயலலிதா இந்த வயதில் இறந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதேபோல சஷ்டாஷ்டக தசாபுத்திகள் வயதுக்கேற்ற வகையில் மிகக் கடுமையான பலன்களைச் செய்யும் என்பதும் ஜோதிடத்தின் மிக நுண்ணிய விதி. இங்கே குரு, சனியின் சஷ்டாஷ்டக அமைப்பால் மாரகாதிபதி தசையில், அஷ்டமாதிபதி புக்தியில், சனியின் பாபத்துவ நிலையால் அவருக்கு நோயால் மரணம் நிகழ்ந்தது.
அடுத்த வெள்ளி இதே போன்ற நிலையால் மாரக, பாதக நிலைகளை சந்தித்த இரண்டு சாதாரண பெண்களின் ஜாதக விளக்கத்தைப் பார்ப்போம்.
Lovely article, Guruji. Can you write on the horoscope of Shankaracharya Jayendra Saraswsthi?
மிகவும் அருமையான விளக்கம் மாரகத்தையும்,பாதகத்தையும், சஷ்டாஷ்டகத்தையும் பற்றிய தெளிவான விளக்கம் குருஜி.லக்கின சுபர்களின் தசையில் மாரக, பதாகதிபதிகள் புத்தி மாறுபாடான பலன்கள் செய்யுமா?
Super Guruji. Very clear explanation…. Many thanks