adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஜோதிடம், ஜோதிடர்… எது பொய்..? -D-041

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

 ஒரு குழந்தை பிறப்பிற்கு அது ஜனிக்கும் நேரத்தில் அமையும் ஜாதக அமைப்புத்தான் முக்கியமே தவிர அப்போதிருக்கும் திதியோ, நட்சத்திரமோ, ஹோரையோ அல்லது ராகுகாலம் போன்ற அமைப்புகளோ ஒருபோதும் முக்கியமாகாது.

எப்படிப்பட்ட ராஜயோக ஜாதகத்திலும் ஏதாவது ஒரு குறை இருந்துதான் தீரும். குறையில்லாதவர்கள் இங்கே யாரும் இல்லை. நமது காலத்தில் கோடிக்கணக்கானவர்களால் ஒரு தெய்வப் பிறவியாக மதிக்கப்பட்டு, மகத்தான புகழுடன் வாழ்ந்து மறைந்த எம்ஜிஆருக்கு குழந்தை கிடையாது.

கடுமையான புத்திரதோஷ ஜாதகம் அவருடையது. இத்தனை வசதி, புகழ், செல்வாக்கு இருந்தும் தனக்கு வாரிசாக ஒரு குழந்தை இல்லையே என்பதை எண்ணி, தன் வாழ்நாளில் தனியாக குளியலறையிலாவது ஒரு பத்து நிமிடம் எம்ஜிஆர் கண்ணீர் சிந்தியிருக்க மாட்டாரா என்ன?

ஒரு சிலர் ராகுகாலத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என்று அதற்கு முன்னரோ, பின்னரோ குழந்தை பிறப்பை தள்ளி வைத்துக் கொள்வார்கள். குழந்தை பிறப்பிற்கும் ராகுகாலத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. பிறக்கும் போது ராகு காலமாக இருந்தாலும், அந்த நேரத்தில் நல்ல ஜாதக அமைப்பை கொண்ட லக்னம் அமைந்திருந்தால், அக்குழந்தை நிச்சயமாக எதிர்காலத்தில் பெரும் சிறப்புடன் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இங்கே அரைகுறையாக ஜோதிடம் தெரிந்த பெற்றோர்கள், வேறு எதற்கோ கூறப்பட்ட ராகுகாலம், அஷ்டமி திதி போன்ற விஷயங்களை குழந்தை பிறப்போடு இணைத்துக் கொண்டு அஷ்டமி, நவமியில் குழந்தை பிறக்கக்கூடாது, ராகுகாலத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என்று ஜோதிடரை வதைக்கிறார்கள்.

கீழே ஒரு குழந்தையின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இந்த ஆண் குழந்தை 26-4-2013 அன்று காலை 7-18 க்கு ஒரு ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தின்படி சென்னையில் பிறந்திருக்கிறது.

இக் குழந்தை பிறப்பதற்கு நேரம் குறித்துக் கொடுத்த ஜோதிடர் காலை 7 மணி 15 நிமிடத்தில் இருந்து, 7 மணி 20 நிமிடம்வரை என்று துல்லியமாக குறித்துக் கொடுத்த மிகச் சிறிய நேரத்திற்குள் இக்குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறக்க வைக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை பிறந்தது முதலே குழந்தையின் தாய், தந்தைக்கிடையே கடுமையான பிரச்சினைகள் இருந்து வந்திருக்கின்றன. அதற்கு முன்னரே குழந்தையின் தகப்பன், குடும்பத்தைக் கவனிக்காதவராக, பொறுப்பற்றவராக இருந்து வந்திருக்கிறார்.

குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது தாய்க்கும், தந்தைக்கும் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். தாயார் இறந்ததும் தகப்பன் இதனையும், இதற்கு முன் பிறந்த பெண் குழந்தையையும் தாத்தா, பாட்டியிடம் விட்டுவிட்டு நாடோடியாக எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார். தந்தை இருக்கும் இடம் இப்போது தெரியவில்லை. குழந்தை தற்போது தாய்வழி தாத்தா, பாட்டியின் ஆதரவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த குழந்தை பிறப்பதற்கு நேரம் குறித்துக் கொடுத்த ஜோதிடருக்கு, ஜோதிடம் என்றால் என்னவென்றே தெரியாது என்றுதான் சொல்ல முடியும். ஒரு குழந்தை எந்த நேரத்தில், என்ன அமைப்பில் பிறக்கக்கூடாது என்று நம்முடைய மூல நூல்கள் சொல்லுகின்றனவோ, அதே துல்லிய நேரத்தை பிறப்பு நேரமாக இந்த ஜோதிடர் கொடுத்திருக்கிறார்.

இதில் வேதனைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், குழந்தை பிறப்பதற்கு இன்னும் 15 நாள் இருந்திருக்கிறது. அதாவது இப்போது பிறந்தே தீர வேண்டும் என்கிற எந்தவொரு மருத்துவ நெருக்கடியும் குழந்தைக்கோ, தாய்க்கோ இல்லை.

குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் ஜோதிடரிடம் சென்ற தாத்தாவும், பாட்டியும், பிரசவத்திற்கு பதினைந்து நாட்கள் இருக்கும் நிலையில் ஜோதிடர் கொடுத்த நேரத்தை நம்பி முன்கூட்டியே சிசேரியன் செய்தோம் என்று என்னிடம் அழுத அழுகை சொல்லி மாளாது.

அதிலும் இந்த ஜோதிடர் துல்லியமாக காலை 7-15 முதல் 7-20 வரை என்று  துல்லியமான நேரம் குறித்து கொடுத்திருக்கிறார். இன்னும் ஒரு வாரம் கழித்து நாள் குறித்திருந்தால் கூட குழந்தையின் லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி நிலை பெற்றிருப்பார். சந்திரனும், சூரியனும் கிரகண தோஷத்திலிருந்து விலகி இருப்பார்கள். குழந்தையும் தாயை இழந்திருக்காது.

ஆனால் குழந்தை தாயை இழக்க வேண்டும் என்பது விதி என்பதால் தாத்தாவும், பாட்டியும் ஜோதிடம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு ஜோதிடரிடம் சென்று குழந்தை பிறப்பிற்கு நேரம் கணித்திருக்கிறார்கள். இதைத்தான் ஜோதிடம் கர்மா என்று சொல்லுகிறது.

நம்முடைய மூல நூல்கள் “பாலாரிஷ்ட தோஷம்” என்ற ஒன்றை மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன

அதாவது ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், உலகில் உள்ள  அனைவருக்கும் தாய் போன்ற கிரகமான சந்திரன் மிக வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் வலுவாக இல்லாத நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின், தாயாரின் நலம் குறைவாக இருக்கும் அல்லது தாயாருக்கு கெடுதல் உண்டாகும் அல்லது பிரசவத்தின் போதே குழந்தை தாயை இழக்க நேரிடலாம் அல்லது குழந்தையே இறக்கலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்படுகிறது.

இக் குழந்தை பிறப்பதற்கு தேதி, நேரம் குறித்து கொடுத்த ஜோதிடர் சரியான கிரகண தோஷம் உள்ள நாளன்று, கூடுதலாக சந்திரன், செவ்வாய் தொடர்பிலும், சனியின் இணைவிலும் பூரணமாக வலு இழந்திருக்கும் நாளை குறித்துக் கொடுத்திருக்கிறார். இந்த ஜோதிடருக்கு துளிக்கூட ஜோதிட ஞானம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

குழந்தையின் ஜாதகப்படி ரிஷப லக்னம், துலாம் ராசியாகி , லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தோடு தொடர்பு கொள்ளாமல், பன்னிரண்டில் அமர்ந்து, தனது இன்னொரு பாப வீடான ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டு, செவ்வாயோடு இணைந்து, சூரியனோடு எட்டு டிகிரிக்குள் அஸ்தமனமாகி, சனியின் பார்வையில், அம்சத்தில் நீசமாக இருக்கிறார்.

ஒரு குழந்தை பிறப்பின் முதல் அமைப்பான லக்னம், லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் என்கிற முதல் விதியே இங்கு அடிபட்டுப் போய்விட்டது. ஆயினும் குழந்தையின் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு லக்னத்தில் திக்பலத்தில் இருப்பதாலும், கிரகண அமைப்பில் இருந்தாலும் ஆயுள்காரகனாகிய சனி உச்சமாக இருப்பதாலும் குழந்தைக்கு ஆயுள் குற்றமில்லை.

ஆனால் மிகவும் முக்கியமாக, இவை தவிர்த்த அனைத்து பாக்கியங்களும் இந்த ஜாதகத்தில் வலுவிழந்து இருக்கின்றன. தாயைக் குறிக்கும் நான்காம் பாவகாதிபதியான சூரியனும், மாதாகாரகனுமாகிய சந்திரனும் கிரகண தோஷ அமைப்பில் இருக்கிறார்கள்.

சந்திரன் ஏறத்தாழ ஒரே டிகிரியில் சனியுடன் இணைந்து, எட்டு டிகிரிக்குள் ராகுவுடன் சேர்ந்து, கிட்டத்தட்ட இந்த இரண்டு பாபக்கிரகங்களிடம் சரணடைந்திருக்கிறார். நான்காம் அதிபதியும், தந்தையைக் குறிக்கும் பிதுர்க் காரகனுமாகிய சூரியனும் இதே நிலையில் செவ்வாயுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்து, 12 டிகிரிக்குள் கேதுவுடன் கிரகணமாகி, உச்ச சனியின் பார்வையில் இருக்கிறார்.

ஒன்பதாம் அதிபதியான சனியும் ஆறில் மறைந்து கிரகணமாகி இருக்கிறார். ஆக குழந்தைக்கு தாய், தகப்பன் இருவரின் அமைப்பும் இல்லை. சனி உச்சமாக இருப்பதால் தகப்பன் உயிருடன் இருப்பார். ஆனால் இக் குழந்தைக்கு அப்பாவாக இருக்க மாட்டார். எல்லாவற்றையும்விட மேலாக அன்றைக்கு சுவாதி நட்சத்திரமும் ஆகி, குழந்தை ராகுதசையில்தான் ஜனித்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரசவத்திலேயே தாயை இழக்கின்ற அமைப்பு இது.

சென்ற அத்தியாயத்தில் ஒரு குழந்தையின் பிறப்பை நிர்ணயிப்பது பரம்பொருளைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். இது எக்காலத்திலும் மாறாத ஒரு உண்மையாக இருக்கும்.

உங்களின் நேரம் நன்றாக இருக்கும் பொழுது, நீங்கள் முறையான அனுபவமுள்ள சரியான ஜோதிடரிடம் செல்வீர்கள். நேரம் நன்றாக இல்லாதபோது ஜோதிடம் பற்றித் தெரியாத அல்லது பலன் சொல்லி பரிகாரத்திற்காக பயமுறுத்தக்கூடிய ஜோதிடரிடமோ, பிழைப்பிற்காக ஜோதிடராக நடித்துக் கொண்டிருக்கும் ஒன்றும் தெரியாதவரிடமோ  செல்வீர்கள்.

இந்தக் குழந்தையின் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. இந்த குழந்தை இரண்டு வயதிலேயே தாயையும், தகப்பனையும் இழக்க வேண்டும் என்பது பிரம்ம விதி. அதனால்தான் கிரகணம் முடிந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு பிறக்க  நேரம் இருந்த பொழுதும், ஜோதிடம் தெரியாத ஒருவரால் கிரகணத்தன்று  நேரம் குறித்து, பிறக்க வைக்கப்பட்டு தாயை உயிரற்றும், தந்தையை உயிருடனும் இழந்திருக்கிறது.

அது எப்படி தாயை இழப்பதற்காகவே பிறந்த குழந்தை என்று சொல்லலாம் என்று நீங்கள் கேட்பீர்களேயானால், கீழே இக்குழந்தைக்கு முன் பிறந்த அக்காவின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். 13 வயதான அக்காவின் ஜாதகத்தில் தாயின் மரணம் பதிவு செய்யப்பட்டு இருப்பதை ஒரு ஜோதிடர் உணர முடியும்.

அந்தக் குழந்தை 8-1-2005 இரவு 8-24 க்கு சென்னையில் சுகப்பிரசவமாக பிறந்திருக்கிறாள். அவளது ஜாதகப்படி கடக லக்னம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியாகி, அவளது பத்து வயது முதல் தாயாரைக் குறிக்கும் சுக்கிரனின் தசை ஆரம்பமாகியிருக்கிறது. 


இக்குழந்தையின் நட்சத்திரம் கேட்டை என்பது கவனிக்கத்தக்கது. விருச்சிகத்திற்கு ஜென்மச் சனி நடந்த 2015 ல் இவள் தாயை இழந்திருக்கிறாள். விருச்சிகத்தைப் பற்றியும், கடந்த காலங்களில் அதன் மன அழுத்தத்தைப் பற்றியும் நான் ஏராளமான முறைகள் சொல்லிவிட்டபடியால் இங்கே அதனை குறிப்பிடத் தேவையில்லை.

இந்தப் பெண் குழந்தையின் ஜாதகப்படி தாயைக் குறிக்கும் நான்காம் அதிபதியான சுக்கிரன், விரயாதிபதி புதனுடனும், மாரகாதிபதி சூரியனுடன் இணைந்து பாபத்துவமாகி, ஆறாமிடத்தில் அமர்ந்து தசை நடத்துகிறார். அம்சத்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருக்கிறார். நான்காம் பாவகத்திலும் ராகு-கேதுக்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

நான்காம் அதிபதியும், பாவகமும் வலுவிழந்திருக்கும் நிலையில் மாதாகாரகனான சந்திரன் நீசமாகி, தேய்பிறையுமாகி, அமாவாசைக்கு மிக அருகில் கடுமையான பலவீன நிலையில் இருப்பதால், சுக்கிர தசை, சுயபுக்தியில், கடுமையான ஜென்மச் சனியில் இக் குழந்தை தாயாரை இழக்க வேண்டும் என்பது விதி.

ஆகவே இவ்விரு குழந்தைகளின் தாயின் மரணம் முதலில் சுகப்பிரசவமாக பிறந்த அக்காவின் ஜாதகத்திலேயே பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பரம்பொருளின் அருளினாலும், நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளாலும், தம் வாழ்நாள் முழுமையையும் ஜோதிடத்திற்காகவே அர்ப்பணித்த ஞானமிக்க ஜோதிடர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட, இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கும், முடிவற்ற இந்த விஞ்ஞானக் கலை இதுபோன்ற ஒன்றும் தெரியாத, ஜோதிடர் என்று சொல்லிக் கொள்பவர்களால்தான் இகழப்படுகிறதே தவிர ஜோதிடம் ஒருபோதும் பொய்ப்பதில்லை.

அடுத்த வெள்ளி சந்திப்போம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *