adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஜோதிடம் பொய்ப்பது ஏன்..? – D-040

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

 “ஜோதிடம் பொய்யல்ல… ஜோதிடர்கள்தான் பொய்யர்கள்” என்ற ஒரு பழமொழி  ஆங்கிலத்தில் உண்டு. இது நமது நாட்டிற்கும் பொருந்தும்.

ஜோதிடர் என்று சொல்லிக் கொள்ளும் சிலரால்தான் “காலவியல் விஞ்ஞானம்” என்று நான் பெருமையுடன் குறிப்பிடும், ஒரு மனிதனின் எதிர்காலம் சொல்லும் இந்த மாபெரும் கணிதச் சமன்பாடுகளைக் கொண்ட இந்த விஞ்ஞானக் கலை மதிப்பிழந்து போகிறது.

ஒரு விஷயத்திற்கு ஒரே விதமான முடிவையோ அல்லது அணுகுமுறையையோ இங்கு அனைத்து ஜோதிடர்களும் சொல்வதில்லை. இதுவே இந்த சாஸ்திரத்தை நாடிப் போவோருக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா என்று இருவரின் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு, நான்கு ஜோதிடர்களை நீங்கள் பார்த்தீர்களேயானால், அதில் இருவர் செய்யலாம் என்றும், இருவர் செய்யக் கூடாது என்றும் சொல்வார்கள். கேட்கப் போகும் பெற்றோருக்கு தலை சுற்றிப் போகும்.

ஜோதிடர்கள் அனைவரும் ஒரு ஜாதகத்திற்கு ஒரே கருத்தை சொல்வதில்லையே, ஏன்?

உண்மையில் ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவரும் ஜோதிடர்களே அல்ல. பெயரளவிற்கு ஒன்பது கிரகங்கள், பனிரெண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் மனப்பாடம் செய்து கொண்டு தனது வாய்ஜாலத்தினாலும், ஆர்வக்கோளாறினாலும், ஜோதிடத்தொழில் செய்பவர்கள்தான் இங்கே அதிகம். ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எழுபது சதவிகிதம் பேருக்கு ஓரளவிற்குக் கூட ஜோதிடம் தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை.

உண்மையில் ஜோதிடத் துறையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தனக்கும் ஜோதிடம் தெரியும் என்று தானே தவறாக நம்பிக் கொண்டு அல்லது வயிற்றுப் பிழைப்புக்காக நடித்துக் கொண்டு இருப்பவர்கள்தான்.

ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரை காட்டிக் கொடுக்கக் கூடாது என்று சொல்வதுண்டு. அதேபோல ஜோதிடத்துறையிலும் ஒருவர் இன்னொருவரை காட்டிக் கொடுக்க மாட்டார்.

ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால், சில நேரங்களில் ஜோதிடம் பார்க்கச் செல்லும் வாடிக்கையாளரை விட, ஜோதிடருக்கு குறைவான அளவிற்கே விஷயம் தெரிந்திருக்கும். ஜாதகம் பார்க்க வந்தவர் ஜோதிடரை விட அதிகம் தெரிந்தவராக இருப்பார். இப்படிப்பட்டவர்கள் வரும் நேரங்களில் ஜோதிடர் என்று சொல்லிக் கொள்பவர் தடுமாறுவார்.

ஜோதிடம் என்பது ஒரு கல்வியல்ல, அது ஒரு வகையான ஞானம் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பிரபஞ்சம் பற்றிய கடந்த கால மற்றும் எதிர்கால உண்மைகளைக் கூறுவது பௌதிகவியல் என்றால், பிரம்ம விதி எனப்படும் தனிமனிதனின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கூறுவது ஜோதிடவியல் ஆகும்.

பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கான விதிகள் எவ்வளவு சிக்கலானதோ, எத்தனை எத்தனை புரிந்து கொள்ள இயலாததோ, அதைவிட ஆயிரமாயிரம் கடினமான விதிகள் ஜோதிடத்தில் பொதிந்து கிடக்கின்றன. இதனை சாதாரணமான மேம்போக்கான மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது.

எல்லா ஜோதிடர்களும் ஜோதிடத்தை ஒரே நிலையில், மேம்பட்ட ஞானத்துடன் புரிந்து கொள்ள முடியும் என்பது முடியவே முடியாதது. புரிந்து கொள்ள முயற்சி செய்தாலும் நிறைவேறாது.

ஒருவருக்கு ஜோதிட ஞானம் என்பது அவருடைய ஜாதக அமைப்பின்படி பரம்பொருள் அருளியது. இது பிறப்பின் அடிப்படையில் வருவது. கற்றுக் கொள்வதால் மட்டும் ஒரு ஜோதிடர் முழுமையானவராக ஆகிவிட முடியாது. பிறவியிலேயே வரும் ஞானம் ஜோதிட முதிர்ச்சிக்குத் தேவைப்படும்.

உலகில் பிறக்கும் அனைவரும், மருத்துவர், விஞ்ஞானி, அறிவாளி இல்லையே.. நம்மில் மிகச் சிலர்தானே எதையும் சட்டென்று நுணுக்கமாக புரிந்து கொள்ளும் திறனுடன் இருக்கிறோம். அனைவருக்கும் உள்ள அறிவில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது?

2011-2012-ல் நான் எழுதிய “பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” மற்றும் செவ்வாய், சனி பற்றிய சூட்சுமக் கட்டுரைகளைப் படித்துவிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து பேசிய, ஜோதிடத்தில் 70 வருட அனுபவமுள்ள 84 வயது பெரியவர் ஒருவர் “இத்தனை வருடங்களாக எனக்கு விளங்காத சில ஜோதிட உண்மைகள் உன்னைப் படித்தவுடன் புரிந்தது.” என்று என்னை ஆசீர்வதித்தது ஜோதிடம் பற்றிய புரிதலுக்கு ஒரு சாட்சி. இப்படி வெளிப்படையாக ஒத்துக் கொள்பவர்கள் இங்கே மிகக் குறைவு.

ஜோதிடர்களை பொய்யர்களாக்கும் மிக முக்கியமான ஒரு விஷயத்திற்கு இப்போது வருகிறேன்..

சமீபகாலங்களில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை முன்கூட்டியே பிறக்க வைப்பது அதிகமாகி வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையாகவே குழந்தைகள் பிறந்தன. மருத்துவமுறைகள் நவீன மயமாகிவிட்ட பிறகு, குறிப்பாக வணிகமயமாகிவிட்ட பிறகு இன்று தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் 99 சதவீத குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமாகவே பிறக்கின்றன.

அதிலும் எதிர்காலத்தில் சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான, நல்ல ஜாதகத்தினை கொண்டு, மிக நல்ல நேரத்தில் தற்போது நமது வருங்கால சிற்பிகள் பிறக்க வைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

ஜோதிடர்களிடையே காலம்காலமாக வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொதுவான கேள்விகளான, மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும், திருமணம் எப்போது, இவர்களுக்கு பொருத்தம் இருக்கிறதா என்பதோடு தற்போது குழந்தை பிறக்கப் போகும் நேரத்தை குறித்துக் கொடுங்கள் என்று கேட்டு வருவதும் அதிகரித்து விட்டது.

ஒருமுறை விஜய் டிவி விவாதத்தில் பேசும் பொழுது சிசேரியன்படி குழந்தை பிறப்பது முறையானது தானா என்ற கேள்விக்கு, ஜனனத்தையும், மரணத்தையும் கடைசிவரை பரம்பொருளின் கையிலிருந்து பறித்துவிட முடியாது. சிசேரியன் மூலம் ஜோதிடர் குழந்தை பிறப்பை நிர்ணயித்தாலும், அந்த முடிவையும் செயல்படுத்துவது பரம்பொருள்தான் என்று பதில் அளித்திருந்தேன்.

ஒரு குழந்தையின் பிறப்பை, தலைவிதியை முன்கூட்டியே தீர்மானிப்பது மனிதனாகப் பிறந்த எவராலும் நிச்சயமாக இயலாத ஒன்று. தன்னுடைய பிறவிக் கர்மாவை அழிப்பதற்காகவே ஒரு ஆத்மா இங்கே குழந்தை வடிவில் உதயமாகிறது. அதனை சாதாரண மனிதன் தீர்மானித்து விட முடியாது. குறிப்பாக எந்த ஒரு ஜனனத்தையும் மனிதன் நிச்சயிக்கவே முடியாது.

சமீபத்தில் ஜோதிடம் ஓரளவு அறிந்த ஒரு விஐபி தன்னுடைய பேரக் குழந்தை குறிப்பிட்ட ஒரு லக்னத்தில் பிறக்கக் கூடாது என்பதற்காக என்னிடம் ஏகப்பட்ட விவாதங்களுக்குப் பிறகு குழந்தையின் ஜனன நேரத்தை சிசேரியனுக்கு வாங்கிச் சென்றார்.

ஆனால் பிரசவம் பார்த்த டாக்டருக்கும், அவருக்கும் ஈகோவினால் சச்சரவுகள் உண்டாகி, ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் மருத்துவமனைக்கு 500 அடி தூரத்திற்கு முன்பாக வாகன நெரிசலில் சிக்கி, நான் குறித்துக் கொடுத்த நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் கழித்து தாமதமாக, எந்த லக்னத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என்று விஐபி நினைத்தாரோ, அதேநேரத்தில்தான் சிசேரியன் செய்தார்.

டாக்டர் நினைத்திருந்தால் அந்த ஐநூறு அடி தூரத்தை நடந்து வந்து விஐபி கொடுத்த நேரத்தில் குழந்தையை பிறக்கச் செய்திருக்கலாம். ஆனால் இங்கே குழந்தையின் பிறப்பு நேரத்தை நிர்ணயித்தது நானோ, அதன் தாத்தாவான விஐபியோ, மருத்துவரோ அல்ல. பரம்பொருள்.

பிரசவ நேரத்தைக் குறித்துக் கொடுப்பது என்பது மகா சிக்கலான ஒரு விஷயம். உதாரணமாக, ஒரு நல்ல ஜாதகம் என்பது முதலில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். அதன் பிறகு ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள் எனப்படும் அதிர்ஷ்டத்தை தருபவர்கள் பலமாக இருக்க வேண்டும். இந்த மூன்றையும் அனுபவிக்கும் அளவிற்கு குழந்தைக்கு தீர்க்காயுள் இருக்க வேண்டும். அனைத்தையும் விட மேலாக ஜாதகம் யோகமாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் நல்ல தசா புக்தி அமைப்புகள் தொடர்ந்து வர வேண்டும்.

இப்போது நான் சொல்லுகின்ற அனைத்தையும் நிகழ்த்த இருக்கும் கிரக அமைப்புகள் வானில் என்றோ, எப்போதோ ஒருமுறைதான் நிகழ்கின்றன. எல்லா தினங்களிலும், வார, மாதங்களிலும் அதிர்ஷ்ட நிலைகள் கூடிவருவதில்லை.

உதாரணமாக லக்னாதிபதி வலுவாக அமைந்தால், 5-க்குடையவர் நீசமாக இருப்பார். இருவரும் நன்றாக இருந்தாலும் பாக்கியாதிபதி எனப்படும் ஒன்பதாம் அதிபதி முழுக்க பலவீனமாக இருப்பார். மூவரும் சரியாக இருந்தாலும் வாழ்நாள் முழுக்க சரியான தசா,புக்திகள் வராமல் போகலாம்.

சிசேரியனுக்கு நீங்கள் நேரம் குறிக்கும்போது ஒரு விதி கிழக்கே இழுத்தால் இன்னொன்று மேற்கே இழுக்கும். ஒன்பது கிரகங்களையும் சரியான விதத்தில் ராசிக்கட்டத்தில் யோகமாக அடைப்பதற்கு நீங்கள் ஒன்றும் படைப்புக் கடவுளான பிரம்மா அல்ல. எப்போதோ ஒரு முறைதான் ஒரு ஒட்டுமொத்த புள்ளியில் அனைத்து கிரகங்களும் குறையின்றி இணைகின்றன. அந்த நேரம் வரும் வரை நீங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட முடியாது.

உதாரணமாக சூரியனும், சனியும் இணைந்தால் தந்தைக்கு ஆகாது என்பது மாறாத ஜோதிட விதி. இதற்கு விதிவிலக்குகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் எத்தனை டிகிரிக்குள் இணைகிறார்கள் என்பதைப் பொருத்தும், அந்த ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதியின் நிலையைப் பொருத்தும் அதன் தந்தைக்கு கஷ்டங்கள் இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும்.

இந்த வருடம் மார்கழி மாதம் முழுவதும் சூரியனும் சனியும் இணைந்திருக்கிறார்கள். இந்த மாதம் பிறக்கும் அத்தனை குழந்தைகளின் ஜாதகங்களிலும் இந்த அமைப்பு நிச்சயமாக இருந்தே தீரும். சரி... தந்தைக்கு ஆகாது என்பதால் இந்த மார்கழி மாதம் குழந்தையே பிறக்கக் கூடாது, அடுத்த மாதத்திற்கு குழந்தை பிறப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று எவரேனும் முடிவு எடுக்க முடியுமா?

ஒரு குழந்தைப் பிறப்பை பத்து நாட்கள் முன்னதாகச் செய்ய ஒரு மருத்துவரால் முடியுமே தவிர, உலகின் எந்த ஒரு முதல் நிலை மருத்துவர் ஆனாலும் குழந்தைப் பிறப்பை பத்து நாட்கள் தள்ளி வைக்கவே முடியாது.

பிறப்பு நேரத்தை குறித்துக் கொடுக்கும் ஜோதிடருக்குள்ள இன்னும் சில நெருக்கடிகள் என்னவென்றால், அனைத்தையும் கூட்டிக் கழித்து, தலையைப் பிய்த்துக் கொண்டு, இருப்பதில் நல்ல நேரமாக ஒரு லக்னத்தை தேர்ந்தெடுத்து, 1,5,9 சரி செய்து, எதிர்கால தசா,புக்தி கணித்து நல்ல நேரத்தை குறித்துக் கொடுத்திருப்பார்.

நேரம் வாங்கிக் கொண்டு சென்ற வாடிக்கையாளர் திரும்ப வந்து நீங்கள் கொடுத்த நாளில் அஷ்டமி திதியாக இருக்கிறது என்று என் அம்மா சொல்கிறார், ராகு காலமாக இருக்கிறது, ஆயில்ய நட்சத்திரம், எதிர்காலத்தில் திருமணம் சிரமமாக இருக்கும், ரோகிணி நட்சத்திரமாக இருக்கிறது, தாய் மாமனுக்கு ஆகாது என்று மாமியார் சொல்வதால் நேரத்தை மாற்றிக் கொடுங்கள் என்று வந்து நிற்பார்.

ஒரு ஜோதிடரை மிகவும் வெறுப்பேற்றும் தொழில் நேரங்கள் இவை.

அடுத்த வெள்ளி ஜோதிடர் குறித்துக் கொடுத்த துல்லிய நேரத்தில் குழந்தை பிறந்து, இரண்டு வயதில் தாயை இழந்த விளக்கங்களைச் சொல்கிறேன்.

(04.01.2018 மாலை மலரில் வெளிவந்தது)

2 thoughts on “ஜோதிடம் பொய்ப்பது ஏன்..? – D-040

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *