பிரதமர் மோடி, ஒரு முறை சந்நியாசம் பெறும் பொருட்டு, தீட்சை பெற ஒரு துறவியிடம் சென்ற போது, அவர் தடுத்து “உனக்கு சந்நியாசம் தேவையில்லை, ஜாதகப்படி நீ ராஜ சந்நியாசியாக ஆவாய்” என்று ஆசீர்வதித்து திருப்பி அனுப்பியதாக படித்திருக்கிறேன்.
இது உண்மையா, பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பிரதமர் தனிப்பட்ட வாழ்வில் கிட்டத்தட்ட ஒரு சந்நியாச வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார் என்பது அவரை விமர்சிப்பவர்கள் கூட ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை. இதுவரை பதவி வகித்த பிரதமர்களைப் போல அவருக்கென்று ஒரு குடும்பம் இல்லை. உறவினர்களையும் அவர் அருகில் வைத்துக் கொண்டதில்லை.
இவரைப் போலவே, தனக்கென குடும்பம் எதையும் வைத்துக் கொள்ளாமல், ஒரு சந்நியாச வாழ்க்கையை வாழ்ந்த முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் கூட வளர்ப்பு மகள் போன்ற உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதுபோன்ற அமைப்புகள் கூட மோடிக்கு கிடையாது. எனவே மோடியின் ஜாதகத்திலும் இது போன்ற குடும்பம், குழந்தைகளற்ற தனித்த வாழ்க்கைக்கான காரணங்கள் இருந்துதான் தீர வேண்டும்.
பெரும்பாலானவர்களால் மோடி அவர்களின் ஜாதகம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட செப்டம்பர் 17, பகல் 11.00 மணி, 1950-ம் வருடத்திய ஜாதக விளக்கத்தை சில வாரங்களுக்கு முன் பார்த்து விட்ட நிலையில், பிரதமரின் ஜாதகம் என்று இன்னும் சிலரால் காட்டப்படும் இரண்டாவது ஜாதகத்தின் சுருக்கமான ஜோதிட விளக்கங்களையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
இதன்படி, பிரதமர் மோடி 29-8-1949 காலை ஆறுமணியளவில் குஜராத்தில் உள்ள வதா நகரில் பிறந்திருக்கிறார்.
கீழே தரப்பட்டுள்ள இரண்டாவது ஜாதகத்தின்படி, சிம்மலக்னம், துலாம் ராசியாகி, லக்னாதிபதியும், உயர் அதிகாரங்களைத் தருபவருமான சூரியன், லக்னத்திலேயே ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். அவருடன் இந்த லக்னத்தின் முழுப் பாபியும், சூரியனின் பரம விரோதியுமான சனி, மூன்று டிகிரிக்குள் இணைந்து அஸ்தமனமாகி இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் வர்கோத்தமமும், மூலத்திரிகோண வலுவும் பெற்ற, பங்கமற்ற குருவின் அதி உயர் பார்வை இருக்கிறது. இதன்மூலம் லக்னாதிபதி சூரியன் அதிகாரம் தரும் உச்ச வலுப் பெறுகிறார். லக்னமும் மிகுந்த சுபத்துவம் அடைகிறது.
சிம்மமும் அதன் அதிபதியும் அதிகமான சுபத்துவம் அடைவது ஆளுமைத் திறனுக்கும், மிகப்பெரிய அரசியல் உயர்நிலைகளுக்கும் காரணமானது என்பதால் மோடி அவர்களின் இரண்டாவது ஜாதகத்தில் இந்த நிலை இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இரண்டாவது ஜாதகத்தில் குரு, சனி, செவ்வாய் ஆகிய மூன்று ராஜ கிரகங்களும் வர்கோத்தம நிலையில் இருக்கிறார்கள். சுக்கிரன் நீசபங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார். ஒரு நீசனுடன் உச்சன் இணைவது நீசபங்க ராஜயோக அமைப்பு என்பதால் இங்கு முழுமையான நீசபங்க ராஜயோக நிலை இருக்கிறது.
மேலும் புதன் இங்கே வாக்கு ஸ்தானதிபதியாகி உச்ச நிலையில் இருக்கிறார். பிரதமர் குறைந்த அளவே கல்வித் தகுதியை கொண்டிருந்தாலும் அவரது மொழி ஆளுமைத் திறனும், பேச்சுத்திறனும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவரது அரசியல் உயர்நிலைக்கு அவரது மேடைப்பேச்சும், எதற்கும் சாதுர்யமாக தக்க பதிலடி கொடுப்பதும் முக்கிய காரணங்கள். இந்த சாதுர்யமான பேச்சைக் கொடுக்கக்கூடிய புதன் இந்த ஜாதகத்தில் வாக்கு ஸ்தானதிபதியாகி, இரண்டாம் இடத்திலேயே உச்சமாக இருக்கிறார்.
இந்த ஜாதகப்படி தற்போது பிரதமருக்கு சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக மோடிக்கு பெயரளவிற்கு திருமணம் என்ற ஒன்று நடந்திருந்தாலும் மனைவி, குழந்தைகள் அமைப்பு இல்லை. குடும்ப அமைப்பிலும் அவருக்கு ஆர்வம் இல்லை.
இதற்கான காரணத்தை ஜோதிட ரீதியாக அலசுவோமேயானால், அவரது முதல் ஜாதகப்படி (அவரது பிறந்த நேரம் 12 மணி 2 நிமிடம் என அவருக்கு நெருக்கமானவர்களால் சொல்லப்படுகிறது.) திருமணம், மனைவி போன்றவைகளைக் குறிக்கும் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தை செவ்வாய், சனியாகிய இரண்டு கிரகங்களும் பார்க்கின்றன.
ஒரு பாவகம், செவ்வாய், சனி ஆகிய இரண்டு பாபக் கிரகங்களாலும் பார்க்கப்பட்டு, சுபத்தொடர்புகள் இல்லாத நிலையில், அதன் பலனை முழுமையாகத் தராது அல்லது அதில் குறை இருக்கும் என்பது வேத ஜோதிட விதி. கூடுதலாக ராகு-கேதுக்களும் அந்த பாவகத்தோடு சம்பந்தப்பட்டு விட்டால் அந்த வீடு முழுமையாக வலுவிழக்கும். அந்த ஸ்தான பலன்கள் ஒரு மனிதனுக்கு முற்றிலும் கிடைக்காது.
முதல் ஜாதகப்படி, மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தை, லக்னத்தில் இருக்கும் செவ்வாய் ஏழாம் பார்வையாலும், சனி பத்தாம் பார்வையாலும் பார்க்கும் நிலையில், ஏழாமிடத்திற்கு எவ்வித சுபத்தொடர்புகளும் இன்றி, ஏழாம் அதிபதியும், தாம்பத்திய சுகத்தைக் கொடுப்பவனுமான சுக்கிரன், சனியுடன் இணைந்திருப்பது குடும்பம் அமைவதற்கு தடையான அமைப்பு.
பிரதமருக்கு குழந்தைகள் இல்லை என்கின்ற நிலையையும் முதல் ஜாதகம் தெளிவாகவே குறிப்பிடுகிறது. புத்திர ஸ்தானாதிபதியான குரு, புத்திர ஸ்தானமான தனது ஐந்தாம் வீட்டிற்குப் பனிரெண்டில் மறைந்து, பாபியர்களான செவ்வாய், சனி இருவரின் பார்வையையும் குரு, ஒருசேரப் பெற்று புத்திர ஸ்தானமான ஐந்தாம் பாவத்தில் ராகு-கேதுக்கள் அமர்ந்த காரணத்தினால் அவருக்கு புத்திர பாக்கியம் இல்லை.
இவ்வாறு ஏழாம் பாவகமும், களத்திரகாரகனும், களத்திர ஸ்தானாதிபதியும், ஐந்தாம் பாவகமும், புத்திர ஸ்தானாதிபதியும், குழந்தைக்காரகனும் ஒரு சேர செவ்வாய், சனி, ராகு-கேது பார்வை, இணைவு, இருப்பு போன்ற நிலையில் இருப்பது ஒரு மனிதனுக்கு குடும்ப வாழ்வின் பேரில் துளிக்கூட நாட்டம் இல்லாத ஒரு நிலை.
மேலும் குருவும், சுக்கிரனும் நேருக்கு நேர் பார்க்கும் ஒருவிதமான தனித்த அமைப்பில், ஒருவருக்கு தாம்பத்திய சுகத்தில் ஆர்வமில்லாத நிலையோ அல்லது தாம்பத்திய சுகம் மறுக்கப்படும் நிலையோ இருக்கும் என்பதை ஏற்கனவே குரு, சுக்கிர விளக்கக் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.
இதன்படி ஒரு ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டோ, அல்லது ஒருவருக்கொருவர் மிக நெருக்கமா இணைந்தோ இருக்கின்ற நிலையில் அந்த லக்னத்திற்கு சுக்கிரன் சுபரா, குரு சுபரா என்பதைப் பொருத்து, ஒருவருக்கு குழந்தை, அல்லது வாழ்க்கைத் துணை அமைப்பில் குறைகள் இருக்கும். இந்த விதியும் முதல் ஜாதகப்படி பிரதமருக்குப் பொருந்தி வருகிறது.
மேலும் முதல் ஜாதகத்தின் பாவக அட்டவணையின்படி, கிரகங்கள் மாறுகின்றன. ராசிக் கட்டத்தில் பதினொன்றாமிடத்தில் இருக்கும் சூரியன், புதன் ஆகிய இரண்டும், பாவகப்படி பத்தாமிடத்தில் அமைகின்றன. அதாவது பாவகப்படி சூரியன், புதன், சுக்கிரன், சனி, கேது என ஐந்து கிரகங்கள் பத்தாமிடத்தில் அமைகின்றன ஆகவே பிரதமரின் முதல் ஜாதகம் நம்முடைய சிறிய அறிவிற்கு எட்டாத ஒரு சூட்சுமமான பலனைக் காட்டுகிற ஜாதகம் எனவும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பிரதமர் மோடியின் ஜாதகம், இதுவாக இருக்குமா அல்லது அதுவா என்கிற “விதிகளின் கீழான ஒரு ஆய்வு” மட்டும்தான் இது. இந்த இரண்டுமே அவரது ஜாதகமாக இல்லாமல் இருக்கலாம், அல்லது இரண்டில் ஒன்று சரியானதாக இருக்கலாம். ஆனால் எந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் அது வேத ஜோதிடம் குறிப்பிட்டுச் சொல்லும் விதிகளின் கீழ் சரியாகப் பொருந்தி வர வேண்டும்.
பாமரனுக்கும், உயர்நிலையில் இருப்பவனுக்கும் ஜோதிட விதிகள் ஒன்றுதான். பிரபஞ்ச விதிகளைப் போன்றே வேத ஜோதிட ஆதார விதிகளும் நிரந்தரமானவை. எந்த ஒரு நிலையிலும் மாறாதவை. மாற்ற முடியாதவை. இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் விதிகளோடு ஒப்பிட்டு ஒரு ஜாதகத்தை விளக்கிச் சொல்வதே “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளின் நோக்கம். இதன் காரணமாகவே நான் பிரதமர் மோடியின் ஜாதகங்களை விளக்கத் தேர்ந்தெடுத்தேன்.
இரண்டாவதாக 1949-ல் பிறந்ததாக காட்டப்படும், சிம்ம லக்ன ஜாதக அமைப்பைக் கவனித்தோமானால், அதிலும் திருமண வாழ்க்கையைக் குறிக்கும் ஏழாமிடத்தை சனி மற்றும் பனிரெண்டில் மறைந்திருக்கும் நீச செவ்வாய் இருவரும் பார்க்கிறார்கள். ஏழாம் அதிபதியாகிய சனி அஸ்தமன நிலையில் இருக்கிறார். இதுவும் கடுமையான களத்திர தோஷ அமைப்புத்தான்.
மேலும் குழந்தை பாக்கியத்தை கொடுக்கக்கூடிய குரு பகவான் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக இருந்தாலும் தனித்த குரு எனும் நிலை பெற்று “காரகோ பாவ நாஸ்தி” அமைப்பில் புத்திரதோஷத்தை தருகிறார். எனவே இந்த ஜாதக அமைப்பிலும் களத்திர தோஷ, புத்திர தோஷ கிரக நிலைகள் இருக்கின்றன.
ஆயினும் ஐந்தில் குரு தனித்திருக்கும் யாவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது இல்லை. சொல்லப்போனால் சில நிலைகளில் ஐந்தில் இருக்கும் குரு ஒன்றுக்கும் மேற்பட்ட நல்ல குழந்தைகளைத் தருகிறார். ஒருவருக்கு புத்திர பாக்கியம் முற்றிலும் கிடைக்காமல் போவதற்கு முதல் ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் பாவகம் வலுவிழப்பது போன்ற வலிமையான காரணங்கள் தேவை. இது இரண்டாவது ஜாதகத்தில் இல்லை.
மேலும் என்னதான் மற்ற கிரக அமைப்புகள் நன்றாக இருந்தாலும், ஒருவர் உயர் பதவியை வகிக்க வேண்டுமாயின், ஜாதகத்தில் ராசி, லக்னம் இரண்டின் பத்தாமிடங்களும், அவற்றின் அதிபதிகளும் மிக வலுவான ஒரு உயர் நிலையில் இருக்க வேண்டும்.
அதுவும் மோடி போன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வெற்றிகரமாக மிகப் பல ஆண்டுகள் நீடித்து, நாட்டின் பிரதமராக முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்ற ஒருவருக்கு பழுதற்ற பத்தாமிடத்தின் தயவு தேவை.
ஆனால் இரண்டாவதாகக் காட்டப்படும் ஜாதகத்தில் லக்னத்திற்குப் பத்தாமிட அதிபதியான சுக்கிரன் நீச நிலையில் இருக்கிறார். ராசிக்கு பத்தாம் அதிபதியான சந்திரனும் மிகப் பெரிய வலுவில் இல்லை. அதேபோல லக்னத்திற்கு பத்தாமிடத்திற்கு எவ்வித சுபத் தொடர்புகளும் இல்லாத நிலையில், ராசிக்குப் பத்தில் நீச செவ்வாய் இருப்பதும் பிரதமர் போன்ற உயர்பதவி வகிப்பதற்கான மேம்பட்ட நிலை ஆகாது.
எனவே மேற்கண்ட இரு ஜாதகங்களையும் நுணுக்கமாக உள்ளே சென்று ஆராயும் நிலையில் செப்டம்பர் 1949-ல் பகல் 12.02 மணிக்குப் பிறந்ததாக சொல்லப்படும் ஜாதகமே உண்மையானதாக இருக்கக்கூடும். ஜோதிட விதிகள் அந்த ஜாதகத்திற்கே அதிகமாகப் பொருந்தி வருகின்றன.
இதுபோன்ற அறிவியல் ரீதியிலான ஆய்வுகளால் மட்டுமே வேத ஜோதிடம் ஒரு விஞ்ஞானப் பூர்வமான கலை என்பது ஒத்துக் கொள்ளப்ப்பட்டு, அதுபற்றிய விழிப்புணர்வும், எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாள், நேர விபரங்களை துல்லியமாக குறித்து வைக்க வேண்டும் என்கிற ஆர்வமும் பொதுமக்களிடம் ஏற்படும்.
அடுத்த வெள்ளி வேறு ஒரு தலைப்பில் தொடருவோம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.