adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அதி உச்ச பதவியை அடைய முடியுமா?- குருஜியின் விளக்கம்…
ஆர். விக்னேஸ்வரன், குளித்தலை. கேள்வி. சிறுவயது முதல் அரசியல் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு தற்போது வரை கடுமையாக செயல்பட்டு வருகிறேன். நான் தேர்ந்தெடுத்துள்ள அரசியல்தான் என்னுடைய எதிர்கால வாழ்க்கையாக இருக்கும் என நம்புகிறேன். ஜாதகப்படி அதி உச்சபதவியை அடையும் யோகம் எனக்கு உள்ளதா? என்னுடைய லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுவாக உள்ளதா? ஜாதகம் யோகமானதா? நடக்கும் ராகுதசை என்ன பலன் தரும்? அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும்? ஒரு எதிர்கால அரசியல்வாதி தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். பதில். (துலாம் லக்னம், ரிஷப ராசி. 1ல் ராகு, 2ல் சுக், குரு. 3ல் சூரி, 4ல் புத, 5ல் சனி, 7ல் கேது, 8ல் சந், 11ல் செவ், 13-1-1995 அதிகாலை 1-35 குளித்தலை) அரசியலின் மிக உயரிய அதிஉச்ச பதவியான ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் போன்ற பதவிகளை அடைவதற்கு சிறிதும் பழுதற்ற, பங்கமில்லாத யோகங்களை கொண்ட ஜாதகம் அமைந்திருக்க வேண்டும். உன்னுடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் வர்க்கோத்தமம் அடைந்திருக்கின்றன. இதில் சூரியனும், சந்திரனும் சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்து, அதில் சந்திரன் வளர்பிறையாக உச்சத்திலிருந்து, தற்போது ராகு தசையும் நடப்பதால் உனக்கு அரசியல் ஆர்வம் வந்திருக்கிறது. அதிகாரத்தில் உயர் நிலையில் இருக்கும் ஒருவருக்கு சிம்மத்தோடு சனி தொடர்பு கொண்டிருக்காது. அப்படி தொடர்பு இருக்குமாயின் அங்கே சனி சுபத்துவம் அடைந்திருப்பார். உன்னுடைய ஜாதகத்தில் சனி, ராசிக்கு பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் சிம்மத்தை பார்ப்பது உள்ளாட்சி அமைப்புகளில் அதிஉச்ச பதவியை அடையும் அமைப்பு. ராசிக்கு நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் அமைந்து சதுர்கேந்திர யோகம் உன் ஜாதகத்தில் இருப்பது சிறப்பு. அதேபோல இயற்கை சுப கிரகங்களான குருவும், சுக்கிரனும் சந்திரனுக்கு நேர்பார்வையில் சந்திர அதியோகத்தில் இருப்பதும் உன்னை பிரபலமானவராக மாற்றக்கூடிய நல்ல யோகம். அதிலும் முக்கியமாக குருபகவான் சந்திரனுக்கு நேர் எதிரில் 180 டிகிரியில் இருக்கிறார். இதனால் துலாம் லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் குருவின் தசை உனக்கு அவயோகங்களை செய்யாமல் நல்லவைகளை மட்டுமே தரும். அவயோகம் எனப்படும் சாதகமற்ற பலன்களை தரக்கூடிய ஒரு கிரகம் சுபத்துவமாக இருப்பின், கெடுபலன்களைத் தராது. வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகவும் யோகமாக இருக்கக்கூடிய ஜாதகம் உன்னுடையது. வலுப்பெற்ற சந்திரனின் பார்வையில் இருப்பதால் லக்னாதிபதி சுக்கிரன் பலமாகத்தான் இருக்கிறார். நடக்கும் ராகுதசை லக்னாதிபதி சுக்கிரனின் தசை போல செயல்பட்டு உனக்கு எதிர்காலத்திற்கான அஸ்திவாரங்களைச் செய்யும். 46 வயதிற்கு மேல் வரும் சனிதசை உனக்கு பிரபல யோகத்தை தரும். ராசிக்கு 10க்குடைய சனியும், லக்னத்திற்கு 10-க்குடைய சந்திரனும் வலுத்திருப்பதால் உன்னால் அரசியலில் உயர் பதவியை அடைய முடியும். எதிர்காலத்தில் அரசியல் எனும் தொழிலில் நன்கு “சம்பாதிக்கப்” போகின்ற ஒரு அரசியல்வாதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். (13.11.2018 மாலை மலரில் வெளிவந்தது)  

One thought on “அதி உச்ச பதவியை அடைய முடியுமா?- குருஜியின் விளக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *