adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 207 (02.10.18)

த. தீனதயாளன், துறையூர்.

கேள்வி :

வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். நான்கு மாதத்தில் அடிக்கிறார் திட்டுகிறார் என்று புகார் வந்தது. பெரியவர்கள் சமாதானம் பேசியும் சரி வரவில்லை. அவருக்கு நிரந்தர வேலை இல்லை. மூன்று மாதம் டெய்லர், மூன்று மாதம் போர் வண்டி, பேருந்தில் நடத்துனருக்கு கையாள் என்று சென்று கொண்டிருக்கிறார். பேருந்தில் வந்த ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு நிரந்தரமாகி விட்டது. தங்கை குமுறிப் போய் தினமும் யாருடன் போனில் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு பூட்டை எடுத்து மண்டையை உடைத்து விட்டார். தங்கை அழுதுகொண்டே வீட்டிற்கு வர, நாங்களும் கண்டித்து திரும்ப கொண்டு போய்விட்டு வந்தோம். பிரச்சனை பெரிதாகி நான் அவளுடன் தான் இனி வாழப் போகிறேன், உன்னால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடுகிறாராம். அடிக்கடி நீயாக சென்றுவிடு இல்லையேல் நாம் செய்யும் கொடுமையால் நீயே ஓடிவிடுவாய் என்று சொல்வதாக தங்கை சொல்கிறாள். இது ஜாதகக் கோளாறா? அல்லது அவரின் மனக்கோளாறா? சேர்ந்து வாழ வேண்டுமென்று தங்கை நினைக்கிறாள். அவன் வாழ வைக்க முடியாது என்ற தீர்மானத்தில் இருக்கிறான். தங்கை இருமுறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். வெளியில் சொன்னால் மானம் போகிறது. யார் சொன்னாலும் கேட்கும் எண்ணம் அவனிடம் இல்லை. இங்கு ஒரு ஜோதிடர் ஜாதகம் தப்பாக இருக்கிறது. நட்சத்திரம் தவறு அதனால்தான் பிரச்சினை என்கிறார். ஜாதகம் பொருந்தவில்லையா? சட்டத்தை கையில் எடுப்பதா அல்லது நானே “சட்டத்தை” கையில் எடுப்பதா என்று என் குருநாதர்தான் சொல்ல வேண்டும்.

பதில் :
சந் சனி கே
சூ பு சு
9.3.1997 இரவு 8.57 துறையூர்
குரு  
செ ரா

வாக்கிய பஞ்சாங்கத்தினால் வாழ்க்கை கெட்டுப்போன இன்னொரு உதாரண ஜாதகம் உங்கள் தங்கையுடையது. திருக்கணிதப்படி ராசி, நட்சத்திரம் மாறுகிறது. மற்ற கிரக அமைப்புகளும் வாக்கியத்தில் மாறியிருக்கலாம்.

ராசிக்கு ஏழில் செவ்வாய், ராகு. ராசியிலேயே சனி, கேது. 7க்குடையவர் 12ல் மறைந்து, ராகுவுடன் ஒரே டிகிரியில் இணைவு போன்ற கடுமையான தோஷமுள்ள ஒரு பெண்ணிற்கு 20 வயதில் திருமணம் செய்து வைத்ததை போன்ற பாதகம் வேறெதுவுமில்லை.

திருமண காலத்தில் ஆறு, எட்டு அதிபதிகளின் தசை அல்லது அவர்களின் தொடர்பு கொண்ட தசை, புக்திகள் வரக்கூடாது. அப்படி வந்தால் திருமணத்தை பொறுமையாக செய்ய வேண்டும். தங்கைக்கு தற்போது ஆறாமதிபதி குருவின் நட்சத்திரத்தில் இருக்கும் புதன் தசை நடந்து கொண்டிருக்கிறது. குரு சனியுடன் பரிவர்த்தனை பெற்று இருப்பதால், வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் போன்ற ஆறாமிட பலன்களைத்தான் முதல் எட்டரை வருடங்களுக்கு தருவார்.

ஏழுக்குடைய செவ்வாய் கிரகண தோஷம் பெற்று மறைந்து, சனி பார்வையும் அடைந்து வலுவிழந்த நிலையில் பதினொன்றாமிடம் வலுத்திருப்பது இரண்டு திருமண நிலையை குறிக்கிறது. தங்கை கணவர் ஜாதகத்திலும் தற்போது குரு தசையில் சுக்கிரபுக்தி நடைபெறுவதால் 2020ஆம் ஆண்டுவரை பிரிவினை இருக்கத்தான் செய்யும். ஒருமுறை தங்கையை கூட்டிக்கொண்டு காளஹஸ்தி சென்று வாருங்கள். இருபது வாரம் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று அன்னை ரங்கநாயகி தாயாரை தங்கையை தரிசித்து வர செய்யுங்கள். சட்டத்தை கையில் எடுப்பதா அல்லது மரச் சட்டத்தை கையில் எடுப்பதா என்பதை அன்னை வழிகாட்டுவார்.

என். ராஜு, சங்ககிரி.

கேள்வி :

தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற எனது சூழ்நிலைகள் நன்றாக இல்லை. 47 வயதாகி பல முயற்சிகள் செய்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது திருமணம் நடைபெறும் என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பதில் :
சனி
ரா
4.11.1970 இரவு 10.02 ஈரோடு
கே
சந் சூ சு பு கு செ

லக்னத்திற்கு 7ஆம் இடத்தை செவ்வாய் பார்த்து, ராசிக்கு ஏழாமிடத்தை சனி பார்த்த கடுமையான களத்திரதோஷம் உங்களுக்கு இருக்கிறது. குருவும் சுக்கிரனும் மிக நெருக்கமாக இருந்தாலே தாம்பத்திய சுகம் தாமதமாக கிடைக்கும், அல்லது கிடைக்கவே கிடைக்காது. உங்களுக்கு சுக்கிரன் வக்கிர நிலையில் இருப்பதோடு நீச சனியின் பார்வையிலும் இருக்கிறார்.

புத்திரகாரகனும், புத்திர ஸ்தானாதிபதியும் நீச சனியின் பார்வையில் இருந்து, ராசிக்கு ஐந்தில் சனி அமர்ந்து, லக்னத்திற்கு ஐந்தைப் பார்ப்பதும் கடுமையான புத்திர தோஷம். இது போன்ற அமைப்பிற்கு மிகவும் தாமதமாகத்தான் திருமணம் கைகூடும். ஜாதகப்படி அடுத்த ஜூன் மாதத்திற்கு மேல் ஆரம்பிக்கும் புதன் புக்தியில் திருமணம் நடக்கும். முன்னதாக லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

குப்பாத்தாள், குண்டடம், திருப்பூர்.

கேள்வி :

அரசு வேலையில் உள்ள மகளுக்கு பல பரிகாரங்கள் செய்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தடை மட்டுமே மிஞ்சுகிறது. மிகுந்த மனவேதனையில் தங்களின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறேன்.

பதில் :
பு ல கு சூ சு செ
ரா
23.5.1989 காலை 07.05 கோவை
கே
சந் சனி செ

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், எட்டில் சனி, ராசிக்கு ஏழில் சனி பார்வையுடன் செவ்வாய் என்ற அமைப்புள்ள இந்தப் பெண்ணிற்கு ஜாதகம் யோகமாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் இதுவரை திருமணம் நடக்கவில்லை. இது போன்ற ஜாதகங்களுக்கு 30 வயதிற்கு மேல் தான் திருமணம் நடக்க வேண்டும் அப்போதுதான் அது சந்தோஷமாகவும் நிலையானதாகவும் இருக்கும். வரும் ஏப்ரல் முதல் அக்டோபருக்குள் சூரிய தசை, சுக்கிர புக்தியில் திருமணம் உறுதியாக நடைபெறும். சுறுசுறுப்பாக வரன் பார்க்கவும். அடுத்த வருடம் இதே நேரத்தில் உங்கள் பெண் கணவருடன் இருப்பாள். வாழ்த்துக்கள்.

எஸ். ஜெயந்தி, கொளத்தூர், சென்னை-99.

கேள்வி :

இதுவரை 10 தடவைக்கு மேல் கடிதம் எழுதிவிட்டேன். கேள்வி கேட்கின்ற அனைவருக்கும் பக்கம் பக்கமாக பதில் தருகின்ற நீங்கள் என் மகளின் வாழ்க்கை பற்றி ஒரே ஒரு வரியிலாவது பதில் தாருங்கள். முப்பது வயதாகியும் இன்னும் திருமணம் கை கூடவில்லை. இக்கடிதத்தை பெருமாள் முன் வைத்து எழுதுகின்றேன்.

பதில் :
பு ரா ல சூ சு
18.6.1984 காலை 6.55 சென்னை
சந்  
குரு கே செ சனி

தான் அஸ்தமனம் செய்த கிரகத்தின் பலனை சூரியனே தருவார் என்ற விதிப்படி நடக்கும் குருதசை, சூரிய புக்தியில் வரும் ஜூன் மாதத்திற்குள் மகளுக்கு திருமணம் நடக்கும்.

     

எஸ். குலோத்துங்கன், கொல்லிமலை.

கேள்வி :

அய்யா, பிறவியிலேயே ஒருவர் ஊனமாகப் பிறந்து, வாழ்நாள் முழுவதும் ஊனமாகவே வாழ்வதற்கு என்ன கிரக அமைப்பு காரணமாக இருக்கும்? இது போன்ற நிலைக்கு காரணம் என்னவாக இருக்கும்?

பதில் :

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், ராசி இரண்டும் சனி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று பாபக்கிரகங்களின் தொடர்பு, பார்வை, அமர்வு போன்ற சம்பந்தங்களைப் பெற்று, வேறு சுபக் கிரகங்களின் பார்வையோ, சம்பந்தமோ இல்லாத நிலையில் அந்த ஜாதகர் உடல், மனம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பார்.

இதில் லக்னாதிபதி எந்த அளவிற்கு இருக்கிறார் என்பதைப் பொருத்து அவரது ஆயுள், உடலின் நகரும் தன்மை அல்லது மனதின் செயல்பாடு இருக்கும். ஜோதிட சாஸ்திரம் இது போன்ற நிலைக்கு முன் ஜென்மத்தில் செய்த கர்மவினை என்று பதில் தருகிறது.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 207 (02.10.18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *