எந்த ஒரு நிலையிலும் ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவுபடுத்துவது என்னுடைய வழக்கம். அப்படியானால் லக்னாதிபதி நீசம் அடைந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காதா, லக்னநாயகன் நீசம் அடைந்த ஒருவரால் வாழ்வில் உயர்நிலையை அடைய முடியாதா என்பது போன்ற சந்தேகங்கள் அனைவருக்கும் வரும்.
ஜோதிடத்தில் விதிகளை விட விதிவிலக்கிற்கே முக்கியத்துவம் என்பதும் அடிக்கடி நான் சொல்லுவதுதான். அந்தவகையில் ஒரு பாவகாதிபதி நீசம் அடைந்திருந்தாலோ அல்லது வேறு வகையில் பலவீனம் அடைந்திருந்தாலோ அந்த பாவகத்தின் பலன் உங்களுக்கு கிடைக்காது என்பது ஜோதிடத்தின் மிக முக்கிய விதி.
உதாரணமாக நான்காம் பாவகாதிபதி நீசம் பெற்றோ அல்லது வேறுவகையில் பலவீனமாகியோ இருந்தால், நான்காம் வீட்டில் செயல்பாடுகளான, வீடு, வாகனம், அம்மா போன்றவைகளில் உங்களுக்கு குறைகள் இருக்கும் என்று வேதஜோதிடம் விளக்குகிறது.
இதில் நான்காம் பாவகத்தின் காரகக் கிரகங்களான சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அம்மா இல்லாமல் போகலாம். அல்லது தாய் இருந்தும் தாயின் அன்பு கிடைக்காத சூழல் இருக்கலாம். அதேபோல வீடு, வாகனம் போன்றவைகளின் காரண கிரகமான சுக்கிரனும், நான்காம் பாவகாதிபதியும் பாதிக்கப்பட்டிருந்தால் சொந்தவீடு, வாகனம் போன்றவை உங்களுக்கு வெறும் கனவாகவே இருக்கும்.
நான்காம் பாவகாதிபதி முறையான நீச பங்கத்தைப் பெற்றிருக்கும் நிலையில் அதன் காரக கிரகங்களும் வலுவாக இருக்குமானால், வீடு, வாகனம் போன்றவைகள் ஒன்றுக்கு மேற்பட்டதாகவும், நிகரற்ற தாயும், தாயன்பும் உங்களுக்கு கிடைக்கும்.
அதேபோல ஒரு ஜாதகத்தின் ஆதார நாயகனான லக்னாதிபதி வலுவிழந்தால் அந்த மனிதனால் சொந்தமாக இயங்க முடியாது, எதற்கும் பிறரைச் சார்ந்தே அவன் இருப்பான் என்று வேதஜோதிடம் சொல்லுகிறது.
அதேநேரத்தில் லக்னாதிபதி கிரகம் நீசமாகி வலுவிழந்த நிலையில், அவர் முறையான நீசபங்கத்தைப் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டு, வாழ்வின் பிற்பகுதியில் தனது சொந்த முயற்சியால் முன்னேறி தனக்கு விதிக்கப்பட்ட இலக்கை அடைவார் என்பது விதி. இதற்கு லக்ன நாயகன் முறையான நீச பங்கத்தை பெற்றிருக்க வேண்டும்.
லக்னம் என்பது உங்களைத்தான் குறிக்கிறது. அதன் அதிபதி கிரகம் உங்களுடைய சிந்தனை, செயல்திறன், குணங்கள் போன்றவைகளை எடுத்துச் சொல்லும். ஒரு மனிதன் தனது லக்ன நாயகனின் குணங்களை கொண்டிருப்பான். அதன் தன்மைகளை அப்படியே பிரதிபலிப்பான். லக்னநாயகனின் வலிமை, அவர் இருக்கும் வீடு, அவருடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த குணங்கள் கூடுதல் குறைவாக இருக்கும்.
ஒரு கிரகம் நீசம் அடைந்தாலும், அது முறையான நீசபங்கத்தைப் பெற்றிருக்குமாயின் அது உச்சமானதற்கு சமம். குறிப்பாக அந்தக் கிரகம் உச்சத்தை விட மேலான ஒரு நிலையை பெறும் என்றே நம்முடைய மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
கீழே ஒரு பெரும் பணக்காரரும், அரசியல்வாதியுமான ஒருவரின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன்.
இளமையில் கஷ்டத்தை அனுபவித்து, எவருடைய தயவுமின்றி, தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறி, இன்றைக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் அதிபதியாகவுள்ள மிகப் பெரும் செல்வந்தர் இவர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு கல்லூரிப் பருவம் முதலே அரசியல் ஈடுபாடு இருந்தது. கல்லூரிப் பருவத்திலேயே இவரும், இவரது நண்பர்களும் அரசியலில் ஈடுபட்டனர். இவரது நெருங்கிய நண்பர்களும் இன்றைக்கு அரசியலில் உயர்நிலையில் இருக்கின்றனர்.
இளம்வயதில் லக்னாதிபதி செவ்வாயின் குணப்படி நல்ல உடற்கட்டோடு, மிகவும் துருதுருவென காணப்பட்டதால், அன்றைய முதல்நிலை அரசியல் தலைவரின் பார்வையில் பட்ட இவர், தலைவரின் மரணம் வரை அவருக்கு நெருக்கமான இடத்தில் ஒரு தொண்டராகவும், அருகிலேயே இருக்கும் வாய்ப்புக் கொண்டவராகவும் இருந்தார்.
முதல்நிலைத் தலைவரின் மரணத்திற்குப் பிறகு, அரசியலிலும், தொழிலிலும் ஈடுபாட்டை காட்டி, முயற்சிகளை தொடர்ந்து, இன்றைக்கு மிகப்பெரிய தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும், தான் சார்ந்துள்ள்ள சமூகத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் இவர் இருக்கிறார்.
இந்த வி.ஐ.பி.யின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்றிருக்கிறார்.
பொதுவாக, ஓரளவு ஜோதிடம் அறிந்தவர் மனதில் லக்னாதிபதி நீசம் பெற்றிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக லக்னாதிபதி நீசம் பெற்றவர் ஒரு பிரபலமாகவோ அல்லது வி.ஐ.பி.யாகவோ இருக்க முடியாது என்ற கருத்து ஜோதிட ஆர்வலர்களிடம் இருப்பதை நான் உணருகிறேன். எதற்கும் விதி விலக்கு உண்டு என்பதை விளக்கவே இவரது ஜாதகத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.
என்னுடைய “பாபக்கிரகங்களின் சூட்சுமவலு தியரி” ப்படி லக்னாதிபதி பாபக் கிரகமாக இருப்பின் நேர்வலு பெறாமல், மறைமுகமான வலுப் பெறுவது மிகவும் நல்லது. அப்படி இருந்தால் அந்த பாபக் கிரகத்தின் கொடூரத் தன்மைகள் உள்ளுக்குள் மறைந்து அதன் சுபத்துவ தன்மைகள் ஜாதகரிடம் மேலோங்கி இருக்கும்.
இந்த ஜாதகருக்கு விருச்சிகம் லக்னமாகி, லக்னாதிபதி செவ்வாய் நீசம் அடைந்து நேர்வலு இழந்து இருக்கிறார் ஆயினும் ஆறில் இருக்கும் சந்திரனுடன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்று நீசபங்கம் அடைகிறார். அதோடு செவ்வாய், சந்திரனுக்கு கேந்திரத்திலும், பாபக்கிரகங்களுக்கு மட்டுமேயான திக்பலத்திற்கு அருகாமையில் ஒன்பதாம் இடத்திலும் இருக்கிறார்.
எல்லாவற்றையும் விட மேலாக நீசபங்க நிலையின் மிக முக்கிய விதியான, நீசமடைந்த செவ்வாய் இன்னொரு நீசனான குருவால் பார்க்கப்படுகிறார். நீசனை நீசன் பார்த்தால் இரு கிரகங்களும் உச்ச நிலையை அடைவார்கள் என்பது வேத ஜோதிடத்தின் முக்கியமான விதி.
இந்த வி.ஐ.பி விருச்சிக லக்னமாகி செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்ததால் இயல்பாகவே அதிகாரம் செய்வதில் விருப்பமுள்ளவராகவும், ஆளுமைத்திறன் மிக்கவராகவும், யாருக்கும் வளைந்து கொடுக்காமல், நேரான நிலை கொண்டவராகவும் உள்ளவர்.
மிகவும் முக்கியமாக ஒரு செயலை செய்வதற்கு முன் யோசிக்காமல், செய்த பின் அதன் நல்ல, கெட்ட விளைவுகளை அனுபவித்து, அதன் பலன்களை எதிர்கொள்வது செவ்வாயின் குணம். இது செவ்வாயின் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு இருக்கும். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
செவ்வாய் சுபத்துவமாகவும், சூட்சும வலுவுடனும் இருக்கும் ஒருவர் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். அவருக்கு உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் இருக்கும். இது போன்ற ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள் வயதானாலும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். அது இவருக்கும் பொருந்தும், அதேபோல செவ்வாய் இளைஞர்களைக் குறிப்பவர். எனவே தான் சார்ந்துள்ள சமூகத்தின் இளைஞர்களுக்கு இவர் விருப்பமான தலைவராக இருக்கிறார்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த இவருக்கு குழந்தைப் பருவத்தில் ஏறத்தாழ ஆறு வருடம் கேது தசையும், அதன் பின்னர் ராசி மற்றும் லக்னத்திற்கு அவயோகரான உச்சம் பெற்ற சுக்கிர தசை 26 வயது வரையும் நடைபெற்றது.
ஒரு தசை ராஜயோக பலன்களை செய்ய வேண்டுமாயின், அதற்கு முந்தைய தசையின் இறுதிப்பகுதியான சுமார் மூன்றாண்டு காலம் ஒரு அறிமுக, அஸ்திவார நிலை கிடைக்கும் என்பதன்படி சுக்கிர தசையின் நிறைவு பகுதியிலேயே இவரது அரசியல் பயணம் தொடங்கியது. சூரிய தசை முதல் அது வேறு விதத்தில் பயணிக்கத் தொடங்கியது.
விருச்சிக லக்னத்தில் பிறக்கும் ஒருவருக்கு சரியான பருவத்தில் தர்ம,கர்மாதிபதிகளான சூரிய, சந்திரனின் தசைகள் வருவது மிக விசேஷம். மிகவும் உன்னதமான தர்ம,கர்மாதிபதி யோகத்தை முதல்நிலையில் அனுபவிக்கும் லக்னம் விருச்சிகம் மட்டுமே. ஏனெனில் இந்த யோகத்தை தரும் மற்ற கிரகங்கள், ஜாதகத்தில் இரு ஆதிபத்தியத்திற்கு அதிபதியாகி, அதில் ஒன்று கெட்ட அமைப்பாக அமைந்து யோகம் அரைகுறையாகும்.
விருச்சிகத்திற்கு மட்டுமே ஒரு ஆதிபத்தியத்தை மட்டும் கொண்ட கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒன்பது, பத்துக்கு மட்டும் உரியவர்களாகி, பங்கமற்ற நல்ல யோகத்தை தருவார்கள். அதிலும் அமாவாசை யோகத்திலோ, பவுர்ணமி யோகத்திலோ சூரிய, சந்திரர்கள் இருப்பார்களேயானால் மிகவும் விசேஷமான நற்பலன்கள் கிடைக்கும்.
இவரது 26 வயதுக்கு பிறகு ஆரம்பித்த தர்மகர்மாதிபதிகள் சூரிய, சந்திரர்களின் தசை முதல் இவரது முன்னேற்றம் ஆரம்பித்தது. அமாவாசை யோகத்தில் இணைந்திருக்கும் சூரிய, சந்திரர்கள் முழுமையான பலன் தர வேண்டுமெனில் அவர்களில் ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் முக்கிய விதி.
அதன்படி இவரது ஜாதகத்தில் அமாவாசை யோகத்தில் இணைந்திருக்கும் சூரியன் உச்சம் பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த அமைப்பால் உச்சம் பெற்ற சூரிய தசை முதல் இவருக்கு முதல் நிலை அரசியல் தொடர்புகள் ஏற்பட்டு பிறரால் கவனிக்கப்பட கூடிய ஒருவராக ஆனார்.
அதனையடுத்து நடைபெற்ற சந்திர தசையும் இவரை அரசியலில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. லக்னாதிபதி முறையான நீசபங்கம் அடைந்தால் 40 வயதிற்கு பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்பதன்படி இந்த ஜாதகர் வாழ்க்கையின் பிற்பகுதியில் இன்று அரசியலிலும், தொழிலிலும் கவனிக்கத்தக்க ஒருவராக இருக்கிறார்.
பலவிதமான தொழில்களை ஜாதகர் செய்து வந்தாலும், ராசிக்கு பத்தாமிடத்தில் குரு வலுப்பெற்று இருப்பதால் நிதி சம்பந்தப்பட்ட வங்கித் தொழிலே இவருக்கு முதன்மையாக இருக்கிறது. குரு இங்கே ஆட்சி பெற்ற சனியின் இணைவாலும், சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதாலும், இன்னொரு நீசனின் பார்வையைப் பெற்றிருப்பதாலும், உச்சநிலையைப் பெறுகிறார். எனவே குருவின் தொழிலான வங்கித் தொழில் இவருக்கு அமைந்தது. சுக்கிரன் உச்சமாக இருக்கும் காரணத்தால் மீடியாத் துறையிலும் தன்னுடைய தொழில் அமைப்புகளைக் கொண்டிருக்கிறார்.
மிகவும் முக்கியமாக பத்தாம் அதிபதியான சூரியன் உச்சமாக இருந்தாலும், பத்தாமிடமான சிம்மத்தில் ராகு இருக்கும் காரணத்தால் இவரால் இதுவரை நேரடியான அதிகார அரசியல் பதவிகளை அடைய முடியவில்லை. நிழல் கிரகமான ராகு, தான் இருக்கும் வீட்டின் அதிபதியாகவே மாறி, அந்த கிரகத்தின் பலனைத் தரும் என்பது விதி.
தற்போது இவருக்கு ராகுதசை நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் சரியான பருவத்தில் இந்த ஜாதகருக்கு அதி உச்ச அரசியல் தலைமையின் தொடர்புகளை ராகு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ராகுவிற்கு வீடு கொடுத்த சூரியன் உச்சம் என்பதால் அடுத்தடுத்து வர இருக்கும் தேர்தல்களில் மூலம் இவருக்கு நேரடி அரசியல் பதவிகள் கிடைக்கும். ஜோதிட ரீதியாக தமிழகத்தில் அடுத்து வரப் போகும் மாற்றங்களில் இவரது பங்கும் நிச்சயம் இருக்கும்
அடுத்த வெள்ளி தொடருவோம்.