adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
நீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM

ஒருவர் மருத்துவர் ஆவதற்கான கிரக நிலைகளின் தொடர்ச்சியை இப்போது காணலாம்….

ஒருவரின் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருந்தால்தான், அவர் பிறந்த இலக்கை அடைய முடியும் என்பதை அடிக்கடி எழுதுகிறேன்.

மேம்போக்காக பார்க்கும் நிலையில் ஒருவர் எதிர்காலத்தில் பணக்காரனாகவோ, அரசியல்வாதியாகவோ, மருத்துவராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றில் சிறப்பு வாய்ந்த ஒரு நபராகவோ வருவதாகத் தெரிந்தாலும், ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இல்லாத நிலையில் அவர் நிச்சயமாக அந்த நிலையை அடையவே முடியாது.

ஜாதகத்தில் எல்லா வகை நிலையிலும் முதலில் பார்க்க வேண்டியது லக்னாதிபதியின் வலுவை மட்டும்தான். மற்றவை எல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சம்தான். லக்ன ராஜனுக்கு வலுவில்லை என்றால் அது உச்சத்தை எட்ட முடியாத ஒரு ஜாதகம்.

அதேநேரத்தில் ஜோதிடம் என்பது மிக நுண்ணிய சமன்பாடுகளைக் கொண்ட ஒரு மகா சமுத்திரம். இதில் எல்லோராலும் மூழ்கி முத்தெடுக்க முடியாது. ஒரு விதிக்கு ஏராளமான விதிவிலக்குகள் இந்த மாபெரும் கலையில் உண்டு. எனவே மேலோட்டமாக லக்னாதிபதி வலுவின்றி தெரிந்தாலும், அவரது வலுவாக இருக்கிறாரா இல்லையா என்பதை மிக நுண்ணிய வழிகளில் மட்டுமே கணிக்க முடியும்.

உதாரண ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகி வலுவின்றி இருப்பதாகத் தெரிந்தாலும், சந்திரனுக்கு கேந்திரத்தில் அவர் இருப்பதாலும், லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த குருவோடு பரிவர்த்தனையாக இருப்பதாலும், அம்சத்தில் தனக்கு மிகவும் பிடித்த சூரியனின் நட்பு வீடான சிம்மத்தில் இருப்பதாலும், குருவின் பார்வையில் இருப்பதாலும், எல்லாவற்றையும் விட உச்ச சுக்கிரனின் இணைவோடு இருப்பதாலும் இங்கே நீசபங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார்.

நீசபங்கம் என்பது வேறு, நீசபங்க ராஜயோகம் என்பது வேறு என்பதை ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு வேறு நிலைகளையும் ஒரு மெல்லிய கோடு மட்டுமே பிரிக்கிறது. வேத ஜோதிடத்தின் மிக முக்கிய நுணுக்கங்களில் இதுவும் ஒன்று.

முக்கியமான ஒன்றை கவனித்தோமேயானால் ஞானிகள் நீசபங்க யோகம் என்று வெறுமனே இதனைக் குறிப்பிடவில்லை. நீசபங்க ராஜயோகம் என்றே தனிப்பட்டு சொல்கிறார்கள். மனிதர்களை வித்தியாசப்படுத்திக் காட்ட நூற்றுக்கணக்கான யோகங்களை குறிப்பிடும் வேத ஜோதிடம், மிகவும் அரிதான சில நிலைகளை மட்டுமே ராஜயோகம் என்று தனிப்பட்டு சொல்கிறது.

இதைப் பற்றி “நீசபங்க ராஜயோகம் – சில உண்மைகள்: என்ற தலைப்பில் தனியாகவே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

ஒரு கிரகம் நீசபங்கம் அடைவதற்கு பலவிதமான நிலைகள் இருக்கன்றன. நீசத்தில் இருக்கும் கிரகம் ஒருவிதமான ஒளி இழந்த நிலையை அடைகிறது. இழந்த ஒளியை அது வேறுவிதமான அமைப்பில் திரும்பப் பெறும்போது மீண்டும் தன் சுய வலுவை அடைகிறது என்பதே நீசபங்க தத்துவம்.

இதில் இழந்த ஒளியை விட அதிகமான சுப ஒளி அமைப்பை அந்தக் கிரகம் பெறும்போது, அது ராஜ யோகத்தை தரக் கூடிய அளவிற்கு அதி உச்ச நிலையை அடைகிறது என்பதே நீசபங்க ராஜ யோகத் தத்துவம்.

ஒரு கிரகம் நீச பங்கத்தை அடைவதற்கு ஏறத்தாழ பதினைந்துக்கும் மேற்பட்ட விதிகள் இருக்கின்றன. ஆனால் நீசபங்க ராஜயோகம் எனும் மிக உயரிய நிலையை அந்த கிரகம் அடைய வேண்டுமெனில் ஒரு உச்சனின் இணைவையோ, உச்சனுக்கு நிகரான ஒளி அளவைக் கொண்ட வலுப் பெற்ற குருவின் பார்வை அல்லது தொடர்புகளையோ, பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் ஒளி மிகுந்த சந்திரனின் 6,7,8 மிடத் தொடர்புகளையோ கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக பவுர்ணமிச் சந்திரனின் நேர் எதிரில் இருக்கும் ஒரு நீச கிரகத்தை நீசன் என்ற நிலையில் பார்க்கவே கூடாது. அது நீசன் என்ற நிலையில் இருந்து மாறி சந்திரனின் ஒளியைப் பெற்று உச்ச நிலையில் இருக்கும்.

ஜோதிடத்தில் பலன்களை மாற்ற வைக்கும் சமன்பாடுகள், இதுபோன்ற நுண்ணிய நிலைகளில் தான் ஒளிந்து கிடக்கின்றன. ஒரு கிரகத்தின் சுபத்துவ, சூட்சும நிலைகளைப் புரிந்து கொள்வதே வேத ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலாக இருக்கும். இதைத் தெரிந்து கொள்ளாமல் ஜோதிடத்தின் இறுதி நிலையான ஒரு மனிதனின் எதிர்காலத்தை உணரவே முடியாது.

நீசபங்கம் என்பது சாதாரண ஒரு நிலை, நீசபங்க ராஜயோகம் என்பது உச்சத்தை விட மேலான ஒரு அமைப்பு என்பதன்படி உதாரண அண்ணனின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் உச்சமாக அல்லது உச்சத்தை விட மேலான ஒரு நிலையில் இருக்கிறார் என்பதே உண்மை.

எனவே சகல விதிகளும் பொருந்தி வரும் நிலையில் பிறக்கும் ஒருவர் நிச்சயமாக வேதஜோதிடம் சொல்லும் தொழில் அமைப்பினை அடைந்தே தீருவார் என்பதற்கு இந்த ஜாதகத்தையும் ஒரு உதாரணமாக சொல்ல முடியும்.

இனி தங்கை ஜாதகத்தின் மருத்துவ அமைப்புகளைப் பார்க்கலாம்.

இவரின் ஜாதகத்தில் முதன்மை மருத்துவக் கிரகமான செவ்வாய், அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்து, லக்னத்திற்கு பத்தாம் வீட்டை தனது ஏழாம் பார்வையாலும், ராசிக்கு பத்தாம் வீட்டை தனது நான்காம் பார்வையாலும் தொடர்பு கொள்கிறார்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அவரை சுபத்துவம் அடைய வைக்கும் சந்திரனின் நேர் பார்வையில் இருக்கிறார். சந்திரன் இங்கே தேய்பிறை நிலையில் இருந்தாலும் சூரிய கேந்திரத்தில் இருப்பதால், அவருக்கு ஒளி நிலை இருக்கிறது.

ஒரு நல்ல யோக ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் கேந்திர நிலையிலும், லக்னத்திற்கு கேந்திர அமைப்பிலும் இருப்பார்கள் என்பதை அடிக்கடி எழுதியிருக்கிறேன். அந்த அமைப்பின்படி உதாரண ஜாதகங்களான அண்ணன், தங்கை இருவரின் ஜாதகங்களிலும் சூரிய, சந்திரர்கள், தங்களுக்குள் கேந்திரங்களிலும், லக்ன கேந்திரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது;

கேந்திரங்கள் என்பவை ஒளிப் பிரதிபலிப்பு மையங்கள் ஆகும். ஒரு வடிவத்தின் நான்கு முனைகளிலும் கண்ணாடிகளைப் பொருத்தி, ஒளியைப் பிரதிபலித்தால் மூல ஒளி சிந்தாமல், சிதறாமல் அந்த வடிவத்திற்குள்ளேயே பிரதிபலித்துச் சென்று கொண்டே இருக்கும். இந்த நிலையை கற்பனை செய்து பார்த்தீர்களேயானால் கேந்திரங்களின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். கேந்திரங்கள் என்று சொல்லப்படும் ஒரு ஜாதகத்தின் 1,4,7,10 ம் வீடுகளும் அவற்றில் இருக்கின்ற கிரகங்களும் தங்களுக்குள் ஒளிக் கலப்பை பெறுகின்றன.

தங்கையின் ஜாதகத்தில் ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு இருக்கிறார். குரு இருக்கும் வீடு அவரது நண்பரான செவ்வாயின் வீடு. இங்கே குருவிற்கு நட்பு நிலை உண்டாகிறது. மேலும் ராசிக்கு பத்தாம் வீட்டை சூரியன் பார்க்கிறார். ஆக ராசி, லக்னத்திற்கு பத்தாம் வீடுகளை செவ்வாய், குரு, சூரியன் மூவரும் வலுப் பெற்றுப் பார்க்கிறார்கள். எனவே இது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மருத்துவரின் ஜாதகம்.

சூரியன் இங்கே பகை வீட்டில்தானே இருக்கிறார் எப்படி வலுவாவர் என்ற கேள்வி எழுமானால், அந்தக் குறையை சூரியனைப் பார்க்கும் குரு நிவர்த்தி செய்கிறார். அந்தக் குரு வக்ரமாகி இருக்கிறாரே என்ற சந்தேகத்தை எழுப்புவீர்களேயானால் சூரியனுக்கு நேர் எதிரில் அதிவக்ர நிலையில் இருக்கும் குரு, சூரிய ஒளியால் அதிக வலுவை அடைவார் என்பதுதான் என் பதில். இதற்கு குரு எந்த வீட்டில் இருக்கிறார் என்பது முக்கியம். உச்சத்தில் இருக்கிறாரா வேறு நிலையா என்பதும் முக்கியம்.

வக்ரநிலையைப் பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும் அடிக்கடி இதைப் பற்றிய சந்தேகங்களை பலர் கேட்கிறீர்கள். அதையும் இன்னும் சில நிலைகளையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.

(17.08.2018 மாலை மலரில் வெளிவந்தது.)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

5 thoughts on “நீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM

  1. Sir ,my DOB is 04-04-1997 time is 00:30AM dhanusu lagnam magara raasi, Guru neecham, my next mahadesa is guru mahadesa…is it good or bad Sir

  2. In Annan jadhagam the difference between rahu and ketu is 8 is that correct? Usually they will be placed 7 places away from each other right Sir?

  3. MY SON NAME:ASHWIN DATE :17.09.2000 TIME:10.40 AM EDUCATION FUTURE APPADI ERUKKUM PLEASE AYYA SOLLUNGAL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *