adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
யாருக்குமே என் மீது உண்மையான அன்பு இல்லை-குருஜியின் விளக்கம்..

எல். எஸ். தனலட்சுமி, சென்னை - 95.

கேள்வி :
கணவர், மகன், மருமகள் இரண்டு பேரன்களோடு கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறேன். இவர்கள் யாருக்குமே என்மீது உண்மையான பாசம் இல்லை. எனக்கும் என் மருமகளுக்கும் எப்போதும் பிரச்சினைதான். மகன் 50 வயது ஆகியும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. கணவருடைய பென்ஷன் மற்றும் வீட்டு வாடகையில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

செலவு அதிகமாகிறது. மனக்கஷ்டத்திலும் பண நஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு சனி தசை நடந்து வருகிறது. இதில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். கஷ்டங்களிலிருந்து எப்போது மீள்வேன்? மறுபடியும் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து தான,தருமங்களைச் செய்து சந்தோஷமான மனநிலையில் இறக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இது நிறைவேறுமா?

பதில் :
ரா பு சு
18-7-1948 காலை 11-25 அரியலூர்
சூ சனி
சந் குரு கே செ ல
கடந்த 18 ஆண்டுகளாக நடந்த ராகுதசை எட்டில் செவ்வாயின் வீட்டில் ராகு இருப்பதால் உங்களுக்கு மிகுந்த கஷ்டங்களைக் கொடுத்திருக்கும். தற்போது உங்களுக்கு குருதசையில், சுயபுக்தி நடந்து வருகிறது. நீங்கள் குறிப்பிட்டதைப் போல சனி தசை உங்களுக்கு நடக்கவில்லை. ராகு செவ்வாயின் வீட்டில் இருந்து தசை நடத்துவதால் யோகங்களை செய்திருக்க வாய்ப்பில்லை. கன்னி லக்னத்திற்கு செவ்வாயின் வீடுகளில் அல்லது செவ்வாயின் தொடர்பு கொண்ட எந்த கிரகமும் நல்ல பலன் தராது.(கன்னி லக்னம், விருச்சிக ராசி. 1ல் செவ், 2ல் கேது, 3ல் சந், குரு. 8ல் ராகு, 10ல் புத, சுக். 11ல் சூரி, சனி. 18-7-1948 காலை 11-25 அரியலூர்)
வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் குரு தசை சுய புத்தி முடிந்தவுடன் உங்கள் வாழ்க்கையில் ஓரளவு நல்ல திருப்பங்கள் ஏற்படும். லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து அவரை சனி பார்ப்பதால் நீங்கள்தான் மருமகளிடம் எப்பொழுதும் குறை காணும் மாமியாராக இருப்பீர்கள். ஜாதகம் நன்றாக இருந்தாலும் லக்னத்திற்கு செவ்வாய், சனியின் பாப சம்பந்தம் ஏற்பட்டதால் எதிலும் திருப்தியடையாத கோபக்கார ஜாதகம் உங்களுடையது.
வாழ்க்கையின் முற்பகுதியில் நன்றாக இருந்திருப்பீர்கள். 33 வயதிற்கு பிறகு செவ்வாயின் வீட்டில் இருக்கும் நீச சந்திர தசை, அதன்பிறகு எட்டாம் அதிபதி செவ்வாய் தசை, பிறகு 68 வயதுவரை எட்டில் இருக்கும் ராகுவின் தசை, 85 வயது வரை செவ்வாயின் வீட்டில் இருக்கும் குருவின் தசை என பிற்பகுதி வாழ்க்கை முழுவதும் அஷ்டமாதிபதி செவ்வாயின் தொடர்புகள் ஏற்படுவதால் உங்களின் வயதான காலத்து வாழ்க்கை நிறைவாக இல்லை.
அதற்கு உங்களின் கோபக் குணமும் ஒரு காரணமாக இருக்கும். உங்களை போன்ற பெரியவர்கள், நாம் இப்படி நிறைவாக இல்லாத காரணத்தை ஜோதிடத்தின் மூலமாக உணர்ந்து தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஜோதிடத்தின் நோக்கம். யாருமே என் மீது உண்மையான பாசம் வைக்கவில்லை என்று நீங்கள் குறிப்பிடும் போது, அதற்கு என்ன காரணம் என்பதையும் நீங்கள் யோசித்திருந்தால் பதில் கிடைத்திருக்கும்.
ஒருவருக்கு எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் அவர் நமக்கு திரும்பத் தருவார். அன்பைக் கொடுத்தீர்களேயானால் அன்பு திரும்ப கிடைக்கும். வெறுப்பை தந்தால் வெறுப்பு தான் திரும்ப கிடைக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் கிடைத்த ஏமாற்றங்களால் வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே காட்டும் ஒரு மனைவியாக, தாயாக, மாமியாராக, பாட்டியாக மாறிவிட்டீர்கள். அதுதான் வயதான காலத்தில் உங்களின் மனக் கஷ்டங்களுக்கு காரணம்.
பெரியவர்கள் என்றும் அடுத்த தலைமுறையினரை புரிந்து கொண்டு அவர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்து பிடியை நம் கைக்குள் வைத்திருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் சிறியவர்களை குறை சொல்லிக் கொண்டு வெறுப்பை காட்டக் கூடாது. 70 வயது முடிந்துவிட்ட உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி இனிமேல் சொல்லித் தர ஒன்றுமில்லை.
நடக்கும் தசாநாதன் குரு, நீசமானாலும், வளர்பிறையாக உள்ள சந்திரனுடன் இணைந்து, லக்னாதிபதி புதன் நட்சத்திரத்தில் அமர்ந்து, நவாம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதாலும், உங்களின் கேட்டை நட்சத்திரத்திற்கு ஜென்மச்சனி விலகி விட்டதாலும், இனிமேல் உங்களின் மனக்குறைகள் தீர ஆரம்பிக்கும். உங்களின் அந்திமகாலம் நீங்கள் நினைப்பது போல அல்லாமல் சந்தோஷமாகவே இருக்கும்.

(07.08.2018 மாலை மலரில் வெளி வந்தது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *