adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கோடீஸ்வர யோகம் எனக்கு இருக்கிறதா? குருஜியின் விளக்கம் ..

பி. மோகன், ஈரோடு.

கேள்வி :
கடந்த 40 வருடங்களாக படாத கஷ்டமில்லை. இன்னும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு வருடமாக உங்களிடம் டிவியில் கேள்வி கேட்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். தொடர்பு கிடைக்கவில்லை. இங்குள்ள ஜோதிடர் ஐந்தாறு பேரிடம் பார்த்ததில், எல்லோரும் உன் ஜாதகம் பின் யோக ஜாதகம், 50 வயதிற்கு மேல் நீ நல்ல நிலையில் கோடீஸ்வரனாக இருப்பாய் என்று சொன்னார்கள்.

ஆனால் 51 வயது முதல் செய்துவந்த வேலை போய் பிபி, சுகர், இருதய நோய் வந்ததுதான் மிச்சம். இந்த வியாதி எல்லாம் போய் மறுபடியும் வேலைக்கு போக முடியுமா. என் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறதா?

பதில் :
சூ பு சுக் குரு ரா
சனி
25-3-1965 அதிகாலை 3 மணி ஈரோடு
செ
சந் கே
ராகு யோகம் செய்ய வேண்டுமெனில் 3, 6, 10, 11, 12ஆம் இடங்களில் இருப்பதே நல்லது. அல்லது திரிகோண ஸ்தானத்தில் இருக்கும் ராகு, ஒரு கேந்திரத்தின் அதிபதியோடு இணைந்து, அந்த கேந்திராதிபதி சுபராகி, லக்னத்திற்கும் நல்லவராக இருந்தால் பலத்த கோடீஸ்வர யோகத்தை செய்வார். உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இல்லை தற்போது நடைபெறும் ராகுதசை, உச்சம் பெற்ற சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து ரிஷப ராகுவாக இருந்தாலும், அவர் லக்னத்திற்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார்.
உங்கள் அமைப்பில் தசாநாதன் ராகு எட்டில் அமர்ந்த செவ்வாயின் சாரத்தில் இருப்பதால் கடன், நோய் போன்றவைகளையே தருவார். அடுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆறாம் அதிபதியான நீசபங்க புதனின் புத்தி ஆரம்பிக்க உள்ளதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு எந்த நல்ல பலனும் சொல்வதற்கில்லை.
பிபி, சுகர் போன்றவைகள் நோய்கள் அல்ல. அது ஒரு குறைபாடுதான். உடற்பயிற்சி செய்தும், உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தும் இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இருதய நோயும் அப்படித்தான். முறையான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு, மருத்துவர்களின் அறிவுரையை சரியாக கடைப்பிடித்தால் இந்த நோயையும் வெல்ல முடியும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு அனைத்திலும் கட்டுப்பாட்டுடன் இருங்கள். ராகு தசை, சுக்கிர புத்தி முதல் எல்லா வகையிலும் நன்மைகள் உண்டு.
உங்களை விட உயிர்க்கொல்லி நோய் வந்திருப்பவர்கள் எல்லாம் வெளியே யாருக்கும் சொல்லாமல் வேலைக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். வாழ்க்கை முறையும், சமூகச் சூழலும் மாறிவிட்ட நிலையில் முப்பது வயது தாண்டி விட்டாலே இங்கே உள்ள அனைவருக்கும் பிபி, சுகர் வந்து விடத்தான் செய்கிறது. யாரும் உங்களைப் போல எனக்கு பிபி வந்துவிட்டது, சுகர் வந்து விட்டது என்று மூலையில் உட்கார்ந்து விடவில்லை. காலையில் எழுந்திருத்து ஒரு அரைமணி நேரம் “விறுவிறு”வென நான்கு தெரு நடந்து விட்டால் எப்பேர்ப்பட்ட பிபி, சுகரும் காணாமல் போய்விடும்.
கோடீஸ்வரன் ஆனவர்கள் எல்லோரும் பிபி, சுகரைப் பார்க்காமல் மாடு போல உழைத்தவர்கள்தான். எதற்கும் சாக்குப்போக்கு சொல்லாமல் உழைப்பதற்குத் தயாராக இருந்தால் ஜாதகத்தில் இல்லாவிட்டாலும் கோடீஸ்வர யோகம் தானாகவே வந்துவிடும். சிறு சிறு குறைபாடுகளை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் மீண்டும் வேலை செய்ய முயற்சி செய்யுங்கள். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வரும் சுக்கிர புக்தி முதல் நல்ல மாற்றங்கள் உண்டு என்பதால் இப்போதே அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். தகுந்த பலன் இருந்தே தீரும்.
எனக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது, நான் கோடீஸ்வரன், கோடீஸ்வரன் என்று வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து கிடந்தால் பணக்காரன் ஆக முடியாது. சும்மாவே இருந்தால் கிடைக்கிற சாப்பாட்டுக்கும் பிரச்சனை வந்துவிடும். மனதில் இருக்கும் இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு வழக்கம் போல வேலையை பாருங்கள். என்றென்றைக்கும் நீங்கள் கோடீஸ்வரர்தான்.

(17.07.2018 அன்று மாலை மலரில் வெளி வந்தது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *