adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 196 (17.07.18)
எம். சீனிவாசன், ஈரோடு.
கேள்வி :
தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறேன். வேலையில் மன அழுத்தம் காரணமாக மாற்றுப்பணி அல்லது சொந்தத்தொழில் செய்ய முயற்சிக்கிறேன். ஏற்றுமதி, இறக்குமதி லைசென்ஸ் பெற்றிருக்கிறேன். அதில் முயற்சிக்கலாமா? ஜாதகப்படி என்ன பொருட்கள் லாபம் தரும்? அரசுப் பணி கிடைக்குமா? சிவராஜ யோகம் வேலை செய்யுமா? ஆண் குழந்தை யோகம் உள்ளதா?
பதில் :
சந் ல ரா சூ பு சுக்
23.06.1984 அதிகாலை 12.59 ஈரோடு
 
குரு கே செ சனி
மீனலக்னம், மீனராசிக்கு நல்ல பலன்களைத் தராத சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் திக்பல அமைப்பில் இருப்பதால் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார். இருப்பினும் பாதகாதிபதி புதனின் புக்தி இன்னும் ஒரு வருடம் வரை இருப்பதால் இந்த நேரத்தில் மாற்றங்கள் எதுவும் கூடாது. ஒரு வருடம் வரை பொறுமையாக இருக்கவும். கேது மாற்றங்களைக் குறிப்பவர் என்பதால் அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு பிறகு வரும் கேது புக்தியில் நல்ல மாற்றம் தெரியும்.
சுக்கிரதசை முடிந்த பிறகு அடுத்த ஆறு வருடங்களுக்கு ஆறாமதிபதியான சூரியனின் தசை ஆரம்பிக்க உள்ளதால் சொந்தத் தொழில் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சூரியன் திக்பலம் இழந்திருப்பதால் உங்களை கடன் பிரச்சினையில் கொண்டு போய் தள்ளுவார். சூரியதசையில் தொழில் செய்யக்கூடாது. செவ்வாய். சனி எட்டில் அமர்ந்து, பன்னிரண்டாம் இடத்திற்கு சுபத் தொடர்புகள் எதுவும் ஏற்படாததால் சூரியதசையில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் கை கொடுக்காது. நம்பி ஏமாந்து கடன்காரன் ஆவீர்கள் என்பதால் இன்னும் ஏழு வருடங்களுக்கு சொந்த தொழில் வேண்டாம்.
பத்துக்குடையவன் ஆட்சியாகி, ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு சூரியன் தொடர்பு கொண்டு, சிம்மத்தையும், சூரியனையும் வலுப்பெற்ற குரு பார்ப்பதாலும். 2020 முதல் சூரிய தசை நடக்க இருப்பதாலும் நீங்கள் அரசு வேலைக்கு செல்ல முடியும். அரசாங்கத்தில் ஒரு கடைநிலை ஊழியராகவோ அல்லது மந்திரியாகவோ இருந்து அரசுப் பணத்தை அனுபவிக்க வைப்பதுதான் சிவராஜ யோகம். அது உங்களுக்கு சூரிய தசையில் பலன் தரும். ஆண் வாரிசு உண்டு.
பி. நாகராஜன், உத்தர பிரதேசம்.
கேள்வி :
மற்றவர்களைப் போல நானும் தங்களிடமிருந்து ஜோதிடத்தை பயின்று வருகிறேன். கையில் எழுதிய ஜாதகத்திலும், கம்ப்யூட்டர் ஜாதகத்திலும் புதனின் இருப்பிடம் மாறி விடுகிறது. இதைத் தெளிவுபடுத்துங்கள். அனைத்து மேஷ ராசிக்காரர்களை போலவே நானும் அஷ்டமச் சனியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டேன். தற்போது எனக்கு என்ன தசா,புத்தி நடந்து கொண்டிருக்கிறது? அரசுப் பணியில் உள்ளேன். இழந்த கவுரவத்தையும், பாதிக்கப்பட்ட பதவி உயர்வையும் எப்போது திரும்பப் பெறுவேன்? தற்சமயம் விரும்பத்தகாத வகையில் வட இந்தியாவிற்கு பணிமாற்றம் அடைந்துள்ளேன். மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு பெரு முயற்சி செய்கிறேன். எப்போது நடக்கும்? இனி தமிழ்நாட்டில் வேலை செய்யும் அமைப்பு உள்ளதா? பணியில் இது போன்ற இன்னல்கள் இனி வருமா?
பதில் :
சூ சந் ரா
பு
27.03.1982 காலை 10.42 அருப்புகோட்டை
சுக்  
கே குரு செ சனி
ஜாதகத்தில் புதனின் இருப்பு திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் மாறுபடும். கம்ப்யூட்டரில் இருக்கும் நிலையே சரி. கையால் எழுதப்பட்ட வாக்கிய பஞ்சாங்கம் தவறு. தற்போது உங்களுக்கு சந்திரதசையில், புதன்புக்தி நடந்து கொண்டிருக்கிறது. சந்திரன், சர ராசியான மேஷத்தில், பரதேச வாசமான வெளிநாடு, வெளிமாநிலத்தை குறிக்கும் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து தசை நடத்துவதால் சந்திர தசை இறுதிவரை இன்னும் சில வருடங்களுக்கு நீங்கள் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை. பொறுமையாக இருங்கள். அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் இது போன்ற கஷ்டங்கள் வராது.
  ஏ.இலட்சுமணன், திருப்புவனம்.
கேள்வி :
மகன்கள் இருவருக்கும் 41, 38 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. மனம் மிகவும் வேதனைப்படுகிறது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். இவர்களுக்கு எப்போது நல்ல நேரம் வரும்? சிலர் இளையவனுக்காவது மணம் முடியுங்கள் என்று சொல்கிறார்கள். மூத்தவன் இருக்க சின்னவனுக்கு முடிக்கலாமா அல்லது இருவருக்கும் திருமணம் நடக்குமா? நீங்கள்தான் நல்ல பதில் தர வேண்டும்.
பதில் :
கே சந் செ குரு
02.09.1977 காலை 10.40 மதுரை
சுக் சனி
சூ பு
ரா
பெரியவனின் ஜாதகத்தில் வரும் ஜூலை மாதம் ஏழாம் தேதி முதல் செவ்வாய் தசையில், சனி புக்தி ஆரம்பிக்க உள்ளது. தாம்பத்திய சுகத்தை கொடுக்கும் சுக்கிரனுடன் சனி இணைந்திருப்பதாலும், ஏழுக்குடைய செவ்வாயின் தசை நடந்து கொண்டிருப்பதாலும் ஒரு வருடத்திற்குள் பெரிய மகனுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். பெரியவனின் மேஷராசிக்கு அஷ்டமச்சனி முடிந்து விட்டதால், இந்த வருட இறுதிக்குள் அவருக்கு மணமகள் அமைவார். சுறுசுறுப்பாக பெண் பார்க்கவும்.
  த. செல்வம், திருத்துறைப்பூண்டி.
கேள்வி :
ஜோதிட ஞானிக்கு பணிவான வணக்கங்கள். மகனுக்கு 36 வயதாகியும் எந்த வரனும் முடிவாகவில்லை. இங்குள்ள ஜோதிடர்கள் திருமணத்திற்கு இன்னும் இரண்டு வருடம் ஆகும் அதுவும் பெண் வாரிசு உள்ள இடத்தில்தான் அமையும். ஏழாமதிபதி சனி, செவ்வாயுடன் இணைந்து வக்ரம் பெற்றுள்ளதால், இளம் வயதில் வாழ்க்கையை இழந்த அல்லது கைம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன் வந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள். நீங்கள்தான் மகனின் ஜாதகத்தை பார்த்து எப்போது திருமணம் நடக்கும்? வரன் எந்த திசையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்து அமையும் என்றும், மூல நட்சத்திரம் என்பதால் மாமனார் மாமியார் உள்ள இடத்தில் அமையுமா என்றும் சொல்ல வேண்டும்.
பதில் :
சுக் சூ பு ரா
08.06.1982 காலை 10.40 திருத்துறைப்பூண்டி
சந் கே குரு செ சனி
மகன் ஜாதகப்படி அவனது பிறந்த நேரத்தில் தவறு இருக்கிறது. உங்கள் மகன் காலை பத்தரை மணிக்கு கடக லக்கினத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. கடக லக்னமாக இருந்தால் இரண்டாம் அதிபதி பதினொன்றாமிடமான சுக்கிரனின் வீட்டில் வலுவாக இருக்கும் நிலைமையில் எப்போதோ திருமணம் நடந்திருக்கும். இன்னும் 10 நிமிடம் கழித்துத்தான் அவர் பிறந்திருக்க முடியும். மகனது பிறந்த நேரம் தோராயமானதுதான். சிம்ம லக்னமாக இருந்தால்தான் இரண்டில் செவ்வாய், சனி அமர்ந்து தார தோஷமும், ஐந்தில் ராகு-கேதுக்கள் சம்பந்தம் ஏற்பட்டு புத்திர தோஷமும் உண்டாகி இதுவரை திருமணம் ஆகாத நிலைமை ஏற்படும்.
ஜோதிடரிடம் போய் வரப்போகும் பெண் எவ்வளவு தூரத்தில், எந்த திசையில் இருக்கிறார்? பெண்ணுடன் கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அதில் ஆண்கள் எத்தனை? பெண்கள் எத்தனை? தாய், தகப்பன் உயிரோடு இருப்பார்களா? இருக்க மாட்டார்களா என்பது போன்ற அபத்தமான கேள்விகளை கேட்பதை தவிருங்கள். ஒரு நுணுக்கமான உணர்வை சொல்லும் இந்த மாபெரும் கலையில் ஜாதகத்தைப் பார்த்தவுடன் நீ கடுமையான மன அழுத்தத்தில் இருப்பாய் என்று உடனே சொல்லி விட முடியும். ஆனால் எதனால் அந்த மன அழுத்தம் வரும் என்பதற்கு பல்வேறு விதமான கணக்குகளை போட்டு கணித்த பிறகுதான் சொல்ல முடியும்.
ஜோதிடரிடம் போய் உட்கார்ந்த இரண்டு நிமிடத்தில் உங்களின் வாழ்க்கை சரித்திரத்தையும், வரப் போகும் சம்பவங்களையும் அருள்வாக்கு போல கடகடவென்று என்று ஜோதிடர் ஒப்புவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்பதால்தான் பலர் வாய்க்கு வந்த பலனைச் சொல்கிறார்கள்.

புத்திர தோஷம் இருப்பதால் ஒரு முறை மகனை ஸ்ரீகாளகஸ்தி கூட்டிப் போய் முதல்நாள் மாலையே தங்கி ருத்ராபிஷேகம் செய்யவும். நடக்கும் சந்திரதசை, சுக்கிர புக்தியில் வரும் நவம்பருக்கு மேல் மகனுக்கு திருமணம் நடக்கும். விவாகரத்து, கைம்பெண் போன்றவர்கள் வாய்ப்பில்லை. கன்னிப்பெண்ணே மனைவியாக வருவாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *