adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 190 (05.06.18)

டி. உமா, சென்னை

கேள்வி :
கடந்த சில வருட காலமாக வலிப்பு நோய் உள்ளது மருத்துவரைப் பார்த்து மாத்திரை உண்டு வருகிறேன். ஆனாலும் நோய் குணமாகவில்லை. உடல்நலம் இல்லாததால் மனச்சோர்வு, சலிப்பு ஏற்படுகிறது. கடைசிவரை மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுமா? நோய் காரணமாக வீட்டு வேலைகளையும் சரிவரச் செய்ய முடியவில்லை. எனக்கு இந்த நோய் எதனால் ஏற்பட்டது? எப்போது சரியாகும் என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில் :
ரா
01.01.1983 அதிகாலை 3.00,மணி சென்னை சந்
சுக் செ பு
சூ கே குரு ல சனி
(துலாம் லக்கினம், கடக ராசி, 1-ல் சனி, 2-ல் குரு, 3-ல் சூரி, கேது, 4-ல் சுக், செவ், புத 9-ல் ராகு, 10-ல் சந், 01.01.1983 அதிகாலை 3.00 மணி சென்னை)
ஜாதகத்தில் ஆறாம் அதிபதி தசையோ அல்லது அவரது சம்பந்தம் பெற்ற கிரகங்களின் தசையோ நடக்கும் போது ஒருவருக்கு நோய் வரும் என்பது விதி. உங்கள் ஜாதகத்தில் ஆறுக்குடைய குரு இரண்டில் அமர்ந்து ஆறாம் இடத்தைப் பார்த்து, குருவின் வீட்டில் அமர்ந்த கேதுவின் தசை நடப்பதால் உங்களுக்கு இந்த நோய் இருக்கிறது. கேதுதசை வரை இன்னும் 4 வருடங்களுக்கு இது நீடிக்கும். 2021 இல் ஆரம்பிக்கும் சுக்கிரதசை, சுயபுக்திக்கு பிறகு நோய் நிரந்தரமாக குணமாகும். அதன்பிறகு மாத்திரை சாப்பிட தேவை இருக்காது.
எம். மயில்சாமி, கோவை - 24
கேள்வி :
மானசீக குருவிற்கு வணக்கம். எனக்கு ரிசப லக்கினம், கும்பராசி, தனுசில் குருவும், சனியும் இருக்கின்றன. 8, 9-ல் அதற்குடையவர்கள் இணைந்திருந்தால் பெருலாபம், பொக்கிஷம் அல்லது அதற்கு இணையான அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதை தங்களின் மூலம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
பதில் :
வீட்டில் இருந்து போகும்போது மனைவி பச்சைப் புடவை கட்டியிருந்ததால், கோவில் திருவிழாவில் போய் இங்கே பச்சைப் புடவை கட்டியிருப்பவர் எல்லாம் என் பெண்டாட்டி என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ, அதுபோலத்தான் எட்டு, ஒன்பதுக்குடையவர்கள் இணைந்தால் புதையல் கிடைக்கும் என்று சொல்வது.
ஜோதிடத்தில் பொதுவான ஒரே ஒரு விதியை மட்டும் வைத்து பலன் சொல்லக் கூடாது. அது நடக்கவும் செய்யாது. பல விதிகள் ஒன்றாக இணையும் போதுதான் அங்கே முழுமையான பலன் நடக்கும். ஜோதிடம் என்பது அவ்வப்போது கிடைத்த விதிகளின் பேரில் படிப்படியாக எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம். இந்தக் கட்டிடம் ஒரே நாளில் வந்து விடவில்லை. என்றோ ஒருநாள் 8, 9-க்குடையவர்கள் இணைந்திருந்த ஜாதகத்தை கொண்ட ஒருவருக்கு புதையல் கிடைத்ததைப் பார்த்து உருவான விதி இது. ஆனால் இதுபோல கிரக அமைப்பு இருக்கும் அனைவருக்கும் புதையல் கிடைக்கும் என்ற அவசியம் இல்லை.
வங்கிகள் இல்லாத அந்தக் காலத்தில், திருட்டுப் பயம் அதிகமாக இருந்த இடங்களில், சேமிப்பை புதைத்து வைக்கும் பழக்கம் இருந்து வந்தது. அது என்றோ ஒருநாள் இன்னொருவருக்கு புதையலாகக் கிடைத்தது. இன்றைக்கு யாரும் நம்முடைய பணத்தையோ, தங்கத்தையோ புதைத்து வைப்பதில்லை.
எட்டாமிடம் தரும் பல செயல்களில் எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஒன்று. அந்த வீட்டில் அதன் அதிபதியோடு, பாக்கியங்களை அனுபவிக்கும் 9-ம் அதிபதி இணைந்தால் மற்றவர்களுடைய பொருள் நமக்கு கிடைக்கும் என்பது ஒரு பொது விதி. இந்த இரண்டையும் இணைத்துத்தான் நீங்கள் சொன்ன பொக்கிஷம், புதையல் என்பதெல்லாம் வந்தது. ஒரு ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கட் வாங்கும் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கிறது என்றால் மற்ற 99, 999 பேரின் பணம் அவர் ஒருவருக்கே கிடைக்கிறது என்று பொருள். இதைத்தான் எட்டாமிடத்தின் எதிர்பாராத அதிர்ஷ்டம் என்று சொல்கிறோம்.
ஆனால் ஜோதிடத்தில் ஒரு விதி முழுமையாக பலன் தருவதற்கு அது சம்பந்தப்பட்ட அனைத்து துணை விதிகளும் பொருந்தி வர வேண்டும். அதன்படி ஒரு பொக்கிஷம் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு நீங்கள் நன்றாக வாழ வேண்டிய அமைப்பிற்கு உங்களுடைய லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரா, உங்களுக்கு யோக தசைகள் நடக்கின்றனவா, சம்பந்தப்பட்ட கிரகங்கள் நல்ல சாரத்தில் அமர்ந்து இருக்கின்றதா, இருவரும் நண்பர்களா, இணைந்திருக்கும் தூரம் என்ன என்பது போன்றவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பொதுவான விதி என்பது மாலைமலரில் ஞாயிற்றுக்கிழமை நான் எழுதும் ராசிபலன் போன்றதுதான். அனைவருக்கும் பொருந்த வேண்டும், பலிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. பொதுவான விதிகள் மற்றும் ராஜயோகங்கள் ஜாதகத்தில் இருப்பதை பார்த்து அதைப் பற்றியே கனவுகள் கண்டு கொண்டிருந்தால் நாம் என்றைக்கும் இலவு காத்த கிளியாகவே இருப்போம்.
எஸ். கோதண்டபாணி, கீழக்கரை.
கேள்வி :
முப்பத்தி எட்டு வயதாகும் மகளுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் இவளுக்கு இருபத்தியெட்டு வயதாகும்போது இவளது தங்கைக்கு நல்ல வரன் வருகிறதே என்று அவசரப்பட்டு தங்கைக்கு முதலில் திருமணம் செய்து வைத்து விட்டேன். அவள் இப்போது கணவன், குழந்தைகள் என்று நன்றாக இருக்கிறாள். இவளுக்குத்தான் இன்னும் ஒன்றும் சரி வரவில்லை. இவளால் எனக்கும் என் மனைவிக்கும் தினமும் சண்டை வருகிறது. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சின்னவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். அதனால்தான் இவளுக்கு கல்யாணம் ஆக மாட்டேன்கிறது என்று மனைவி தினமும் சண்டை போடுகிறாள். நிம்மதியே இல்லை. பேசாமல் கால்நடையாக எங்காவது சாமியாராக போய் விடலாம் என்று தோன்றுகிறது. என் மகளுக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா?
பதில் :
மகளை சாமியாராக்கி விட்டு நீங்கள் இனிமேல் சாமியாராகப் போனால் என்ன போகாவிட்டால் என்ன? ஒரு தகப்பனாக செய்திருக்க கூடாத மகா பாதகத்தை மகளுக்குச் செய்திருக்கிறீர்கள். மூத்தவள் சரியான பருவத்தில் இருக்கையில் இளையவளுக்கு செய்யக் கூடாது என்று மனைவியைத் தவிர வேறு யாரும் சொல்லியிருக்க மாட்டார்களா என்ன? கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் செய்வதுதான் சரி என்று விடாப்பிடியாக இருக்கும் குணம் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள். அதனால்தான் இப்போது அவஸ்தைப் படுகிறீர்கள்.
மகளின் ஜாதகப்படி புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதால் அவள் அம்மாவாகக் கூடாது என்ற வகையில் விதி உங்கள் புத்தியைக் கெடுத்து விளையாடி விட்டது. வரும் ஜூலை மாதம் ராசிக்கும், லக்னத்திற்கும் ஏழுக்குடையவன் தசை ஆரம்பிக்க உள்ளதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முப்பத்தி ஒன்பது வயதில், ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த, குழந்தைகள் உள்ள ஒருவருடன் திருமணம் நடக்கும். புத்திரகாரகன் குரு மறைமுக வலுவாக இருப்பதால் இன்னொருத்தியின் குழந்தைகளுக்கு நிஜமான அம்மாவாக இருப்பாள். வரும் வரன் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவராக, தூரத்து சொந்தமாக இருப்பார். இனியாவது அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு எதிலும் முடிவெடுங்கள்.
என் காதல் ஏன் நிறைவேறவில்லை? உலகநாதன் , கன்னியாகுமரி
கேள்வி :
முப்பது வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவர் தேர்தலுக்காக மாணவர்களின் வீடு தேடிச் சென்று வாக்கு கேட்கும்போது என் கல்லூரியிலேயே படிக்கும் மாணவி ஒருத்தியை சந்தித்தேன். அவள் அழகில் மயங்கி “நான் தேடிக் கொண்டிருந்த பெண் இவள்தான், இவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும்” என்று முடிவும் செய்தேன். அந்தத் தேர்தலில் வெற்றியும் பெற்றேன். ஆனாலும் அவளிடம் பேச விரும்பவில்லை. காரணம் அந்தப் பெண்ணை விட பலமடங்கு பொருளாதார வசதி கொண்ட நான், அந்த அகந்தையினால் நம்முடைய ஜாதி பெண்தானே, எப்போது போய் பெண் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள், இங்கேதானே இருக்கிறாள், படிப்பு முடியட்டும், எங்கே போய் விடப் போகிறாள் என்று இருந்தேன். அதனால் அவளிடம் என் விருப்பத்தை சொல்லவே இல்லை.
நாங்கள் அடிக்கடி பார்ப்பது உண்டு. இரண்டுமுறை அவள் என்னிடம் தன்னுடைய கண்களால் என்னிடம் வந்து பேசு அல்லது என்னைத் திருமணம் செய்து கொள் என்று அழைத்தாள். நான் முட்டாள்தனமாக இவளைத்தானே திருமணம் செய்யப் போகிறோம் பிறகு சொல்லிக் கொள்வோம் என்று விளையாட்டுத்தனமாக நண்பர்களுடன் கேலி, கிண்டல் என்று இருந்தேன். ஒரு நாள் நண்பனின் வற்புறுத்தலால் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கப் பட்டேன். அன்று கல்லூரியில் எங்களுக்குள் பெரிய தகராறு ஏற்பட்டு பேரவைச் செயலாளர் என்ற முறையில் நானும் அடிதடியில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. 
அதில் என்னிடம் அடி வாங்கியவன் என்னை விட பெரிய பணக்காரரின் மைத்துனர் என்பது தெரிய வந்து, அவன் எனக்கு எதிராக ஆள் வைத்து தேடி வந்து வெட்டு, குத்து ஆகி கல்லூரியில் கேவலப்பட்டு குடிகாரனானேன். அவமானங்கள், கெட்ட பெயரோடு கல்லூரி வாழ்க்கை முடிந்தது. அவளும் கல்லூரியை விட்டு சென்று விட்டாள். எனக்கும் இந்தப் பிரச்னைகளால் அவளைத் தேடிப் போக ஒரு விதத் தயக்கம்.
மதுப் பழக்கத்தால் சில வருடம் பிரச்னைகளாகவே சென்றது. ஒரு விருப்பம் இல்லாத திருமணம் நடந்து, குடும்பம், பிள்ளைகள் என்றாகி தற்போது 56 வயதாகிறது. மதுவை விட்டு விட்டேன். ஆனால் அடிக்கடி அவள் ஞாபகம் வருகிறது. புத்தியும், மனதும் அவளை ஒருமுறை பார்க்க, பேசத் தேடுகிறது. ஐயோ தவற விட்டு விட்டோமே என்று மனம் குமைகிறது. தற்போது அவள் நல்ல வளத்தோடு இருப்பதாக தெரிந்து கொண்டேன். நானும் அவளும் விரும்பியும் என வீட்டாரும், அவள் வீட்டாரும் தடை சொல்ல முடியாத இந்த விவகாரத்தில் நான் அவளிடம் என காதலைச் சொல்லாததற்கும், நாங்கள் இருவரும் சந்தித்துப் பேச முடியாத நிலைக்கும் காரணம் என்ன? அவளைப் பார்க்க நினைத்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் வந்த தகராறில் நான் என் பெயரை ஏன் கெடுத்துக் கொண்டேன்? அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்திருந்தால் என வாழ்வு எப்படி இருந்திருக்கும்?
பதில் :
ஜோதிடத்தில் யூகத்திற்கெல்லாம் பதில் இல்லை. ஒருவேளை இந்திராகாந்தி இவ்வளவு சீக்கிரம் சாகாமல் இருந்திருந்தால் இந்தியா வல்லரசாகி இருக்குமோ என்றெல்லாம் கேட்கவே கூடாது. கேள்வியே தப்பு. காலம் எவருக்கும் காத்திராது. காலியாகும் இடைவெளியை அது எப்போதும் நிரப்பிக் கொண்டே இருக்கும். இதோ இப்போது ஜெயலலிதாவின் இடம் காலியாக இருந்தாலும், 2021 ல் அதை ஒருவர் நிரப்பப் போவதைப் போல.
தவறான கேள்விகளுக்கு எங்குமே சரியான பதில் கிடைக்காது. வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றிலும் அரைகுறைதான் என்பது எனக்கு கேள்வி அனுப்பியதில் இருந்தே தெரிகிறது. பிறந்த நேரம், இடம் இல்லாத வெறும் ஒரு ராசிக்கட்டத்தை மட்டும் வைத்து எப்படி முழுமையான பலன் சொல்வது? அப்படி நான் பதில் சொன்னால் நீங்கள் அந்தப் பெண்ணிடம் போய் பேசாதது போல இதுவும் ஒரு மாயையாகத்தான் இருக்கும்.
கிடைக்காத ஒன்றின் மேல் எப்போதும் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். கிடைத்திருந்தால் “ப்பூ... இதற்காகத்தானா இப்படி அலைந்தோம்.” என்று அதே மனம் நினைக்கும். ஜோதிடப்படி பதில் சொல்ல வேண்டும் என்றால் கல்லூரிப் பருவத்தில் கடுமையான ஏழரைச் சனி நடந்ததால் மேற்கண்ட சம்பவங்கள் நடந்து வாழ்க்கை உங்களுக்கு புரிய வைக்கப்பட்டது.
அதே பருவத்தில் சுக்கிர தசையும் நடந்ததால் காதல் எண்ணங்களை சுக்கிரன் தந்தார். தந்துள்ள ராசிக்கட்டத்தின் படி லக்னாதிபதி செவ்வாய் நீச குருவுடனும், சனி, ராகு, கேதுக்களுடனும் இணைந்ததால் நீங்கள் எதிலும் முயற்சி இல்லாத நபராக, தானே எதுவும் நடக்கும் என்ற எண்ணம் உள்ளவராகத்தான் இருப்பீர்கள். முயற்சித்தால்தானே கேட்பது கிடைக்கும்? அவனவன் பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன்தான் காலேஜ் என்று பழி கிடக்கையில் நீங்கள் கண்ணால் பேசினாள், காதால் சொன்னாள் என்று கதை அளந்து கொண்டிருந்தால் சினிமாக் காதல்தான் இருக்கும். நிஜக் காதல் அந்தப் பெண்ணிற்கும் வந்திருக்காது. ஐம்பது வயது தாண்டி விட்டாலே சொந்த ஊரின் மேல் அதிக பாசம் வருவதும், டீன்ஏஜில் இருந்த இடங்களைப் பார்க்க விரும்புவதும் மனித இயல்பு. ஆனால் வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களுக்கு மட்டும்தான் இளமையில் தவற விட்ட விஷயங்களை அசை போடுவதும், அப்படி நடந்திருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டோமோ என்று தன்னைப் பற்றி தன்னிரக்கமாக நினைத்துக் கொள்வதும் நடக்கும். அது இப்போது உங்களுக்கு வந்திருக்கிறது. மீதமிருக்கும் வாழ்க்கையையாவது மனைவி, குழந்தைகளுடன் ஒரு பொறுப்புள்ள கணவனாகவும், தகப்பனாகவும் வாழுங்கள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *