adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
my cart
கேது தரும் தொழில் அமைப்புகள் – C – 071 – Kethu Tharum Thozhil Amaippugal….

ஜோதிடக்கலை அரசு ஆதித்ய

குருஜி கைப்பேசி எண் : 8681 99 8888

கும்ப லக்னத்திற்கு பத்தாமிடத்தில் அமரும் கேது, விருச்சிகம் தனக்கு பிடித்த வீடு என்பதால் இங்கிருக்கும் கேது சுபத்துவம் பெற்று நன்மைகளை செய்வார் என்பதாலும் பத்தில் நல்ல பலன்களைச் செய்வார். கேதுதசையில் நல்ல மாற்றங்கள் உண்டு.
பதினொன்றாமிடம் குருவின் வீடு என்பதாலும், உபசய ஸ்தானங்களில் இருக்கும் கேது நன்மை தருவார் என்பதாலும், தனுசில் இருக்கும் கேது சுபத்துவம் அடைவார் என்பதாலும், கேதுவிற்கு வீடு கொடுத்த குருவும் வலுப் பெறும் நிலையில் இங்கிருக்கும் கேதுவால் ஜாதகருக்கு நன்மைகள் இருக்கும்.


மேலும் குரு, சுபத்துவம் பெற்ற சனி ஆகியோரின் தொடர்புகள் இ\ங்கிருக்கும் கேதுவிற்கு இருந்தால் ஜாதகர் ஆன்மிகத் தொடர்பு உள்ளவராகவும், தெய்வ நம்பிக்கையோடு கடவுள் அருள் கிடைத்தவராகவும் இருப்பார்.

வலுப் பெற்ற குரு மற்றும் சனியின் இணைவு கேதுவிற்கு கிடைக்கும் பட்சத்தில் ஜாதகரின் தொழில் ஆன்மிக அமைப்புகளிலோ, ஆன்மிகத் தலங்களுக்கு அருகிலோ, ஆன்மிகப் பொருள் விற்பவராகவோ இருக்கக் கூடும். அதேநேரத்தில் கேது இங்கு இருக்கும் நிலையில் எதிரே ஐந்தாமிடத்தில் ராகு இருப்பார் என்பதால் ஜாதகருக்கு புத்திர தோஷம் ஏற்படும்.

பனிரெண்டாமிடமான மகரத்தில் கேது இருப்பதும் நல்ல நிலைதான். விரயத்தில் இருக்கும் கேது தனத்தையும், ஞானத்தையும் சேர்த்தே தருவார் என்பதை கேதுவின் ஆரம்பக் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். இந்த இடத்தில் இருக்கும் கேதுவை கடகத்திலிருந்து உச்சம் பெற்ற குரு பார்ப்பது நல்ல அமைப்பு.

இந்த வீடு லக்னாதிபதி சனியின் வீடு என்பதோடு அன்னிய தேசத்தைக் குறிக்கும் பனிரெண்டாமிடம் மற்றும் வெளிநாட்டிற்குச் செல்ல வைக்கும் சர ராசி என்பதால் மகர கேதுவால் ஜாதகருக்கு வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்புகள் ஏற்படும். சர ராசியான மகரத்தில் இருக்கும் கேது சுபத்துவம் பெறும் நிலைகளில் ஜாதகரை படிப்பு அல்லது வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பார்.

லக்னாதிபதி சனி இங்கே கேதுவுடன் இணைந்து, குருவின் பார்வையோ தொடர்போ பெறும் நிலையில் அல்லது இங்கே நீச குருவும், சனியும் கேதுவோடு இணையும் நிலையில் ஜாதகருக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருக்கும். குரு, சனி, கேது தசைகளில் ஜாதகரின் ஆன்மிக ஈடுபாடு உயர்நிலையில் இருக்கும். குறிப்பாக இந்த அமைப்பினால் ஜாதகருக்கு சிவபக்தி உண்டு.

இதுவரை பதினோரு லக்னத்தவர்களுக்கும் கேது தரும் பலன்களைப் பார்த்து விட்டோம். நிறைவாக மீனத்தைப் பார்க்கலாம்.

மீனத்தின் அதிபதியான குருவுக்கு நட்புக் கிரகம் கேது என்பதால் மீனத்தில் பிறந்தவர்களுக்கு கேது நன்மைகள் தர விதிக்கப்பட்டவர். மீனத்தவர்களுக்கு லக்னத்தில் கேது குருவுடனோ, ஐந்துக்குடைய சந்திரனுடனோ அல்லது சனியுடனோ இணைந்திருக்கும் பட்சத்தில் ஜாதகர் இறைநம்பிக்கை, ஆன்மிக ஈடுபாடு, பரம்பொருள் பற்றிய தெளிவான அறிவு போன்றவைகளைக் கொண்டிருப்பார்.

லக்ன கேது நன்மைகளைத் தரும் அமைப்பில் இருந்தாலும் ஏழில் ராகு இருப்பார் என்பதால் ஜாதகருக்கு திருமண அமைப்பில் தொந்தரவுகள் இருக்கும். பொதுவாகவே ராகு,கேதுக்கள் அந்த லக்னத்தின் தர்ம,கர்மாதிபதிகளான ஒன்பது பத்துக்குடையவர்களின் சம்பந்தம் பெறும்போது யோகத்தை செய்வார்கள். அஷ்டம பாதகாதிபதிகளின் சம்பந்தத்தை அவர்கள் பெறக் கூடாது.

இந்த விதியின்படி மீனத்திற்கு குரு, செவ்வாய், சந்திரன் ஆகியோரின் தொடர்பைப் பெறும் கேது நன்மைகளைச் செய்வார். சுக்கிரன், புதன் மற்றும் சனியின் சம்பந்தம் பெறும் கேதுவால் நன்மைகள் இருக்காது.

இரண்டாமிடமான மேஷத்தில் கேது இருப்பது நல்லநிலை அல்ல. இங்கிருக்கும் கேதுவால் ஜாதகருக்கு திருமண அமைப்புகளில் பின்னடைவுகள் இருக்கும். செவ்வாயும் பாபத்துவ அமைப்புகளில் இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு தாமத திருமணம், இரண்டு திருமணங்கள், மனைவியால் நிம்மதியிழப்பு போன்ற பலன்கள் நடக்கும்.

மூன்றாமிடமான ரிஷபத்தில் கேது இருப்பதும் சுமாரான ஒரு அமைப்புதான். சுக்கிரன் சுப வலுவாக இருக்கும் போது மட்டுமே மூன்றாமிட கேதுவால் மீன லக்னத்தவர்களுக்கு நன்மைகள் இருக்கும். நான்காமிடமான மிதுனம் கேந்திர வீடு என்பதால் இங்கிருக்கும் கேது வீடு, வாகனம், தாயார், கல்வி போன்றவைகளில் தனது தசை,புக்திகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி நன்மைகளைச் செய்வார்,
ஐந்தாமிடமான கடகம் திரிகோண வீடு என்பதாலும், சர ராசி என்பதாலும், இங்கிருக்கும் கேது சந்திரனைப் போல பலன் தருவார் என்பதாலும் நன்மைகள் உண்டு. ஆயினும் இந்த வீட்டின் அதிபதி சந்திரன் சுப வலுப் பெற்றிருக்க வேண்டும்.

கேந்திர கோணத்தில் இருக்கும் ராகு,கேதுக்கள் அந்த பாவத்தைக் கெடுத்தே பலன் செய்வார்கள் என்ற விதிப்படி இங்கிருக்கும் கேதுவால் புத்திர தோஷம் உண்டு. ஆண் வாரிசுக்கு தடை, தாமத புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் இருக்கும்.

ஆறாமிடமான சிம்மத்தில் இருக்கும் கேதுவால் ஜாதகருக்கு கடன், நோய், எதிரிகள் இல்லாத நிலை உண்டு. ஜாதகர் எதிர்ப்புகளை வெல்லுவார். பொதுவாக மற்ற லக்னங்களுக்கு ஆறாமிடத்து அதிபதி கடன், நோய் போன்ற அமைப்புகளை வலுவாகத் தருவதுபோல மீனத்திற்கு சூரியன் தருவதில்லை.

அதற்கு லக்னாதிபதி குருவின் நெருங்கிய நண்பர் சூரியன் என்பதும் ஒரு காரணம். வீடு கொடுக்கும் கிரகத்தின் செயல்களை அப்படியே செய்யக் கூடிய கேது, சிம்மத்தில் இருக்கும்போது இந்த லக்னத்தின் அஷ்டம, பாதகாதிபதிகளான சுக்கிரன், புதனின் தொடர்பு கிடைக்காதவரை கெடுதல்கள் எதுவும் செய்வதில்லை.

ஏழாமிடமான கன்னி கேதுவிற்கு சுபத்துவத்தைத் தரும் நல்ல இடம் என்பதாலும், கேந்திர வீடு என்பதாலும், மண வாழ்க்கையில் குறைகளை ஏற்படுத்தி, தன வாழ்க்கையைக் கொடுப்பார். இங்கிருக்கும் கேதுவின் தசையில் ஜாதகருக்கு நல்ல பண வரவு இருக்கும். கன்னி கேதுவுக்கு குரு, செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் பெரிய நன்மைகள் இருக்கும்.

எட்டாமிடமான துலாத்தில் இருக்கும் கேது ஜாதகருக்கு தனது தசை புக்திகளில் தூர தேச அமைப்புக்களைச் செய்வார். எட்டு, கேது இரண்டும் மாற்றத்தைக் குறிக்கும் அமைப்புகள் என்பதால் எட்டில் இருக்கும் கேதுவின் தசை புக்திகளில் ஒருவர் தான் இருக்கும் நிலையில் இருந்து மாற்றத்தை அடைவார்.

அந்த மாற்றம் நல்ல மாற்றமா, கெடுதலைத் தரும் மாற்றமா என்பது அந்த ஜாதகத்தின் லக்னாதிபதி வலு மற்றும் கேதுவின் சூட்சும வலு உள்ளிட்ட பிற அம்சங்களையும் சார்ந்தது.

இங்கே மீனத்தைப் பொருத்தவரையில் இந்த வீடு சுபரின் வீடு என்பதால் பெரிய தொந்தரவுகள் இருக்காது. ஆனால் சுக்கிரனின் நிலையைப் பொருத்து ஜாதகருக்கு பெண்களால் தொல்லைகள், வம்பு, வழக்குகள் இருக்கும். இதில் நான் பெண்கள் என்று சொல்வது அம்மா, மனைவி, அக்கா, தங்கை, மகள், காதலி, தோழி என பலவகைப்பட்ட உறவுகளையும் குறிக்கும்.

எட்டில் கேது இருக்கும் நிலையில் லக்ன, தர்ம,கர்மாதிபதிகளான குரு செவ்வாய் வலுவிழந்திருந்தால் ஜாதகரை தனது தசையில் பெண்கள் சம்பந்தப்பட்ட அல்லது சுக்கிரனின் காரகத்துவங்களில் ஜாதகரை ஈடுபடுத்தி நஷ்டங்களைத் தருவார்.
நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போல ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறு, எட்டுக்குடையவர்கள் வலுப் பெறக் கூடாது. மேலும் நம்முடைய ஞானிகள் தனிப்பட்டு ஜென்ம விரோதிகள் என்று வகைப்படுத்திக் காட்டியிருக்கும் குரு, சுக்கிரன் மற்றும் சூரிய, சந்திரர்களும் சனியும் ஒருவரின் லக்னாதிபதியாக வரும்போது அவர்களை விட எதிரிக் கிரகம் பலமாக இருக்கக் கூடாது.

இந்த விதியின்படி மீன லக்னத்திற்கு குருவை விட சுக்கிரன் வலுப் பெறுவது நன்மைகளைத் தராது. அப்படி ஒரு நிலை ஜாதகத்தில் அமைந்து இங்கே சுக்கிரனின் வீடான எட்டில் கேது அமர்ந்து கேதுவின் தசை,புக்திகள் நடக்கும் போது ஜாதகருக்கு கேதுவால் நல்லவை நடக்க வாய்ப்பில்லை.

மீனத்தின் ஒன்பதாமிடத்தில் கேது இருக்கும் நிலையை எடுத்துக் கொண்டால் இந்த லக்னத்தின் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடம், விருச்சிகம் என்பதாலும் கேது செவ்வாயைப் போல பலன் தருபவர் என்பதாலும் ஒன்பதாமிட கேதுவால் மீனத்திற்கு நல்ல பலன்கள் இருக்கும்.

அதேநேரத்தில் கேது தனது தசையில் தந்தையைக் கெடுத்தும், தந்தைவழி விஷயங்களைக் கெடுத்துமே பலன் தருவார். இங்கிருக்கும் கேதுவிற்கு தர்ம,கர்மாதிபதிகளான குரு, செவ்வாயின் தொடர்போ, இணைவோ கிடைக்கும் பட்சத்தில் கேது தசையில் பூரணமான நன்மைகள் இருக்கும்.

பத்தாமிடத்தில் கேது இருப்பதும் நல்ல நிலைதான். பத்தில் இருக்கும் கேது ஜாதகரை ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறைகளிலோ, எலக்டிரிக்கல், மெடிக்கல் ஷாப், மருத்துவத்தின் கிளைத் துறைகள் போன்றவற்றில் ஈடுபடுத்துவார். லக்னாதிபதி குருவும் வலுப் பெற்று இருக்கும் பட்சத்தில் கேது தசை நன்மைகளைத் தரும்.

ஏற்கனவே முந்தைய லக்னங்களுக்கு சொன்னபடி இங்கிருக்கும் கேது குரு-சனியின் தொடர்பைப் பெறுவாரானால் ஜாதகர் ஆன்மிக ஈடுபாடு உள்ளவராக இருப்பார். மீன லக்னத்திற்கு பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேது விசேஷமான பலன்களை தருவார். இந்த இடம் உபசய ஸ்தானம் என்பதோடு சர ராசியாகவும் அமைந்திருப்பதால் கேதுதசை ஜாதகருக்கு நல்ல நன்மைகளை தரும்.

கேது இங்கே இருக்கும் நிலையில் சனி இங்கே அவருடன் இணையாமல் பனிரெண்டில் ஆட்சி பெற்றோ, எட்டில் உச்சம் பெற்றோ இருந்தால் ஜாதகருக்கு கேதுதசையில் மறைமுகமான தனலாபங்கள் உண்டு.

பனிரெண்டாம் வீடான கும்பத்தில் இருக்கும் கேதுவும், மீனத்திற்கு நன்மைகளைச் செய்பவர்தான். குரு, செவ்வாயின் தொடர்பு அல்லது பார்வை கேதுவிற்கு கிடைக்கும் பட்சத்தில் நன்மைகள் கூடுதலாக இருக்கும். இந்த இடத்தில் கேது இருக்கும்போது ஜாதகர் வீடுபேறு எனும் மோட்சத்தை அடைவார் என்றும் அவருக்கு இனி பிறவி கிடையாது என்றும் நமது மூலநூல்கள் சொல்லுகின்றன.

மருத்துவத் துறையில் இருக்கவைக்கும் கேது...!

கேதுவின் காரகத்துவங்களில் மருத்துவமும் ஒன்று என்பதால், சிலநிலைகளில் ஒருவரின் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் இருக்கும் அல்லது பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளும் கேது ஒருவரை மருத்துவத் துறையில் பணியாற்ற வைப்பார்.

மருத்துவத்திற்கு செவ்வாயே முதன்மையான கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுப் பெற்று ராசிக்கோ லக்னத்திற்கோ பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் அவர் மருத்துவர் ஆவார் என்பது ஜோதிட விதி.

ஜாதகத்தில் செவ்வாயின் சுப வலுவுக்கேற்றபடி அவர் எம்.பி.பி.எஸ். டாக்டர் எனப்படும் அலோபதி மருத்துவராகவோ, அல்லது சித்த வைத்தியம், ஹோமியோபதி, அல்லது பல் டாக்டர், கண் டாக்டராகவோ, அல்லது இரண்டாம் நிலையான பிசியோதெரபிஸ்டாகவோ இருப்பார்.

கேது செவ்வாயைப் போலவே செயல்படக் கூடியவர் என்பதால் சில நிலைகளில் சுபத்துவம் பெற்ற கேது பத்தாமிடத்தில் இருந்தாலோ, பத்துக்கு அதிபதியோடு சேர்ந்திருந்தாலோ, பத்தாம் அதிபதியின் பார்வை பெற்றாலோ, அல்லது ஏதேனும் ஒருவகையில் ராசி அல்லது லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டாலோ, செவ்வாயின் வலுவைப் பொருத்து ஒருவரை டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர் போன்றவராகவோ குறைந்தபட்சம் மெடிக்கல் ஷாப் வைத்துப் பிழைப்பவராகவோ இருக்கச் செய்வார்.

ராகு,கேதுக்கள் தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவரை ஓடிக் கொண்டே இருக்கும் தொழிலைச் செய்ய வைப்பார்கள் என்பதால் பெரும்பாலான மெடிக்கல் ரெப்களின் ஜாதகங்களில் பத்தாமிடத்தோடு கேதுவின் சம்பந்தம் இருக்கும்.
இன்னும் ஒரு சூட்சுமமாக, ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாகி, ராசியின் வலு தூக்கலாகி இருக்கும் நிலையிலோ, அல்லது ராசி, லக்னம் இரண்டுமே வலு இழந்திருக்கும் நிலையில், ஏதேனும் ஒரு கிரகம் தனிப்பட்டு சுப வலுவாக அம்சத்திலும் ராசியிலும் இருந்தால் அந்தக் கிரகத்தின் ஆளுமை ஜாதகருக்கு அதிகமாகி அதன் காரகத்துவங்களில் ஜாதகரின் தொழில் அமையும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

2 thoughts on “கேது தரும் தொழில் அமைப்புகள் – C – 071 – Kethu Tharum Thozhil Amaippugal….

  1. Hai sir vanakkam my name m. Muthuselvan date of birth. 22-6-83 palace PALANIYAPPA 12-30pm my maraige time tellmesir

  2. hi sir
    my name is nagaselvam
    date of birth 28/10/1983
    time 8;30pm place madurai
    now is kethu desa going on its good or bad.

Leave a Reply to Muthuselvan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *