adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…

ஜோதிட மூலநூல்களில் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், மற்றும் அதைப் பார்க்கும் கிரகங்களின் தசையில் ஒருவர் கோடீஸ்வரன் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இதற்கு உதாரணமான ஒரு பெரும் கோடீஸ்வரரின் ஜாதகத்தை இந்த வாரம் விளக்குகிறேன் என்று சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு முக்கிய கருத்தாக, முழுக்க அறியாத, எனக்குத் தெரியாதவர்களின் ஜாதகங்களை உதாரணங்களாக நான் காட்டுவதில்லை. இது என்னைப் படிப்பவர்களுக்கும், எனது மாணவர்களுக்கும் தெரியும். ஜோதிட விதிகளை நிரூபிக்க புத்தர், ஏசு, விநாயகர், அனுமன் போன்றவர்களின் ஜாதகங்களை ஒருபோதும் நான் மேற்கோள் காட்டுவது கிடையாது. அது சரியாகவும் இருக்காது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு பிறந்தவர்களின், ஜனன நேரத்தையே துல்லியமாகச் சொல்ல முடியாத நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களின் அல்லது பிறந்தார்களா என்று சந்தேகத்துக்குரியவர்களின் ஜாதகத்தை கொண்டு ஒரு விதியை விளக்குவது என்பது தவறான ஒன்று.

ஜோதிடம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காலவியல் விஞ்ஞானம். இங்கே ஜோதிடர்தான் தவறு செய்கிறாரே தவிர, ஜோதிடக்கலை ஒருபோதும் பொய்ப்பதில்லை.

 எதிர்காலத்தை தன்னுள் கொண்டிருக்கும் இந்த உன்னத இயலில் ஜோதிடர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தன்னுடைய அனுபவக் குறைவு அல்லது குறைந்த ஞானத்தினால் இக்கலை சொல்லும் உண்மையை தவறாகப் புரிந்து கொள்கிறாரே தவிர, எதிர்காலம் என்பது பரம்பொருளால் அனுமதிக்கப்பட்ட ஞானமுள்ளோருக்கு புலப்படும் வகையில் தெளிவாகத்தான் இருக்கிறது.

எந்த ஒரு ஜாதகத்தையும் மேம்போக்காக நம்பி, அதன் பிறந்த நேரம் உள்ளிட்டவைகளை உறுதி செய்து கொள்ளாமல் நான் உதாரணம் காட்டுவது இல்லை. ராஜயோகங்களுக்கு எடுத்துக்காட்டாக இதுவரை நான் விளக்கியுள்ள பிரபலமானவர்களின் ஜாதகங்களைக் கூட ஏதேனும் ஒருவகையில் நான் பார்த்திருப்பேன் அல்லது மிக நெருங்கியவர்கள் மூலம் அந்த ஜாதகத்தினை உறுதி செய்திருப்பேன்.

பத்திரிக்கைகளிலும், இணையத்திலும், எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலம் முதல் இன்றுவரை எம்.ஜி.ஆரின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறந்த தேதியான ஜனவரி 17, 1917 ன்படி தவறாக எழுதப்பட்ட ஜாதகத்தை கொண்டுதான் பல ஜோதிடர்கள் பலன்களை எழுதியிருக்கிறார்கள். அந்த ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே அது ஒரு பியூனாக இருக்கக்கூட சாத்தியமற்ற ஜாதகம் என்பது ஞானமுள்ளோருக்குத் தெரியும். (எம்ஜிஆரின் உண்மையான பிறந்ததேதி 11-1-1916)

பிரபலமானவர்களின் ஜாதக பலனை எழுதுபவர்கள் அன்றைய பரபரப்புக்கு ஏற்ப எதையாவது எழுத வேண்டுமே எனும் ஆவலில் கிடைக்கும் ஜாதகத்திற்கேற்ப தங்களது அரைகுறை ஜோதிட அறிவுடன் பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்று சமரசம் செய்து கொள்கிறார்கள். இது ஒருபோதும் ஜோதிடமாகாது.

ரஜினியை எழுதி விட்டீர்களே, கமலஹாசன் முதல்வர் ஆவாரா? மாட்டாரா? அதை ஏன் எழுதவில்லை என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். கமலஹாசன் ஜாதகம் என்று ஐந்திற்கும் மேற்பட்ட பிறந்த நேரங்கள் கொண்ட ஜாதகங்கள் இணையத்தில் இருக்கின்றன. இதில் எது அவரது உண்மையான பிறந்த நேரம் என்பதை உறுதி செய்யுங்கள். பிறகு கமலின் எதிர்காலத்தை சொல்லுகிறேன் என்பதுதான் என் பதில்.

கீழே இந்து லக்னத்திற்கு உதாரணமாக காட்டப்பட்டிருக்கும் ஜாதகத்திற்குரியவரை என்னுடைய 17-வது வயதிலிருந்து நான் மிக நெருக்கமாக அறிவேன். தற்போது 50 வயதாகும் இந்த மிகப்பெரும் கோடீஸ்வரர் சென்னையில் பிறந்து பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாதவர். எவ்வித பின்னணியும் இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, எவருடைய தயவுமின்றி, தனது போராட்ட குணத்தாலும், கடுமையான உழைப்பாலும், மிகுந்த பணிவு மற்றும் நேர்மைத்தன்மையாலும் தன் 20-வது வயதில் இருந்து படிப்படியாக தொழிலில் முன்னேறியவர்.

இன்றைக்கு பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தமாக இருக்கும் இவர், இளமையில் ஒருநாள் என்னிடம், “30 வயதிற்குள் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறேன். ஜோதிடப்படி அது முடியுமா?” என்று கேட்டதற்கு “ 30 வயதிற்குள் முடியாது. ஆனால் 40 வயதுகளில் நீங்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தமானவராக இருப்பீர்கள்” என்று பதில் சொன்னேன்.

இதைக் கேட்ட போது அவர் லட்சாதிபதியாகக் கூட இல்லை. கடனாளியாகத்தான் இருந்தார். கேட்ட நேரமான 25 வருடங்களுக்கு முன் கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகையாக இருந்தது.

பன்னாட்டுக் கம்பெனிகளின் வருகையினால் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டு, கோடிகள், ஆயிரங்களாக மதிக்கப்படும் இக்காலம் போல அல்லாது, கோடி என்பதை நினைத்துப் பார்க்கக் கூட கஷ்டமாக இருந்த காலத்தில் இவர் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதை லட்சியமாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரும் பணக்காரராக இருப்பதிலும் சில சங்கடங்கள் இருக்கின்றன. அதுபோன்ற ஒரு நிலை இவருக்கு வந்தபோது “உங்களை யார் தேவைக்கு அதிகமாக இத்தனை பணத்தைச் சம்பாதிக்கச் சொன்னது? என்று விளையாட்டாக நான் கேட்டபோது, “நான் என்ன செய்வேன். ஓட்டப் பந்தயத்தில் மற்றவர்களோடு நானும் ஓடிக் கொண்டிருந்தேன்.

வெற்றிக்கம்பம் மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது. உடன் ஓடி வருபவர்களையோ, பக்கத்தில் இருப்பவைகளையோ நான் பார்க்கவில்லை. வெற்றியை தொட்ட பின் திரும்பி பார்க்கும்போதுதான் கூட வந்தவர்கள் வெகுதூரம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது” என்று பதில் சொன்னார். ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப் பெற்றவர்களுக்கு மட்டுமே இது போன்ற ஒருமுகப்பட்ட முனைப்பு இருக்கும்.

கீழே உள்ள இவரது ஜாதகத்தை கடந்த 2011-ம் ஆண்டில் ஜோதிட உலகிற்கு நான் ஆய்வு செய்து அறிவித்த “பாபக் கிரக சூட்சும வலுத் தியரி” க்கு உதாரணமாகவும் குறிப்பிட்டிருந்தேன். அப்போதே மேற்கண்ட ஜாதகத்தில் பாபக் கிரகங்கள் நேர் வலுவிழந்து சூட்சுமவலு அடைந்திருப்பதால் இவர் பெறும் யோகங்களைச் சொல்லியிருந்தேன்.

ஜனன காலத்தில் ஐந்தரை வருடங்கள் வரை செவ்வாய் தசை மீதி இருக்கும் நிலையில் பிறந்த இவருக்கு ராகுதசை வரையிலான ஏறத்தாழ 23 வயது வரை சுமாரான தொழில், வாழ்க்கை மட்டுமே இருந்தது. இந்து லக்னத்தை பார்க்கும் கிரகங்களும் யோகத்தை     செய்யும் என்ற அமைப்பின்படி துலாம் லக்னம், கன்னி ராசியில் பிறந்த இவரது இந்து லக்னமான மேஷத்தைப் பார்க்கும் குருவின் தசை முதல் இவரது அதிர்ஷ்டம் ஆரம்பமாகியது.

ஒரு ஜாதகத்தில் நம்முடைய மூலநூல்கள் சொல்லுகின்ற அனைத்து விதிகளும் பொருந்தி வரும் அமைப்பில் பிறந்தவர் நிச்சயமாக அந்த விதியின் படியும், ஜாதக வலுவிற்கேற்பவும் அரசனாகவோ, மந்திரியாகவோ, கோடீஸ்வரனாகவோ இருப்பார்.

இந்த பெரும் கோடீஸ்வரருக்கு யோகத்தைத் தந்த குருபகவான், இந்து லக்னத்தைப் பார்க்கிறார் என்பதோடு, வலுப்பெற்ற, அஸ்தமனம் அடையாத சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அதிநட்பு வீட்டில், வர்க்கோத்தமமாக அமர்ந்திருக்கிறார். வேறொரு நிலையில் நமது கிரந்தங்கள் தன யோகம் என்று சொல்லும் சூரியனுக்கு இரண்டில் இருப்பதால் உண்டாகும், சீக்கிர கதியில், ஸ்திர ராசியிலும் இருக்கிறார்.

குருவிற்கு சாரம் கொடுத்த லக்னாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், லக்னாதிபதியே எட்டாம் வீட்டின் அதிபதியுமாகி, பத்தில்     அமர்ந்திருப்பதாலும் லக்னம், எட்டு மற்றும் பத்தாம் பாவங்களின் தொடர்புகள்     குருவிற்கு உண்டாகி எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கும் தொழிலின் மூலமாக ஜாதகருக்கு கோடிகள் கொட்ட ஆரம்பித்தது.

குரு தசை முழுவதும் இது நீடித்தது. ஆறுக்குடையவன், ஆறுக்கு ஆறில் மறைந்து தசை நடத்தினால், எதிர்பாராத தனலாபம் என்பதும் ஒரு விதி என்பதால் குருதசை, சனி புக்தியில் இருந்து இவருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு தசையின் முடிவில் இவரை ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாக்கி விட்டது.

அடுத்து வந்த சனி தசை எனது “பாபக் கிரக சூட்சும வலு தியரி” ப்படி சனி நீசமாகி, திக்பலம் பெற்று, சுபத்துவமான குருவின் பார்வையையும் அடைந்து, இந்து லக்னத்திலும் இருப்பதால் மிகப்பெரிய உயர்வுக்கு இவரைக் கொண்டு சென்று விட்டது.

சனியும் இங்கே அஸ்வினி 1-ம் பாதத்தில் வர்க்கோத்தமாக இருக்கிறார். சனியைத் தவிர்த்து சூரியன், செவ்வாய் ஆகிய பாபக்கிரகங்களும் ஜாதகத்தில் நேர்வலு பெறாமல் திக்பலம் அடைந்திருக்கின்றன. மூன்று கிரகங்கள் திக்பலம் அடைந்தால் ஜாதகர் ஏழையாகப் பிறந்தாலும் கோடீஸ்வரன் ஆவார் என்பதும் ஒரு விதிதான்.

இன்னொரு நிலையாக சனி நிற்கும் நட்சத்திர அதிபதியான கேது, பரிவர்த்தனை அடைந்திருக்கும் நீர்க் கிரகமான சந்திரனோடு இணைந்து, அவருக்கு யோக வீடான கன்னியில் இருக்கிறார். சாரநாதனுடன் இணைந்த சந்திரன் ஜல கிரகமாகி ஜீவனாதிபதி எனும் நிலை பெற்றதால் சனிதசை முதல் இவருக்கு திரவத் தொழில் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

குருதசை இவருக்கு நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே இவர் சனிதசையில் திரவ ரீதியிலான தொழிலில் கொடிகட்டிப் பறப்பார் என்று சொல்லியிருந்தேன். அது போலவே தற்போது சனியின் திரவத் தொழிலில் இவர் நம்பர் ஒன் என்ற நிலையில் இருக்கிறார்.

ஆயிரம்தான் இந்து லக்னத்தில் அமரும் கிரகம் அள்ளிக் கொடுத்தாலும் இந்து லக்னம் என்பது ஒரு துணை அமைப்புத்தான். ஒருவர் மெகா கோடீஸ்வரன் எனும் அளவிற்கு ஆயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதிக்க நமது மூலநூல்கள் சொல்லும் மகா தனயோகம் ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

மகா தனயோகம் என்பது தன, பாக்கிய, லாபாதிபதிகள் எனப்படும் இரண்டு, ஒன்பது, பதினொன்றுக்கு உடையவர்கள் வலுவாகவோ, ஒருவருக்கொருவர் சேர்ந்தோ, பார்த்துக் கொண்டோ இருக்கும் ஒரு அமைப்பு. பணம் சம்பாதிப்பதற்கு மிக முக்கிய விதியாக இதனை நமது கிரந்தங்கள் குறிப்பிடுகின்ன்றன. கண்டிப்பாக இந்த யோகம் இருந்தால் மட்டுமே ஒருவர் மெகா கோடீஸ்வரன் ஆக முடியும்.

இவரது ஜாதகத்தில் துலா லக்னத்தின் தன, பாக்கிய, லாபாதிபதிகளான செவ்வாய், புதன், சூரியன் மூவரும் பத்தாமிடத்தில் இணைந்திருக்கிறார்கள். அதில் சூரியனும் செவ்வாயும் திக்பலம் அடைந்துள்ள நிலையில், பாக்கியாதிபதியான புதன் அம்சத்தில் உச்சம் அடைந்திருக்கிறார்.

அதேபோல ஒன்பதுக்குடையவர் பத்தில் அமர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்பதோடு, இந்த புதன் பனிரெண்டில் அமர்ந்துள்ள ஜீவனாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார். அதாவது தர்ம, கர்மாதிபதிகள் பரிவர்த்தனை அடைந்து தொழில் யோகங்களில் முதன்மையாகச் சொல்லப்படும் தர்ம, கர்மாதிபதி யோகமும் இவரது ஜாதகத்தில் இருக்கிறது.

இன்னும் சில வருடங்களில் இவருக்கு புதன் தசை ஆரம்பிக்க உள்ளது. இந்த புதனும் யோக அமைப்பில் உள்ளதால் இவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்று அங்கும் உயர்நிலையில் வைப்பார். தொழில் அமைப்பில் எவராலும் ஜெயிக்க முடியாத அதி உன்னத ஜாதகம் இது.

ஒரு யோக ஜாதகம் எனப்படுவது சகல நிலையில் பார்க்கும் போதும் அது நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொல்லும் விதிகளின்படி அமைந்தே தீரும். அந்த    அமைப்பில் பிறக்கும் ஒருவர் நிச்சயம் சாதனையாளர் ஆவார். அதேநேரத்தில் நம்முடைய மூலநூல்கள் சொல்லும் ஒரு விதி மட்டும் நிறைவாக இருந்தால் அந்த நிலை வந்து விடாது.

வேத ஜோதிடம் எனும் மகா அற்புதம் சொல்லும் சகல விதிகளும் பொருந்தி வரும் நிலையில் பிறக்கும் ஒருவர் நிச்சயமாக உயர்நிலையை அடைந்தே தீருவார் என்பதற்கு இந்த பெரும் கோடீஸ்வரரும் ஒரு உதாரணம்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று சந்திப்போம்.

(11-05-2018 மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

3 thoughts on “ஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…

  1. துலாம் லக்கினத்துக்கு குரு 3 6 ருக்கு
    உடையவன் அந்த குரு” ல” சரராசிக்கு 11னாம் சிம்மா வீடு பாதகவீீடு அமா்ந்து கெடுதால் இல்லாமல் செய்துவிட்டா் குரு திசை /2டாம் வீட்டை கை வைத்து பாா்த்தால் விருசிகம் குரு 2 5 வீடகா வரும் அந்த குரு 10தில் அமர்ந்து தனது தனுசு வீட்டை பாா்க்கிரா் குரு வாங்கிய நட்ச்திரம் சுக்கிரன் அந்த சுக்கிரன் 7 12 டாம் வீட்டு அதிபதிகள் விருச்சிக வீட்டுக்கு ஸ்திர ராசிக்கு பாதகவீட்டில் கடத்தில் இருக்கிறாா் /இந்த பலனும் பொருந்தும் /குரு பணம் தரும்

  2. பாவக்கோள்கள் ஒரே ராசியில் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர,திரிகோணங்களில் இருக்க,அது இந்து லக்னம் எனில் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கிறது எனில் சுபத்துவத்தை அடையுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *