adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
வெளிநாட்டில் வாழ வைக்கும் ராகு-கேது – C – 069 – Velinattil Vaazha Vaikkum Raahu – Kethu.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

சென்ற அத்தியாயத்தை ஒரே கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் மூன்று வெவ்வேறு நட்சத்திரங்களின் வேறுபாடுகளை எப்படி உணர்வது என்பதைப் பார்க்கலாம் என்று முடித்திருந்தேன்.

அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

இவை மூன்றின் நாயகன் கேது என்றாலும் மூன்றும் தனித் தனியான நட்சத்திரங்கள்தானே? மூன்றும் ஒன்றல்ல எனும் போது இவற்றின் தன்மைகளும் வேறானவைதானே? அவற்றை எப்படிப் பிரித்துணர்ந்து பலன் அறிவது?


இது போன்ற கேள்விகளுக்கு விடை காணத்தான் ராசிகளின் தன்மையான சரம், ஸ்திரம், உபயம் போன்றவைகளும் ஆண், பெண் ராசிகள் மற்றும் நெருப்பு, நிலம், நீர், காற்று போன்ற ராசிகளின் தத்துவங்களும் நமக்குப் போதிக்கப்பட்டன.

ஒரு நுண்ணிய நிலையாக ராகு-கேதுக்களின் ஆளுமைக்குட்பட்ட ஆறு நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், அஸ்வினி, மகம், மூலம் ஆகிய ஆறு நட்சத்திரங்களும் ஆண் ராசிகளில் மட்டுமே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலும் கேதுவின் நட்சத்திரங்கள் ஆண் நெருப்பு ராசிகளிலும், ராகுவின் நட்சத்திரங்கள் ஆண் காற்று ராசிகளிலும் மட்டுமே அமையும் என்பதும் ஒரு சிறப்பு.
ராகுவிற்கான புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான ஶ்ரீகாளகஸ்தி பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுஸ்தலமாக நமது ஞானிகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒளியை விழுங்கும் இருட்டு காற்றோடு தொடர்புடையது என்பது இதில் மறைந்திருக்கும் சூட்சுமம். இதுபற்றிய விளக்கங்களை பனிரெண்டு ராசிகளின் தத்துவங்களையும், அவைகள் அமைக்கப்பட்ட விதங்களையும் பற்றி விளக்கும் போது சொல்கிறேன்.

அதேபோல அஸ்வினி அமைந்துள்ள மேஷம், சர ராசி ஆதலால் மனிதனுக்குப் பயன்படாத கட்டுக் கடங்காத காட்டுத் தீ போன்ற நெருப்பு ராசியாகவும், மகம் அமைந்துள்ள சிம்மம் ஸ்திர ராசி என்பதால் ஒரே இடத்தில் நிலைத்து நின்று எரிந்து சமைப்பது போன்ற நல்லவைகளுக்குப் பயன்படும் நிலைத் தன்மை கொண்ட நெருப்பாகவும் விளக்கப்பட்டுள்ளது.

மூல நட்சத்திரம் அமைந்துள்ள உபய நெருப்பு எனப்படும் தனுசு சரம், ஸ்திரம் இரண்டின் இயக்கமும் கலந்தது. 
அதாவது சில சமயம் பயன்பட்டும் சிலநேரம் தேவைப்படாமலும் இருக்கும் தன்மை கொண்டது.

துல்லியமாகச் சொன்னால் தனுசு அடுப்பெரிக்கப் பயன்படாமல், ஞான விளக்கெரிக்கப் பயன்படும் தெய்வீக நெருப்பு ராசியாகும்.

எனவே கேது அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும் போது அல்லது ஒரு கிரகம் அஸ்வினியில் அமர்ந்திருக்கும் போது கேதுவின் குணங்களான தத்துவம், ஞானம் போன்றவற்றை செவ்வாயின் துடிப்புடன் விரைவாகத் தருவார். 

அதேநேரத்தின் அந்த விரைவான செயலின் முடிவில் கிடைத்த பலன் விரைவாகவே சென்றும் விடும்.

மகம் நட்சத்திரத்தில் கேது இருக்கும்போது அல்லது வேறு கிரகம் இருக்கும் போது இங்கே கேதுவின் குணங்கள் சூரியனின் நிலைத் தன்மையுடன் இருக்கும். இந்த பலன்கள் சூரியனின் தன்மைகளான தலைமைப் பண்பு, அதிகாரம், ஆளுமையின் வழியில் கிடைக்கும். அஸ்வினியைப் போல கிடைத்த பலன் விரைவாகக் கை நழுவிப் போகாமல் இறுதிவரை கூடவே இருக்கும்.

மூல நட்சத்திரத்தில் கேதுவோ அல்லது வேறு கிரகமோ அமரும் பட்சத்தில் இங்கே பரிபூரண ஞானம் வெளிப்படும். ஏனென்றால் இந்த ராசியின் நாயகனான குரு சாஸ்திரம், ஞானம் போன்றவைகளுக்குச் சொந்தக்காரர் என்பதாலும், கேதுவும் இதே பலன்களை வேறு வடிவில் தருபவர் என்பதாலும், இந்த இடத்தில் இருக்கும் கேது அல்லது வேறு கிரகங்கள் ஞான பலன்களைச் செய்யும்.

மேலும் குருவும், கேதுவும் இணைவதால் கிடைக்கும் கேளயோகம் போன்ற பலன்களும் இங்கே அமரும் கிரகங்களால் உண்டு. அதேநேரம் இந்த பலன்கள் சிலநேரம் மறைந்தும், சிலசமயம் வெளிப்பட்டுப் பயன்தரும் வகையிலும் இருக்கும்.

அடுத்து மகர லக்னத்திற்கு கேது எந்த நிலைகளில் இருந்தால் நன்மைகள் இருக்கும் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஏற்கனவே இரண்டாமிடமான கும்பத்தில் இருக்கும் கேது என்ன பலன்களைத் தருவார் என்று பார்த்துவிட்ட நிலையில் மகர லக்னத்திற்கு மூன்றாமிடமான குருவின் வீட்டில் இருக்கும் கேதுவால் ஓரளவு நல்லபலன்கள் இருக்கும்.

இந்த இடத்தில் இருக்கும் கேதுவால் ஜாதகருக்கு மூன்று பதினொன்றாமிடங்களின் தொடர்பு கிடைப்பதால், உபசய ஸ்தானங்களின் தொடர்பு முழுமையாகக் கிடைக்கும் போது ராகு,கேதுக்கள் நற்பலன்களைத் தருவார்கள் எனும் விதிப்படி தனக்குக் கிடைக்கும் பார்வை, இணைவுத் தொடர்புகளைப் பொருத்து கேது நன்மைகளைச் செய்வார்.

நான்காமிடமான மேஷத்தில் கேது முழுமையாகச் செவ்வாயைப் போலவே செயல்படுவார் என்பதாலும், இந்த லக்னத்திற்கு செவ்வாய் பெரிய நன்மைகள் எதையும் செய்ய விதிக்கப்பட்டவர் இல்லை என்பதாலும் மேஷ கேது, மகரத்திற்கு பெரிய நன்மைகளைச் செய்வது இல்லை.

ஐந்தாமிடத்தில் இருக்கும் கேது சுக்கிரன், செவ்வாய் இணைவுற்றால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதைச் செய்வார். 

பாபக் கிரகங்கள் திரிகோணத்தில் இருப்பது நல்ல நிலை இல்லையென்றாலும் மகரத்திற்கு சுக்கிரன் ராஜயோகாதிபதி என்பதால் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போல பலன் தரக் கூடிய நிழல் கிரகமான கேது இந்த இடத்தில் சுக்கிரனின் வலுவைப் பொருத்து நன்மை, தீமைகளைச் செய்யும்.

ஆறாமிடமான மிதுனத்தில் கேது இருப்பதும் நல்ல நிலை இல்லை. இங்கே புதன் செவ்வாய் இணைந்தாற்போல பலன் தரக் கூடிய கேது, ஆறாமிடத்தில் புதன் தரக் கூடிய பலன்களை மட்டுமே தூக்கலாகச் செய்வார். 

மிதுனத்துள் அடங்கிய சார அமைப்புகளும் மகரத்திற்கு நன்மை தரும் நிலை இல்லையென்பதால் இங்கே கேது இருப்பது நற்பலன்களைத் தராது. இந்த இடத்தில் கேது நன்மைகளைத் தர வேண்டுமெனில் சுக்கிரனின் வலுவான தொடர்புகளைப் பெற வேண்டும்.


ஏழாமிடமான கடகத்திலும், எட்டாமிடமான சிம்மத்திலும் கேது இருப்பது மகர லக்னத்திற்கு நன்மைகளைச் செய்யாது. இந்த இரண்டு இடங்களில் அமரும் கேது மகரத்திற்கு மண வாழ்வில் குறைகளை உண்டு பண்ணுவார்.

மகர நாயகனான சனிக்கு சூரிய, சந்திரர்கள் எதிரி என்பதால் இந்த லக்னத்திற்கு சூரிய, சந்திர சம்பந்தம் மற்றும் தொடர்பைப் பெறும் எதுவுமே நற்பலன்களைத் தராது.
மூலநூல்களில் சூரிய, சந்திரர்களுக்கு அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது என்று கூறப்பட்டிருப்பதன் அர்த்தம், மகரத்திற்கு சூரியன் எட்டாமிடத்துப் பலன்களைத் தரமாட்டார் என்பதல்ல. 

மற்ற பாபக் கிரகங்களைப் போல எட்டாமிடத்தின் கெடுபலன்களை மட்டுமே சூரியன் தரமாட்டார் என்பதுதானே தவிர எட்டாமிட ஆதிபத்திய பலன்களை சூரியன் மகரத்திற்குக் தந்தே தீருவார்.

மேற்கண்ட ஏழு மற்றும் எட்டாமிடங்களில் இருக்கும் கேது ஒரு சிறப்புப் பலனாக வெளிநாட்டுத் தொடர்புகளைச் செய்வார். கடகம் ஜலராசி என்பதால் கடகத்தில் இருக்கும் கேது ஒருவரைத் தனது தசை, புக்திகளில் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி பொருள் தேட வைப்பார்.

பொதுவாகவே மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர ராசிகளில் இருக்கும் ராகு,கேதுக்கள் தங்களின் தசாபுக்தி நடக்கும்போது ஒருவருக்கு இருக்கும் நிலைகளில் மாற்றங்களைத் தருவார்கள். அது வேலை, தொழில், வாழ்க்கை, இருப்பிடம் போன்ற அனைத்து நிலைகளிலும் இருக்கும்.

அதிலும் அதி விரைவான தினக் கிரகமும், நீரைத் தாண்ட வைக்கும் கிரகமுமான சந்திரனின் தொடர்புகளை ராகு,கேதுக்கள் பெறும்போது விரைவான நிலை மாற்றத்தைத் தருவார்கள். அந்த மாற்றம் முன்பிருந்ததை விட தலைகீழ் மாற்றமாக இருக்கும்.

மேலும் வெளிநாடு, வெளிமாநிலம், முஸ்லிம், கிறித்துவ நாடுகள், வேறு மொழிகள், முற்றிலும் அந்நியமான தன்மைகள் போன்றவற்றைக் குறிக்கும் ராகு,கேதுக்கள் ஜலராசி எனப்படும் சந்திரனின் வீடான கடகத்தோடு தொடர்பு கொள்கையில் அந்த ஜாதகரின் வயதையொட்டி படிப்பிற்கோ, வேலைக்கோ, திருமண வாழ்விற்காகவோ, பேரன்,பேத்திகளைப் பார்க்கவோ வெளிநாட்டிற்கு அனுப்புவார்கள்.

எனவேதான் வெளிநாட்டினைக் குறிக்கும் எட்டு, பனிரெண்டாமிடங்கள் மற்றும் வெளிதேச வாசத்தைக் குறிக்கும் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் மற்றும் அஷ்டமாதிபதி, விரயாதிபதி மற்றும் சந்திரனின் தொடர்புகளைப் பெறும் போது இருக்கும் இடத்தின் தன்மைகளை அப்படியே செய்யும் நிழல் கிரகங்களான ராகு,கேதுக்கள் வெளிநாட்டுத் தொடர்புளைச் செய்கின்றன.

எனவே மகரத்திற்கு ஏழு, எட்டாமிடங்களில் ராகு, கேதுக்கள் சுபத் தன்மையுடன் இருக்கும் நிலையில் வெளிநாட்டு அமைப்புகளைத் தரும். இதில் ஏழாமிடம் கேந்திரம் என்பதால் இருக்கும் இடத்தைக் கெடுத்தே நிழல் கிரகங்கள் பலன் தரும் என்ற விதிப்படி மண வாழ்வைக் கெடுத்து உயர் வாழ்வைக் கொடுக்கும்.

மகரத்திற்கு ராகு,கேதுக்கள் ஏழாமிடமான கடகத்தில் இருக்கும் நிலையில் ஜாதகருக்கு இரண்டு திருமணம், தாமத திருமணம், திருமணமே ஆகாத நிலை ஆகிய பலன்கள் நடக்கும். 

ஆனாலும் எந்த ஒரு நல்ல பலனும், கெட்ட பலனும் ராகு,கேதுக்களின் தசை, புக்திகளில்தான் நடக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *