adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் -C-068-Sondha Natchaththirangalil Irukum Raahu-Kethu Tharum Palangal.

ராகு-கேதுக்கள் தங்கள் சொந்த நட்சத்திரங்களில் அமரும் போதோ, தங்களுக்குள் நட்சத்திரங்களைப் பரிமாறிக் கொண்டு சார பரிவர்த்தனையில் உள்ள போதோ, அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் நட்சத்திரங்களில் இருக்கும் போதோ என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒரு நிலையாகும்.

தன்னுடைய சொந்த நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவைகளில் அமரும் ராகு பெரும்பாலும் நன்மைகளைச் செய்வதே இல்லை.

நம்முடைய மூல நூல்களில் ராகு நன்மை தரும் இடங்களாகச் சொல்லப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளிலும் ராகுவின் மேற்கண்ட சொந்த நட்சத்திரங்கள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டவே ராகு சனியைப் போலவும், கேது செவ்வாயைப் போலவும் செயல்படுவார்கள் என்று நமக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

உதாரணமாக கும்ப ராசியில் ராகு தன்னுடைய சொந்த நட்சத்திரமான சதயத்தில் அமர்ந்திருக்கும்போது பூரணமாக சனியைப் போலவே செயல்படுவார். சனி அந்த லக்னத்திற்கு சுபராக இருக்கும் பட்சத்தில் நல்ல தன்மையுடனும், அசுபராக இருந்தால் கெடுபலன்களைத் தரும் அமைப்பிலும் ராகு பலனளிப்பார்.

குறிப்பாகத் தன்னுடைய சுய நட்சத்திரத்தில் ராகு இருப்பதால், ராகு தரும் பலன்கள் சனியின் வழிகளில், ராகுவின் காரகத்துவத்தில், கும்பம் அந்த லக்னத்திற்கு எத்தனையாவது வீடு என்பதைப் பொருத்து அமையும்.

உதாரணமாக ஒரு மிதுன லக்னக்காரருக்கு ஒன்பதாமிடமாகிய கும்பத்தில் ராகு சதய நட்சத்திரத்தில் அமர்ந்து தசை நடத்துவாராகில், கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு,கேதுக்கள் அந்த பாவத்தைக் கெடுத்துப் பலன் தருவார்கள் எனும் விதிப்படி அந்த ஜாதகரின் தந்தை மற்றும் தந்தை வழி அமைப்புகளைக் கெடுத்து, பாக்கியாதிபதி சனியைப் போல தன்னுடைய காரகத்துவங்களின் வழியே பொருள் தருவார்.

கடக லக்னத்திற்கு அதே கும்பத்தில் இருக்கும்போது இங்கே சனி அஷ்டமாதிபதி என்பதால் சுய நட்சத்திரத்தில் இருக்கும் ராகு முழுக்க முழுக்க சனியின் எட்டுக்குடைய பலன்களைத் தன்னுடைய காரகத்துவங்களின் வழியே செய்வார்.

இதுபோன்ற நிலைகளில் ஜாதகரை சூதாட்டம், பங்குச்சந்தை, குறுக்குவழி நாட்டம், வெளிநாடு சம்பந்தம், அந்நிய இன மத மொழிக்காரர் தொடர்பு  போன்றவைகளில் ஈடுபடுத்தி பெரும் நஷ்டத்தைக் கொடுப்பார். சனியின் சூட்சும வலு அல்லது ராகுவிற்கு சுபர் சம்பந்தம் மட்டுமே இந்த பலன்களை மாற்றும்.

இதுபோலவே துலாம் ராசியில் தனது நட்சத்திரமான சுவாதியில் இருக்கும் ராகு சுக்கிரனும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்களைத் தருவாரோ அதுபோன்ற பலன்களை அந்த லக்னத்திற்கு ஏற்பத் தருவார். உதாரணமாக இந்த இடம் லக்னமாயின் சுயச் சாரம் பெற்ற ராகு தசையில் சுக்கிரனின் வலுவைப் பொருத்து நன்மைகள் இருக்கும்.

அதேநேரத்தில் மேஷ லக்னமாகி ஏழாமிடத்தில் இருப்பாராகில் ஏழில் சனி இருப்பதைப் போன்று பலன் தருவார். ஏழாமிடமும், சுக்கிரனும் தாம்பத்ய சுகம் வாழ்க்கைத் துணை போன்றவற்றைக் குறிப்பவை என்பதால் இவற்றில் பாதிப்புகள் இருக்கும்.

மேலும் சுயச் சாரத்தில் இருக்கிறார் என்பதால் தன்னுடைய காரகத்துவங்களான தன்னை விட மூத்தவரிடம் உறவு, விதவை, விதவன், நீசமானவர்கள், வேறு இன மத மொழிக்காரர்கள் தொடர்பு, இணைவு போன்றவற்றைத் தருவார்.

இருக்கும் பாவத்தைக் கெடுக்கும் குணமுடையவர் ராகு என்பதால் தாமதத் திருமணம், மணமாகாத நிலை, கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி என தாம்பத்திய சுகம் கிடைக்காத அமைப்பு, உறவில் நாட்டமின்மை அல்லது முறையற்ற வழி உறவில் ஆர்வம் போன்றவைகளும் இங்கே சுவாதி நட்சத்திரத்தில் அமரும் ராகுவால் இருக்கும்.

அதேபோல ஒரு மீன லக்ன ஜாதகருக்கு இந்த இடத்தில் சுவாதி நட்சத்திரத்தில் இருக்கும்போது, எட்டுக்குடையவனாகி அந்த ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையைப் பொருத்து வெளிநாடு, ஏற்றுமதி இறக்குமதி, சூதாட்டம், பங்குச்சந்தை, மோசடிவழிகள் போன்றவைகளில் நன்மைகளையோ அல்லது தீமைகளையோ செய்வார்.

மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவிற்கும் இதுபோன்ற பலன்களே பொருந்தும். சனியைப் போலவும், இருக்கும் வீட்டின் அதிபதியைப் போலவும் செயல்படும் கிரகம் ராகு என்பதால் கும்பத்தில் இருக்கும்போது சனி மற்றும் சனி, துலாத்தில் சுக்கிரன் மற்றும் சனி, மிதுனத்தில் புதன் மற்றும் சனியின் கூட்டுப் பலன்கள் என சம்பந்தப்பட்ட லக்னத்திற்கு மிதுனம் எத்தனையாவது இடம் என்பதைப் பொருத்து தனது காரகத்துவங்கள் வழியே தனது பலன்களை ராகு தருவார்.

மேலே சொன்ன விதிகளுடன் மேற்சொன்ன பாவங்கள் அந்த லக்னத்திற்கு மூன்று, பதினொன்றாமிடங்களாக அமைந்து, வீடு கொடுத்தவர்கள் வலுப்பெற்று, ராகுவிற்கு சுபத் தன்மை கிடைக்குமாயின் சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் ஓரளவு நன்மைகள் இருக்கும்.

ஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் ராகுவின் சூட்சுமங்களைப் பற்றி எழுதுகையில் ராகு-கேதுக்களுக்கு சார பலம் என்பது கடைநிலையில் உள்ள ஒன்றுதான் என்றும், ராகு-கேதுக்கள் முதலில் தான் இருக்கும் வீட்டின் அதிபதி போலவும், அடுத்துத் தன்னோடு இணைந்த கிரகம், பின்னர் தன்னைப் பார்த்த கிரகங்களின் பலன், அதன்பின் தனக்குக் கேந்திரங்களில் உள்ள கிரகங்களின் பலன்கள், இறுதியாகவே தனக்குச் சாரம் அளித்த கிரகத்தின் பலனைச் செய்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒருவருக்கு நடக்கும் தசையின் பலன் சொல்வதற்கு அந்தக் கிரகத்தின் சார பலம் எனப்படும் அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திர நாதனின் பலமே மிகவும் முக்கியமான ஒன்று என்பது ஜோதிடத்தின் தீர்க்கமான விதி.

ஆனால் ராகு,கேதுக்களுக்கு மட்டும் சார பலத்தை விட ராகுவின் வீட்டதிபதி மற்றும் அதனுடன் சேர்ந்த, பார்த்த கிரக அமைப்புக்களே முக்கியம் என்று நான் சொல்வதற்குக் காரணம் ராகு,கேதுக்கள் முழுமையான அந்தஸ்துள்ள கிரகங்களே இல்லை என்பதுதான்.

ராகு,கேதுக்கள் ஒன்பது கிரகங்களில் இரண்டுதான் என்றாலும் மற்ற ஏழையும் விட முற்றிலும் வேறுபட்டவை. பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள் மட்டுமே இவை என்பதாலும், ஒளியைப் பிரதிபலிக்கும் திறன் இல்லாதவை என்பதாலும், ஒளியை மறைக்கும் தன்மை கொண்ட, எதையும் தடை செய்யும் கிரகங்கள் என்பதாலும், சில நிலைகளில் மற்ற கிரகங்களுக்கு சொல்லப்பட்டுள்ள விதிகள் அப்படியே ராகு கேதுக்களுக்குப் பொருந்தாது. பொருத்திப் பார்க்கவும் கூடாது.

மனித வாழ்வில் ராகுகேதுக்களின் பங்களிப்பை உணர்ந்து, அவற்றின் இருப்பைத் துல்லியமாகக் கணித்து இவற்றை வேத ஜோதிடத்தில் இணைத்த விதத்திலேயே நமது ஞானிகளின் தெய்வீக ஆற்றல் நமக்கு உணர்த்தப்படுகிறது. அதுபோல இந்த சாயாக் கிரகங்களின் செயல்களை துல்லியமாகக் கணிப்பதில் மட்டுமே ஒரு ஜோதிடரின் மேதமையும் அறியப்படும்.

சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவின் பலன்களைச் சொல்ல உதவும் இதே விதிகள்தான் கேதுவிற்கு பலன் சொல்லும் போதும் பயன்படும். அதே நேரத்தில் ராகுவும், கேதுவும் தலையும், வாலும் என்பதாலும், ஒரு கோட்டின் இரு எதிரெதிர் முனைகள் என்பதாலும், கேதுவிற்கு பலன் அறியும்போது சில அம்சங்களை மாற்றிப் பலனறிய வேண்டும்.

கேது சொந்த நட்சத்திரத்தில் அமரும்போது என்ன பலன்களைச் செய்வார் என்று பார்க்கப் போவோமேயானால், தனுசு ராசியில் கேது மூல நட்சத்திரத்தில் இருக்கும்போது குருவும், செவ்வாயும் இணைந்திருக்கும் பலன்களை தன்னுடைய காரகத்துவத்தின் வழியே, தனுசு ராசி அந்த லக்னத்திற்கு எத்தனையாவது பாவம் என்பதன்படி செய்வார்.

இதுபோலவே மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் அமரும்போது பூரணமாக செவ்வாயைப் போலவே செயல்பட்டு தன்னுடைய காரகத்துவங்களான தனம், ஞானம், மருத்துவம், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட விஷயங்களின் வழியே மேஷம் அந்த லக்னத்திற்கு நல்ல பாவமாக இருந்தால் நற்பலன்களையும் தீய பாவமாக இருந்தால் தீமைகளையும் முழுக்க செவ்வாயாக மாறிச் செய்வார்.

சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் நிலையில் சூரியன் மற்றும் செவ்வாயைப் போலச் செயல்பட்டு சிம்மம் அந்த லக்னத்திற்கு நல்ல, தீய பாவமாக அமைவதைப் பொருத்து கேதுவால் நன்மைகளோ, தீமைகளோ இருக்கும். மேலே ராகுவிற்கும், கேதுவிற்கும் நான் சொன்ன பலன்களோடு ராகு-கேதுக்களைப் பார்க்கும் கிரகத்தின் பலன்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

சரி....

அஸ்வினி, மகம், மூலம் இவை மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்தான். இவை மூன்றிலும் இருக்கும் கேது ஒரே பலன்களைத் தருவது இல்லையே? இந்த மூன்று நட்சத்திரங்களின் குணங்களும் வேறு, வேறானவைதானே? ஆகவே சுயச் சாரத்தில் இந்த மூன்று நட்சத்திரங்களில் இருக்கும் கேதுவின் உள்ளார்ந்த துல்லிய பலன்களை அறிவது எப்படி?

அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? அதை எப்படி உணர்வது?. அவற்றை எப்படிப் பிரித்து, உணர்ந்து, அறிந்து பலன் சொல்வது?

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

2 thoughts on “சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் -C-068-Sondha Natchaththirangalil Irukum Raahu-Kethu Tharum Palangal.

  1. குருஜி ஐயா அவர்களுக்கு நன்றி. என் சிறு வயதில் இருந்து தந்தை ஆதரவு இல்லாமல் மிகவும் சிரமித்தில் வளர்த்தவன் என் தந்தை இருந்தும் இல்லை.எனது பூர்விக வீட்டில் வசிக்கிறேன் அந்த வீடு எனது பெயரில் மாறுமா இல்லையா? திருமண முடிந்து ஒரு வருடம் ஆகிறது குழந்தை எப்போது கிடைக்கும்.எனது d.o.b 10/03/85 காலை 8.39 கோவை மேஷ லக்னம், துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் .மனைவி d.o.b 19/05/91
    அதிகாலை 4.00 கோவை.மேஷ லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம்.நான் ஒரு நிறுவனத்தில் கணினித்துறையில் வேலை செய்கிறேன்.சனி தசையில் வேலை எப்படி இருக்கும், ￰சொந்த வேலை அமையுமா? மனைவிக்கு கேது தசையில் வேலை அமையுமா.கேது தசை எப்படி இருக்கும்.எங்கலின் எதிர்காலம் எப்படி இருக்கும்.எங்களின் பதிவை பற்றி பதில் தாருங்கள் ஐயா.

  2. சந்திரன் வளர்பிறையில் சுபர் என்றும் தேய்பிறையில் பாதர் என்றும் சொல்கிறீர்கள் ஜோதிடத்தை ஒளியாக புரிந்து கொள்ளச் சொல்கிறார்கள் எனில் தேய்பிறை சஷ்டி திதியன்று சந்திரன் 60 சதவிகிதம் ஒளியுடன் இருப்பாரே அப்போது எப்படி அவர் பாவியாவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *