adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
இந்து லக்னம் என்பது என்ன? – D -005 – Hindu Laknam Yenpathu Yenna?

ஒரு மனிதனின் எதிர்கால பலனை அறிவதற்கு ஜோதிடத்தில் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளாக  ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டம், நவாம்சம், பாவகம் மற்றும் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நன்மை, தீமைகளையும் பகுதி பகுதியாக பிரித்து சொல்லும் தசா புக்தி வருடங்கள் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம்.

மேலே சொன்னவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களாகவும், ஒரு ஜாதகத்தை தாங்கி நிற்கின்ற நிரந்தர தூண்களாகவும் இருக்கும். ஆயினும் ஜோதிடம் இத்துடன் முடிந்து விடுவது இல்லை.

ஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்வதற்கு ஏராளமான விதிகளும், விதிவிலக்குகளும், அவற்றின் துணை அமைப்புகளும் இந்த மாபெரும் சாஸ்திரத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகளாக இந்து லக்னம், திதி சூன்யம், புஷ்கர நவாம்சம், தாரா லக்னம் போன்றவைகளைச் சொல்லலாம். இதிலும் ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பு இப்போது நாம் பார்க்க இருக்கும் இந்து லக்னம் எனப்படுவது.

ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண் எனப்படுகிறது. அதன் இரு கண்களாக சூரியனும், சந்திரனும் இருக்கின்றன. இதில் இந்து லக்னம் எனப்படுவது இந்த இருவரையும் இணைத்து சூரியனின் அடிப்படையிலான லக்னத்தையும், சந்திரனின் அடிப்படையிலான ராசியை வைத்தும் கணிக்கப் படுகிறது.

இந்து என்ற சொல்லிற்கே சந்திரன் என்றுதான் அர்த்தம். இந்து லக்னத்தை கணக்கிடுவதற்கு முன் கிரகங்களின் கதிர்வீச்சு எனப்படும் ஒளி அளவினைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இதனை நம்முடைய மூலநூல்கள் “கிரக களா பரிமாணம்” என்ற பெயரில் குறிப்பிடுகின்றன.

கிரக களா பரிமாணம் என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு கிரகங்களின் கதிர்வீச்சு அளவு என்று பொருள் கொள்ளலாம். இதன்படி பூமிக்கு இதர கிரகங்களாலும், சூரியனாலும் கிடைக்கும் ஒளி அளவுகள், எண்களாக மாற்றப்பட்டு நம்முடைய ஞானிகளால் அளவிடப் பட்டு இருக்கின்றன.

இந்து லக்ன கணக்கின்படி, கிரகங்களின் தலைவனான சூரியனால் பூமிக்கு கிடைக்கும் ஒளியளவு எண் 30 எனவும்,

பூமிக்கு மிக அருகில் இருந்து சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரனின் ஒளியளவு 16 எனவும், அதிகாலை கிழக்கு வானில் வெண்மையாக பளிச்சிடும் சுக்கிரனின் ஒளிப் பிரதிபலிப்பு எண் 12 எனவும், சுக்கிரனை அடுத்து அதிக பிரதிபலிப்பு திறன் கொண்ட குருவின் ஒளி எண் 10 எனவும், அதனையடுத்து புதனின் ஒளி எண் எட்டாகவும் நமது ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.

இவை தவிர்த்து பூமிக்கு வெகு அருகில் இருக்கும் பாபக் கிரகமான செவ்வாயின் ஒளி எண் 6 எனவும், சூரியனை வெகு தொலைவிலிருந்து சுற்றி வரும் ஒளியற்ற, முதன்மை பாபக் கிரகமான சனியின் ஒளிப் பிரதிபலிப்பு எண் குறைந்த அளவாக ஒன்று எனவும் தொகுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.

ஜோதிடத்தில் சுபக் கிரகங்களாக சொல்லப்படும் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் மற்றும் பாபக் கிரகங்களாகச் சொல்லப்படும் சனி, செவ்வாயின் வரிசை முறைகள் மேலே உள்ள கிரகங்களின் ஒளிப் பிரதிபலிப்புத் திறனை வைத்தே சொல்லப் பட்டன என்பதை “உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா” என்ற தலைப்பில் முன்னர் மாலைமலரில் வெளிவந்த கட்டுரைகளில் “சுபர்-அசுபர் அமைந்த சூட்சுமம்” எனும் தலைப்பில் ஆய்வுப்பூர்வமாக விளக்கி இருக்கிறேன்.

இந்தக் கிரக களா பரிமாண வரிசையில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ராகு-கேதுக்களுக்கு இடம் தராமல் மற்ற ஏழு கிரகங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணம் என்னவெனில் கிரகங்களின் ஒளிப் பிரதிபலிப்பு நிலையை மட்டும் வைத்தே இந்த எண்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. சாயா கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் ஒளியைப் பிரதிபலிக்க முடியாத வெறும் இருளான நிழல்கள் மட்டுமே என்பதால் அவற்றிற்கு இந்து லக்ன அமைப்பில் இடமில்லை.

ராசிச் சக்கரத்தில் ஒரு வீட்டிற்கு மட்டும் அதிபதிகளான சூரிய, சந்திரர்களின்

 கிரக களா பரிமாண எண்களான 30 மற்றும் 16 ஐ அப்படியே வைத்துக் கொண்டு, இரண்டு வீடுகளை கொண்ட புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்குத் தரப்பட்ட எண்களை இரட்டிப்பாக்கினால் இதன் கூட்டுத் தொகை 120 ஆக வரும். அதன்படி அமைக்கப்படும் ராசி சக்கரம் கீழ்கண்டவாறு இருக்கும்.

இந்த எண்களின் கூட்டுத் தொகையான 120 என்பது ஜோதிடத்தில் ஒரு தவிர்க்க முடியாத எண். நம்மைச் சுற்றி பரந்து வியாபித்திருக்கும் ராசி எனப்படும் வான்வெளி வேதஜோதிடத்தில் மூன்று 120 டிகிரிகளாகக் கொண்ட பகுதிகளாகவே பிரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஜோதிடத்தில் மனிதனின் முழு ஆயுட்காலம் எனப்படும் விம்சோத்ரி தசாபுக்தி வருட அளவுகளும் மொத்தம் 120 தான்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும் கூட்டினால் வரும் எண்ணை பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண்ணை, ராசியில் இருந்து எண்ணினால் அது எந்த வீட்டில் முடிவடைகிறதோ அதுவே அவருடைய இந்து லக்னம் எனப்படும்.

இப்படிக் கணக்கிடப்படும் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்கும் போது ஒருமனிதன் அளவற்ற செல்வத்தையும், நன்மைகளையும் அடைவான்  எனவும் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான் எனவும் மூலநூல்கள் சொல்கின்றன. இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டாலும் அந்த லக்னத்தைப் பார்க்கும் கிரகத்தின் தசையிலும், நற்பலன்கள் கிடைக்கும் என்று மகரிஷி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் கூறுகிறது.

இந்து லக்னம் காண கூட்டி வரும் எண் 12 ஆல் வகுக்க முடியாமல் அதனுள் அடங்கிய சிறிய எண்ணாக இருந்தால், ராசியில் இருந்து அந்த எண்ணைக் கொண்டு அப்படியே எண்ணி, வரும் வீட்டினை இந்து லக்னமாக எடுத்துக் கொள்ள  வேண்டும்.

உதாரணமாக ஒருவர் மிதுன லக்னம், தனுசு ராசியில் பிறந்திருந்தால் ஜென்ம லக்னமான மிதுனத்திற்கு ஒன்பதாம் அதிபதியான சனியின் எண் ஒன்றையும், ராசிக்கு ஒன்பதாம் அதிபதியான செவ்வாயின் எண் ஆறையும் கூட்ட ஏழு வருகிறது. தனுசு ராசியில் இருந்து ஏழு வரை எண்ணினால் மீண்டும் மிதுனமே வரும். அதன்படி மிதுன லக்னம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்து லக்னமாக அவரது ஜென்ம லக்னமான மிதுனமே வரும்.

அதேபோல வேறு ஒருநிலையில், பனிரெண்டால் வகுத்து மீதி வரும் எண் பூஜ்யம் என்று வருகின்ற பட்சத்தில், ராசிக்கு முந்திய வீட்டினை இந்து லக்னமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நிலை கன்னி லக்னம், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் அதாவது கன்னி, கும்பம் இரண்டின் ஒன்பதாம் அதிபதிகள் சுக்கிரன் ஒருவரே என்றாகி 12 ஐ 12 ஆல் கூட்ட வரும் 24 ஐ 12 ஆல்  வகுக்கும் போது மீதி பூஜ்யம் என்று வருகின்ற நிலையில் கும்பத்திற்கு முந்தைய மகரத்தை இந்து லக்னமாக கொள்ள வேண்டும்.

மேம்போக்காக பார்க்கின்ற நிலையில் ஒருவரது ஜாதகம் யோகமற்றது போல தெரிந்தாலும் ஜாதகர் மிகவும் யோகமாக, அனைத்து வசதிகளுடனும் பெரும் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருப்பார். அதற்கு இந்த இந்து லக்ன அமைப்பு காரணமாக இருக்கும்.

அதேநேரத்தில் இந்து லக்னம் என்பது ஜாதகத்தில் பலன் சொல்வதற்கு தேவைப்படும் ஒரு துணை அமைப்பு மட்டும்தான். இந்து லக்னத்தில் கிரகம் இருந்தாலே அந்த கிரகத்தின் தசையில் கோடிகளைக் கொண்டு வந்து கொட்டி விடும் என்று சொல்லி விட முடியாது. ஜாதகத்தின் மற்ற அமைப்புகளும் வலுவாக இருக்க வேண்டும்.

மேலும் ஒரு ஜாதகத்தின் ஆதார நாயகனான லக்னாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில்தான் அனைத்து யோகங்களும் செயல்படும் என்பதை நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். எத்தகைய யோகமாக இருந்தாலும் அதை அனுபவிக்க லக்னாதிபதியின் தயவு கண்டிப்பாகத் தேவை. லக்னாதிபதி வலுப்பெற்ற ஜாதகங்களில் இந்து லக்னத்தின் பலன்கள் மிக அதிகமாகவும் வலுக்குறைந்த ஜாதகங்களில் ஓரளவிற்கும் இருக்கும்.

ஒரே ஒரு விதியை மட்டுமே வைத்து ஜாதகத்தின் அனைத்து நிலைகளையும் கணிக்க முடியாது என்பது இந்து லக்னத்திற்கும் பொருந்தும். ஜோதிடம் என்பது நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொன்ன அனைத்து விதிகளையும் ஒரு சேர மனதில் கொண்டு வந்து, அதில் எந்தெந்த விதிகள் இந்த ஜாதகத்திற்குப் பொருந்துகிறது என்பதைச் சரியாகக் கணித்து பலன் அறிவதுதான்.

இதற்காகத்தான் ஜோதிடத்தில் விதிகளை விட விதி விலக்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி எழுதுகிறேன். அதுபோல அடிப்படை வலுவாக இருந்தால்தான் நீங்கள் எதனையும் அனுபவிக்க முடியும் மற்றும் கிடைத்தவைகளை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.

கிரகங்கள் தரும் யோகத்தை ஒரு மனிதன் அனுபவிக்க அவனது ஜாதகத்தை வழி நடத்தும் லக்ன ராஜனான லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்து லக்னம் உள்ளிட்ட எந்த ஒரு யோகமும் பலன் தராது. ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் விழலுக்கு இறைத்த நீராகப் போய் விடும்.

கிரக வலு என்பது என்ன?

ஒரு கிரகம் நீசம், பகை, அஸ்தமனம், கிரகணம் போன்ற நிலைகளில் இல்லாமல் இருந்து, பாபக் கிரகங்களின் தொடர்புகள் இல்லாமல், சுபக் கிரகங்களின் பார்வை, இணைவு போன்றவற்றை அடைந்திருந்தால் அது வலுவாக இருக்கிறது என்று பொருள்.

அதேநேரத்தில் மேற்கண்ட நீச, அஸ்தமன, கிரகண நிலைகளுக்கும் விதி விலக்குகள் இருக்கின்றன. ஒரு கிரகம் நீசமானாலும் முறையான நீச பங்கத்தை அடைந்திருந்தால் அது வலுவாக இருக்கிறது என்றே பொருள். இன்னும் குறிப்பாகச் சொன்னால் அது உச்ச கிரகத்தின் தொடர்பையோ, பெரும் ஒளியின் பிரதிநிதிகளான பவுர்ணமிச் சந்திரன் மற்றும் பங்கமற்ற குருவின் பார்வை மற்றும் தொடர்பையோ பெற்றிருந்தால் நீசபலன் முற்றிலும் மாறி நீசத்திற்கு நேரெதிரான உச்ச பலத்துடன் இருக்கும்.

அதேபோல ஒரு கிரகம் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் அடைந்திருந்தாலும், அந்தக் கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தன்னுடைய சொந்த வீட்டில் இருக்கும் ஆட்சித் தன்மையை அடைந்து, எந்த வீட்டோடு பரிவர்த்தனை பெற்றுள்ளதோ அந்த வீட்டின் பலனைத் தரும்.

எனவே ஜோதிடத்தில் எதையும் மேம்போக்காக கணித்து விட முடியாது. எதிர்காலத்தைக் காட்டும் இந்த மாபெரும் சாஸ்திரத்தினுள் மூழ்கி பலன் என்னும் முத்துக்களை அள்ள பரம்பொருள் கொடுக்கும் தனிப்பட்ட ஞானமும், நீடித்த அனுபவமும் தேவை.

மேன்மை வாய்ந்த இந்து லக்னத்தில் சுபக் கிரகங்கள் இருந்து தசை நடத்தும் போது ஒருவர் அந்த தசையில் மிகச் சிறந்த நல்ல பலன்களை அடைவார் என்று நம்முடைய மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. பாபக் கிரகங்கள் இந்து லக்னத்தில் இருந்தாலும் குறைந்த அளவு நற்பலன்கள் உண்டு எனவும் நமது கிரந்தங்கள் சொல்லுகின்றன.

அதேநேரத்தில் இந்து லக்னத்தில் இருக்கின்ற பாபக் கிரகம் சுபத்துவம் அடைந்திருந்தால் சிறந்த நற்பலன்களை சுபக் கிரகத்திற்கு இணையாகத் தரும்.

இந்து லக்னத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன் போன்ற பாபக் கிரகங்கள் இருப்பினும், அவை முற்றிலும் சுபத்துவம் அடைந்திருக்கும் போது, அந்தக் கிரகம் தனக்குரிய காரகத்தின் வழியாக, அந்த ஜாதகருக்கு அபாரமான நற்பலன்களைச் செய்யும். மற்றும் நமது மூல நூல்களில் சொல்லியுள்ளபடி கோடிகளைக் கொண்டு வந்து குவித்து ஜாதகரை சொகுசு வாழ்வு வாழச் செய்யும். இதுபோன்ற ஒரு உதாரண ஜாதகத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

மீண்டும் அடுத்த வெள்ளி தொடருவோம்.

(04-05-2018 மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

7 thoughts on “இந்து லக்னம் என்பது என்ன? – D -005 – Hindu Laknam Yenpathu Yenna?

  1. Risha lagnam 9th house magaram sani no.1
    Meena rasi 9th house viruchigam Mars no.6
    If we add this we 7 how to divide it by 12

  2. இந்து லக்கினம் ரிசபமாகி அங்கு செவ்வாய் குரு பாா்வையில் இருந்தால் செவ்வாய் திசை யோகத்தைச் செய்யுமா ஐயா

  3. ஜென்மலக்கினமே இந்துலக்கினமாக வந்து,ஜென்மலக்கினம் பாவகத்திரியோகம்,திதிசூன்யம்,போன்ற அசுபதன்மை அடைந்திருந்தாலும்,லக்கினத்தை அவயோகி சாரத்தில் நின்ற,பாக்கியாதிபதி (குருவால் பார்க்கப்பட்டு)சுபத்துவமடைந்த சனி பார்த்து திசை நடத்தினால்… சனிதிசை,யோகமா? அவயோகமா? ஐயா

  4. சார், எனக்கும் மேச ராசி, மேச லக்னம்…….. நாம் பேசிக் கொண்டால் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம்…… My no. 9865412000

  5. MY DATE OF BIRTH 22/9/1967 TIME OF BIRHTY 14 HRS 36 MTS IN TRICHY KINDLY CALCULATE AND INFORM INDHU LAKINAM AND PREDITION TO BE INFORM PLEASE SIR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *