adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 185 (01.05.18)

அறிவழகன், பட்டுக்கோட்டை.

கேள்வி :

கடந்த நான்கு வருடங்களாக கடன் தொல்லையால் மிகவும் கஷ்டப் படுகிறேன். சம்பாதிக்கும் பணம் வட்டி கட்டுவதற்கே சரியாக உள்ளது. எட்டு மாதமாக வேலையும் இல்லாமல் இருக்கிறேன். மறுபடியும் வெளிநாடு செல்வேனா? கடன் அடைபடுமா?

பதில் :
சூ ராகு
பு 20-3-1982 மாலை 4.07 பட்டுக்கோட்டை
 சந், சுக்
கேது குரு செ, சனி
(சிம்ம லக்னம், மகர ராசி. 2-ல் செவ், சனி. 3-ல் குரு. 5-ல் கேது. 6-ல் சந், சுக். 7-ல் புத. 8-ல் சூரி. 11-ல் ராகு. 20-3-1982, மாலை 4.07, பட்டுக்கோட்டை)

ராகுதசை முற்பகுதியில் யோகத்தைச் செய்தால், சுக்கிர புக்திக்கு பிறகு வரும் சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் நல்ல பலனைத் தருவதில்லை. உங்களுக்கு பதினொன்றாம் இடத்தில் ராகு அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த புதன் பரிவர்த்தனை மூலம் உச்சம் பெற்ற நிலை உண்டானதால் முற்பகுதியில் வெளிநாடு யோகங்களை செய்து இருப்பார். சூரியபுக்தி முதல் கடுமையான கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்யும்.

ராகு தசை இன்னும் ஒரு வருடத்தில் முடிந்து, அடுத்து எட்டுக்குடைய குருவின் தசை ஆரம்பிக்க இருப்பதால் நீங்கள் மறுபடியும் வெளிநாடு செல்ல முடியும். லக்னாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் உள்நாட்டில் இருப்பதை விட வெளிதேசத்தில்தான் உங்களுக்கு வருமானம் வரும். குருதசை, சுயபுக்தியில் கடன்களை அடைக்க முடியும்.

ஆர்.ரவிக்குமார், சேலம்.

கேள்வி :

மகள் பி.டி.எஸ். படித்து பல் மருத்துவராக தனியார் துறையில் பணி புரிகிறார். அவருக்கு அரசுப்பணி கிடைக்குமா? அல்லது சொந்தமாக மருத்துவம் பார்க்கலாமா? 26 வயது ஆகிறபடியால் திருமணம் செய்யலாம் என வீட்டார் சொல்கிறார்கள். திருமணம் எந்த வயதில் நடக்கும்? உறவு மணமகனா? அல்லது பிறத்தியார் மணமகனா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

பதில் :
பு சந்  கேது
சூ, சுக் 11-3-1992 இரவு 9.56 பாண்டிசேரி
செ, சனி
ராகு குரு
(துலாம் லக்னம். ரிஷப ராசி. 3-ல் ராகு. 4-ல் செவ், சனி. 5-ல் சூரி, சுக். 6-ல் புத. 8-ல் சந். 9-ல் கேது. 11-ல் குரு. 11-3-1992, இரவு 9.56, பாண்டிசேரி)

ராசி அல்லது லக்னத்திற்கு பத்தாமிடத்தில் வலுப் பெற்ற சூரியன், குரு, செவ்வாய் தொடர்பு கொண்டால் ஒருவர் மருத்துவத் துறையில் இருப்பார். இதில் செவ்வாய் அதிக சுபத்துவமாக இருந்தால் முதல்நிலை மருத்துவர் எனப்படும் எம்.பி.பி.எஸ். டாக்டராகவும், சற்று வலு குறைந்திருந்தால் இரண்டாம் நிலை மருத்துவம் எனப்படும் பல்டாக்டர், சித்தா, ஹோமியோபதி என்று நிலை மாறும்.

மகளின் ஜாதகப்படி ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் அமர்ந்து, அந்த வீட்டைக் குரு பார்த்து, லக்னத்திற்கு பத்தாம் வீட்டை உச்சம் பெற்ற செவ்வாய் பார்ப்பதால் பல் மருத்துவராக இருக்கிறார். உச்ச செவ்வாயுடன் சனி சேராமல் இருந்திருந்தால் மகள் எம்.பி.பி.எஸ். டாக்டராக இருந்திருப்பார்.

சிம்மத்தில் குரு அமர்ந்து, சந்திரனுக்கு பத்தில் சூரியன் அமர்ந்து, ராசிக்கு பத்துக்குடையவர் ஆட்சி, லக்னத்திற்கு பத்துக்குடையவர் உச்சம் என்பதால் மகளுக்கு அடுத்த வருட இறுதியில் அரசு வேலை கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொந்தமாகவும் மருத்துவம் பார்க்கலாம். மகள் ராசிப்படி அஷ்டமச்சனி நடப்பதாலும், நான்கில் செவ்வாய், சனி சேர்ந்திருப்பதாலும், 28 வயதில் 2020-ல் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு அனைத்து பாக்கியங்களுடனும் நிறைவாக இருப்பாள்.

வே.வீரய்யா, நெம்மேலிக்காடு.

கேள்வி :

ஐந்துமுறை கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. மாலைமலரில் தாங்கள் எழுதி வரும் ராசிபலன்கள் எனக்கு மிகவும் சரியாக இருக்கிறது. ஏற்கனவே அனுப்பிய ஜாதகக் குறிப்பில் லக்னத்தை தவறாக குறிப்பிட்டு விட்டேன். ஜோதிடமே தெரியாத ஒருவரிடம் என் ஜாதகத்தை பார்த்து எனக்கு என்ன லக்னம் என்று கேட்டேன். அவர் துலாம் என்று சொன்னதை நம்பி தங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் லக்னம் துலாம் என்று எழுதியிருந்தேன். சில நாட்களுக்கு முன் என் ஜாதகத்தை பார்த்தபோது அதில் லக்னம் ரிஷபம், ராசி விருச்சிகம் என்று எழுதி இருந்தது. இந்த கடிதத்திற்காவது பதில் தாருங்கள். வாழ்க்கை பாலைவனம் போல் ஆகிவிட்டது. எந்த திசையில் போவது, எப்படி போவது என்று எதுவுமே புரியவில்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் :

பிறந்த விவரங்கள் சரியாக இல்லாத கேள்விகளுக்கு நான் பதில் தருவது இல்லை. ஜோதிடம் என்பது தோராயமானது அல்ல. குத்துமதிப்பாக மனம் போன போக்கில் பலன் சொல்வது ஜோதிடமே இல்லை. ஒரு ஜோதிடர் கூடுமானவரை விதிகளின்படி துல்லியமான பதில் தரவே முயற்சிக்க வேண்டும். அரைகுறையான பதில்களால் ஜோதிடருக்கும் அவமானம். ஜோதிடத்திற்கும் கேவலம்.

அனுப்பியுள்ள குறிப்புகளின்படி நீங்கள் சொல்லுகின்ற உங்களின் பிறந்த நேரம் இரவு 9.30 மணி என்றால் முதலில் ஜோதிடமே தெரியாத ஒருவர் சொன்ன துலாம் லக்னம் என்பதே சரி. ஆனால் பிறந்த ஜாதகத்தில் ரிஷப லக்னம் என்று குறிப்பிட்டிருந்தால் காலை 9.30 மணிக்குத்தான் நீங்கள் பிறந்திருக்க முடியும். அல்லது பிறந்த ஜாதகத்தை எழுதிய ஜோதிடர் காலை, இரவு என்பதில் தவறு செய்திருக்கலாம்.

எப்படி இருப்பினும் சந்தேகத்திற்கு இடமில்லாத ஜாதக விவரங்களை வைத்துத்தான் ஒரு ஜோதிடர் பதில் சொல்ல வேண்டும். போகிற போக்கில் வாய்க்கு வந்ததை ஏதோ சொல்ல வேண்டுமே என்று சொல்லுகின்ற ஜோதிடன் இல்லை நான். உங்களுடைய பிறந்த ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து அனுப்புங்கள் பதில் தர முயற்சிக்கிறேன். எப்படி இருந்தாலும் நீங்கள் விருச்சிக ராசி என்பது உறுதியான ஒன்று என்பதால் கடந்த 5 வருடங்களாக வாழ்க்கையின் அத்தனை பாதைகளும் அடைபட்டிருக்கும். இன்னும் சில வாரங்களில் எந்தப் பாதையில் போவது என்று வழி தெரியும். அதில் நடங்கள். விடிவு வரும்.

குமரன், ஆத்தூர்.

கேள்வி :

இளம் வயதிலேயே தந்தை விபத்தில் காலமானது முதல் கடும் கஷ்டத்தில் படித்து தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். சம்பளம் குறைவாக உள்ளதால் பணம் தந்தால் அரசுப்பணி வாங்கித் தருவதாக ஒருவர் சொல்கிறார். கொடுக்கலாமா? நீங்கள் கூறும் பதிலில்தான் பணம் கொடுப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

பதில் :
சந் ல, குரு
18-11-1989, இரவு 10.12, ஆத்தூர் கேது
ராகு
சனி சுக் சூ பு, செ
(மிதுன லக்னம், ரிஷப ராசி. 1-ல் குரு. 2-ல் கேது. 4-ல் புத, செவ். 5-ல் சூரி, 6-ல் சுக். 7-ல் சனி. 8-ல் ராகு. 18-11-1989, இரவு 10.12, ஆத்தூர்)

லக்னத்திற்கு பத்தாம் வீடு குருவின் வீடாகி, ராசிக்கு இரண்டில் குரு அமர்ந்து ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பதால் சொல்லிக் கொடுக்கும் துறையில் இருக்கிறீர்கள். அரசு வேலைக்கு காரணமான சூரியன் நீசம் பெற்றாலும், வர்க்கோத்தமம் அடைந்து குருவின் பார்வையைப் பெற்றுள்ளதால் உங்களுக்கு அரசுப் பணி கிடைக்கும். ஆனால் இப்போது அல்ல.

அஷ்டமச்சனி நடப்பதால் எந்தக் காரணத்தைக் கொண்டும் பணம் கொடுக்க வேண்டாம். வேலையும் கிடைக்காது. பணமும் திரும்ப வராது. சனி முடியும் தருவாயில் 2019 பிற்பகுதியில் இன்றும் ஒன்றரை வருடங்கள் கழித்து அரசுப் பணி கிடைக்கும். அப்போது முயற்சி செய்யுங்கள்.

ஶ்ரீகிருஷ்ணா, காஞ்சீபுரம்.

கேள்வி :

தங்களின் கட்டுரைகளை படித்து ஜோதிடம் கற்று வரும் சிறிய மாணவன் நான். தந்தை என்ற பெயரில் என்னை வேதனைப்படுத்தும் என் முதல் எதிரி என்னுடைய அப்பாதான். வாழ்க்கையில் தோற்றால் என்னை விமர்சனம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் என்னைப் பற்றி தவறாக கூறி வருகிறார். இத்தனைக்கும் அவரே வீட்டோடு மாப்பிள்ளையாகத்தான் இருக்கிறார். 2012-க்கு பிறகு என் வாழ்க்கையில் உடல், மனப்பிரச்சினைகள் மட்டுமே இருக்கிறது. அரசுத்தேர்வு வகுப்பில் இருக்கும் போது சிறுநீரை அடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, சிறுநீரக கோளாறு வந்து விட்டது. அது மஞ்சள்காமாலை வரை கொண்டு போய் பாடாய் படுத்தி விட்டது. படித்து முடித்து நான்கு வருடமாகியும் பணம் சம்பாதிக்க முடியவில்லை. என் தாய் எனக்கு திருமணம் செய்ய துடித்து கொண்டிருக்கிறார். நானோ வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியாலும், உடல்பிரச்சினையாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். எல்லோரும் வேதனைப்படுத்தும் நிலை எப்போது மாறும்?

பதில் :
சந் கே
13-11-1992 அதிகாலை 1.10 காஞ்சீபுரம்  செ
சனி
சுக் பு, ரா சூ  குரு
(சிம்ம லக்னம். ரிஷப ராசி. 2-ல் குரு. 3-ல் சூரி. 4-ல் புத, ராகு. 5-ல் சுக். 6-ல் சனி. 10-ல் சந், கேது. 12-ல் செவ். 13-11-1992, அதிகாலை 1.10, காஞ்சீபுரம்)

ஜாதகத்தில் தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் பாவம் வலுவிழந்து, பாபத்துவம் பெற்ற நிலையில், பிதுர்க்காரகனான சூரியனும் பலவீனமானால் தந்தை இருக்க மாட்டார் அல்லது தந்தையாக இருக்க மாட்டார். இதில் தந்தை உயிரோடு இருக்கிறாரா அல்லது சிறு வயதிலேயே இறந்து விட்டாரா என்பதை இந்த பாவத்தோடு சம்பந்தப்பட்ட ராகுவை வைத்து அறிய முடியும்.

உங்கள் ஜாதகப்படி லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் பனிரெண்டில் மறைந்து நீசமாகி, சனி பார்வையும் பெறுகிறார். ராசிக்கு ஒன்பதில் சனி இருக்கிறார். காரகன் சூரியனும் நீசம் பெற்ற நிலையில் அவரை சனி, செவ்வாய் இருவருமே பார்க்கிறார்கள். இந்த அமைப்பின்படி வாழ்நாள் முழுவதும் உங்களின் தகப்பன்-மகன் உறவு இப்படித்தான் இருக்கும்.

அதேநேரத்தில் லக்னாதிபதி நீசமாகி, பாபக்கிரக பார்வையில் இருப்பதால் நீங்களே தன்னம்பிக்கையும், ஊக்கமும் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் இருப்பீர்கள். லக்னாதிபதியை விட ஆறுக்குடையவன் வலுப்பெற்றால் உடல், மனப் பிரச்னைகள் இருக்கும். அஷ்டமச் சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை. சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். உடல் பிரச்னைகள் தீர்ந்து நன்றாக இருப்பீர்கள்.

என் கணவர் எப்போது எனக்கு பயந்து நடுங்குவார்?

எஸ்.வள்ளி, தூத்துக்குடி-2.

கேள்வி :

சிறுவயதில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்தேன். நினைத்த மாதிரி குடும்பம் அமையவில்லை. நினைத்தபடி கணவர் இல்லை. நான் சொல்வதைக் கேட்பதே கிடையாது. பிள்ளைகளும் அப்படித்தான். நினைத்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான். ஆனால் அவர் அது வேண்டாம் எதற்கு என்பார். திருமணத்திற்கு பிறகு சும்மா உட்கார்ந்து ராணி மாதிரி சாப்பிடுவேன் என்று நினைத்தேன். நடக்கவில்லை. ஏமாற்றம்தான் மிச்சம். நான்தான் வீட்டில் எல்லா வேலையையும் பார்க்க வேண்டியுள்ளது. கணவர் எந்த வீட்டு வேலையையும் பார்ப்பது கிடையாது. மற்ற கணவர்களை போல வீட்டில் சமையல் செய்யும்போது எனக்கு ஒத்துழைப்பு தருவாரா? இது நடக்குமா? என்னுடைய தோழிகள் அவர்களது கணவர் அடங்கிப் போவதாகவும், அவர்களைப் பார்த்து கணவர் பயந்து நடுங்குவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு அப்படி இல்லையே. நான் அதிர்ஷ்டம் இல்லாதவளா? பக்கத்து வீட்டு அரசு ஊழியர் பலமாடி கட்டிடம் கட்டியுள்ளார். எனது கணவரும் அரசு ஊழியர்தான். ஆனால் வீட்டில் உடைந்து கிடக்கும் தரையை சரி செய்யக் கூட யோசிக்கிறார். சோம்பேறியாக இருக்கிறார். பைசா செலவு பண்ணுவதற்கு தயங்குகிறார். நான் நினைப்பது அதிக ஆசையா? அல்லது பொருத்தம் இல்லாத கணவர் அமைந்தது குற்றமா? பதில் தாருங்கள்.

பதில் :
சனி  கே
கணவர் 12-11-1972, காலை 7.40, நாகர்கோவில்
சந்
குரு ராகு பு ல சூ செ சுக்
சந் குரு கே பு சூ சுக்
மனைவி 19-6-1976, இரவு,7.05, தூத்துக்குடி செவ் சனி
ராகு

(கணவர் 12-11-1972, காலை 7.40, நாகர்கோவில், மனைவி 19-6-1976, இரவு 7.05, தூத்துக்குடி)

ஊருக்கெல்லாம் ஒரு பிரச்னை என்றால் உனக்கு வேறு பிரச்னை அம்மா. நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள் அதுபோல இருக்கிறது உன்னுடைய கடிதம். உன் வாழ்க்கையை நீயாக, உனக்காகத்தான் வாழ வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்து அதுபோல வாழ வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்?

கணவர் பயந்து நடுங்க வேண்டும் என்று சொல்கிறாயே.. இதேபோல உன் கணவன் நினைத்தால் உன் கதி என்ன என்பதைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்தால் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டாய். பல மாடிக் கட்டிடம் கட்டியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரன் ஏதாவது சிக்கலில் மாட்டி நாளைக்கு ஜெயிலுக்குப் போனால் உன் புருஷனின் பெருமை அப்போது உனக்குப் புரியும்.

ஆணும் பெண்ணும் வேலைகளைப் பிரித்துக் கொள்வதுதான் நம்முடைய கலாச்சாரம். கணவன் வெளியில் வேலை செய்கிறான் என்றால் நீ வீட்டில் வேலை செய்கிறாய். நீங்கள் இருவருமே உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை பகிர்ந்து கொள்கிறீர்கள். இதில் வீட்டிலும், வெளியிலும் வேலை செய்யும் கணவன் கிடைத்தால் அதிர்ஷ்டம்தான். அல்லது அப்படி மாற்றிக் கொள்வதும் மகளே உன் சமர்த்துத்தான்.

அடுத்தவர்கள் சொல்வதை ஒருபோதும் நம்பாதே. இங்கே பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்பவர்கள்தான் அதிகம். கணவனின் ஜாதகப்படி அவர் கொஞ்சம் சிக்கனக்காரர்தான். அப்படி இருப்பதுதான் எதிர்காலத்திற்கு நல்லது. இருப்பதற்குள் நிறைவாக வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை. இதுகூட இல்லாமல் இருந்தால் என்ன செய்வாய்?

கணவன் அரசு ஊழியர் என்பதால் மாதம் ஆனால் டான் என்று சம்பளம் வருகிறது. நிரந்தர வேலையில் இல்லாத கூலிக்காரனாக இருந்தால் எப்படி நினைத்ததை வாங்குவாய்? நல்ல குடும்பத் தலைவியே நாளைய நல்ல தலைமுறையை உருவாக்குகிறாள். நீ ஒரு நல்ல மனைவியாக, அம்மாவாக இருக்க முயற்சி செய். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *