adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஹோரையின் பலன்கள் – D – 004 – Horaiyin Palangal…

சென்ற வாரங்களில் வேத ஜோதிடத்தின் ஒரு நுண்ணிய கால அளவான ஹோரை என்பது பற்றிய விளக்கங்களைப் பார்த்த நிலையில் நிறைவாக ஹோரை செய்யும் பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஒருவருக்கு ஹோரை பார்க்கத் தெரிந்து விட்டாலே ஒரு புது உலகம் கைகளில் பிடிபட்டு விட்டது போல உணர முடியும். ஹோரை பார்க்கத் தெரிந்தவனையும்.  பட்சி சாஸ்திரம் அறிந்தவனையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஒரு தமிழ்ப் பழமொழி சொல்வதில் இருந்தே பழங்காலம் முதற்கொண்டே தமிழகத்தில் ஹோரையின் முக்கியத்துவம் அறியப்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.

கிரகங்களின் ஆளுமையை மிகவும் நுணுக்கமாக சொல்லும் ஒரு கால அளவு ஹோரை என்பதால், உங்களின் பிறந்த ஜாதகப்படி எந்தச் செயலை ஒரு கிரகம் தருவதற்கு விதிக்கப்பட்டதோ, அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் உங்களின் தினசரி வாழ்வில் அந்த ஹோரையில் நடக்கும்போது ஜோதிடத்தின் அற்புதத்தை அனுபவித்து மெய்சிலிர்க்க முடியும்.

ஹோரை பார்க்கத் தெரிந்து விட்டாலே ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். சிலருக்கு ராகுகாலம் முதன்மையாக பார்க்கப்பட வேண்டுமா? ஹோரை மட்டும் பார்த்தால் போதுமா என்ற குழப்பம் இருக்கும். ஒருவகையில் பார்த்தால் ராகுகாலத்தைவிட ஹோரையே வலிமையானது. ஹோரை பார்க்கும் போது ராகுகாலம் பார்க்கத் தேவையில்லை.

உதாரணமாக வியாழக்கிழமை மதியம் 1.30 மணியில் இருந்து, 3 மணி வரை ராகு காலம் என்பது ஒரு கணக்கு. அதேநேரத்தில் அன்று மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 வரை குரு ஹோரையாக வருகின்ற நிலைமையில் இங்கே ராகு காலத்தை விட குருஹோரைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் சுப காரியங்களை செய்யலாம். இந்த அமைப்பின்படிதான் சமீபத்தில் ஒரு ராஜ குடும்பத்து திருமண முகூர்த்தம் ராகுகாலத்தில் ஜோதிடர்களால் குறித்துக் கொடுக்கப்பட்டது.

ராகுகாலமும், குரு ஹோரையும் கலந்து நிற்கும் அமைப்பில் குரு ஹோரையின் நல்ல பலன்கள் மட்டுமே முன் நிற்கும். அதிலும் பிறப்பு ஜாதகப்படி ராகு ஒருவருக்கு நல்லவிதத்தில் அமைந்து ராகுகாலம் எப்போதுமே நற்பலன்களைத் தரும் விதத்தில் இருக்கும்போது, அதனுள் வரும் குரு ஹோரை இரட்டிப்பு நன்மைகளைச் செய்யும்.

அனைத்திலும் மேலாக ஹோரை பார்ப்பதில் மிக,மிக முக்கியமாக இருக்கும் ஊரின் அன்றைய சூரிய உதய நேரம் கவனிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை சூரிய ஹோரை என்பது பொதுவானது. இது சூரியன் சுமார் ஆறுமணிக்கு உதிக்கும் என்பதன் அடிப்படையில் சொல்லப் பட்டது.

எல்லா ஊர்களிலும் சூரியன் ஒரேநேரத்தில் உதிப்பது இல்லை. கிழக்கே இருக்கும் ஊர்களில் உதிக்கத் துவங்கி, மேற்கில் மெதுவாக சூரியன் நகரும் நிலையில் அனைத்து ஊர்களுக்கும் சூரிய உதயம் வேறுபடும். இது காலை 5.40 மணியில் இருந்து காலை 6.40 மணி வரைகூட இருக்கலாம்.

எல்லா நாட்களிலும் சூரியன் அனைத்து ஊர்களிலும் 6.00 மணிக்கு உதிப்பது இல்லை. ஆகவே 6.00 மணிக்கு ஹோரை ஆரம்பம் என்பது தோராயமான கணக்கு தான். ஹோரை என்பது ஒரு துல்லியமான கணிதம் என்பதால் ஹோரை பார்க்கும் போது அந்த இடத்தின் சூரிய உதயம் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டும்.

நீங்கள் மதுரையில் இருந்து, அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாகி, சூரிய உதயம் காலை 6.15 மணி என்றால், அன்றைய முதல் ஹோரையான சூரிய ஹோரை 6.15 முதல் 7.15 வரையிலும், அதனை அடுத்த சுக்கிர ஹோரை 7.15 முதல் 8.15 வரையிலும் அமையும். இதன்படியே மற்ற ஹோரை வரிசைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொதுவாக 6-7 என ஹோரை வரிசையை வைத்துக் கொண்டு, சூரிய உதயத்தை கவனிக்கவில்லை என்றால் மாறானவைகள் நடக்கும். இந்த சூரிய உதய கணக்கு ராகுகாலத்திற்கும் பொருந்தும்.

இன்னும் ஒரு நுணுக்கமாக பகைக் கிரகங்களின் நாளில் வரும் பகை ஹோரைகள் ஒரு மனிதனுக்கு சாதகமான பலன்களைச் செய்வதில்லை. நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் குருவுக்கும், சுக்கிரனுக்கும் சமரசமற்ற கடும் பகை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்காகவே தேவகுரு, அசுரகுரு கதைகள் நமக்கு சொல்லப்பட்டன. அதைப் போலவே இருள் கிரகமான சனிக்கும், ஒளிக் கிரகங்களான சூரிய, சந்திரர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும் நமக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதன்படி வியாழக்கிழமைகளில் வரும் சுக்கிர ஹோரையும், வெள்ளிக் கிழமைகளில் வரும் குரு ஹோரையும் சம்பந்தப்பட்ட மனிதருக்கு பிறந்த ஜாதகப்படி குரு, சுக்கிரனின் வலிமையை பொருத்து, மாறுபாடான பலன்களை செய்யும். அதேபோல சனிக்கிழமைகளில் வரும் சூரிய, சந்திர ஹோரைகளும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வரும் சனி ஹோரையும் நல்ல பலன்களை தருவது இல்லை.

நிறைவாக எந்த ஹோரையில் எதைச் செய்யலாம், ஒரு ஹோரையில் பொதுவாக என்ன நடக்கும் என்பதோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்வோம்.

சூரிய ஹோரை:

சூரியன் அரசாங்கம் மற்றும் தலைமைப் பதவி சம்பந்தப்பட கிரகம் என்பதால் ஒரு அமைச்சர், அரசு அதிகாரி அல்லது உயர்பதவியில் இருப்பவரை சந்தித்து சாதகங்களை பெறுவதற்கு சூரியஹோரை மிகவும் ஏற்றது. தகப்பனார், பூர்வீகம் போன்ற விஷயங்களை செய்தல், பதவி ஏற்பு. தொழில் ஆரம்பித்தல். அரசாங்க ஏலங்களில் பங்கு பெறுதல் போன்றவைகளுக்கு சூரிய ஹோரை ஏற்றது.

சந்திர ஹோரை:

இந்த ஹோரையில் சந்திரனின் அன்றைய நிலையைப் பொருத்து வளர்பிறை, தேய்பிறை என இரண்டு பிரிவுகள் உள்ளன. சந்திரன் மறைகின்ற நாளான முழு அமாவாசையன்று சந்திரஹோரை நல்லபலன்களை தருவது இல்லை. பொதுவாகவே அமாவாசைக்கு முன் 5 நாட்கள் தேய்பிறை சந்திரனாக அவர் இருக்கும் நிலையில் சந்திர ஹோரையைத் தவிர்க்க வேண்டும்.

இதை நீக்கி, சீக்கிரமாகச் செய்து முடிக்கும் விஷயங்களை சந்திர ஹோரையில் செய்வது வெற்றியை தரும். காய்கறி, திரவம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், தாயார் சம்பந்தமான விஷயங்களை தொடங்குதல், கடல்பயணம் போன்றவைகளுக்கு சந்திர ஹோரை ஏற்றது. சந்திரன் பெண்கிரகம் என்பதால் வளர்பிறை சந்திர ஹோரையில் திருமணத்திற்கு பெண் பார்க்க போவது, காதலைச் சொல்வது போன்றவைகளுக்கு சந்திர ஹோரையை உபயோகிக்கலாம்.

செவ்வாய் ஹோரை:

செவ்வாய் ஹோரை கெடுபலன்களை தருகின்ற ஒரு ஹோரையாகும். அதே நேரத்தில் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து நன்மை தருகின்ற அமைப்பில் இருந்தால் செவ்வாய் ஹோரை நல்லவைகளைத் தரும். உங்களின் அனுபவத்தில்தான் பாபக் கிரக ஹோரைகள் நன்மை செய்கிறதா, அல்லது தீமையை கொடுக்கிறதா என்பதைக்  கணிக்க முடியும்.

வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கு செவ்வாய் ஹோரை மிகவும் ஏற்றது. அதே நேரத்தில் கடன் வாங்குவதற்கு இந்த ஹோரை நல்லதல்ல. செவ்வாய் ஹோரையில் ஒருவரிடம் கடன் பெற்றால் அதனை திருப்பி கொடுக்க இயலாமல் போகலாம். முக்கியமாக பயணத்தின் ஆரம்பத்தை செவ்வாய் ஹோரையில் செய்யக் கூடாது. கொடிய விபத்திற்கு செவ்வாய் காரணம் என்பதால் செவ்வாய் மருத்துவமனை சூழல்களை உருவாக்குவார். ரியல் எஸ்டேட், சிகப்பு நிறம், சகோதர சம்பந்தப்பட்டவைகளை இதில் செய்யலாம். ஜாதகத்தில் செவ்வாய் சுபர் எனில் ஆபரேஷன்களை இதில் வைத்துக் கொள்ளலாம்.

புதன் ஹோரை:

புதன் வித்யாக் காரகன் என்பதால் கல்வி சம்பந்தப்பட்ட எதையும் புதன் ஹோரையில் செய்யலாம். தூது அனுப்புவது, தபால் அனுப்புவதை இந்த ஹோரையில் செய்தால் வெற்றி நிச்சயம். எழுத்துக்கும் புதனே காரணம் என்பதால் புத்தகம், எழுத்து, கவிதை, போன்றவைகளை புதன் ஹோரையில் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்க, தொழிலை விரிவாக்கம் செய்ய, தொழில் ஆரம்பிக்க, கடை திறக்க, எந்த வியாபாரமும் செய்ய புதன்ஹோரை ஏற்றது.

குரு ஹோரை:

ஜோதிட சாஸ்திரத்தில் ஹோரைகளின் உச்ச நிலையாக குரு ஹோரை  சொல்லப் படுகிறது. எனவே எதையும் செய்ய இந்த ஹோரை மிகவும் ஏற்றது. வாழ்க்கையின் ஆரம்ப விஷயங்களான கல்வி, வேலை, திருமணம் மற்றும் மனிதருக்கு தேவையான அனைத்தையும் குரு ஹோரையில் செய்யலாம். ஒரு விஷயத்தை குரு ஹோரையில் துவங்கினாலே அது பாதி முடிந்தாற் போல என்பது அனுபவ உண்மை.

சுக்கிர ஹோரை:

காதலைச் சொல்ல ஏற்ற ஹோரை இது. இளைஞர்களுக்கு அதிகம் உபயோகமாக இருக்கும். இளம்பருவத்தில் சுக்கிர ஹோரையில்தான் இளைஞர்கள் உற்சாகமாக இருப்பார்கள். குருவுக்கு நிகரான சுபஹோரை இது. வீடு கட்ட ஆரம்பிப்பது, வாகனம் வாங்குவது, பெண் பார்க்கப் போவதை இந்த ஹோரையில் செய்யலாம். கலை, கன்னிப் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் இந்த ஹோரை ஏற்றது.

சனி ஹோரை:  

செவ்வாயைப் போன்றே இதுவும் ஒரு பாப ஹோரைதான். ஜாதகத்தில் சனி கெடுதல்களைச் செய்யும் நிலையில் இருப்பின் அவரது அனைத்து அம்சங்களும் இந்த ஹோரையில் நடக்கும். ஆயினும் கடனைத் திருப்பித் தர இந்த ஹோரை ஏற்றது. ஆனால் கடன் வாங்கக் கூடாது. உங்களுக்கு எது தேவையில்லை என்றும், எது உங்களுக்கு வரக் கூடாது என்றும் நினைக்கிறீர்களோ அதனை இந்த ஹோரையில் செய்யலாம்.

ஹோரா வரிசையை நினைவில் வைத்து கொள்வது எப்படி?

சென்ற வாரம் ஹோரா வரிசையை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வதற்குரிய ஹோரா சக்கரத்தை வெளியிட்டிருந்தேன். ஆயினும் அது ஓரளவிற்கு ஜோதிடத்தை அறிந்தவர்களுக்கும், ஜோதிடர்களுக்கும் மட்டுமே தெரியும் விதமாக இருந்தது. ஜோதிடத்தை அறியாதவர்கள் கூட ஹோரை வரிசையை நினைவில் கொள்வதற்கு கீழ்காணும் முறையை கடைப்பிடிக்கலாம்.

ஹோரா வரிசை ஒரு சக்கரம் போல ஒன்றன் பின் ஒன்றாக சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் மீண்டும் சூரியன் என்று முடிவில்லாத வட்டம் போல அமையும். இது வளையம் போன்றது என்பதால் முதலில் சனி ஹோரையை ஆரம்பமாக கொண்டு, ஒருநாள் விட்டு ஒருநாள் பின்புறமாக கிழமைகளை நினைவில் வைத்துக் கொண்டால் ஹோரையை சுலபமாக மனதில் நிலை நிறுத்தலாம்.

அதன்படி சனி ஹோரையை ஆரம்பமாக வைத்து கொண்டு, சனிக்கிழமைக்கு ஒருநாள் விட்டு பின்னால் வரும் கிழமையான வியாழனின் ஹோரை சனிக்கு அடுத்ததாக வரும். வியாழனுக்கு ஒரு கிழமை விட்டு பின்னால் வரும் செவ்வாய் அதனை அடுத்ததாக அமையும். செவ்வாய்க்கு ஒரு கிழமை விட்டு பின்னே வரும் ஞாயிற்றுக்கிழமை செவ்வாயை அடுத்த சூரிய ஹோரையாகும்.

ஞாயிறுக்கு பின்னர் ஒருநாள் விட்டு வரும் வெள்ளியின் சுக்கிரன், சூரிய ஹோரைக்கு அடுத்ததாகவும், வெள்ளிக்கு ஒருநாள் விட்டு பின்னே வரும் புதன் சுக்கிர ஹோரைக்கு அடுத்ததாகவும், புதனுக்கு ஒருநாள் பின்னால் வரும் திங்களான சந்திர ஹோரை இறுதியாகவும் அமையும். இந்த முறையை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் ஹோரா வரிசையை மறக்கமால் இருக்க முடியும்.

மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை வேறொரு தலைப்பில் சந்திக்கலாம்.

(27-4-2018 மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

2 thoughts on “ஹோரையின் பலன்கள் – D – 004 – Horaiyin Palangal…

  1. குரு பாதகாதிபதியாகவோ அல்லது 6ல் மறைந்தோ இருந்தாலும் குரு ஹோரை நன்மை செய்யுமா ஐயா?

  2. ஜோதிடம் அறியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ள உதவும் ஹோரை விளக்கம் மிகவும் அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *