adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கிழமைகள் எப்படி உருவாயின..? D – 002 – Kizhamaigal Yeppadi Uruvayina..?
ஞாயிறு, திங்கள், செவ்வாய். புதன், வியாழன், வெள்ளி, சனி. இது கிழமைகளின் வரிசை என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த வரிசையை ஏற்படுத்தியவர்கள் யார்? ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஏன் வியாழக்கிழமை வரவில்லை? செவ்வாய்க்குப் பிறகு புதன் எப்படி வருகிறது? என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேதஜோதிடத்தின் ஆரம்பமே கிட்டத்தட்ட இந்தக் கிழமைகள் உருவான விதத்தில்தான் இருக்கிறது. அதன் பெயர் “ஹோரை”. நாம் முன்னரே அறிந்த ஒரு விஷயம் மேற்கே சென்று, அவர்கள் புதிதாய்க் கண்டுபிடித்தது போல், வேறு ஒரு பெயரிட்டு, பிறகு நமக்கே திரும்ப வரும் நமது தலைவிதிப்படி நாம் ஆங்கிலத்தில் ஹவர் (HOUR) என்று சொல்லும் ஒரு மணி நேரம் கொண்ட காலஅளவிற்கு மூலம், சமஸ்கிருதத்தில் ஹோரா (HORA) என்றும், தமிழில் ஹோரை என்று சொல்லப்படும் இந்த ஜோதிடச் சொல்தான். தான் கண்டுபிடித்ததை பதிவு செய்யத் தவறியதால் இந்திய சமுதாயம் இழந்த பெருமைகள் ஏராளம். அவற்றில் தலையாயது வேத ஜோதிடம். ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க கணிதத்தோடு தொடர்புடையது என்பதை எனது முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். கணிதத்தின் மூல ஆதாரம் பூஜ்யம் “0” என்று சொல்லப்படும் ஒன்றுமில்லாத ஆனால் எல்லாமுமான ஒன்று. பூஜ்யம் இல்லையேல் கணிதம் இல்லவே இல்லை. இந்த பூஜ்யத்தை கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்..! முடிவற்ற எண்களுக்குள் பிரபஞ்சம் பற்றிய ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று இன்றைய விஞ்ஞானிகள் சந்தேகிப்பதை அன்றே இந்திய ஜோதிடம் சொன்னது. கலிலியோவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இங்கே பிறந்த வானியல் ஞானி ஆரியபட்டர் “சூரியன் நிலையானது. மற்றவைகள் அதனைச் சுற்றி வருகின்றன” என்று சொல்லியிருக்கிறார். இது உண்மைதான் என்று இன்றைய விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டாலும் கண்டுபிடித்தது என்னவோ கலிலியோ என்றுதானே படித்துக் கொண்டிருக்கிறோம்? உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனித சமுதாயம், தான் கண்டுபிடித்ததை பதிவு செய்து கொண்டிருந்த போது இந்தியர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? இடையறாது நடந்து கொண்டிருந்த யுத்தங்களால், நாளை உயிருடன் இருப்பது நிச்சயமில்லாத அக்காலச் சூழ்நிலையில், தான் அறிந்து கொண்டது எதிரிக்கு தெரியக் கூடாது என்ற காரணத்திற்காக, பதிவு செய்யாமல் மனப்பாட முறையில் சொல்லிக் கொடுக்கும் முறை அக்காலத்தில் பின்பற்றப்பட்டது. அதன்படி தான் அறிந்தது முதலில் தன் சந்ததிக்கு, அதாவது தன் மகன், பேரன் போன்ற வாரிசிற்கு மட்டும் மனப்பாட முறையில், பிறருக்குத் தெரியாமல், வாய்மொழியால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. சந்ததிகள் பெருகி குழுக்களாயின. குழுக்கள் பெருகி இனங்களாகும்போது ஒரு உண்மையைப் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொண்ட இனம், தன் இனத்துக்குள் மட்டுமே அதனைப் பகிர்ந்து கொண்டது. பதிவு செய்யும் வழக்கம் இல்லாமல் போனதால் ஜோதிடத்தை கண்டுபிடித்தது பாபிலோனியர்கள் என்று இங்குள்ளவர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிடம் இந்தியாவில்தான் தோன்றியது என்பதற்கு ஏரளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் “ஹோரை” என்று தமிழிலும், “ஹோரா” என்று சம்ஸ்கிருதத்திலும் சொல்லப்படும் ஒரு மணி நேரம் கொண்ட ஒரு கால அளவுப் பகுதி !. இந்த ஹோராவிலிருந்து தான் இன்றைய ஹவர் எனும் ஆங்கிலச் சொல் பிறந்தது என்பதே இதனை நிரூபிக்கும். சரி... இந்த ஹோரை எப்படி உருவானது? ஹோரை என்பது பழந்தமிழ் வழக்கப்படி இரண்டரை நாழிகை எனப்படும் (ஒரு நாழிகை – 24 நிமிடம்) அறுபது நிமிடம் கொண்ட ஒரு கால அளவு. எல்லையற்ற இந்த பிரபஞ்சம் உருவான போது, பிறந்த இந்தக் காலத்தை, நம்மை இயக்கும் கிரகங்கள் பகுதிபகுதியாக பிரித்து ஒரு மணி நேரத்திற்கு ஒன்றாக ஆளுமை செய்வதை அறிந்த நம் ஞானிகள், நாமும், நம் பூமியும் உருவாகக் காரணமாக இருக்கும் சூரியனின் ஆளுமை நேரத்தை முதன்மையாக கொண்டே பூமியில் காலத்தின் துவக்கத்தை பகுத்தார்கள். ஒவ்வொரு மணி நேரத்தையும் அதாவது ஒவ்வொரு ஹோரையையும் தனித்தனியே, ஒவ்வொரு கிரகமும் ஆட்சி செய்வதை நமது ஞானிகள் அறிந்து அதை வரிசைப்படுத்திய போது அது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என அமைந்தது. இந்த வரிசையில் சூரியன் என்பதை பூமி என மாற்றி (பூமி மையக் கோட்பாட்டின் படி ) பூமியை நடுவில் நிறுத்தினால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான உட்சுற்றுக் கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன் ஒருபுறமும். வெளிச் சுற்றுக் கிரகங்களான செவ்வாய், குரு, சனி ஒருபுறமும் அமையும். இந்த வரிசை தோன்றிய காரணத்தை இன்னும் சற்று விரிவாக, ஒரு கோள் தனது மையத்தை சுற்றிவரும் நாட்களின் அடிப்படையிலும் விளக்கலாம். அதன்படி பூமியை 27 நாட்களில் சுற்றி வரும் சந்திரன் முதலாவதாகவும், தனது மையமான சூரியனை 88 நாட்களில் சுற்றி வரும் புதன் இரண்டாவதாகவும், அதனையடுத்து 225 நாட்களில் தனது மையத்தை சுற்றும் சுக்கிரன் 3-வதாகவும் அமைந்தன. ஜோதிடத்தின் சில நிலைகளில் சூரியன் என்பதை பூமி என்று மாற்றிப் புரிந்து கொண்டால் சில சூட்சுமங்களை உணர முடியும் என்பதன்படி இங்கே சூரியனை 365 நாட்களில் பூமி சுற்றி வருவதால், பூமிக்கு பதிலாக சூரியன் என்று எடுத்து கொண்டு (பூமி மையக் கோட்பாட்டின்படி} அதனை 4-வதாகவும், அடுத்து பூமிக்கு வெளிச்சுற்றுக் கிரகங்களான முறையே செவ்வாய், குரு, சனி ஆகியோர் தலா சூரியனை சுற்றி வரும் காலமான ஒன்றரை, பதிமூன்று, முப்பது ஆண்டுகால நாட்களை எடுத்துக் கொண்டு ஹோரா வரிசைகள் அமைந்தன. இதன்படி காலத்தின் மீது ஈர்ப்பு விசையினைக் கொண்டு, கிரகங்களின் ஆளுமை வரிசை அமைந்ததை உணர்ந்த நமது ஞானிகள், நமது எல்லா ஈர்ப்பு விசைகளுக்கும் தலைவனான சூரியனின் முதல் ஆளுமை ஹோரை நேரத்தை அவனது பெயரிலேயே ஞாயிற்றுக் கிழமையாக்கி ஏழு கிரகங்கள் அடங்கிய வாரம் என்ற மொத்தக் கிழமைகளின் அமைப்பை உருவாக்கினார்கள். ஈர்ப்பு விசை உள்ள நிஜக் கிரகங்கள் மட்டுமே காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஜோதிடத்தின் மீதி இரண்டு கிரகங்களான ராகு, கேதுக்கள் வெறும் நிழல்கள் மட்டும்தான். இவைகள் கல், மண், வாயு போன்ற பருப்பொருள் இல்லாதவை என்பதால் இவற்றிற்கு ஈர்ப்பு விசை கிடையாது. எனவே கிழமைகளில் இவற்றிற்கு இடம் கிடையாது. ராகு,கேதுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்திருப்பின் நமது கிழமைகளின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்திருக்கும். அதேபோல தூரத்தில் இருப்பதால் ஒளி மற்றும் ஈர்ப்பு விசை பூமியை பாதிக்கவில்லை என்ற முறையில் யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கும் இந்திய ஜோதிடத்தில் இடம் இல்லை. சரி, சூரியனை முதன்மையாக வைத்து ஞாயிற்றுக்கிழமையை துவங்கியாகி விட்டது, அடுத்து திங்கள்கிழமை என்பது எப்படி வந்தது? ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தின் முதல் ஒரு மணிநேரம் கதிரவனின் ஆதிக்கத்தில் சூரிய ஹோரையாக ஆரம்பிப்பதால், அதனையடுத்து மேலே சொன்ன ஹோரை வரிசைப்படி அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களையும் மறுநாள் சூரிய உதயம் வரை சுக்கிர ஹோரை, புதன் ஹோரை, சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசைப்படுத்தினால், மறுநாள் ஆதவன் உதிக்கும் போது சந்திர ஹோரை உதயமாவதைக் கண்டு அன்று திங்கட்கிழமை ஆனது. மீண்டும் திங்கட்கிழமை சூரிய உதயத்திற்குப் பின் சந்திர ஹோரை துவங்கி சனி, குரு, செவ்வாய் என தொடர்ந்து அடுத்த நாள் காலை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஹோரை ஆரம்பித்தால் அது செவ்வாய்கிழமை ஆனது. இதன்படியே அடுத்து புதன், வியாழன், வெள்ளி மற்றும் இறுதிக் கிழமையான சனிக்கிழமை அமைந்தது. நமது வாரம் அமைந்த விதம் இதுதான். இந்த அமைப்பின் கடைசி நாளான சனிக்கிழமையின் முதல் ஹோரை, சனியாக ஆரம்பித்து, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் சூரிய ஹோரையாக, ஒரு வளையம் போன்ற அமைப்பில் சக்கரச் சுற்றுப் போல முடிவது விளக்க முடியாத ஒரு அற்புதம். இந்த ஒரு வட்ட அமைப்பினால்தான் நாளும் கிழமையும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து, காலம் என்றாகி, நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. கிழமைகளின் வரிசையைப் பார்த்தால், ஒன்று நமது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான உட்சுற்றுக் கிரகத்தின் கிழமையாகவும் அதனையடுத்தது நமக்கும் சனிக்கும் இடையிலான வெளிசுற்றுக் கிரகத்தின் கிழமையாகயும் வரும். அதாவது, ஞாயிறை அடுத்த திங்களின் நாயகன் சந்திரன் நமக்கும் சூரியனுக்கும் நடுவே உள்ள உட்சுற்று கிரகம். அடுத்த செவ்வாய் நமக்கு அடுத்தபுறம் உள்ளது. புதன் நமக்கு உட்புறம் இருக்கும். குரு, செவ்வாய்க்கு அடுத்த வெளிப்புறக் கோள். அடுத்த சுக்கிரன் சூரியன் அருகில் உள்ள உள்சுற்று கிரகம். சனி வெகு தொலைவில் உள்ள வெளிச்சுற்று கிரகம். ஹோரை பற்றிய இன்னும் சில நுணுக்கங்களை அடுத்த வெள்ளி தொடருவோம். ஹோரை வரிசையை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி? ஜோதிடம் பற்றி ஓரளவிற்கு அறிந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோரா சக்கரத்தை நினைவில் வைத்து கொள்வதன் மூலம் ஹோரைகளின் வரிசைகளை சுலபமாக நினைவுபடுத்திக் கொள்ள முடியும். ஞாபகப்படுத்திக் கொள்ள வசதியாக பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகியவற்றை உச்ச வீடுகளில் நிறுத்தி, சுபக்கிரகங்களான சுக்கிரன், புதன், சந்திரன், குரு ஆகிவற்றை ஆட்சி வீடுகளில் அமைத்த, கீழ்க்காணும் ராசி கட்டத்தினை நினைவில் வைத்துக் கொண்டால் அடுத்தடுத்த கிரக ஹோரை வரிசைகளை உடனடியாக நினைவில் கொள்ள முடியும். கூடவே 6-1-8-3 என்ற எண்களையும் நினைவில் கொள்ளலாம். அதாவது ஒரு நாளின் துவக்கத்தில் சுமார் காலை ஆறுமணிக்கு அந்தக் கிழமையின் பெயரில் துவங்கும் ஹோரை மீண்டும் மதியம் ஒரு மணிக்கும், இரவு எட்டு மணிக்கும், அதிகாலை மூன்று மணிக்கும் திரும்பத் திரும்ப வரும். (13-4-2018 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது ) தொடர்பு எண்கள். செல்.8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888 குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *