கேள்வி:
காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆசையில் இரண்டு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்து விட்டேன். எனக்கு போலீசில் சேர ஜாதக அமைப்பு இருக்கிறதா? அல்லது தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? நிரந்தர வேலை இல்லாததால் அனைவரும் ஏளனம் செய்கிறார்கள். பதில் தர வேண்டுகிறேன்.
பதில்:
ல,சூ பு,கே | |||
19-6-1991 காலை 6.18 திருக்கோவிலூர் | சு,குரு செவ் | ||
சனி | |||
ரா | சந் |
காவல்துறையில் பணி செய்ய வைக்கும் கிரகமான செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் நீசமடைந்து இருந்தாலும், அங்கே சுபர்களான சுக்கிரன், குருவோடு இணைந்து நீசபங்க ராஜயோக அமைப்பிலும், நவாம்சத்தில் உச்சம் பெற்றும் இருப்பதால் உங்களுக்கு உறுதியாக காவல்துறையில் வேலை கிடைக்கும். மனம் தளர வேண்டாம். முயற்சிகளையும் கைவிடவேண்டாம். 2019-ம் ஆண்டு பிற்பகுதியில் வேலையில் சேர முடியும் என்பதால் முயற்சிகளை தொடரவும்.
பிரகதாம்பாள், சாலிகிராமம்.
கேள்வி:
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை யோகம் செய்யாது என்று கூறி உள்ளீர்கள். அது அனைவருக்கும் பொருந்துமா? அல்லது சுக்கிரன் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடுமா? ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் நாம் பார்க்கும் கடிகாரத்தில் நேரம் ஸ்லோவாகவோ அல்லது பாஸ்டாகவோ ஓடியிருக்கலாம் அல்லவா? அப்போது பிறந்த நேரம் தவறாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கும் பட்சத்தில் நமது ஜாதகம் சரியானதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
பதில்:
ஜோதிடமே விதிகளுக்குள் விதிகள் அமைந்த அமைப்புதான். இங்கே விதிகளை விட விதிவிலக்கையும், முரண்பாடுகளையும் புரிந்து கொள்ள முடிபவர்களுக்குத்தான் முழுமையாக ஜோதிடம் கைவரும்.
ஒரு லக்னத்தின் ஆறு மற்றும் எட்டுக்குடையவர்கள் பாபிகள் எனப்படும் யோகம் தராதவர்களாக வேத ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இது ஒரு முக்கிய விதி என்றாலும் சில நிலைகளில் ஆறு, எட்டுக்குடையவர்கள் அந்த லக்னத்தின் அதிபதிக்கு நண்பர்களாக இருக்கும் பட்சத்திலும், மேற்சொன்ன வீடுகளுக்கு பலம் தராத வகையில் இருக்கும்போதும் கெடுதல்களைச் செய்யாமல் ஆறு, எட்டாம் பாவங்களின் சுப விஷயங்களான நல்லவேலை, வெளிநாடு அமைப்பு போன்றவைகளைத் தருவார்கள் என்பது அதற்குள் இருக்கும் துணை விதி.
நீங்கள் கேட்கும் தனுசு லக்ன விஷயத்தில் அதன் அதிபதியான குருபகவானுக்கு நேர் எதிர் அமைப்பு உள்ளவராக சுக்கிரன் ஜோதிடத்தில் சுட்டிக் காட்டப்படுகிறார். ஆகவே தனுசில் பிறந்த ஒருவருக்கு சுக்கிர தசையில் யோகங்கள் இருக்காது. மாறாக கடன், நோய், வழக்கு, போன்ற சிக்கல்கள் இருக்கும். அதேநேரத்தில் சுக்கிரன் ஆறாமிடத்திற்கு அதிபதியாக வந்தாலும், இன்னொரு வீடான பதினொன்றிற்கும் அவரே அதிபதி என்பதால் சில நிலைகளில் ஆறாமிடத்தோடு தொடர்பு கொள்ளாமல் பதினொன்றோடு மட்டும் தொடர்பு கொள்ளும் நிலைகளில் கெடுபலன்கள் இல்லாமல் நற்பலன் இருக்கும்.
சுக்கிரன் ஆறாம் வீட்டில் இல்லாமல், அந்த இடத்திற்கு ஆறில் மறைந்து, தனது மூலத் திரிகோண வீடான பதினொன்றில், தனுசு லக்னத்தின் யோகாதிபதிகளான செவ்வாய், குருவின் சித்திரை அல்லது விசாகம் நட்சத்தில் இருக்கும் நிலையில் சில நன்மைகளைச் செய்வார். சுவாதியில் இருந்தால் நட்சத்திர நாதனான ராகு ஜாதகத்தில் சுபத்துவ அமைப்பில் இருக்கும் போது நன்மைகள் இருக்கும்.
இதையே வேறுவிதமாக சொல்லப் போனால் சுக்கிரன் தன் ஆறாம் வீட்டிற்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களில் மறையும்போது கெடுதல்கள் இருக்காது. இதில் ஆறுக்கு எட்டான லக்னம் அவருக்கு எதிரியின் வீடு, ஆறுக்கு பனிரெண்டான ஐந்தும் அவருக்கு ஆகாத வீடு, ஆறுக்கு ஆறான பதினொன்று அவரது ஆட்சி வீடு என்பதால் அங்கே இருக்கும்போது தீமைகளை குறைத்துக் கொண்டு ஓரளவிற்கு நன்மைகளை தருவார்.
என்னதான் இருந்தாலும் சுக்கிர தசையின் காலமான இருபது வருடங்களில் ஒரு பத்து வருடங்களுக்கு சுக்கிரன் ஆறாம் வீட்டின் சாதகமற்ற பலன்களையே தருவார். முதல் பத்தா அல்லது பிற்பகுதி பத்து வருடங்களா என்பது சுக்கிரனின் அமைப்பை பொருத்தது.
குழந்தை பிறக்கும்போது பார்க்கும் கடிகாரம் தவறாக இருந்தால் பிறந்த நேரம் தவறாகத்தானே செய்யும்.. முக்கியமாக ஒரு லக்னமோ, ராசியோ முடிவடையும் லக்னசந்தி, ராசி சந்தி என்று சொல்லப்படும் நேரங்களில் பிறக்கும் குழந்தைகளின் நேரம் தவறானால் பெரிய குழப்பமும், தவறும் ஏற்படும். அந்தக் குழந்தைக்கு சொல்லும் பலன்களும் சரியாக இருக்காது. நேரம் தவறாக இருந்தாலும், ஒரு அனுபவமுள்ள ஜோதிடரால் அந்த நபரின் குணங்களையும் அவருக்கு ஏற்கனவே நடந்த சம்பவங்களையும் வைத்து நேரத்தை கிட்டத்தட்ட சரி செய்ய முடியும். ஜோதிடரின் ஞானத்தையும், அனுபவத்தையும் பொருத்தது இது.
எஸ். அஜ்மீர் சிக்கந்தர், திருப்பரங்குன்றம்.
கேள்வி:
கடந்த சில வருடங்களாக மிகவும் கஷ்டப்படுகிறேன். சொந்தமாக ரெடிமேட் கடை நடத்தி வருகிறேன். வியாபாரம் மிகவும் நலிவடைந்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முன்னேற்றமே இல்லை. கடன்சுமை அதிகமாகி கொண்டே போகிறது. வாங்கிய கடனை அடைக்கவும் முடியவில்லை. வியாபாரமும் விருத்தி இல்லை. தொடர்ந்து இந்த தொழிலை நடத்தலாமா? அல்லது வேலைக்கு போகலாமா? என்று எனக்கு நல்லதொரு முன்னேற்றப் பாதையைக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
தேதியைக் குறிப்பிட்ட நீங்கள் பிறந்த நேரம் அனுப்பாததால் உங்களுடைய கேள்விக்கு என்னால் துல்லியமான பதில் தர முடியவில்லை. நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்திருப்பதால் 40 வயதிற்குட்பட்ட எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் அவருடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார் போல நன்றாக இல்லை என்று நான் அடிக்கடி எழுதி வருவதைபோல 2012-ம் ஆண்டு முதல் நீங்களும் நன்றாக இல்லை.
2018-ம் ஆண்டு முதல் விருச்சிகத்தினர் அனைவருக்குமே விடிவு காலம் பிறந்திருக்கிறது. இந்த வருடத்தில் இருந்து நிச்சயமாக படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். தொழிலைக் கைவிட வேண்டாம். ஊக்கத்துடன், அக்கறையுடன் கடையைக் கவனியுங்கள். இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து கடனை அடைக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதாரம் உயரும். 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கடன் தொல்லை இன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.
கா. தேசிகன் குத்தாலம்.
கேள்வி:
ஒரே மகளுக்கு ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் வேலை செய்ய வாய்ப்பு வந்து தனியாக எப்படி அனுப்ப முடியும் என்று மறுத்து விட்டோம். இப்போது மீண்டும் வாய்ப்பு வந்துள்ளது. போய்த்தான் தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். திருமணம் செய்ய மறுக்கிறாள். என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. அவள் ஜாதகப்படி வெளிநாடு அமைப்பு இல்லை என்று இங்குள்ள ஜோதிடர் சொல்கிறார். உங்கள் பதிலை வைத்து முடிவெடுக்க காத்திருக்கிறோம்.
பதில்:
மகளுக்கு மீன லக்னமாகி லக்னாதிபதி குருவும் சுக்கிரனும் எட்டில் சுபத்துவமாக இருக்கும் நிலையில் சுக்கிர தசையும் நடப்பது வெளிநாட்டிற்குச் செல்லும் அமைப்பு. இந்த வருடம் மே மாதத்திற்குப் பிறகு கிழக்கில் உள்ள ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவள் வேலை செய்வாள். ஜாதகப்படி இவள் வெளிநாட்டில் செட்டில் ஆவாள். திருமணம் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே நடக்கும்.
பெண்கள் ஏன் என்னைக் கவனிக்கிறது இல்லை?
குணசிங்கம் டிலோசன், மட்டக்களப்பு.
கேள்வி:
இது எனது யாதகம். எண்ட வயதான பொடியனுகள் எல்லோரும் சந்தோஷமா இருக்கானுகள். ஆனால் நான் பட்டுக் கொண்டு இருக்கும் துன்பம் அதிகம். கடனுக்கு மேல் கடன் வாங்கி நிம்மதி இல்லை. இந்த வயதில் எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? பெண்கள் யாரும் என்னை கவனிக்கிறது இல்லை. பெண்களுக்கு என்னை ஏன் பிடிக்குது இல்லை? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? நான் அதிர்ஷ்டம் இல்லாதவனா? இங்கட சாஸ்திரிகள் எனக்கு இரண்டு திருமணம் என்பது உண்மையா?
பதில்:
செவ் | கே | ||
4-8-1992 மாலை 4.30 மட்டக்களப்பு | சூ பு | ||
சனி | சுக் குரு | ||
ல ரா | சந் |
மிக முக்கிய பருவமான பதினெட்டு வயதில் உனக்கு ஆரம்பித்த ஏழரைச்சனி சில வாரங்களுக்கு முன்தான் விலகியிருக்கிறது. ஏழரைச்சனி நேரத்தில் இளைஞர்களுக்கு எதிர்மறை அனுபவங்களும், தாழ்வு மனப்பான்மையும் வருவது இயல்புதான். அதுதான் இப்போது உனக்கு வந்திருக்கிறது.
சனி நடக்கும்போது ஒரு இளைஞனுக்கு அவன் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டியதற்கான அனுபவங்கள் கிடைக்கும் என்பது ஜோதிட பாடம். அதன்படி கடந்த காலங்களில் உனக்கு ஏற்பட்ட தாளமுடியாத கடன் சுமையின் மூலம் பணத்தின் அருமையும், உறவுகள் மற்றும் நட்புகளின் உண்மைக் குணமும் புரிய வைக்கப்பட்டிருக்கும்.
கடிதத்தில் என்னுடைய வயதையொத்த நண்பர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் நான் மட்டும் சரியாக இல்லை என்று புலம்பியிருக்கிறாய். வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் இப்போதைக்கு உன்னை அவர்கள் முந்தி விட்டார்கள் என்பது போன்ற தோற்றம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் களைப்பால் சுணங்கும் போது அவர்களைத் தாண்டி செல்லக்கூடிய யோக ஜாதகம் உன்னுடையது. எனவே இது போன்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதே.
எந்த ஒரு பெண்ணும் அழகைப் பார்த்து ஆணை விரும்புவது இல்லை. இவன் நல்லவனா, என்னையும் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வானா என்பதை உள்மனதில் உணர்ந்த பின்பே அவனைக் காதலிக்க ஆரம்பிப்பாள். தன்னையே நம்பாத தாழ்வு மனப்பான்மையுள்ள கோழையை எந்தப் பெண் ஏறெடுத்துப் பார்ப்பாள்? முதலில் சனியால் வந்த தாழ்வு மனப்பான்மையை ஒழித்துக் கட்டு.
சனி முடிந்து விட்டதால் இந்த வருடத்தில் இருந்து கடன்கள் அடைபடும் அளவிற்கு நன்றாக சம்பாதிக்கப் போகிறாய். இன்னும் இரண்டு வருடத்தில் இலங்கையில் உள்ள அத்தனை பெண்களும் என்னைப் பார்க்க ஏங்கும் அளவிற்கு சம்பாதிப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு செயல்படு. உன்னால் முடியும். இனி நீ சாதிப்பாய்.
லக்னாதிபதி குரு லக்னத்தை வலுப் பெற்றுப் பார்த்து, குருவின் தசையும் நடக்கும் நல்ல ஜாதகம் உன்னுடையது. நல்ல பையனாகவும் இருப்பாய். உனக்கானவள் வரும் ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு உனக்கு அடையாளம் காட்டப்படுவாள். அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் குருதசை, சுக்கிரபுக்தியில் இருந்து நல்ல மனைவி, உன் வருமானத்தில் சொந்த வீடு, நல்ல வாகனம் என நன்றாக வாழ்வாய். குருதசை சூரிய புக்தி காலமான 2021 முதல் உன்னுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சூரியன் எட்டாமிடமான கடகத்தில் இருப்பதால் அப்போது இருக்கும் இடம் மாறுவாய். உனக்கு இரண்டு திருமண அமைப்பு இல்லை. வாழ்த்துக்கள்.
உங்கள் பதில்கள் எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளன். எப்பேர்ப்படட கஷடத்துக்கும் விடிவு உண்டு என கூறும் உங்களுக்கு என் வணக்கங்கள்.