adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 172 (30.1.18)

ம. சிவஷத்தியானந்தா நாகர்கோவில்.

கேள்வி:

கடின முயற்சியுடன் ஓவியம் பயின்று வருகிறேன். எழுதுவதிலும் ஆர்வம் இருக்கிறது. இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். மூன்றாவது புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன். ஓவியம் மற்றும் எழுத்துத் துறையில் வெற்றி பெற்று பேரும் புகழும் அடைய முடியுமா?

பதில்:
ரா
3-2-1984 அதிகாலை 1.40 நாகர்கோவில்
சந் சூ
சு,பு குரு  ல கே சனி செவ்

எழுத்து, ஓவியம் போன்ற கலைகளை ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாமிடம் குறிப்பிடுகிறது. உங்கள் ஜாதகப்படி லக்னத்திற்கு மூன்றுக்குடைய சனி உச்சம், ராசிக்கு மூன்றுக்குடைய குரு ஆட்சி என்பதால் உங்களுக்கு இவை இரண்டிலும் ஆர்வம் இருக்கிறது.

தற்போது நடைபெறும் ராசிக்கு மூன்றுக்குடைய குருவின் தசைக்கு அடுத்து 2022 முதல் லக்னத்திற்கு மூன்றுக்குடைய சனியின் தசை நடக்க இருப்பதால் நீங்கள் விரும்பிய மேற்கண்ட துறைகளில்தான் உங்கள் ஜீவனம் அமையும். ஆனால் பெயர், புகழ் பெறுவது என்பது லக்னாதிபதியின் வலுவைப் பொருத்தது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய், சனியுடன் இணைந்து பனிரெண்டில் மறைந்திருக்கிறார். எனவே நாற்பது வயதிற்கு மேல் ஓரளவு வெளித் தெரியும் அளவிற்கு இருப்பீர்கள்.

சி. ராமலிங்கம் அம்பாசமுத்திரம்

கேள்வி

ஜோதிட சூரியனே.. என்னை போன்ற சிற்றறிவாளருக்கும் சூட்சுமங்களை எளியமுறையில் புரிய வைக்கும் குருநாதரே.. தங்களின் ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளைத் திரும்பத் திரும்பப் படித்தும் இன்னும் மாணவனாகத்தான் இருக்கிறேன். ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியுமா? பலன் சொல்ல வருமா? அடுத்து வரும் புதன் தசையில் கடன்களை அடைக்க முடியுமா? எனக்கு வாரிசு இல்லாததால் என் வீட்டை தங்கைக்குத் தரலாமா? அவர்கள் கடைசிவரை என்னை ஆதரிப்பார்களா? தனித்து இயங்கும் அளவிற்கு இடமாற்றம் தொழில்மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா? என் கடவுளின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

பதில்:

சந்திரனும் புதனும் இணைந்திருப்பதால் உங்களால் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். புதன் தசையில் ஜோதிடம் சித்திக்கும். அதுவரை இன்னும் படியுங்கள். அருகில் இருக்கும் நல்ல அனுபவமுள்ள ஜோதிடரை நேரில் அணுகி குருநாதராக ஏற்று இன்னும் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரும் என்னைப் போல சுயம்புவாக இருக்க முடியாது. என்னைப் போன்ற ஜோதிடப் பைத்தியங்கள் விதிவிலக்கு.

வாக்குஸ்தானம் வலுவாக உள்ளதால் உங்களுக்கு ஜோதிடபலன் சொல்ல வரும். சனிதசை முடிந்ததும் வாழ்க்கையில் இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். இப்போது அல்ல. சிம்ம லக்னத்திற்கு சனி நன்மைகளைச் செய்ய மாட்டார். புதன் தசையில் கடனை சுத்தமாக அடைக்க முடியும். கடன், நோயைத் தருபவரான சனியின் தசை வரைக்கும்தான் நீங்கள் கடன்காரன். வீட்டை தங்கைக்குத் தாராளமாகத் தரலாம். ஆனால் உங்கள் காலத்திற்குப் பிறகுதான் தர வேண்டும். உயிருடன் இருக்கும்போதே வேண்டாம். கடைசிவரை தங்கையின் வீடு உங்களை ஆதரிக்கும்.

மா. ஜெயகெளரி, விருத்தாசலம்

கேள்வி:

இரண்டு மகன்களின் குடிப்பழக்கத்தாலும் குடும்பம் சிதறுண்டு போய் விட்டது. நானும் கணவரும் உயிருடன் நடைபிணமாகத்தான் இருக்கிறோம். மருமகள்களால் தினம் தினம் அவமானப்படுகிறோம். பேரன் பேத்திகளை பார்க்க சகிக்கவில்லை. சம்பந்திகளால் ஒரு பொதுஇடத்தில் படும் அவமானத்தால் இவர் கூனிக்குறுகிப் போகிறார். எங்களுக்கு ஏன் இந்த நிலை? மகன்கள் திருந்துவார்களா? குடும்பம் மீண்டும் தலைஎடுக்குமா? எங்கள் பேரன், பேத்திகளை இந்த வயதான காலத்தில் சந்தோஷமாக பார்க்க முடியுமா?

பதில்:

மூத்தவன் ஜாதகத்தில் சனி முற்றிலும் பாபத்துவம் பெற்று அஷ்டமாதிபதி தசை  நடப்பதாலும், ஜாதகம் முழுமையும் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதாலும், பெரியவன் குடிப்பழக்கத்தில் இருந்து மீளுவதற்கு வாய்ப்பு இல்லை. இளைய மகனுக்கு 2021ம் ஆண்டிலிருந்து யோகாதிபதி குருவின் தசை ஆரம்பிக்க உள்ளதால் அவர் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மதுவை விடுவார், மகன்களுடைய குடும்ப ஜாதகங்களை அனுப்பதாதல் பேரன் பேத்திகளைப் பற்றி சொல்ல முடியவில்லை. ஆயினும் இரண்டு மகன்களின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் வலுவாக உள்ளதால் உங்கள் வம்சம் நன்றாகவே இருக்கும்.

குடுகுடுப்பைக்காரன் சொன்னது உண்மையா?

எஸ். செந்தில்பாண்டி மதுரை-16

கேள்வி:

அலுவலகத்தில் வேலை செய்யும் எத்தனையோ பெண்கள் என்னை விரும்பிய போதும் அம்மா பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்த நான் ஒரு கட்டப் பஞ்சாயத்துக் குடும்பத்தில் போய் மாட்டிக் கொண்டேன். மாப்பிள்ளை அழைப்பில் தேங்காய் அழுகி விட்டது. தாலி கட்டும்போது மணப்பெண் ஜடையைக் கவனிக்காமல் முதல்முடிச்சு போட்டதால் அவிழ்த்துவிட்டு மறுபடியும் வேறு முடிச்சு போட்டேன். மறுவீடு போனபோது எதிர்வீட்டில் சாவு விழுந்து விட்டது.

எட்டாவது மாதத்தில் கோபித்துக் கொண்டு போன மனைவி, சபையில் பஞ்சாயத்து பேசியபோது கைகலப்பாகி எனக்கு சாதகமாக சொன்னதால் அவள் குடும்பத்தால் கை விடப்பட்டு நடுத்தெருவில் நின்றபோது அரைகுறை மனதுடன் இருந்த என்னை என் அம்மா சமாதானப்படுத்தி அவளை ஏற்க வைத்தார்கள். அன்றோடு அவளது பிறந்த வீட்டுத் தொடர்பு முடிந்து விட்டது. நாங்களே வளைகாப்பு, பிரசவம் பார்த்தும் புண்ணியவதி நன்றி இல்லாமல் இருக்கிறாள். என் தாய், தந்தைக்கும் மரியாதை தருவது இல்லை. அவளது பேச்சால் என்னைச் சுற்றி எல்லோரும் பகையாகி விட்டனர். மகன் பிறந்த பிறகு உருவான இரண்டு கருக்களை என் குறைந்த வருமானம் கருதி சிதைவு எனும் பாதகத்தை செய்து விட்டேன்.

கடந்த மூன்று வருடங்களுக்குள் என் குடும்பத்தில் மகன், தாய், தந்தை என நான்கு ஆபரேஷன் நடந்து செலவுமேல் செலவு செய்துவிட்டேன். ஐந்தாவதாக மனைவி மார்பக டியூமர் ஆபரேஷனுக்காக காத்திருக்கிறாள். அலுவலகத்தில் உதவி என்ற பெயரில் எல்லோரிடமும் பிச்சை எடுத்து விட்டேன். இந்த வயதிலேயே பாதி முடி நரைத்து விட்டது. மனைவி வீட்டுவழியில் யாரோ எனக்கு ஏதோ செய்து விட்டார்கள் என்று வாசலில் வந்த குடுகுடுப்பைக்காரன் சொன்னான். சமீபகாலமாக தாய், தந்தையையும் வெறுக்கிறேன். அதனால் குடுகுடுப்பை சொன்னது உண்மையோ என்று பயமாக உள்ளது.

எனக்கு சனிதசை நடப்பதால் இப்படியா? ஒருமுறை பாதகாதிபதி தசையில் அஷ்டமாதிபதி புக்தியில் ------- நடக்கலாம் என்று நீங்கள் எழுதியதைப் போல எனக்கும் நடந்து விடுமா? என் மகனுக்காக ஒரு சேமிப்பும் இல்லாத நிலையில் என் அலுவலகமும் ஓட்டை விழுந்த கப்பல் போல மோசமாகிக் கொண்டே வருகிறது. இத்தனைக்கும் நடுவில் எனது மகனுக்காவே நான் வாழ்கிறேன். மன்னிக்கவும் குருஜி. உங்களிடம் என்ன கேள்வி கேட்டு தெளிவு பெறுவது என்று கூட புரியவில்லை.

பதில்:
பு சந்
சூ,கே செவ் கணவன் 7-3-1979 காலை 11.00 மதுரை  குரு
சு சனி ரா

செந்தில்பாண்டி.... பிரச்னைகள் வரும்போது ஒரு மனிதன் அதனை எப்படி எதிர் கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் அவனது எதிர்காலம் அமைகிறது. நம்மில் பெரும்பாலோர் கஷ்டங்களுக்கான காரணங்களை அடுத்தவர் மீது போட்டு தப்பித்துக் கொள்வதிலேயே இருக்கிறோமே தவிர நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசிப்பதே இல்லை. உங்களின் கஷ்டங்களை இத்தனை அழகாக கோர்வையாக எழுத முடிந்த நீங்கள் கூட, அனைத்திற்கும் காரணம் அழுகிய தேங்காயும், மாற்றிப்போட்ட முடிச்சும் குடுகுடுப்பைக்காரனும் என்றுதானே நினைக்கிறீர்கள்?

மணமாகி எட்டு மாதத்தில் கோபித்துக் கொண்டு போய், நடந்த பஞ்சாயத்தில் உங்களை விட்டுக் கொடுக்காமல் பேசி தாய் வீட்டைத் தொலைத்த ஒரு பொக்கிஷம் உங்கள் மனைவி என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள் என்றால் இத்தனை நீள கடிதம் எனக்கு எழுதியிருக்க மாட்டீர்கள்.

உங்கள் மகனை வயிற்றில் வைத்திருந்தவளுக்கு, நீங்கள் வளைகாப்பு செய்து பிரசவம் பார்த்ததற்கு அவள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றால், இத்தனைக்கும் நடுவில் மகனுக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று தனியாக அடிக்கோடிட்டு எழுதியிருக்கிறீர்களே, அந்த மகனை பெற்றுத் தந்ததற்கு உங்கள் மனைவி உங்களிடமிருந்து எத்தகைய நன்றியை எதிர்பார்க்க வேண்டும்? என்ன செய்ய முடியும் உங்களால்?

வாழ்க்கை எனும் படகில் கணவன் மனைவி இருவரும் துடுப்புப் போட்டால்தான் ஆற்றைக் கடக்க முடியும். இதில் யார் யாருக்கு நன்றி சொல்வது? மனைவிகள் கணவனைப் பற்றி குறை சொல்லி கடிதம் எழுத ஆரம்பித்தால் உலகில் உள்ள அத்தனை பத்திரிக்கைகளிலும் இடம் போதாது. ஒரு மனிதனும் சிங்கமும் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது சிங்கத்தை மனிதன் அடக்கும் சிலையைப் பார்த்த மனிதன் “பார்த்தாயா.. எங்கள் வீரத்தை” என்று சிங்கத்திடம் சொன்னதற்கு “எங்களுக்கு சிலை செய்யத் தெரியாது” என்று காட்டுராஜா சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது. எல்லா மனைவிகளும் எல்லாவற்றையும் வெளியே சொல்வதில்லை.

ரா சந்
மனைவி 28-1-1986 அதிகாலை 5.45 மதுரை
சூ,சு குரு
பு ல  சனி செவ் கேது

ரிஷபலக்னத்தில் பிறந்து யோகாதிபதியானாலும் பகைவீடான சிம்மத்தில் அமர்ந்து, ராகுவுடன் இணைந்து பாபத்துவமாகி, செவ்வாயின் பார்வையையும் பெற்ற சனியின் தசை கடந்த எட்டு வருடங்களாக உங்களை படுத்தி எடுத்துக் கொண்டிருப்பதால் முற்றிலுமாக எதிர்மறை எண்ணங்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறீர்கள்.

கவலைப்படாதீர்கள். எல்லா சோதனைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. லக்னாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சுபத்துவமாகி, நட்புவலு பெற்றிருப்பதாலும், சனி சூரியனுடன் பரிவர்த்தனை அடைந்திருப்பதாலும், தசையின் இரண்டாவது பகுதியில் தனது பத்துக்குடைய பலனை செய்வார். எனவே இந்த வருட பிற்பகுதியில் இருந்து உங்களுடைய வீட்டுப் பிரச்னைகளும் பொருளாதார சிக்கல்களும் மாறத் துவங்கும். படிப்படியாக சிக்கல்கள் தீர ஆரம்பித்து 2020  முதல் நல்ல வாழ்க்கையை அடைவீர்கள். அடுத்து வர இருக்கும் புதன்தசை, ராசிநாதன் தசை என்பதாலும், சந்திர கேந்திரத்தில் புதன் நீசம் பெற்று, வீடு கொடுத்த குரு உச்சமாகி புதனைப் பார்ப்பதாலும் மிகப் பெரிய யோகத்தை செய்யும். புதன் தசையில் நீங்கள் நன்றாக இருக்கக் கூடிய கட்டமைப்புகள் சனி தசையின் பிற்பகுதியில் நடக்கும்.

பாதகாதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் மறைந்தாலே பாதகம் எதையும் செய்ய மாட்டார் என்பது விதி. எனவே இதைவிட கெடுதலாக அஷ்டமாதிபதி புக்தியில் எதுவும் நடக்காது. பயப்படாதீர்கள். அஷ்டமாதிபதி உச்சம் பெற்றதால் எண்பது வயது தாண்டி தீர்க்காயுள் இருப்பீர்கள். குடுகுடுப்பைக்காரன் உங்களுக்கு யாரோ சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவன் இப்படி ரோடுரோடாக திரிவதற்கு அவனுக்கு யார் சூனியம் வைத்தார்கள் என்று கேளுங்கள். இன்னும் கொஞ்சம் விளங்கும்.

மனைவியின் ஜாதகப்படி பனிரெண்டில் செவ்வாயுடன் இணைந்த சனி வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் உங்கள் மனைவியின் வாய் கொஞ்சம் நீளம்தான். அதனால் என்ன? மனைவியின் வாயை மூடும் பணம் எனும் சாவி எங்கே இருக்கிறது என்பதை இந்த வருடக் கடைசியில் தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்கக் கூடிய ஜாதகம் உங்களுடையது. நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 172 (30.1.18)

  1. நன்றி குருஜி, உங்கள் சாட்டை அடி பதிலுக்கு ஒரு ஜாதகர் வந்துவிடுகிறார் , தாங்கள் அளிக்கும் பதில் பொதுவானது, உண்மையை உணர்ந்து கொண்டவர், இப் பிறவியின் பயனை அடைவர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *