adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 170 (16.1.18)

பெயர், ஊர் வெளியிட விரும்பாதவர்.

கேள்வி:

சொந்தமாக தொழில் செய்யலாமா? இல்லை அடிமைத் தொழில்தானா? சிலரை கூட்டாக சேர்த்துக் கொண்டு ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்யலாமா? வேறு ஏதாவது தொழில் செய்யலாம் எனில் என்ன செய்யலாம்? என் எதிர்கால வாழ்க்கை எப்படி?

பதில்:

அனுப்புகிறவர்களின் கேள்வி நிலையைப் பொருத்து உங்களுடைய பெயர், ஊரை குறிப்பிட வேண்டாம் என்று நான்தான் முடிவெடுக்க வேண்டும். நீங்களே எனது பெயர், ஊரை வெளியிட வேண்டாம் என்று ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்? முகமூடி போட்டுக் கொண்டு ஜோதிடம் கேட்க விரும்புபவர்கள் என்னிடம் வர வேண்டாம்.

சாந்தி, அவினாசி - 641 654.

கேள்வி:

ஜோதிட சக்ரவர்த்திக்கு நமஸ்காரங்கள். மூத்தமகனுக்கு சிறு வயது முதல் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது. ஆறுமாத காலமாக ஜீவசமாதி வழிபாடு, சித்தர்களை பற்றி அதிகம் பேசுகிறான். சிறுவயதில் ஒரு பெரியவர் இவனை பார்த்து துறவறம் சென்று விடுவான் என்று சொன்னார். அதற்கேற்றார் போல்தான் இவனது நடவடிக்கைகள் உள்ளது. திருமணம் செய்து கொள் என்றால் இருதார தோஷம் உள்ளது என்று சொல்கிறான். உங்களின் வீடியோ மற்றும் மாலைமலர் பதிவுகளை காட்டி விளக்குகிறான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு திருமணம் நடக்குமா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

பதில்:
கே
 சூ பு 27-2-1992 காலை 5.30 நாமக்கல்
ல,சுக் செ,ச  குரு
 சந் ரா

லக்னத்தில் சுபத்துவமான சனி அமர்ந்த நிலையில், மூல நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனை வர்க்கோத்தமம் அடைந்த அதிவக்ர குரு பார்ப்பதால் உங்கள் மகனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். தற்போதைய தசாநாதன் சூரியனும், அடுத்த வர இருக்கும் சந்திரனும் சுபத்துவமான ராகு-கேதுக்களின் நட்சத்திரத்தில் இருப்பதால் இது நீடிக்கவே செய்யும்.

இதுபோன்ற அமைப்புள்ள மகர லக்ன ஜாதகத்தில் எட்டுக்குடையவனான சூரியனின் தசையில் திருமணம் போன்ற சுப விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. நடந்தால் வில்லங்கம். மகன் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்து ராகுவுடன் சேர்ந்து பலவீனமாகி, ஏழாமிடத்தை உச்சசெவ்வாய், சனி பார்த்து, ராசிக்கு 2-ல் செவ்வாய் சனி இணைந்திருப்பது கடுமையான தார தோஷம். அதேபோல சுக்கிரனும் இரண்டு டிகிரிக்குள் செவ்வாய், சனியுடன் இணைந்திருப்பதால் மகனுக்கு தாம்பத்ய விஷயத்தில் ஆர்வம் குறைவு. 30 வயதுவரை பொறுத்திருக்கவும்.

கே.பிரகாஷ், சென்னை - 21.

கேள்வி:

நாங்கள் இருவரும் 5 வருடங்களாக காதலிக்கிறோம். தினமும் இரவு எங்களுக்குள் சண்டை வருகிறது. ஏன்? ஜோதிடர்கள் எனக்கு நாகதோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையா? எங்களுக்கு எப்போது திருமணம் நடக்கும். நாகதோஷத்திற்கான பரிகாரங்களை சொல்லவும்.

பதில்:

நீங்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக 2013 ஜூலைக்குப் பிறகு காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள். உனக்கு தனுசுராசியாகி தற்போது ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதாலும், சுக்கிரன் நீசமாக இருப்பதாலும் 30 வயதுவரை திருமணம் நடக்க வாய்ப்பில்லை. இதே அமைப்பு அந்தப் பெண்ணிற்கும் இருக்கிறது. பெண்ணின் ஜாதகப்படி அவள் கோபக்காரி என்பதால் உங்களுக்குள் எப்போதும் சண்டை வரத்தான் செய்யும். காதலுக்கு எந்த தோஷமும் இல்லை. மனங்கள் பொருந்தினால் ஜோதிடம் குறுக்கே நிற்காது. எல்லாம் விதிப்படி நடக்கும்.

எஸ். பொன்னரசு, கன்னியாகுமரி.

கேள்வி:

வணக்கத்திற்குரிய குருஜியின் ஜோதிடக் கருத்துக்களை மாலைமலரில் தொடர்ந்து படித்து வருகிறேன். தற்போது ஜோதிடத் தொழில் செய்து வருகிறேன். அதில் வரும் வருமானம் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இல்லை. எனக்கு கவிதைகள் நன்றாக எழுத வரும். திரைப்படத் துறையில் பாடலாசிரியராக பணிபுரிய ஏதாவது வாய்ப்புகள் கிடைக்குமா? திரையில் நான் மின்ன முடியுமா?

பதில்:

ஜோதிடர் என்று சொல்கிறீர்கள். பிறந்த இடத்தை எழுதாமல் விட்டு விட்டீர்களே? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிறந்த நேரமான அதிகாலை 2.55 மணிக்கு குமரி மாவட்டத்தில் பிறந்திருந்தீர்களேயானால் உங்களுக்கு சிம்ம லக்னம் வரும். வேறு இடங்களில் பிறந்திருந்தால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடக லக்னம் வரும். பிறந்த இடம் குறிப்பிடப்படாததால் இதை துல்லியமாக கணிக்க முடியவில்லை.

லக்ன கணித விஷயத்தில் வாக்கியப் பஞ்சாங்கம் தோராயமானது. மற்றும் தவறானது. வாக்கியத்தில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து துல்லிய பலன் சொல்ல இயலாது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டை நட்சத்திரகாரர்களின் தொழில் சரியில்லாமல்தான் இருக்கிறது. வரும் பொங்கல் முதல் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். செய்யும் காரியம் வெற்றி தரும்.

மு. பழனிவேல், மதுரை - 11.

கேள்வி:

கடந்த பதினைந்தரை ஆண்டுகளாக துரோகம், வறுமை, துன்பம், தோல்வி, போலீஸ், கோர்ட்டு, வக்கீல் என்றுதான் என் வாழ்க்கை செல்கிறது. படைத்த கடவுளால் என் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருக்கிறது. தற்போது ரேஷன் அரிசிதான் உணவு. ஜாதகம் பார்க்க கூட பணம் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன். தயவு செய்து பலன் கூறவும்.

பதில்:
 சனி
 ரா 28-10-1970 காலை 7.40 மதுரை
கே
 ல சுக் சூ,பு குரு  சந் செவ்

கடந்த 15 ஆண்டுகளாக தன் வீட்டிற்கு எட்டில், விரயத்தில் அமர்ந்த அஸ்தமன குருவின் தசை நடந்ததால் எவ்விதமான நன்மைகளையும் உங்களால் அனுபவிக்க முடியவில்லை. குருவை, நீச சனி நேருக்கு நேராக பார்த்தால் குரு வலிமை இழப்பார். சனி சுபத்துவ வலு பெறுவார்.

16 வருடங்களாக நடந்து வந்த வம்பு, வழக்குகளை தந்த குருதசை முடிவுற்று தற்போது சனிதசை ஆரம்பித்துள்ளதால், சுயபுக்திக்கு பிறகு 2020 முதல் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பீர்கள். அடுத்த வருடம் முதல் வழக்குகளின் போக்கு உங்களுக்கு சாதகமாக திரும்பும். சனிதசை குருவை விட நன்றாக, யோகமாகவே இருக்கும்.

பி. ரஞ்சித், கோவை.

கேள்வி:

பிறந்த விவரங்களை அனுப்பி வைத்துள்ளேன். எனது ராசி, லக்னம், நட்சத்திரம் எதுவும் தெரியவில்லை. இளம்வயதில் இருந்தே இன்றுவரை வாழ்க்கையில் கஷ்டங்களையும், போராட்டங்களையும் மட்டும்தான் அனுபவித்து கொண்டிருக்கிறேன். எப்போது விடிவுகாலம் பிறக்கும்? எந்த ஒரு நிறுவனத்திலும் நிரந்தரமாக ஒரே ஊரில் வேலை செய்ய முடியவில்லை. எப்போது வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என்று பதில் தர வேண்டுகிறேன்.

பதில்:
சூ,பு சுக் செவ் ரா
8-4-1985, காலை 11.03 நாக்பூர்
குரு
சந் சனி கே

நீங்கள் அனுஷம் நட்சத்திரம், விருச்சிகராசி. லக்னாதிபதி புதன் நீசமாகியுள்ளதால் வாழ்க்கையில் முன்பகுதி 40 வயதுவரை போராட்டங்களாகத்தான் இருக்கும். தற்போது நடைபெறும் நீசபுதனின் தசை இன்னும் இரண்டு வருடங்களில் முடிகிறது அடுத்து நடக்க இருக்கும் கேதுதசை முதல் நிரந்தரமான அமைப்புகள் கிடைத்து எதிர்காலத்தில் நன்றாகவே இருப்பீர்கள்.

ஜோதிடம் உண்மையா..பொய்யா? நம்பலாமா?

ஏ. அப்துல் பஷீர், சிதம்பரம்.

கேள்வி:

மூன்று ஜோதிடர்கள் உன் ஜாதகத்தில் சூரியன் திக்பலம் பெற்றிருக்கிறது. அதனால் சூரியதசையில் மிகவும் நன்றாக டாப்பில் இருப்பாய் என்று தபால் மூலம் பதில் கொடுத்திருந்தார்கள். ஆனால் ஜீரோவாக இருக்கிறேன். இன்று வரை அனைத்திலும் படுதோல்வி, படுகஷ்டம். இந்த நிமிடம் வரை நிம்மதி என்பதே இல்லை. அப்படி என்றால் ஜாதகம் உண்மையா? பொய்யா? இனிமேலும் நம்பலாமா?

பதில்:
 சூரி பு,கே குரு
14-6-1954 காலை 11மணி சிதம்பரம்  சுக்
 செவ் ரா சந் சனி

சரியான நேரம் வரும்போதுதான் முறையான ஜோதிடரிடம் செல்ல பரம்பொருள் அனுமதிக்கும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். ஜோதிடம் என்றுமே பொய்ப்பது இல்லை. ஜோதிடர்களாகிய நாங்கள்தான் சரியான பலன் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறோம்.

எல்லாத் துறைகளிலும் அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் என்று இரு பிரிவுகள் இருப்பதை போல ஜோதிடத்திலும் இருக்கிறது. மூன்று மாதமோ, மூன்று வருடமோ ஜோதிடத்தை கற்றுக்கொண்டு தன்னை ஜோதிடராக நினைத்துக் கொண்டு பலன் சொல்வோருக்கும், வாழ்நாள் முழுவதும் ஜோதிடத்திலேயே முழுகிக் கிடப்பவருக்கும் ஜோதிடர் என்றுதான் பெயர். சரியானவரை கண்டுபிடிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

கடுமையான ஏழரைச்சனி அமைப்புகள் நடக்கும்போது ஜாதகத்தில் இருக்கும் எந்த யோகமும் பலன் தராது என்பதை மாலைமலரிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதேபோல எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் அவரவர் வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார் போல சில வருடங்களாக நன்றாக இல்லை என்பதும் ஜோதிட உண்மை. விருச்சிக ராசியில் பிறந்த நீங்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

ஜாதகப்படி கடந்து வந்த சுக்கிரதசை, சுக்கிரன் பனிரெண்டில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் நீசமானதால் உங்களுக்கு தொழில்ரீதியான கடுமையான பிரச்சினைகளை கொடுத்திருக்கும். அதிலும் சூரியதசை ஆரம்பித்ததில் இருந்தே உங்களுக்கு ஜென்மச்சனியும் சேர்ந்து கொண்டதால் மீள முடியாத அவஸ்தையில் இருப்பீர்கள்.

திருக்கணிதப்படி தற்போது உங்களுக்கு சூரியதசையில் ராகுபுக்தி நடந்து கொண்டிருக்கிறது. தசாநாதனும், புக்திநாதனும் சஷ்டாஷ்டகமாக இருப்பதால் ராகுபுக்தியில் நன்மைகள் நடக்க வாய்ப்பில்லை. டிசம்பர் முதல் ஆரம்பிக்க இருக்கும் குருபுக்தியில் இருந்து பிரச்சினைகள் தீர வழிமுறைகள் ஆரம்பித்து அடுத்த வருடம் முதல் படிப்படியாக சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள்.

5 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 170 (16.1.18)

  1. “ஜோதிடர்களாகிய நாங்கள்தான் சரியான பலன் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறோம்”,என தங்களையும் இணைத்து கொள்ளலாமோ? ஜோதிட சிம்மமே?

    1. குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-24358888 or e-mail- adhithyaguruji@gmail.com

  2. ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம். என் பிறந்த தேதி 27-10-1984: 04-00am இடம் பல்லடம் திருப்பூர்
    என் மனைவி பிறந்த தேதி 28-05-1992: 11-45am இடம் திருப்பூர். எங்களுக்கு ஆண் வாரிசு கிடைக்குமா? தயவு செய்து கூறுங்கள்

    1. குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-24358888 or e-mail- adhithyaguruji@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *